சிறப்புக்கட்டுரைகள்

2012 நினைவுகள் – ஒரு தமிழனின் பார்வையில் இருந்து

முத்துமாறன்

2012 மின்சாரம்; வருக 2013 ஒளியைத் தருக!

இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் அதிகம் பேசப்பட்ட ஒரே விஷயம் மின்வெட்டுதான். சென்னையில் இரண்டுமணி நேர மின்வெட்டுக்கே மக்கள் மூக்கால் அழுகிறார்கள்.

சென்னையைத் தாண்டி வெளியே போனால் 14 மணி நேரம் மின்சாரம் இல்லை. விவசாயம், நெசவு, வர்த்தகம் -எல்லாம் சுக்குநூறாகிப் போய் மிக எளிதாக தமிழகம் வளர்ச்சி பாதையில் அதலபாதாளத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது. “தமிழ்நாட்டில் 2020-லும் மின் தட்டுப்பாடு சுமார் 4000 மெகாவாட் அளவுக்கு இருக்கத்தான் செய்யும். மின்சாரத்தைப் பொறுத்தவரை தொலைதூரம் வரைக்கும் வெளிச்சமே இல்லை. சுத்தமாக இருட்டுதான்” என்கிறார் அந்திமழை தொடர்புகொண்ட ஓர் உயர் அதிகாரி.

திமுக ஆட்சிக் காலத்தில் இந்த அளவுக்கு மின்வெட்டு இல்லையே. இப்போது மட்டும் என்ன வந்தது? “ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை 2000 மெகாவாட் இங்கே அதிகரிக்கிறது புரிந்துகொள்ளுங்கள். அதற்-கேற்ப மின் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை. திமுக ஆட்சியில் கடைசிக்காலத்தில் தனியாரிடம் சகட்டுமேனிக்கு கூடுதல் விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கினார்கள். அதாவது ஒரு யூனிட் இரண்டரை ரூபாய்க்கு மத்திய அரசு மின்சாரத்தைத் தருமானால் இவர்கள் தனியாரிடம் ஒரு யூனிட் 15 ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்கினார்கள். இதனால் மின்வாரியம் சுமார் 35000 கோடி கடனில் மூழ்கியது. வங்கிகள் எல்லாம் அதற்குக் கடன் கொடுக்க மறுத்துவிட்டன. இதனால் கடந்த பத்தாண்டுகளாக உயர்த்தாமல் இருந்த மின் கட்டணத்தை உயர்த்தினோம். அப்படி இருந்தும் இப்போது என்ன நிலை தெரியுமா? கடன் மற்றும் கட்டணப்பாக்கி எல்லாம் சேர்த்து மின்வாரியம் 65000 கோடி ரூபாய் கடனில் உள்ளது. இதில் 25000 கோடி ரூபாயை தமிழக அரசு கொடுத்து மின்வாரியத்தை ஓரளவுக்கு மீட்கும் என்று தெரிகிறது. ஆனால் மீதி 40000 கோடியை எங்கிருந்து மின்வாரியம் அடைக்கும்? கடவுளுக்கே வெளிச்சம்!” என்றார் அவர்.

வடமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்க வழி இருக்கிறதா? “அங்கிருந்து குறைந்த விலைக்கு வாங்க முடியும். இங்கே தனியார் மின்சாரம் 8 ரூபாய்க்குக் கிடைக்கும்போது அங்கே 3 ரூபாய்க்கு வாங்கிவிட முடியும். ஆனால் அதில் உள்ள சிக்கல் வடமாநில மின்-வழிப்-பாதையும் தென் மாநில மின்வழிப்பாதையையும் இணைக்கும் இணைப்பு சரியாக இல்லை. அதில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் செய்யவேண்டி உள்ளது. இதை கடந்த ஆண்டுகளில் மத்திய அரசை வலியுறுத்தி செய்திருக்கலாம். செய்யவில்லை. இப்போது குஜராத்தில் இருந்து வாங்கிய மின்சாரம்கூட நம் மாநிலத்துக்கு வந்து சேரமுடியாத சிக்கல். வரும் 2013 ஜூன் மாதம் அந்த மின்வழிப்பாதையில் நமக்கு இடம் கொடுப்பார்கள் என்று தெரிகிறது. அதன்பிறகு கொஞ்சம் அங்கிருந்து மின்சாரம் வரும். 2014ல் தான் இந்த மின்வழிப்பாதை இணைப்பு முழுமையாக ஆக்கப்படும். நாம் வடக்கிருந்து மின்சாரம் தேவைக்கேற்ப வாங்கமுடியும். அதன்பிறகு மின்நிலைமை சரியாக வாய்ப்புள்ளது. ஆனால் பயன்பாடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே செல்வதற்கேற்ப புதிய திட்டங்கள் எதுவும் நிறுவப்படவில்லை” என்று வருத்தப்பட்டார் அவர்.

முன்னாள் முதல்வர் புதிய தலைமைச்செயலகம் கட்ட தினமும் போய் அங்கே உட்கார்ந்து மேற்பார்வை செய்தார். அதையே மின் திட்டங்கள் நிர்மாணத்திலும் செய்திருந்தார் என்றால் அதில் இவ்வளவு தாமதம் ஏற்பட்டிருக்காது. அதேபோல் தற்போதைய முதல்வரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நேரடியாக களமிறங்கி மின் திட்டங்களைப் பார்வையிட்டு கவனம் செலுத்தியிருந்தால் நிலைமை மேம்பட்டிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

சூரிய மின்சார கொள்கை உருவாக்கப்பட்டிருப்பது ஒரு நல்ல செய்தி. மூன்று ஆண்டுகளில் 3000 மெகாவாட் அதில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு மெகாவாட் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்ய பத்து ஏக்கர் இடம் வேண்டும் என்பது அதில் உள்ள குறைபாடு.

நமக்கென்ன? இருட்டில் அமர்ந்துகொண்டு இரட்டை இலை ஆட்சியில்கூட மின்சாரத் தட்டுப்பாட்டுக்கு சூரியனைத் தான் நாட வேண்டி உள்ளது என்று வாய்ஜாலம் பேசிக்- கொண்டிருக்கலாம்!

தமிழ் சினிமா : சின்ன படங்களின் ஆண்டு

“இந்த படத்துக்கு செலவே பண்ணியிருக்க மாட்டாங்க” - இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் வெற்றி பெற்ற பல படங்களைப் பார்த்தவுடன் பார்வையாளர்களுக்கு இப்படித்தான் தோன்றியிருக்கும். கலகலப்பு படத்தில் ஒரு பழைய வீடு, ஒரு நாய் இவற்றை வைத்துக்கொண்டு சுந்தர். சி கடுமையாக கல்லா கட்டினார். படத்தின் வெற்றியில் மகிழ்ந்த அதன் தயாரிப்பாளர் குஷ்பு ஒரு ஆடி கார் வாங்கி கணவருக்குப் பரிசளித்ததாகச் சொல்லப்பட்டது. பிட்சா படத்தில் மிகக்குறைவான பாத்திரங்களை வைத்துக்கொண்டு பார்வையாளர்களைப் பயமுறுத்தினார் கார்த்திக் சுப்புராஜ். படத்தை ஹாலிவுட்டுக்குக் கொண்டுபோக இருப்பதாக அதன் தயாரிப்பாளர் சொல்லும் அளவுக்கு வரவேற்பு. லட்சுமி ராமகிருஷ்ணன் தன் ஆரோகணம் படத்தை 40 லட்சம் ரூபாயில் எடுத்து லாபத்துக்கே விற்பனை செய்தார். வழக்கு எண் 18/9, மெரினா, காதலில் சொதப்புவது எப்படி? அட்டகத்தி, மௌனகுரு, மனம் கொத்திப் பறவை, நான், கடைசியாக வந்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்- என்று சின்ன பட்ஜெட் படங்கள் கதையாலும் ட்ரீட்மெண்டாலும் 5டி காமிரா புண்ணியத்தாலும் லாபம் சம்பாதித்துக் கொடுத்த ஆண்டு இது. மாற்றான், முகமூடி, தாண்டவம், பில்லா-2- என்று பெரிய பட்ஜெட் படங்கள் வெளியே வந்து ரசிகர்களை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர்களையும் விழிபிதுங்க வைத்தன. இந்த வரிசையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான நண்பன், இறுதியில் வெளியான துப்பாக்கி இரண்டும் விஜய்க்கு கை கொடுத்தன. பெரிய பட்ஜெட் படங்கள் எடுத்தால் விளங்குமா விளங்காதா என்ற விவாதத்தில் இந்த ஆண்டு தோற்றவை பெரிய பட்ஜெட்காரர்களே. இடையில் திடீரென்று வந்த ஒரு கல் ஒரு கண்ணாடி ஓசைப்படாமல் அதிரிபுதிரி வெற்றி. இயக்குநர் ராஜேஷ் தன் பெயரைக் காப்பாற்றிக்கொண்டார். நடிகர் சந்தானத்தின் ராக்கெட் செவ்வாய் கிரகத்துக்கே உயரமாகப் போய்விட்டது. இப்போது அவர் பவர் ஸ்டாருடன் சேர்ந்து லட்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். ஆனாலும் தமிழ்த் திரையுலகம் பண்ணியது அநியாயம். வைகைப் புயலை இப்படி வடைக்காக வெயிட்டிங்ல வெச்சுட்டாங்களே!

திராவிடனா, தமிழனா?

அதிமுக ஆட்சி என்றாலே அதிரடிக்கு எப்போதும் குறைவிருக்காது என்பதால் ஜெ. 2012-லும் எந்த குறையும் வைக்கவில்லை. பிரதமருக்கு சூடான கடிதங்கள் எழுதுவதாகட்டும்; டெல்லிக்கே போய் முதல்வர்கள் மாநாட்டில் மத்திய அரசை வாங்கு வாங்கு என்று வாங்குவதாட்டும்; காவிரிப் பிரச்னையில் உச்சநீதிமன்றம் போய் மோதி நீர் பெறுவதாகட்டும்-அம்மையார் கொஞ்சம்கூட சளைக்கவில்லை. வழக்கம்போல அமைச்சர்கள் மாற்றங்கள் இந்த ஆண்டும் தொடர்ந்தன. அதிகாரிகள் மாறுதல்களோ கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்றன. பெங்களூருவில் தொடரும் சொத்துக்குவிப்பு வழக்கு மட்டும் ஓர் உறுத்தல். இந்த ஆண்டு ஆரம்பத்தில் அதாவது பிப்ரவரியில் வங்கிகளில் கொள்ளை அடித்த வடமாநிலத்தவர் ஐந்துபேரை ‘என்கவுண்டர்’ செய்து போலீஸ் தன் கணக்கைத் தொடக்கியது.  இந்த ஆண்டுக்கு கடைசி-யாக(இருக்கலாம்!) பிரபு, பாரதி என்ற இரண்டுபேரை ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை போட்டுத்-தள்ளியதோடு முடிவடைந்தது. தென்மாவட்டங்களில் குருபூஜைப் பலிகள் வேறு அரசைப் படுத்தின. தர்மபுரியில் தலித் காலனி எரிக்கப்பட்ட பிரச்னை மருத்துவர் ராமதாசுக்கு பெரிய ஆயுதமாகக் கையில் கிடைத்தது. வன்னியர் வாக்கு வங்கியைக் குறிவைத்து செயல்படும் குறுக்குவழியை அவருக்கு 2012 கொடுத்தது.

பதினைந்து மாதம் சிறைவாசத்துக்குப் பின்னால் ஆ.ராசா திஹார் சிறையில் இருந்து இந்தாண்டு மே மாதம் வெளியே வந்தார். சென்னைக்கு வந்தபோது நீலகிரி தொகுதி மக்களும் அவரது ஆதரவாளர்களும் மீனம்பாக்கம் விமானநிலையத்தில் பட்டையைக் கிளப்பி வரவேற்றனர். 193 நாட்கள் கனிமொழி சிறையில் இருந்து கடந்தாண்டு வெளியே வந்தபின்ன திமுகவின் தசையில் குத்திய முள்ளாக இருந்தது ராசாவின் சிறைவாசமே. பொறுமையாக இருப்பதன் பலனை திமுக  தலைவர் அறிவார். மெல்ல காங்கிரசுடனான உறவில் தன் கை ஓங்குமாறு பார்க்கவேண்டும் என்பதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுவருகிறார். இப்போது டெல்லியில் இருந்து கோபாலபுரத்துக்கு ட்ராபிக் அதிகரித்துள்ளது. சட்டமன்ற வைரவிழாவுக்கு தான் போகாவிட்டாலும் பிரணாப் முகர்ஜியை தன் வீட்டுக்கு வரவைத்து வீராப்பைக் காட்டினார். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்துக்கொண்டே அதற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்து ‘அசத்தவும்’ செய்தார். அழகிரி- ஸ்டாலின் வழக்கம்போல இரு துருவங்களாகவே இணைந்து செயல்பட, இளைஞரணிக்கு ஆட்களைப் போட்டு தன் செல்வாக்கை சில இஞ்சுகள் உயர்த்திக்கொண்டார் ஸ்டாலின்.

சட்டமன்றத்தில் நாக்கைத்  துருத்தி புகழைச் சேர்த்துக்-கொண்ட கேப்டன் கட்சியில் இரண்டு எம்.எல்.ஏக்களை அதிமுகவிடம் பறிகொடுத்தார். ஜெயா தொலைக்காட்சியில் நிருபரிடம் சவுண்ட் விட்ட அசத்த லான டிடிஎஸ் ஒளி ஒலி காட்சியின் மூலம் அரசியல் பார்வை-யாளர்களைக் குஷிப் படுத்தினார். இடதுசாரியினர் எப்போதும் போல உலக விஷயங்களில் கவனம் குவித்தனர். தோழர் தா.பாண்டியன் மட்டும் உஷாராக தன் எண்பதாவது பிறந்தநாளை அகிலம் புகழக் கொண்டாடி அனைவர் வாழ்த்தையும் பெற்றார். கி.வீரமணி கூட இரட்டைக் துப்பாக்கியின் இன்னொரு குழலான மு.க. உடனிருந்து வாழ்த்த தன் 80வது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்.  வைகோ சாஞ்சி போய் போராட்டம் நடத்த நாஞ்சில் சம்பத் அதிமுகவில் ஐக்கியம் ஆனார். கவலையே படாமல் வைகோ நடைப்பயணம் போய்விட்டார்!

இந்த ஆண்டு திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு என்று திமுக அறிவித்ததும் சூடான தமிழரா திராவிடரா என்ற ஒரு விவாதம் பொதுவெளியில் சூடுபிடித்தது. திராவிட இயக்கத்தவர்களை தமிழ்தேசியவாதிகள் சகட்டுமேனிக்கு கேள்விகேட்டனர். பெரியாரும் இதில் தப்பவில்லை. இந்த திராவிடம் என்ற கருத்தாக்கத்தின் எதிர்ப்பு 2012-ன் முக்கிய கருத்தியல் நிகழ்வாகக் குறிப்பிடலாம். ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் கருத்தியலுக்கு இன்னும் இடமிருக்கிறதா என்ன?

பாதாளம் டொ அதலபாதாளம் ?

அப்புறம் இந்த ஆண்டு நம்ம நாட்டின் பொருளாதாரம் எப்படி இருந்தது என்று கேட்டால் குமுறிக்குமுறி அழும் விதத்தில்தான் இருந்தது என்று சொல்லவேண்டும். 2008-ன் கடைசியில் அமெரிக்காவில் தொடங்கி ஐரோப்பாவரை ஆட்டிப்படைத்த பொருளாதார வீழ்ச்சியில் இந்தியா தப்பித்திருந்தது. நம்மவர்களின் சேமிக்கும் குணம்தான் அதற்கு அடிப்படைக் காரணம் என்று நிபுணர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால் அதன் பின்னர் ஜிடிபி எனப்படும் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி விகிதம்தான் படுத்துக்கொண்டது.

பிரேசில், ரஷ்யா இந்தியா, சீனா ஆகியவை வானாளவிய வளர்ச்சியை எட்டும் என்று சொல்லியிருந்தார்கள் அல்லவா? கடந்த மூன்றாண்டாக இந்தியா அதில் படுத்துக்கொண்டது. 8-9 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்றிருந்தார்கள். ஆனால் அது 5.5 சதவிகிதமாக இந்த ஆண்டு சுருங்கிவிட்டது. இதற்கு அர்த்தம் குறைவான வேலைவாய்ப்புகள்; குறைவான எண்ணிக்கையில் மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபடுதல் என்று சொல்லலாம். 2004-க்கு பின்னர் வந்த ஆண்டுகளில் வளர்ச்சிவிகிதம் மிகக் குறைவாக இருப்பது இந்த ஆண்டுதான்.

பணவீக்கம் அதிகரிப்பு, வளர்ச்சிவிகிதம் குறைவு, பட்ஜெட்டில் தட்டுப்பாடு அதிகரிப்பது- இவைதான் இந்திய பொருளாதாரத்தை வாட்டிவதைக்கும் அம்சங்கள் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். உலகிலுள்ள 183 நாடுகளில் சுலபமாக தொழில்செய்ய வசதியான நாடுகள் என்று பட்டியல் போட்டால் 132-வது இடம்தான் இந்தியாவுக்குக் கொடுக்கமுடியும் என்கிறது உலகவங்கி.

என்னதான் பொருளாதாரவளர்ச்சி என்று கடந்த பத்தாண்டுகளாக மார்தட்டினாலும் இந்த வளர்ச்சி மேல்தட்டு ஆட்களுக்குத்தான் பலன் தந்தது. கீழ்தட்டில் உள்ளவர்களுக்குப் போய்ச்சேரவில்லை. சீனா, தென்கொரியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம்மூரில் பெரிய அளவுக்கு கீழ்த்தட்டு மக்கள் பயன்பெறவில்லை. விவசாயம் சார்ந்த நாடாக இருந்த இந்தியா, சேவைத்துறை சார்ந்த நாடாக மாறியதில் உற்பத்தித்துறை கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது என்றும் நிபுணர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்திய பொருளாதாரம் மந்தமானதும் இந்த ஆண்டு எஸ் அண்ட் பி போன்ற சர்வதேச நிதிநிறுவனங்கள் நம் நாட்டின் கடன்பெறும் திறனுக்கான மதிப்பீட்டு எண்ணைக் குறைப்பதாக மிரட்டின. அமெரிக்க அதிபர் ஒபாமா கூட நிதித்துறை சீர்திருத்தங்கள் இன்னும் செய்யாததற்காக நமக்கு கண்டனம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து உடனே சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீடு என்று எதிர்ப்புகளுக்கு இடையே மத்திய அரசு திறந்துவிட்டிருக்கிறது.

எண்ணெய் விலையை வேறு சந்தை விலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கலாம் என்று கட்டவிழ்த்துவிட்டார்கள். பணவீக்கம் எட்டு சதவிகிதத்தை எட்டிப்பிடித்தது. காய்கறிகள், பருப்பு-என்று எதை யெடுத்தாலும் விலை விண்ணை எட்டியது.

தமிழ்நாட்டில் 2023- தொலைநோக்குத் திட்டம் என்று ஒன்றை முதல்வர் அறிவித்து நம் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் தென்கொரியா போன்ற நாடுகளின் வளர்ச்சி விகிதத்தை எட்டும் என்று கணக்கு மட்டும் போட்டார். ஸ்ரீபெரும்புதூரைச் சுற்றி இந்த ஆண்டும் டைம்லர் போன்ற சர்வதேச ஆட்டோமொபைல் கம்பெனிகள் கடையைத் திறந்தன. ஆனாலும் சென்னையில் ஒரு கீரைக்கட்டு 15 ரூபாய் சாதாரணமாக விற்கிறது. வெங்காயம் விலை கண்ணீரை வரவைக்கிறது. பேருந்துக் கட்டணத்தை ஏற்றிய கையுடன் மின்சார கட்டணத்தை தமிழக அரசு ஏற்றிவைத்தது. ஆனால் சின்னத்தம்பியில் மாலைக்கண் வந்த கவுண்டமணி சொல்வதுபோல, அப்பா எனக்கு கரண்ட் பில் மட்டும் ஏறினது இல்லை என்று தமிழ்நாட்டு மக்களும் சொல்கிறார்கள். ஏன்னா? உங்களுக்கே தெரியும். கரண்டே இல்லை!எப்படி கரண்ட்பில் ஏறும்?

ஜனவரி, 2013.