சிறப்புக்கட்டுரைகள்

இஸ்ரோ ஒரு சுற்றுலாத் தலமா?

இஸ்ரோ சுற்றுலா : சில பயணக் குறிப்புகள்!

அருள்செல்வன்

அண்மையில் ஒரு நட்புக்குழுவுடன் இணைந்து பெங்களூரில் இருக்கும் இஸ்ரோ தலைமையகம் சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது.

பொதுவாகச் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வது அங்குள்ள இடங்களைப் பார்வையிடுவது, இயற்கைக் காட்சிகளை ரசிப்பது, ஆன்மீகத் தலங்களுக்குச் செல்வது,வழிபட்டு வருவது,கேளிக்கைப் பூங்காக்கள் சென்று நீர் விளையாட்டுகள் போன்று விளையாடி வருவது என, பல வகையான சுற்றுலாப் பயணங்கள் உண்டு.

ஆனால் அறிவியல் துறை சார்ந்த, கல்வி சார்ந்த சுற்றுலாக்கள் குறைவுதான். ஆனாலும் பெங்களூர் இஸ்ரோவைச் சுற்றிப் பார்க்க வரும் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப் பல்வேறு ஊர்கள், பல்வேறு மாநிலங்கள் என்று வருகிறார்கள்.

அறிவியலோ கல்வியோ சம்பந்தப்படாதவர்களை அங்கே பார்வையிட அனுமதிப்பதில்லை. எதிர்கால சமுதாயத்திடம் அறிவியல் உணர்வையும் விண்வெளி அறிவியல் சார்ந்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று இந்த அனுமதியில் குறிப்பாக மாணவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.

பெங்களூரில் உள்ள இஸ்ரோ வளாகத்தைச் சென்றடையும் போது உள்ளே அறிவியலின் உச்சம் என்ற கருதப்படும் விண்வெளி சார்ந்த ஆய்வுகள் ராக்கெட் தயாரிக்கும் பணிகள் நடைபெறுவதாக இருந்தாலும் அந்த வளாகத்துக்குள் கட்டடத்தைச் சுற்றிலும் பசுமைப் புல்வெளியும் அழகான மரங்களும் எழில் கொஞ்சும் மலர்ச் செடிகளும் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன.

ஒரு ராக்கெட் விடுவதற்கு முன்பாக இருபது முறை பல்வேறு கட்டங்களில் பல்வேறு வகையிலான சோதனைகள் நடைபெறுமாம். அதே போல் உள்ளே நுழைவதற்கும் பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்ற பிறகுதான் அனுமதிக்கிறார்கள்.

மூன்று பொருள்களை உள்ளே அனுமதிப்பதில்லை. கேமரா, அலைபேசி, பெரிய பைகள் என மூன்றும் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. எனவே 'உள்ளே படம் எடுக்க அனுமதி உண்டா?' என்று கேட்கக் கூடாது.

பெங்களூர் இஸ்ரோ வளாகத்திற்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் வருவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

இஸ்ரோ பெங்களூர் தலைமையகம் செல்லும் முன்பு HAL எனப்படும் 'இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் 'வளாகத்திலுள்ள அருங்காட்சியகத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு வந்தால் ஒரு சிறிய முன்னுரை அனுபவம் கிடைக்கும்.

அந்த HAL நிறுவனம் இந்திய வானூர்திகள் தயாரிக்கும் நிறுவனமாகும். இது ஆசியாவில் மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. அங்கே பல்வேறு வகையான விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல்வகை ஹெலிகாப்ட்டர்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் ஆங்காங்கே கம்பீரமாக நிற்கின்றன. கம்பீரமான நிஜ உருவங்கள் இடையே சில மாதிரிகளும் உண்டு.

சுற்றிப் பார்க்க வருபவர்கள் ஆசை தீர அவற்றின் அருகே நின்று புகைப்படங்களை எடுத்துத் தள்ளுகிறார்கள்.

அங்கே நமது வான்வழிப் போக்குவரத்து தொடங்கிய 1940 முதல், ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒரு அரங்கமாக 2020 வரை காட்சி அரங்குகள் அமைத்துள்ளார்கள்.

ஆரம்ப நிலையில் நமது விமானங்களின் தோற்றம் அதன் உள்ளடக்கம் அதன் பயணிகள் என மெல்ல மெல்ல உயர்ந்து, இப்போது எவ்வளவு நவீனமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை ஒவ்வொரு பத்தாண்டாகப் பார்க்க முடியும்.

அதேபோல்தான் இஸ்ரோவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா கடந்து வந்த பாதையை, அதன் வரலாற்றுச் சுவடுகளை ஆதிகாலமான ஆரியப்பட்டர் தொடங்கி நிக்கோலஸ் கோபர்னிகஸ் என்று அறிவியல் யுகத்தில் நுழைந்து நடப்புக் காலம் வரை ஆவணப்படுத்தியுள்ளனர். புகைப்படங்களாகவும் மாதிரிகளாகவும் வைத்துள்ளார்கள்.

நமது விண்வெளித் துறை வளர்ந்ததைப் பலவிதமான மாதிரிகள் வைத்துக் காட்சிப் படுத்தியுள்ளார்கள். அந்த நிரந்தரக் கண்காட்சியை எதையும் தொட்டுவிடாமல் பார்க்க வேண்டும். பார்க்கும்போது அருகிலிருந்து விளக்கிச் சொல்வதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.

பொதுவாக நாம் விண்கலங்களையே பொதுப் பெயராக ராக்கெட் என்கிறோம். ராக்கெட் என்பது ஏவூர்தி மட்டுமே. செயற்கைக்கோள் தான் விண்வெளியில் வலம் வரும் சாதனம்.

இஸ்ரோ 1969இல் நிறுவப்பட்டது. விண்வெளி ஆய்வுத்துறை 1972இல் உருவாக்கப்பட்டது. நமது முதல் ராக்கெட்டான ஆரியபட்டா 1975 இல் ஏவப்பட்டது. இதனை உருவாக்க 250 பொறியாளர்கள் 26 மாதங்கள் உழைத்தனர்.

நாம் ஏவியதில் அதிக எடை கொண்டது ஜிஎஸ்எல்வி FO4 என்பதுதான். இதன் எடை 2130 கிலோ. இது 2007இல் ஏவப்பட்டது.

ஆரியபட்டாவுக்கான செலவு 5 கோடி என்றால் சந்திராயன் 1-க்கு 386 கோடி. இதிலிருந்து நமது வளர்ச்சியை அறியலாம். இப்படித் தெரிய வந்த தகவல்கள் ஏராளம்.

இவற்றை எல்லாம் பார்த்தும், கேட்டும் துறை பற்றிய சிறு அறிமுகம் நமக்குக் கிடைத்த பிறகு செயற்கைக்கோள் உருவாக்கப்படும் பகுதிக்குச் செல்ல வேண்டும்.

இஸ்ரோவின் தலைமைப் பொறுப்பில் அதாவது சேர்மேனாக இருந்த விஞ்ஞானிகள் பற்றியும் அவர்கள் காலத்தில் நடைபெற்ற ஆய்வுகள் செயல்பாடுகள் பற்றியும் வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

இப்படி இந்த மையத்தின் முதல் தலைமைப் பொறுப்பு வகித்த விக்ரம் சாராபாய் முதல் நம்ம ஊர் கை. சிவன் வரை குறிப்புகள் உள்ளன.

முதல் தலைவரான விக்ரம் சாரா பாய் இந்நிறுவனத்தின் தந்தை என்று மதிக்கப்படுகிறார். திருவனந்தபுரம் மையத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பெங்களூர் தலைமையகத்தில் யு.ஆர். ராவ் என்பவர் தான் நட்சத்திரமாகப் போற்றப்படுகிறார். உடுப்பி ராமச்சந்திர ராவ் என்பவரான அவருக்கு வளாகத்திற்குள் சிலை இருக்கிறது. அவர் கர்நாடகக்காரர் என்பதால் அவருக்கு அங்கே தனி மரியாதை.

இஸ்ரோவின் பிரதான கட்டடத்தின் உள்ளே நாற்புறமும் கண்ணாடியால் மூடப்பட்ட ஒரு பெரிய கூடத்தைப் பார்த்தோம். மருத்துவமனையில் ஐசியூ போல கண்ணாடிக்கு வெளியே நின்று தான் பார்க்க வேண்டும், என்றாலும் நன்றாகப் பார்க்க முடியும். அங்கேதான் செயற்கைக்கோள்கள் உருவாகின்றன.

கணினியின் உதிரிப் பாகங்கள் போல், தலை சுற்ற வைக்கும் அளவிற்கு உதிரிப் பாகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பகுதியாகச் சேர்த்து இணைத்து உருவாக்குகிறார்கள். உருவான பின் அதை எடுத்துச் செல்வதற்கான வழியும் இங்கே உள்ளது.

அதைப் பார்க்கும் போது பெரிய அளவிலான கணினி தான் சாட்டிலைட் என்று தோன்றும்.

அவற்றையெல்லாம் பார்த்த பின்பு குளிரூட்டப்பட்ட சதிஷ் தவான் அரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். சுற்றும் முற்றும் பார்த்த போது மீண்டும் ஒரு பிரமிப்பு உணர்வு. ஏனென்றால் அங்கேதான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி பற்றிய பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளனவாம்.

அந்தப் பெரிய அரங்கில் நாங்கள் அமர்ந்த பிறகு இந்தியா விண்வெளி ஆய்வில் கடந்து வந்த பாதையைப் பற்றிய காணொலி திரையிடப்பட்டது.

செயற்கைக்கோள்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன? இதுவரை நாம் அனுப்பிய செயற்கைக்கோள்களின் வரலாறு அவற்றின் வகைகள் உள்ளடக்கம் போன்றவை பற்றி விரிவான காணொலி திரையிடப்பட்டது. அதிலும் ஏ. ஆர். ரகுமானின் வந்தே மாதரம் குரல் ஒலித்தது.பெரிய திரையில் துல்லியமான காட்சியுடன் திரையிடப்பட்ட அது ஒரு ஆவணத் திரைப்படம் என்றே சொல்ல வேண்டும்.

செயற்கைக்கோள்கள் தான் இங்கே செய்யப்படுகின்றன. அதை விண்ணில் செலுத்துவதற்கான வாகனம் திருவனந்தபுரத்தில் செய்யப்படும். இரண்டையும் இணைத்து ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும்.

செயற்கைக் கோள்களைச் சுமந்து செல்லும் ராக்கெட் மேலே ஏறுவதற்கு முன் பல்வேறு நிலையிலான சோதனைகள் செய்யப்படுகின்றன .அப்படி 20 சோதனைகள் செய்யப்படுகின்றன. எந்தவிதமான குறைகளும் பழுதும் இல்லாத வகையில் மிகவும் கவனமாகச் சோதிக்கப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன.அவை என்னென்ன என்றும் விளக்கப்படுகிறது.

ஒவ்வொரு கட்டமாக நடைபெறும் செயல்பாடுகள், சோதனைகள் பற்றியும் வீடியோ தெளிவாகப் பேசுகிறது.

அதற்குப்பின் பார்வையாளர்கள் துறை சார் நிபுணர்களிடம் கேள்விகள் கேட்கலாம்.அவற்றுக்கெல்லாம் இஸ்ரோ விஞ்ஞானிகள் பதில் அளிக்கிறார்கள்.நாங்கள் போனபோது மாலதி, மற்றும் சுமா உமேஷ் அந்தப் பொறுப்பை ஏற்று இருந்தார்கள்.

பார்வையாளர்களிடம் இருந்து துறை பற்றிய புரிதலோடு கேள்விகள் மட்டுமல்ல அசட்டுத்தனமான கேள்விகளும் வருகின்றன. அதன் இயல்பை ஏற்று அதற்குரிய பதில்களை அவர்கள் கூறுகிறார்கள்.

ராக்கெட்டில் பெயர்களுக்குள்ள வேறுபாடு என்ன?

GSLV க்கும் PSLV க்கும் என்ன வேறுபாடு? சந்திராயன் ஒன்றுக்கும் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? விண் வெளிச்சுற்றுலா எப்போது தொடங்கும்?

என்ற எளிமையான கேள்விகள் முதல் பல வகையான கேள்விகள் .ஒரு பெண்மணி பஞ்சாங்கத்தில் உள்ளபடி தானே உலகமே இயங்கி வருகிறது என்று கேட்டார். பஞ்சாங்கத்தில் உள்ளது ராக்கெட்டில் எந்த அளவுக்கு சாத்தியமாகிறது என்று கேட்டபோது அனைவரும் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள் .ஆனால் விஞ்ஞானிகள் பொறுப்போடு பதில் கூறினார்கள்.

நம்பிக்கை வேறு அறிவியல் என்பது வேறு என்பதை நாமாகப் புரிந்து கொள்ளும் வகையில் நாகரிகமாக அவர்கள் பதில் கூறினார்கள்.

செயற்கைக்கோள்களை, தகவல் தொடர்பு , மருத்துவம், கல்வி, பேரிடர் அபாயக் கணிப்பு, காலநிலை கணிப்பு போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம் என்ற போது ஏன் சமீபத்திய வெள்ளம் மழை புயலைச் சரியாகக் கணிக்க முடியவில்லை என்று கேள்விகள் கேட்கப்பட்டன.

அறிவியலால் சரியாகக் கணிக்க முடியும்.அறிவியல் மூலம் அறிந்து கூறப்படும் எச்சரிக்கையை நடைமுறைப்படுத்துவதை அரசுகள் தான் செய்ய வேண்டும் என்றார்கள்.அதற்கு மேல் கேள்விகள் அரசியல் ஆக்கப்படும் என்பதையறிந்து அடுத்த கேள்விக்குச் சென்றார்கள்.

துறை ரீதியான ஆர்வம் உள்ளவர்கள், தொழில்நுட்ப ரீதியாகப் பேசிக் கொண்டார்கள் .என்னைப் போல் புரியாதவர்கள் அதிலிருந்து விலகிக் கொண்டார்கள்.

இஸ்ரோவில் வேலைவாய்ப்புகள் பற்றிக் கேள்வி வந்தபோது பத்தாவது படித்தவர்கள் கூட இங்கே பணியாற்ற முடியும். அதற்கான வழிகளைத் தெரிந்து கொண்டு உள்ளே நுழைந்தால் அவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக கணினி அறிவியல், மின்னணு பொறியியல், படித்தவர்களுக்கு நம்பிக்கையான வாய்ப்புகள் உள்ளன .அதற்கான தேர்வுகள் நடைபெற்ற பின் தகுதியின் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள்

என்றனர் .இஸ்ரோவில் பணிக்குச் செல்வது குதிரைக் கொம்பல்ல.ஆர்வமும் தகுதியும் திறமையும் உள்ளவர்கள் முயற்சி செய்தால் முடியும் என்பது புரிந்தது.

ஒரு முறை தலையைச் சுழல விட்டுப் பார்த்தபோது சுற்றிப் பார்க்க வந்தவர்கள் கண்களில் பெருமிதம் மின்னியது.அப்படி வந்தவர்களிடம் ஒரு சோறு பதமாகச் சிலரிடம் பேசிய போது,

'' என் பெயர் சரவணன்.நான் சேலத்தில் இருந்து வந்திருக்கிறேன்.நாங்கள் குழுவாக வந்தோம். எங்களை ஒரு நிகழ்ச்சி அமைப்பாளர் அழைத்து வந்தார்.இஸ்ரோவுக்கெல்லாம் சாதாரணமாகச் சென்று விட முடியாது அது நடக்காது என்று என் ஊரில் பலரும் சவால் விட்டார்கள். அதற்குரிய முறையில் விண்ணப்பித்தால் பள்ளி கல்லூரிகளுக்கு எளிதில் அனுமதி கிடைக்கும். அப்படித்தான் நான் இங்கே வந்தேன். இங்கு உள்ளே நுழைந்த போது எனக்கு ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் பேச்சே வரவில்லை. ஏதோ சந்திரமண்டத்தில் நுழைந்ததுபோல் இருந்தது" என்றார்.

கல்லூரி மாணவி ஸ்வேதா பேசும் போது, " இப்படி ஒரு திட்டம் இருப்பது எனக்குத் தெரியாது கேள்விப்பட்டு, பிறகு தான் வந்தேன் இஸ்ரோ வளாகத்தில் நுழைந்த போது எனக்குள் இனம் புரியாத ஒரு சந்தோஷம் . ஏதோ சாதித்தது போல் இருக்கிறது. எனக்கே அப்படி என்றால் அங்கே பணியாற்றுபவர்கள், விஞ்ஞானிகள் எவ்வளவு பெருமையுடன் இருக்க வேண்டும். உள்ளே சுற்றிப் பார்த்தபோது நம் நாட்டின் பெருமை விளங்கியது. நாமும் விண்வெளி அறிவியலில் வல்லரசுகளுக்கு இணையாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்கிற நம்பிக்கை வந்தது.அதை நினைத்து எனக்குள் பெருமையும் கூட வந்தது உண்மை" என்கிறார்.

மன்னார்குடியிலிருந்து வந்த டாக்டர் சாந்தி பேசும்போது, " இம்முறை இங்கு வந்த போது எனக்கு ஏற்பட்ட வியப்புணர்வை மற்றவர்களுக்கும் கொடுத்திட விரும்புகிறேன்.அதனால் இங்கே வருவதற்கு மற்றவர்களுக்கு வழி காட்டுகிறேன்" என்றார்.

டார்வின் அறிவியல் கழகம் நடத்தி வருகிற தினேஷ் கூறுகிறார்.

"முதலில் நான் இங்கே வந்த போது அடைந்த மகிழ்ச்சி அனைவருக்கும் தர வேண்டும் என்று எங்கள் அறிவியல் கழகத்தின் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களை ஆசிரியர்களையும் நான் அழைத்து வருகிறேன்.

இங்கே வருகிறபோது அவர்கள் அடைகிற மகிழ்ச்சியையும் அந்த சாகச உணர்வையும் அவர்கள் கண்ணில் பார்த்து எனக்கு பெரு மகிழ்ச்சியாக இருக்கும். இந்த வாய்ப்பைப் பலருக்கும் கொடுக்க வேண்டும் என்று நான் பல மாணவர்களை அழைத்து வந்துள்ளேன்.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று தான் இப்படிப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்கு எல்லாம் அனுமதிக்கிறார்கள். இது ஜாலியாக சுற்றிப் பார்க்கும் சுற்றுலாத்தலமல்ல. படித்தவர்களுக்கு தான் இதன் மதிப்பு தெரியும். விண்வெளி ஆய்வில் நமது உயரம் பற்றி இங்கே வந்த பின்பு உணர முடியும்"என்கிறார்.

சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் பிரபாகரன் பேசும்போது,

"ஆரம்பத்தில் வேறொரு மன நிலையில் வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு நமக்கே ஒரு பெருமையும் கர்வமும் வருகிறது. இவ்வளவு பிரச்சினைகளும் பல்வேறு போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கும் நமது நாட்டில், நாம் சத்தமே இல்லாமல் விண்வெளியில் வியக்கத்தக்க சாதனையில் முத்திரை பதித்துள்ளதை அறிந்து மிகவும் பெருமையாக உள்ளது. நமது விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்தடுத்த திட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார்.

இஸ்ரோ ஒரு சுற்றுலாத் தலம் அல்ல.ஆனால் சுற்றிப் பார்க்க வேண்டிய ஓர் இடம். ஏன் இங்கு வரவேண்டும்? நமது நாட்டின் அறிவியலின் உயரத்தை அறிந்து விண்வெளி ஆய்வின் விசாலத்தை உணர்ந்து பெருமைப்பட்டுக் கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு தரும் இடம் தான் இஸ்ரோ .

அன்று இஸ்ரோ தலைமையகத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு வெளியே வந்த போது மைதானத்தில் ஏராளமான மரங்களும் மலர்ச் செடிகளும் எங்களை ஏக்கத்துடன் பார்த்துச் சிரித்தன.விண்வெளி ஆய்வு பற்றிய பெருமிதத்தோடு நடந்து கொண்டிருந்தபோது கீழே புல்வெளியையும் குனிந்து பார்த்தோம். அவை ஏதோ எங்களிடம் சொல்ல முயல்வது போல் தெரிந்தது.

'விண்வெளி பற்றி சிந்திக்கும் நீங்கள் புல்வெளி பற்றியும் அதில் உள்ள மரங்கள்,தாவரங்கள் பற்றியும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பூமியில் ஈரத்தைத் தக்க வைக்கிற,பசுமையைப் பராமரிக்கிற,பிராண வாயு தருகிற,கரி அமில வாயுவை சுத்திகரித்து உயிர் வாயுவாக மாற்ற உதவுகிற எங்கள் தாவர வர்க்கத்தை மறந்து விடாதீர்கள்' என்று கேட்பது போன்ற அந்த மனக்குரல் எனக்குக் கேட்டது. அது அனைவருக்கும் கேட்க வேண்டும்.