சிறப்புக்கட்டுரைகள்

36 ஆயிரம் ரூபாய்க்கு இறக்குமதியான பொருளை 12 ஆயிரம் ரூபாய்க்கு தயரித்து விற்றேன்

உலகம் உன்னுடையது

முத்துமாறன்

பேராவூரணிக்குப் பக்கத்தில் இரட்டைவயல் என்ற கிராமத்தைச் சேர்ந்த வி.ராமராஜ் என்கிற அந்த  சிறுவன் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க ஆங்கில செய்தித்தாளைத் தேடி பக்கத்து ஊருக்குப் போகவேண்டியிருந்தது. வசதிகளற்ற குக்கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவனுக்குள் ஒரு பொறி கனன்றுகொண்டு இருந்தது. எப்படியாவது தொழில்துறையில் பிரகாசிக்கவேண்டும் என்கிற பொறி. 1979-ல் கோவையில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் துறையில் பொறியியல் படிப்பு முடித்த அந்த இளைஞன் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். வேலை தேடி அல்ல. தொழில் செய்யவேண்டும் என்பதற்காக. இங்கே ஒரு விடுதியில் தங்கியவர் அதற்கான வாய்ப்புகளைத் தேடியவாறு, கிண்டி பொறியியல்  கல்லூரியில் எலெக்ட்ரானிஸ் துறையில் எம்.இ யும் படித்துமுடித்தார்.

“கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சின்ன சின்னதாய் எலெக்ட்ரானிக் பொருட்கள் செய்துபார்ப்பேன். கோவையில் எங்கள் கல்லூரி ஆசிரியர் என் ஆர்வத்தைப் பார்த்து என்னை அங்குள்ள மருத்துவமனைகளில் கருவிகள் பழுதானால் அவற்றை சரி செய்ய அனுப்புவார். பொதுவாக எனக்கு மருத்துவத்துறை கருவிகள் செய்யவே ஆர்வம் இருந்தது. ஆனால் பல  காரணங்களால் அந்தத் துறையில் கால் பதிக்க முடியவில்லை. மருத்துவத்துறையில் உள்நாட்டு உபகரணங்களுக்கு ஆதரவு இல்லை வெளிநாட்டு கருவிகள் மீதுதான் மோகம் கொண்டிருக்கிறார்கள் என்பதும் ஒரு காரணம்.

கல்லூரியில் என்னுடன் படித்த நண்பர் ஒருவருடன் தொழில் தொடங்க திட்டமிட்டேன். அவரோ முதலில் ஒப்புக்கொண்டவர், பின் மேற்படிப்புக்குப் போய்விட்டார். அதனால் ஏற்பட்ட இடைவெளியில் எம்.இ. படித்து முடித்தேன்.

அதன் பின்னர் திருவல்லிக்கேணியில் ஒரு இடத்தைப் பிடித்து அந்த காலகட்டத்தில் பிரபலமாக விளங்கிய தொலைக்காட்சி பூஸ்டர்கள் தயாரித்து விற்கும் தொழிலைத் தொடங்கினேன். அப்போது டன்லப் டயர் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவர் பழக்கமானார். அவர் மூலமாக அந்த நிறுவனத்தின் இயந்திரக்கோளாறுகளைச் சரிசெய்ய நான் செல்ல ஆரம்பித்தேன்.  என்ன பிரச்னை என்றாலும் நடு இரவிலும் கார் அனுப்பி அழைத்துச் செல்வார்கள். அவர்களுக்கு ஒரு டைமர் கருவி வெளிநாட்டில் இருந்து வந்துகொண்டிருந்தது. அதன் விலை 36,000 ரூபாய். அந்த கருவியை நான் செய்து தருகிறேன் என்று சொல்லி அதற்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டேன். அவர்கள் முதலில் செவி சாய்க்கவே இல்லை. ஆறுமாதம் கழித்துத் தான் என் கருவியை சோதனை செய்துபார்க்க ஒப்புக்கொண்டார்கள். நான் சோதனைக்காக ஆறாயிரம் ரூபாய் விலைக்கு அந்த கருவியைச் செய்துகொடுத்தேன். ஆறுமாதம் பயன்படுத்திப் பார்த்துவிட்டு திருப்தி அடைந்து ஆர்டர் கொடுத்தார்கள். ஒரு சாதனம் 12,000 ரூபாய்க்கு விற்றேன். அதற்கான தயாரிப்புச் செலவு 1000 ரூபாய்தான்.  மெல்ல இந்தியா முழுக்க இருக்கும் மற்ற டயர் கம்பெனிகளுக்கும் போய் இந்த டைமர்களை விற்க ஆரம்பித்தேன். ஒரு மாதத்துக்கு நான்கு சாதனங்கள் வரை விற்கமுடிந்தது. அப்போது என்னுடன் படித்த சகமாணவர்கள் மின்வாரியத்தில் மாத சம்பளமாக 400 ரூபாய் வாங்கிக்கொண்டிருந்த அந்தகாலத்தில் நான் மாதம் 44,000 ரூபாய்க்கு தொழில்செய்துகொண்டிருந்தேன். அரசு வேலைக்குப் போகாமல் தொழில் செய்ய முடிவெடுத்தது சரிதான் என்ற அப்போது தோன்றியது‘’

அந்திமழைக்கான இந்த சந்திப்பில் சென்னையில் உள்ள ஓபல் எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராமராஜன் பல விஷயங்களை விரிவாகப் பேசினார். இந்தியர்கள் தயாரிப்புத்துறையில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி அவர் பேசியதை வைத்தே ஒரு புத்தகம் போடலாம் என்பது தனிக்கதை. இப்போது மீண்டும் அவரது தொழில் அனுபவங்களை அவர் கூற்றிலேயே கேட்போம்.

“அப்போது ஒருநாள் இந்து பத்திரிகையில் ட்யூப் லைட்டுகளை குறைந்த மின் அழுத்தத்தில் எரிய வைப்பது பற்றிய கட்டுரை வந்தது. அதைப் படித்தபின் எலெக்ட்ரானிக் சோக்குகள் செய்வது பற்றிய யோசனை வந்தது. அவற்றைப் பயன்படுத்தினால் மின்சாரம் பயன்படுத்துவது மிச்சமாகும். எனவே எலெக்ரானிக் சோக்குகளைச் செய்துபார்த்தேன். நண்பர்கள் பாராட்டினார்கள். இதற்கு சந்தையில் வரவேற்பு இருக்கும் என்று தோன்றியது. இவற்றைத் தயாரிப்பதற்காக சொந்த ஊரில் ஒரு தொழிற்சாலையும் நிறுவினேன். எப்போதும் ஊருக்கு எதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. சுமார் 150 பேர் வரைக்கும் அங்கே வேலை கொடுக்க முடிந்தது. நாட்டுக்கு இந்த சோக் கண்டுபிடிப்பின்மூலமாக ஏராளமான மின்சாரத்தை சேமித்துக் கொடுக்க முடிந்தது. 2008 வரை நான் விற்ற சோக்குகள் மூலமாக 216 கோடி ரூபாய் அளவுக்கு மின்சாரத்தைச் சேமித்துக்கொடுத்திருக்கிறேன்.

எலெக்ட்ரானிக்ஸ் துறையில் பிரச்சனை என்னவென்றால் மலிவாக இறக்குமதியாகும் தரங்குறைந்த பொருட்கள்தான். எங்கள் சோக் கருவியில் புனேவில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து கெபாசிட்டர்கள் பயன்படுத்தினோம். சோக் தரமாக நீண்டநாள் வந்தது. விலைகுறைவாக இருக்கும் கெபாசிட்டர்கள் தைவானில் இருந்து வந்திருந்தன. அவற்றைப் பயன்படுத்தியபோது இரண்டு ஆண்டுகளில் பழுது ஏற்பட்டது. அந்த கெபாசிட்டர்கள் குறிப்பிட்ட மணி நேரங்கள் மட்டுமே உழைக்கக்கூடிய தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. அதனால்தான் விலை மலிவு என்று அப்போதுதான் தெரியவந்தது” சொல்லி நிறுத்துகிறார் ராம்ராஜன்.

இப்போது ஓபல் நிறுவனம் எல்.இ.டி. பல்புகளைத் தயாரிக்கிறது. இவற்றில் இருக்கும் சிக்கல் விலை தொடர்ந்து வீழ்ந்துகொண்டிருப்பதுதான். ‘’கடந்த ஆண்டில் மட்டும் ஐந்துமுறை விலைகளை மாற்றி அமைக்கவேண்டியிருந்தது. இப்போதும் பல இடங்களில் இருந்து இதற்காக ஆர்டர்கள் உள்ளன. சில காரணங்களால் எங்களால் ஆர்டர்களுக்கு  முழுமையாக தயாரிக்க முடியாத நிலைதான் இருக்கிறது. தரமான பொருட்களுக்கு எப்போதும் ஆர்டர்கள் இருப்பது சகஜம்தானே? தொழிற்சாலைகளுக்கு வேண்டிய எல்இடி டியூப் லைட்டுகள் 600 ரூபாய்க்கும் வீடுகளுக்குத் தேவையான லைட்டுகள் 400 ரூபாய்க்கும் இப்போது தயாரித்து அளிக்கிறோம்” என்று சொல்லும் ராமராஜன் இந்தியாவில் முதல்முதலாக இண்டக்‌ஷன் ஸ்டவ்களை அறிமுகப்படுத்தியவர் என்பது அவரது தொழில்சிந்தனைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

“2000-வது சீனாவில் நடந்த ஒரு தொழிற்கண்காட்சியில் கலந்துகொண்டேன். அங்குதான் இந்த இண்டக்‌ஷன் ஸ்டவ்களைக் கண்டேன். சிலவற்றை மாதிரிக்கு வாங்கிவந்தேன். நன்றாகவே வேலை செய்தன. அதற்குமுன்னால் இருந்த இண்டக்‌ஷன் ஸ்டவ்கள் இத்தாலி தயாரிப்பு. முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் விலைமதிப்பு வரும். ஆனால் இவை மிக விலை மலிவு. சில ஆயிரங்கள்தான். எனவேதான் அவற்றை இறக்குமதி செய்து விற்பனை செய்துபார்த்தேன்” என்கிற ராமராஜன் சிலகாரணங்களால் அதைக் கைவிட்டிருக்கிறார்.

“அரசு தொழில்துறைக்குச் செய்யும் உதவி என்பது இன்னும் மேம்படவேண்டும். குறிப்பாக தயாரிப்புத்துறை என்பது இன்னும் கவனம் செலுத்தப்படவேண்டியது. குறைந்த வட்டியில் தேவையானவர்களுக்கு தேவையான நேரத்தில் கடன் அளிப்பது மிகவும் முக்கியம். அத்துடன் தயாரிப்புத் துறையில் இருக்கும் நாங்கள் அரசின் பல்வேறு துறைகளுடன் தொடர்பாடலில் இருக்கவேண்டி உள்ளது. ஒவ்வொரு துறை அதிகாரிகளும் பல்வேறு அழுத்தங்களைத் தருகின்றனர். இந்த விஷயங்களில் மாறுதல் தேவை” என்கிற ராமராஜ், புதிதாக தொழில்தொடங்க முன்வருகிறவர்களுக்கு என்ன ஆலோசனை கூறுகிறார்?

‘’நாங்கள் தொழில் தொடங்கிய காலத்தில் பொருட்களைத் தயாரிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. ஆனால் இன்றைக்கு அந்த திறமை 20 சதவீதம்தான். மீதி 80 சதவீதம் மற்ற நிர்வாக, கணக்கியல், வரி போன்றவை பற்றிய விஷயங்களைப் பற்றிய அறிவு அவசியமாக உள்ளது. எனவே இளைஞர்கள் யாருடனாவது இணைந்து இந்த விஷயங்களை அறிந்தபின்னர் தொழிலில் இறங்குவது  சிறப்பானதாகும்”.

மே, 2016.