சிறப்புக்கட்டுரைகள்

தனியாரிடம் காலை உணவுத் திட்டம்: ’மாணவர் கண்ணியம் என்ன ஆகும்?’

Prakash

"பள்ளிக்கு வரும் பிள்ளைகள் பசியோடு இருந்துவிடக் கூடாது என்று எண்ணியதாலேயே காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தினேன்." - 2022 செப்டம்பர் 15 அன்று மதுரை ஆதிமூலம் மாநகராட்சிப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கிவைத்து முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன பொன்னான வாசகம் இது!

மேலும், அந்தப் பள்ளியின் குறிப்பேட்டில், "திராவிட மாடல் ஆட்சியாகச் செயல்படும் நமது ஆட்சியில் இன்று தொடங்கியுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்" என்ற வாழ்த்துச் செய்தியாக எழுதியிருந்தார்.

சமூக - பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பசியுடன் படிக்க வரக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தொடு கொண்டுவரப்பட்ட இந்த உன்னதத் திட்டம், தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்ல, பல வெளி மாநிலங்களும் இதைச் செயல்படுத்த முடிவு செய்திருக்கின்றன. பக்கத்து மாநிலமான தெலுங்கானாவில் இந்தத் திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை விரிவுப்படுத்தி செயல்படுத்தியிருக்கிறார்கள்.

இவ்வளவு சிறப்பு மிக்க இத்திட்டம், சென்னை மாநகராட்சி கொண்டுவந்த தீர்மானத்தால் பின்தங்கிவிடுமோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியிருக்கிறது.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நேற்றுமுன்தினம் (நவம்பர் 29) சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்திலேயே, எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், 41ஆவது தீர்மானமாக, ”சென்னை மாநகராட்சியின் வடக்கு வட்டாரத்தில் உள்ள 125 பள்ளிகள், மத்திய வட்டாரத்தில் உள்ள 164 பள்ளிகள், தெற்கு வட்டாரத்தில் உள்ள 69 பள்ளிகள் என மொத்தம் 358 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ’வெளிநிறுவனம்’ மூலம் ஓராண்டு காலத்துக்கு ஒப்பந்தம் கோரி பணி மேற்கொள்ள அனுமதியளிப்பது” என்றும் முடிவுசெய்யப்பட்டது.

இந்தத் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகளான பா.ம.க, அ.ம.மு.க. உறுப்பினர்கள் மட்டுமின்றி ஆளும் கூட்டணிக் கட்சிகளான சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்) உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பல்வேறு அரசியல் அமைப்புகள் தரப்பிலும் பரவலாக எதிர்ப்பு எழுந்தது. சமூக ஊடகங்களில் சென்னை மாநகராட்சியின் இந்தத் தீர்மானம் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.

பா.ம.க. தலைவர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று இரவு ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், “சென்னை மாநகராட்சியில் 358 பள்ளிகளில், 65,030 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் 35 சமையல் கூடங்களில் இருந்து, தினசரி உணவு வழங்கப்பட வேண்டிய அட்டவணையின்படி உயர் அலுவலர்களின் கண்காணிப்பில் காலை காலை உணவு தரமாக தயாரித்து வழங்கும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் உள்ள உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்புடன் இத்திட்டம் ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதற்கான நிலை ஏற்படுமாயின், அதற்கான உத்தேச மதிப்பீடு தயாரித்து அதற்கான ஒப்புதல் சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும்!" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், இத்திட்டத்தைத் தனியாருக்கு கொடுக்க மாட்டோம் என்றோ எதற்காக வெளிநிறுவனம் மூலம் ஒப்பந்தம் கோருவதற்கான அவசியம் ஏற்படுகிறது என்றோ தெளிவான விளக்கம் இடம்பெறவில்லை எனும் நிலையில், கல்வியாளர்கள், கல்விச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் இதுகுறித்துப் பேசினோம்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

விரிவாகப் பேசிய அவர், ”கல்வி கொடுக்கிற பொறுப்பை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரசிடம் கொடுத்திருக்கிறது. சென்னை மாநகராட்சி 1930-களிலேயே பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவைக் கொடுத்திருக்கிறது. நீதிக்கட்சிக்கு இருந்த நிர்வாகத் திறன் இன்றுள்ள சென்னை மாநகராட்சிக்கு இல்லாமல் போய்விட்டதா? மேயர், ஆணையர், துணை ஆணையர், கல்வி அலுவலர் இவ்வளவு பேருக்கும் மக்களின் வரிப்பணத்தில்தானே சம்பளம் கொடுக்கிறார்கள்? ஒப்பந்ததாரர்களைக் கண்காணிப்பது மட்டுமா இவர்களின் வேலை?” என கேள்விகளை அடுக்கினார்.

மேலும், ”ஒரு மாணவருக்கு என்னென்ன தேவையோ அதை பள்ளியின் மூலமாக கொடுப்பதுதான் சரி. மதிய உணவை சத்துணவு ஊழியர்கள் சமைத்துக் கொடுக்கிறார்கள். அவர்களை வைத்தே காலை உணவையும் தயாரித்துக் கொடுக்கலாமே! ஒவ்வொரு பள்ளியிலும் நவீன சமயலறை அமைத்து, சத்துணவு ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுத்து, அவர்களுக்குப் போதுமான அளவுக்கு சம்பளம் கொடுத்து இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம். சூடான உணவை மாணவர்களுக்குக் கொடுப்பதுதான் ஆரோக்கியம்.” என்றும்,

”தனியாருக்கு, தொண்டு நிறுவனத்துக்கு இந்த காலை உணவுத் திட்டத்தைக் கொடுக்கக்கூடாது. அரசுப் பள்ளியில் கொடுக்கின்ற காலை உணவை அந்தந்தப் பள்ளியிலேயே தயாரித்துக் கொடுக்கவேண்டும்.” என்றும்,

”குழந்தைகளின் உணவு உரிமை என்பது கல்வியினுடைய ஒரு பகுதி. குழந்தை உரிமை என்பது மனித உரிமையின் ஒரு பகுதி. கண்ணியம்மிக்க குழந்தைப் பருவத்தை ஒரு குழந்தையால் அரசிடமிருந்துதான்பெற முடியும்; தனியாரிடமிருந்து அல்ல.” என்றும் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்.