மது ஒழிப்பு மாநாட்டில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் 
சிறப்புக்கட்டுரைகள்

சர்ச்சை - தலித் தலைவரை ஒருமையில் திட்டினாரா திருமாவளவன்?

Staff Writer

வி.சி.க. தலைவர் திருமாவளவன் தன்னை ஒருமையில் திட்டியுள்ளதாக அருந்ததியர் சங்கத் தலைவர் மதிவண்ணன் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். 

தலித் சமூகத்தினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என சமூகநீதி பேசும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இடையிடையே தலித் அமைப்புகளுக்கு இடையில் கருத்து மாறுபாடுகள் சர்ச்சை அளவுக்கு மாறும் நிலைகளும் ஏற்படுவது உண்டு. 

இந்த நிலையில், வி.சி.க. தலைவர் திருமாவளவன் உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில், ’ஒருவன் தன்னைச் சாதியவாதி’ என எழுதியதாகச் சாடினார். 

காஞ்சிபுரத்தில் அண்மையில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசியபோது, ”இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தாளமுத்து, நடராசன் இறந்தார்கள். அது பெரியாரின் போராட்டத்தில் பெரிய ஊக்கத்தைத் தந்தது. இந்த இரண்டு பேரும் இரண்டு சமூகப் பின்னணி கொண்டவர்கள். நடராசன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர், ஆதிதிராவிடர். தாளமுத்து நாடார் சமூகத்தைச் சார்ந்தவர். இந்த இரண்டு சமூகங்களும் பெரியார் எடுத்த போராட்டத்துக்கு பக்கத்துணையாக இருந்திருக்கின்றன. எனவே, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பெரியாரும் தாளமுத்து நடராசனும் இருக்கும் சிலை ஒன்றை நிறுவுவோம் என்று அண்ணா கண்ட கனவு. அதைச் சொல்லிவிட்டுதான் சொன்னேன், முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று. ஒருத்தன் எழுதுறான், இதிலும் திருமாவளவன் சாதி பார்க்கிறான் என்று. நடராசன் என்கிற தலித்துக்கு சிலை வைக்க இப்படியொரு கோரிக்கையை வைக்கிறார் அப்டின்னு... அப்படி சிந்திக்கிற அவன்தான் சாதிப்புத்தி உள்ளவன்.” என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.

அவர் யாரைக் குறிப்பிட்டார் என்பது பற்றி பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, எழுத்தாளரும் தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத் தலைவருமான ம. மதிவண்ணன், திருமாவளவன் தன்னைப் பற்றி ஒருமையில் சுட்டியுள்ளதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளரும் அருந்ததியர் சங்கத் தலைவருமான மதிவண்ணனின் முகநூல் பதிவு

முன்னதாக, கடந்த மாதம் 29ஆம் தேதியன்று, மதிவண்ணன் தன்னுடைய முகநூல் பக்கத்தில்,

“ தோழர் திருமாவளவன் எல்லாசாதிகளுக்கும் அமைப்பு நடத்துவதாகச் சொல்லிக் கொள்கிறார். நேற்று நடந்த பவளவிழாவில் கூட அவர் வைக்கும் கோரிக்கை என்ன?

''நடராசன், தாளமுத்து இருவர் சார்ந்த இருபெரும் சமூகங்கள் பெரியார் கொள்கைக்கு ஆதரவாக இருக்கின்றன. ஆகவே, பெரியாரோடு தாளமுத்துவும், நடராசனும் இருக்கும் திரு உருவச் சிலைகளை முதல்வர் வைக்க வேண்டும். இது அண்ணாவின் கனவு.''

மொழிப்போரில் ஈகம் செய்தவர்கள் பலர். அவர்களில் பெண்களும் உண்டு. அவர்கள் வெவ்வேறு சாதியினர்.

எழும்பூரில் தாளமுத்து, நடராசன் மாளிகை ஏற்கனவே திமுக அரசால் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

ஆயினும் தான் சார்ந்த சாதியைக் கௌரவிக்கும் விதமாக நடராசனுக்கும், தாளமுத்துவின் சாதியைக் கௌரவிக்கும் விதமாக தாளமுத்துவுக்கும் சிலை வைக்கக் கோருகிறார்.

இவர் ஏன் எப்போதும் சாதியச் சிந்தனையோடேயே நடந்து கொள்கிறார்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதையொட்டிதான் வி.சி.க. தலைவர் திருமாவளவன் இப்படிப் பேசியிருக்கிறார் என சர்ச்சை எழுந்துள்ளது.

எழுத்தாளரும் அருந்ததியர் சங்கத் தலைவருமான மதிவண்ணனின் முகநூல் பதிவு

அதைத் தொடர்ந்து இன்று எழுத்தாளர் மதிவண்ணன் தன் வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “காந்தி ஜெயந்தி அன்று நடந்த விசிக மாநாட்டில் தோழர் திருமா எனது முகநூல் பதிவு ஒன்றை முன்னிட்டு என்னை ஒருமையில் விமர்சித்ததாக நண்பர்கள் சொன்னார்கள். நானும் பார்த்தேன். அது உண்மைதான்.

இதற்கு முன்பும் நாகை திருவள்ளுவன் திருமணத்தின் போதும் உள் ஒதுக்கீடு நூல் எழுதியதை முன்னிட்டு மேடையில் பல்வேறு தலைவர்களின் முன்னிலையில் இவ்வாறான அர்ச்சனை கிடைத்தது.

யாருக்காக எனது எழுத்துகள் வாதாடுகின்றனவோ, எவர் பொருட்டு நான் நிந்திக்கப் படுகின்றேனோ அந்த அருந்ததிய மக்கள் இந்நிகழ்வுகளின் போது எந்தச் சலனமுமின்றி இருக்கிறார்கள்.

அதற்குப் பல காரணங்கள்! அந்த மக்கள் தங்களிடமிருந்தே அந்நியப்பட்டு இருக்கிறார்கள். அதோடு பல்வேறு அமைப்புகளில் பிரிந்து கிடக்கிறார்கள். அந்த அமைப்புகளில் சில விசிகவுக்குத் துணை அமைப்பாய்ச் செயல்படுகின்றன. இப்படிப் பல காரணங்கள்!

நமக்குத் துணையான பெரியாரிய அமைப்புத் தோழர்களும் இதுபோன்ற தருணங்களில் மிகவும் அமைதியாகவே இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் ஒதுங்கிப் போகுமாறு மனதளவில் பல்வேறு தருணங்களைப் பயன்படுத்தி அவர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்ம தாக்குதல்களின் காரணமாகத் தயார்படுத்தப் பட்டுள்ளார்கள்.

ஆசிரியர் வீரமணி சாரட் வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டபோது சமூக ஊடகங்களில் அவர் மிகமோசமாக தாக்கப்பட்டார்.

அவிநாசி அருகே இழிவுபடுத்தப்பட்டுப் பழிவாங்கப்பட்ட பாப்பம்மாள் அவர்களின் வீட்டில் உணவுஅருந்தியபோது, அண்ணன் கோவை ராமகிருஷ்ணன், எழிலன் உள்ளிட்டோர் முகநூல் அயோத்திதாசரிஸ்டுகளால் எள்ளிநகையாடப் பட்டனர்.” என்று மதிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

திருமாவளவனின் தரப்பில் என்ன பதில் வருமோ, பார்க்கலாம்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram