இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்காவுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 
சிறப்புக்கட்டுரைகள்

இலங்கையை விடாமல் வளைக்கும் இந்தியா... அனுர- ஜெய்சங்கர் சந்திப்பில் பேச்சு!

Staff Writer

இலங்கையின் புதிய அதிபர் அனுரகுமார திசநாயக்காவுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியத் தரப்பில் பல்வேறு உறுதிமொழிகள் அவருக்கு அளிக்கப்பட்டன என கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு, அதன் முன்னுரிமைத் திட்டங்களுக்கு இந்தியா அளித்துவரும் உதவிகள் தொடரும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வழங்கியுள்ள 2 கோடி அமெரிக்க டாலர் கடனுதவித் திட்டங்களில் 7 திட்டங்களை நன்கொடை வகையானவையாக மாற்ற முடியும் என்றும் ஜெய்சங்கர் அனுரகுமாரவிடம் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர் தாயகப் பகுதியில் உள்ள வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்த 6.15 கோடி அமெரிக்க டாலர் செலவிலான திட்டத்துக்கும் இந்தியா முன்வந்துள்ளது.

இலங்கை அதிபருடனான பேச்சில் அந்நாட்டு எரிசக்தி உற்பத்தி, பரிமாற்றம், எரிபொருள் குறிப்பாக திரவவடிவ இயற்கை வாயு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, மருத்துவம், பால்வளத் துறை மேம்பாடு ஆகியவை குறித்தும் இந்திய வெளியுறவு அமைச்சர் விரிவாக எடுத்துக்கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு மட்டுமில்லாமல், தனி நபர் வருமானத்தையும் இது அதிகரிக்கும் என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

பதிலுக்கு அனுரகுமாரவும், வளமான இலங்கை எனும் தன்னுடைய இலட்சியத்துக்கு இந்தியாவின் இந்த உதவிகள் முக்கியமானவை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் பற்றிப் பேசிய அனுர, இதன் மூலம் இலங்கையில் உற்பத்திச் செலவு குறைந்து, கூடுதலாக வளங்களை உருவாக்குவதற்கு இது உதவியாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியத் தரப்பில், இங்கிருந்து செய்யப்படும் முதலீடுகளுக்கான வசதிகளை அமைத்துத்தருதல், வேலைவாய்ப்பு, சுற்றுலாப் பயணிகளின் வரத்தை அதிகரிப்பது ஆகியவை பற்றி கவனம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்த அனுர, அதானி குழுமத்தின் பசுமை மின்சாரத் திட்டத்தை தான் அதிபரானால் ரத்துசெய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இப்போது இந்தியத் தரப்பு அதற்கும் சேர்த்துதான் உத்தரவாதம் பேசியிருக்கிறது.

பன்னாட்டு நாணய நிதியத்துடன் இலங்கை மேற்கொண்டுவரும் கடன்மறுசீரமைப்பு முயற்சிகளில், முதலில் இந்தியாதான் நிதி உத்தரவாதம் தந்தது என்பதை வெளியுறவு அமைச்சர் நினைவூட்டினார். பன்னாட்டுக் கடன் வழங்குநர்களுக்கும் இந்தியத் தரப்பில் தொடர் உதவி தருவது உறுதி என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையர்களின் ஆளுமை மேம்பாடு, திறன்பயிற்சி வழங்கல் தொடர்பாக இந்தியா உதவும் என அந்நாட்டுப் பிரதமர் ஹரிணி அமரசூரியாவிடம் ஜெய்சங்கர் தெரிவித்தார். டிஜிட்டல் கட்டமைப்பிலும் ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் உறுதிகூறினார்.

இலங்கையின் ரயில்சேவைக்காக 22 டீசல் ரயில் இயந்திரங்கள் வழங்கவும் இந்தியா உறுதியளித்துள்ளது.

பாதுகாப்பு, வட்டாரப் பாதுகாப்பு தொடர்பாகவும் மீனவர் பிரச்னை பற்றியும் பேசப்பட்டது.

நிறைவாக, இராஜீவ்காந்தியின் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தப்படியான இலங்கையின் 13ஆவது சட்டத்திருத்தத்தைச் செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது. அதன்படி, மாகாண சபைகளுக்குத் தேர்தல் நடத்துவதும் அவசியம் என்பதை இந்தியா சுட்டிக்காட்டியது.

அதிபர் அனுரகுமார தலைமையிலான ஜே.வி.பி. கட்சிதான் இலங்கையின் 13ஆவது திருத்தத்தை எதிர்த்து, அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதை ரத்துசெய்ய வைத்தது. அதே கட்சியின் ஆட்சியில் மீண்டும் 13ஆம் திருத்தத்தை இந்தியா வலியுறுத்தியிருப்பது, உண்மையில் எந்த அளவுக்குச் செயல்பாட்டுக்கு வரும் என்பதில்தான் இருக்கிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram