சிறப்புக்கட்டுரைகள்

இதழ்களுக்கு எதிர்காலம் உண்டா?

மாலன்

ப த்திரிகைகள்  வழக்கமாக எழுதும் அரை உண்மைகளை விட சுவாரஸ்யமான வேறு சில அரை உண்மைகளும் உண்டு, இந்திய வாசகர் எண்ணிக்கை மதிப்பாய்வு (Indian Readership Survey)  என்ற ஓரு புள்ளி விபரம் காலாண்டுக்கொருமுறை வெளியாகும். கடந்த ஆண்டின் கடைசிக் காலாண்டின் அறிக்கை அண்மையில் வெளியானதை அடுத்து  2019ல் இந்தியப் பத்திரிகைகளின் விற்பனை, வளர்ச்சி இவை கவனம் பெற்றன. இந்தப் புள்ளி விவரங்களை ஒவ்வொரு இதழும் தங்களுக்கு சாதகமான அம்சங்களை எடுத்துக் கொண்டு எழுதியிருந்தன. ஆங்கில நாளிதழ் தி ஹிண்டுவின் பிறந்த வீடான சென்னையில், ஹிண்டுவை விட தங்கள் நாளிதழ் 49000 பிரதிகள் கூடுதலாக விற்பனையாவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா மகிழ்வுடன் அறிவித்துக் கொண்டது. அதே நேரம் அதே அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு தென்னிந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் நாளிதழ் நாங்கள்தான் என்று தி ஹிண்டு பெருமை கொண்டது. 2019ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டை விட நான்காம் காலண்டில் 61ஆயிரம் வாசகர்களைக் கூடுதலாகப் பெற்று ஆனந்த விகடன் தமிழ் வார இதழ்களில் முதலிடத்தில் இருந்தது. அதே காலகட்டத்தில் குமுதம் 88 ஆயிரம் வாசகர்களைக் கூடுதலாகப் பெற்றிருந்தது.

ஆனால் அவை எல்லாம் அடுத்தடுத்த வந்த செய்திகளைப் படித்த போது அவரைப் பந்தலைப் பார்த்த மகிழ்ச்சியைப் போலாகிவிட்டது. அவரைப் பந்தல் வெளியிலிருந்து பார்க்க பச்சைப் பசேல் என்ற இதய வடிவ இலைகளோடு பூவும் பிஞ்சுமாய் பொலிந்து நிற்கும். அருகில் சென்று பார்த்தால் ஆங்காங்கே அஸ்வினிப் பூச்சிப் படர்ந்து கிடக்கும்.  இற்றுப் போன கட்டைகளைச் சணல் சரடுகளால் இணைத்து சமைக்கப்பட்ட பழைய பந்தல் பசுங்கொடிகளைத் தாங்கி நிற்கும்.

கொரானா, தமிழ் ஊடக உலகில் அழுத்தமான தடங்களைப் பதித்திருக்கிறது என்பதைப் பல செய்திகள் சொல்லி வருகின்றன. வேலை இழப்பு, ஊதியத்தில் வெட்டு, பணி விடுமுறை இவற்றை என் ஊடக சகோதார்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். வார இதழ்களில் முதலிடம் வகித்த ஆனந்த விகடன் சுமார் 170 பணியாளர்களுக்கு விடை கொடுத்திருப்பதாக வாட்ஸப் செய்தி ஒன்று சொல்லியது. எஃப் எம் வானொலி ஒன்று 100 பணியாளர்களை வேலை நீக்கம் செய்துவிட்டதாக திமுக எம்.பி. ரவிக்குமார் அவரது பதிவில் குறிப்பிட்டிருந்தார். வேறு பல நிறுவனங்களில் ஊதியக் குறைப்பு அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்று அறிகிறேன், உலகம் முழுவதிலும் ஊடகங்கள் நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றன. இலங்கை ஊடக நிறுவனங்களும் பணி

 நீக்கம், சம்பளக் குறைப்பு இவற்றோடு ஊரடங்குக் காலத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று அறிவித்திருப்பதாக அறிகிறேன். ஆஸ்திரேலியாவில் 85ஆண்டு பழமையான செய்தி நிறுவனமான AAP ஜூன் இறுதியில் மூடப்படுகிறது. 500 பேர் வேலை இழக்கிறார்கள்.

*

இவை எல்லாம் ஊடகங்களின் எதிர்காலம் என்ன? குறிப்பாகத் தமிழ் ஊடகங்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றன.

தமிழ் வாரப்பத்திரிகைகள் நிலை கொள்ள வேண்டுமானால் அவை  பழைய பாடங்கள் சிலவற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும். Back to Basics என்பது கொரானா விதிக்கும் நிர்பந்தங்களில் ஒன்று.

பழைய பாடம் - 1

பருவ இதழ்கள் நாளிதழ்களோடு போட்டியிட விரும்பியதில்லை. குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை மிகவும் மதித்த, வியந்த பத்திரிகையாளர் தினமணி ஏ.என்.சிவராமன். தன்னுடைய அரசு பதில்கள் நூலாக வெளியிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்றபோது, அதற்கு ஏ.என்.எஸ் முன்னுரை எழுத வேண்டும் என்று எஸ்.ஏ.பி. விரும்பினார். அதன் பொருட்டு அவர் ஏ.என்.எஸை வீடு தேடிச் சென்று வேண்டிக் கொண்டார். ஆனால் குமுதத்தில் அவர் ஏ.என்.எஸ் பாணி செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதில்லை. நாவல்களை சந்தைப் படுத்த தினந்தந்தி குழுமம் விரும்பியபோது அது தனது நாளிதழ்களைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ராணி, ராணி முத்து என்று தனி இதழ்களை நடத்தியது.

இலக்கியச் சிற்றேடுகளுக்கும் வாரப் பத்திரிகைகளுக்குமிடையே இன்றிருப்பதைப் போல ஒரு புகைத்திரை இல்லை. தெளிவான உறுதியான கண்ணாடிச் சுவர் இருந்தது. உள்ளடக்கத்தில் கணையாழியைப் போலிருக்க சாவி விரும்பியதில்லை. தயாரிப்பில், தோற்றத்தில் ஆனந்த விகடனைப் போல இருக்க கசடதபற இருக்க முயன்றதில்லை.

பருவ இதழ்கள் தங்கள் பாத்திரத்தையும் இலக்கையும் தெளிவாக வகுத்துக் கொள்ள வேண்டிய தருணமிது(Time to define targets and roles).

பழைய பாடம் - 2

பன்முகத் தன்மையை வெளிப்படுத்த பணியாளர் எண்ணிக்கை அதிகம் இருக்க அவசியமில்லை. தமிழ் பருவ இதழ்களில் என்றுமே ஆசிரியர் துறையில்&எடிட்டோரியலில்& பணிபுரிவோர் பெரும் எண்ணிக்கையில் இருந்ததில்லை. குமுதம் வாரம் ஐந்து லட்சம் பிரதிகள் விற்ற காலத்தில் அதில் (ஆசிரியர்

நீங்கலாக) முழுநேரப் பணியாளர்களாக இருந்தவர் மூவர். அவர்களோடு ‘ரீட்டைனராக' அரசுப் பணியில் இருந்த ஒருவர் பகுதி நேரப் பத்திரிகையாளர். ஆனால் அந்த மூவரும் அசாத்தியமான திறமைசாலிகள். பல்வேறு வகையான நாவல்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், துணுக்குகள், பேட்டிக் கட்டுரைகள் எழுதுவதில்

கெட்டிக்காரர்கள். அதே போல்தான் கல்கியில், சாவியில் இதயம் பேசுகிறதுவில். லேனா தமிழ்வாணன் ஒற்றை ஆளாகக் கல்கண்டை பல ஆண்டுகள் வாரம் தோறும் வெளிக் கொணர்ந்தார். அதே போல் பாவைச் சந்திரன் குங்குமத்திலும், பின்னர் புதிய பார்வையிலும் தனி ஆளாக பெரும் பங்களித்தார். மஞ்சுளா ரமேஷ் தனி ஒருவராக உழைத்து, மங்கையர் மலரை சர்க்குலேஷனில் கல்கியைவிட உயரத்தில் வைத்திருந்தார். நக்கீரன் பல லட்சம் பிரதிகள் விற்ற காலத்தில் அதில் காமராஜும் இன்னும் நான்கைந்து பேரும் இருந்தார்கள். எழுபது சதம் மொழிபெயர்ப்பு, 30 சதவீதம் சுய எழுத்து என்ற விகிதத்தில் இயங்கிய இந்தியா டுடேயிலும் கூட என்னைத் தவிர ஐந்து பேர் மட்டுமே.

இலக்கியப் பத்திரிகைகளிலும் பெரும்பாலும் ஓராள் படை; கணையாழிக்கு அசோகமித்ரன் போல. அன்றும் பின் நாளிலும் ஆனந்த விகடன் ஒரு விதிவிலக்கு. கல்கி காலத்திலிருந்தே அங்கு ஆட்கள் அதிகம். தொழில்நுட்பம் மேம்பட்டிருக்கும் இந்நாளில் ஆட்களின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். ஆனால் கூடியிருக்கிறது என்பது விநோதமான யதார்த்தம்.

அதிகமான ஆட்கள் இருந்தால் சரக்கு மிடுக்காக இருக்கும் என்பது ஒரு மித். Talents cannot be substituted by numbers.

பழைய பாடம் - 3

அன்று வார இதழ்கள் ‘செட்டும் கட்டுமாக' நடந்து கொண்டதற்கு மூல காரணம் பொருளாதாரம். வாரப்பத்திரிகைகள் என்றும் வருமானம் கொழிக்கும் தொழிலல்ல.இதழ் விற்பனையின் மூலம் வரும் வருமானம் காகிதத்திற்கும் அச்சிற்கும் விநியோகத்திற்கும், ஊழியர்களின் ஊதியத்திற்கும்தான் போதுமானதாக இருக்கும், விளம்பரம் மூலம் கிடைப்பதுதான் வருமானம். அதிக எண்ணிக்கையில் விற்கும் இதழ்களுக்குத்தான் விளம்பரம் கிடைக்கும். எனவே தங்கள் வாசகர்கள் யார்,  அவர்கள் எந்தமாதிரியான விழுமியங்கள், நம்பிக்கைகள், அரசியல் சார்புகள், எதிர்பார்ப்புகள் கொண்டவர்கள் என்பதை நன்கு அறிந்து அதற்கேற்ப இதழ்களை வடிவமைத்தார்கள். தனிப்பட்ட அளவில் அவர்களது விருப்பங்களும் ரசனைகளும் வேறு. அவற்றை வாசகனின் தலையில் கட்டமாட்டார்கள். எஸ்.ஏ.பி  சின்மயாநந்தாவின் கீதைப் பேருரைகளைத் தவற விடமாட்டார். ஆனால் அது குமுதத்தில் இராது. விகடன் பாலன் பறவைகள் வளர்ப்பிலும் விவசாயத்திலும் பிரியம் கொண்டவர். கல்கி ராஜேந்திரனுக்கு அறிவியல் புனைகதைகளில் ஆர்வம் உண்டு. சாவி சார் அகதா கிறிஸ்டியின் விசிறி.

பத்திரிகை என்னுடையது. ஆனால் எனக்கானதல்ல என்பது பாடம். Readers wield more power than editors.

பழைய பாடம்- 4 

என்றாலும் அவர்கள் கைவிடாமல் கடைப்பிடித்த ஒன்று அடையாளத்தைக் காப்பது. எல்லாம் ‘கதை'ப் பத்திரிகைகள்தான் என்றாலும் குமுதம் போல் ஆனந்த விகடன் இராது. ஆனந்த விகடன் போல் கல்கி இராது. ‘அட்டையைக் கிழித்து விட்டால் எல்லாம் ஒரே மாதிரி' என்ற கிண்டல் மெய்யல்ல என்பதை உற்று கவனித்தால் தெரியும். சாண்டில்யனும் ஜெகச்சிற்பியனும் சரித்திரக் கதை எழுதுவார்கள். இருவரும் ஒன்றல்ல. லக்ஷ்மியும் சிவசங்கரியும் ஒன்றல்ல.  ஆடை ஒன்றே போல் இருந்தாலும் ஆள் வேறு. Be analogues but not similar

எதிர்காலம் என்ன?

இரவும் இல்லாத பகலும் தோன்றாத ஓர் அந்திப் பொழுதில் இருக்கிறோம் நாம். மின்வாசிப்பு பரவலாகி வருகிறது. ஆனால் வழக்கமாகவில்லை. பரவலாகக் காரணம்,  மின்னிதழைப் பெறுவது எளிது. ஒரு கை பேசியைக் கொண்டே எல்லாவற்றையும் பெறமுடியும், பெரும்பாலும் இலவசமாக. அச்சு இதழ்கள் அந்த நிலையை ஒரு போதும் எட்ட முடியாது.

கொரானாவிலிருந்து மீண்ட பின்னும் - பத்திரிகை நடத்த முதல் போடுபவர், பத்திரிகையில் வேலை செய்பவர், பத்திரிகை வாங்குபவர் மூவரிடமும்

சரளமாகப் பணம் புரள சில ஆண்டுகள் &ஆம் ஆண்டுகள்& ஆகும்.இணைய இதழ்களைத் தயாரிக்க ஆகும் செலவு அச்சிதழ்களோடு ஒப்பிடுகையில் குறைவு என்பதால் பலர் அதை நோக்கிப் போகலாம். அதனால் மின்வாசிப்பு ஒரு பழக்கமாக ஆகக் கூடும்.

என்றாலும் இணையம், செய்திகளைப் பகிர்ந்து கொள்வதற்கு ஏதுவாக இருப்பது போல் புனைவுகளை வாசிக்க சுலபமாக இருப்பதில்லை. மசால் தோசையை முள்கரண்டி கத்தியால் சாப்பிட முடியும். ஆனால் சற்று சிரமம். இன்னொரு புறம் முழுதும் மின்மயமாகாத பழந்தலைமுறை,

நீராகாரம் போல உண்டா என்று நினைவில் கிளர்ச்சி கொள்வதைப் போல ‘என்னதான் இருந்தாலும் அச்சு இதழ்களை வாசிப்பது போல வருமா' என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் புனைகதைப் பிரியர்கள். அவர்களை இலக்காகக் கொண்டு கதைகளைக் கொண்ட அச்சு இதழ்களை உயிர்ப்பிக்கலாம். அவ்வ்வ்வ்வளவும் கதைகள் என்ற பி.எஸ்.ராமையாவின் மணிக்கொடி மறுபடியும் பிறந்தால் கால் கொள்ள வாய்ப்புண்டு. அதற்கு இலக்கியம் அறிந்த ஆனால் இலக்கியத்தை திணிக்காத, சுஜாதா போல் பல எழுத்தாளர்களும் எஸ்.ஏ.பி. போல இலக்கியம் வாசிக்கும் ஆனால் இலக்கியத்தை விற்காத ஓரு சில ஆசிரியர்களும் தேவை. இருக்கிறார்களா?

ஜூன், 2020.