சிறப்புக்கட்டுரைகள்

1986 இந்தி எதிர்ப்பு போர் : பொள்ளாச்சி பொறி.. கோவையில் எரிந்தது..

பொள்ளாச்சி மா. உமாபதி

1986 செப்டம்பர் 10 காலை தினகரன் செய்தித்தாளைப் பார்த்தவர்கள் திடுக்கிட்டனர். மதுரை வந்த இந்திவெறி எம்.பி க்கள் சிலர் மதுரை ரயில்/ அஞ்சல் நிலையத்தில் இருந்த தமிழ் பெயர்ப் பலகைகளைத் தூக்கி எறிந்தனர் என்பது அந்த செய்தி. Hindi Implementation committee-ஐ சேர்ந்த எம்பிக்கள் எதோ ஒரு பயணத்தில் மதுரை வந்துள்ளனர். அவர்கள் ஒரு தகவலுக்காக இரயில்நிலையம்/ அஞ்சல் நிலையம் சென்றுள்ளனர். போன இடத்தில் அலுவலர்களின் பெயரையும் அவர்களின் பதவியையும் குறிக்கும் முப்பட்டை வடிவிலான் பெயர்ப்பலகைகளைப் பார்த்துள்ளனர். அது மூன்று பட்டிகளில் மூன்று மொழிகளில் தமிழ், ஆங்கிலம், இந்தியில் இருக்க வேண்டும். ஆனால் அங்கு தமிழ், ஆங்கிலம் இருமொழிகளில் மட்டுமே இருந்திருக்கிறன.  எனவே ‘எங்கே இந்தி‘ என்று கேட்டு அந்த தமிழ்ப் பெயர்ப் பலகைகளை தூக்கி எறிந்தனர். இந்த செய்திதான் தினகரனில் தலைப்பு செய்தியாக வந்தது.

இதைப் பார்த்ததும் எனக்கு அடக்க முடியாத கோபம் ஏற்ப்பட்டது.   காலை 10 மணிக்கு நான், நண்பர்கள் மனோகரன், பாரதி, சுசீந்திரன், பொன்ராசு, கனகராசு (இவர்கள் திராவிட கழகத் தோழர்கள்) எல்லோரும் கூடிப்பேசினோம். தமிழுக்கு அநீதி தமிழ்நாட்டிலேயே இழைக்கப் பட்டுள்ளது.  இந்திவெறி எம்பிக்களின் செயலைக் கண்டிக்க எதாவது செய்யவேண்டும் என்று கருதினோம். அப்போது நான் கோவை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்-பாளர். என் இளைஞர் அணி தோழர்கள் பலருக்கும் சொல்லி அனுப்பி வரவழைத்தேன். அன்று இரவு பொள்ளாச்சியில் உள்ள இரயில் நிலையம், அஞ்சல் நிலையங்கள், கலால்வரி அலு-வலகம், வருமானவரி அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் பொள்ளாச்சியில் எங்கெங்கு உள்ளதோ அவை அனைத்திலும் இருந்த பெயர்ப்பலகைகளில் இருந்த இந்தி எழுத்து-களை தார்பூசி அழிப்பது என முடிவெடுத்து அவர்களை மூன்று நான்கு அணிகளாகப் பிரித்து அனுப்பினேன். எதற்கும் இது-பற்றி மாவட்ட செயலாளரிடம் ஒரு அனுமதி கேட்கலாம் என்று நினைத்து அன்றைய மாவட்ட செயலாளர் அண்ணன் கண்ணப்பன் அவர்-களோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரங்களை விளக்கிச் சொல்லி அனுமதி வேண்டினேன். அவரும் ,‘நானும் தின-கரனில் செய்தியை படித்தேன், எதாவது செய்யவேண்டும் என்றும் நினைத்தேன். ஆனால் தலைமை சொல்லாமல் நாமாக எதுவும் செய்யக்கூடாது. எனவே கட்சிப்பெயர் இல்லாமல் செயல்படுங்கள்’ என்று கூறினார்.

வெறுமனே இந்தி எழுத்துக்களை அழித்தால் அதில் பயனில்லை. ஏன் அழிக்கிறோம் என்பதற்கான காரணங்களையும் எழுதவேண்டும். அதோடு பலரும் மறந்துபோன இந்தி எதிர்ப்பு வாசகங்களை திரும்ப எழுதி நினைவூட்டவேண்டும் என்றும் கருதி நண்பர்கள் மனோ, பாரதி, சுசி, பொன்ராசு, தென்றல் செல்வராசு எல்லோருமாக இந்தி எதிர்ப்பு வாசகங்களை எழுதினோம். அண்ணா சொன்னது, கலைஞர் சொன்னது, பெரியார் சொன்னது, நாவலர் சொன்னது ஆகியவற்றுடன் அப்போதைய அமைச்சர்களான காளிமுத்து, ஆர் எம் வீரப்பன் ஆகியோர் சொன்ன சில வாசகங்களையும் எடுத்துக் கொண்டோம். திடீரென ஒரேநாள் இரவில் பொள்ளாச்சியின் முக்கிய தெருக்களில் இந்தி எதிர்ப்பு வாசகங்கள் மக்கள் கவனத்தை திருப்பியது. அதைவிட, அன்றைய மாலைமுரசு ஏட்டில் பொள்ளாச்சியில் இந்தி எதிர்ப்பு வெடித்தது என்று தலைப்பு செய்தியாக வெளியிட்டனர்.  இது எங்களை மிகவும் உற்சாகப்படுத்தியது.  கூடவே கோவை, உடுமலை, பழனி, ஈரோடு போன்ற ஊர்களில் இருந்து விசாரிப்பும் பாராட்டுகளும் வந்தன. மாவட்டசெயலாளர் கண்ணப்பன் தொலைபேசியில் பாராட்டினார். எங்கள் உற்சாகம் கரைபுரண்டது. இதை இத்தோடு விடாமல் தொடர் நிகழ்சிகள் மூலம் பரவச் செய்ய முடிவெடுத்து இந்திவெறி எம்பி களின் கொடும்பாவியை கொளுத்தாமல் மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகம் முன் இருந்த புளிய மரத்தில் தூக்கிலிட்டு தொங்கவிட்டு சுற்றிலும் காரண காரிய வாசகங்களையும், இந்தி எதிர்ப்பு வாசகங்களையும் தட்டிகளில் எழுதி வைத்தோம்.

அடுத்தநாள் இதுவும் மாலைமுரசில் வந்தது. எங்களுக்கு போட்டியாக கோவை, உடுமலை, பழனியில் உள்ள இளைஞர்கள் பலரும் களத்தில் இறங்கினர். கோவையில் வருமான வரி அலுவலகத்தில் இருந்த எவர் சில்வர் இந்தி எழுத்துக்கள் உடைக்கப்பட்டன. பொள்ளாச்சியில் வடவர் கடைகள் முன் மறியல் செய்தோம். வடவர்கள் தங்கள் கடைகளை மூடிவிடுகிறோம் என்றனர். நீ மூடி-விட்டால் எங்கே மறியல் செய்வது என்று கேட்டு மூடவும்-விடவில்லை. மறியல் ஒரு நல்ல பிரசார வாய்ப்பாக இருந்தது. நிறையப்பேர் வந்து எங்களிடம் விவாதித்தனர். உரிய காரணகாரியங்களை எடுத்துசொல்லி அவர்கள் ஆதரவைப் பெற்றோம். எல்லாம் தமிழர் தானை என்ற பெயரிலேயே நடந்தது. திமுக பெயரே வரவில்லை. அத்தோடு எங்களின் யாருடைய தனிப்பட்டவர்களின் பெயரும் செய்தித்-தாள்-களில் வரவில்லை.

மேலும் சில இளைஞர்கள் இந்திவெறி எம்பி-களின் கொடும்பாவியை கொளுத்த விரும்பினர். சரி நீங்கள் செய்யுங்கள் என்று அனுமதித்தோம். அவர்கள் எங்களுக்கு ஒரு பெயர் வேண்டும் என்று கேட்டனர். தமிழ் இளைஞர் புரட்சிப் படை (TAMIL YOUTHS REVOLUTIONARY ARMY) என்று பெயர் வைத்தேன். இதுவரை எங்களை எதுவும் செய்யாத காவல்துறை அவர்-களைக் கைது செய்தது. அவர்களுக்கு ‘இளைஞர்‘ ‘புரட்சி‘ ‘படை’ இந்த மூன்று சொற்களும் கைது செய்யப் போதுமானவையாக இருந்தன. இதற்கிடையே பழனி, புதுக்கோட்டை, விருத்தாசலம், தஞ்சை போன்ற பல இடங்களிலும் ஆங்காங்கே இந்தி அழிப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்தி எதிர்ப்புக்குக்  கிடைத்துவந்த செய்தித்தாள் விளம்பரம் கண்டு  அதற்கு ஆசைப்பட்ட காங்கிரஸ்காரர்கள் சிலர், வைஜெயந்திமாலா பாலி ரசிகர் மன்றம் என்ற பெயரில் இரண்டு நாள்களில் கோவை நகர மன்றம் அருகில் கலைஞர், வீரமணி கொடும்பாவிகளைக் கொளுத்துவதாக அறிவித்தனர். கலைஞர் கொடும்பாவியைக் கொளுத்த காங்கிரசுக்காரர்கள் முயன்றபோது அதைத் தடுக்க மேட்டுப்பாளையம் கதிரவன், கோவை கனகராசு, திக ஆறுச்சாமி போன்ற தோழர்கள் முயன்றனர். உடனே காங்கிரசுக்-காரர்கள் தடுக்க வந்தவர்களைத் தாக்கத்தொடங்கினர். இதில் திக ஆறுசாமியின் பற்கள் உடைந்தன. ஆனால் எமது தோழர்கள் திரும்பத் தாக்கத் தொடங்கியதும் அவர்-கள் சிதறி ஓடினர். இது கோவை, ஈரோடு மாவட்ட செயலாளர்கள் கண்ணப்பன், கணேசமூர்த்தி ஆகியோரை களத்தில் இறக்கிவிட்டுவிட்டது.‘நீ ஒரு கலைஞர் கொடும்-பாவி’ கொளுத்தினால் ‘நாங்கள்ஆயிரம் ராஜீவ்காந்தி கொடும்பாவிகளை’ கொளுத்துவோம் என்று கூறி இருமாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டன. ‘ஆசிரியர் வீரமணி கொடும்பாவி’ கொளுத்தியதால் கோவை இராம-கிருட்டிணனும் எதிர் போராட்டத்தில் இறங்கினார். ஆக திக, திமுக இரண்டு இயக்கங்களும் களத்தில் இறங்கிய பின் சூடு பிடித்துவிட்டது. கொடும்பாவி கொளுத்தியவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை சிறை நிரம்பிவழிந்தது. செய்தியறிந்து கலைஞர் எங்களைப் பாராட்டினார், இதன் விளைவாக கோவையில் இந்தி எதிர்ப்பு மாநாடு அக்டோபரில் நடத்துவதென திமுக தலைமை அறிவித்தது. அந்த மாநாட்டில் தான் ‘இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழி’ என்றுகூறும் ‘அரசியல் சட்டப்பிரிவின் நகல்களை’ கொளுத்துவது என முடிவெடுக்கப் பட்டது.கோவையில் நரசிபுரம் பால-சுப்பிரமணியம் என்னும் இளைஞர் இந்தியை எதிர்த்து தீக்குளித்து மாண்டார். அவர் 1965 இல் கோவையில் நஞ்சருந்தி மாண்ட தொண்டாமுத்தூர் தண்டபாணியின் உறவினர்.  தண்டபாணியின் தியாகம் அவரை பாதித்திருந்தது. சமயம் வாய்த்ததும் வெளிப்பட்டுவிட்டது.

 நவம்பர் 9 ஆம் நாள் சென்னையில் கழகப் பொதுசெயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் தலைமையில் தொடங்கிய சட்ட-நகல் எரிப்பு போராட்டம் ஒவ்வொரு மாவட்டத்தில் ஒவ்வொருநாள் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்றது. கடைசியாக டிசம்பர் 9 ஆம் நாள் கலைஞர் சட்டநகலை எரித்து சிறை சென்றார். கலைஞர் போராட்டத்தில் ஈடுபட்டபின் கோவை, சிங்கா நல்லூரிலும் திருச்சி முத்தரச நல்லுரிலும் வெடிகுண்டுகள் இரயில் தண்டவாளங்களை தகர்க்க வைக்கப் பட்டதாககூறி வெடிகுண்டு வழக்குகள் புனையப்பட்டன. அதில் கோவையில் என்னோடு மாவட்டத் துணை அமைப்பாளர் தம்புராசு, கோவை கார்த்திக் (முன்னாள் கோவை துணை மேயர்), நவமணி, இராமமூர்த்தி, சிங்கை தங்கவேலு ஆகியோர் மீதும், திருச்சியில் எல்.கணேசன், மலர்மன்னன், நாமக்கல் பழனிவேல், வழக்குரைஞர் தினகரன் போன்றோர் மீது வழக்குகள் தொடுக்கப் பட்டன. காவல்நிலையத்தில் கடுமை-யான சித்திரவதைகளுக்கு ஆளானோம். உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை காவல்துறையினரின் கம்புகள் தாக்கின.

 சட்டநகலை எரித்த பேராசிரியர் அன்பழகன், பரிதி இளம்வழுதி, சு.பாலன், கோவை மு.இராமநாதன், அரக்கோணம் இராசு, உள்ளிட்ட பத்து கழக சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகளை பறித்து மகிழ்ந்தார் எம்ஜியார். இதே போராட்டத்தில் ஈடுபட்ட எம்பியாக  இருந்த  வை.கோபாலசாமியின் மீது நாடாளுமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது. கலைஞருக்கு சிறைத்தண்டனை கொடுத்து கைதிகளுக்கான உடையும் அலுமினியத் தட்டையும் கொடுத்து மகிழ்ந்தது அரசு. இது போன்ற தியாகங்களுடன் பற்றி எரிந்தது இந்தி எதிர்ப்புப் போர்.

எங்கோ பொள்ளாச்சியில் ஒரு ஆறேழு  சில தமிழ் இளைஞர்கள் கூடிப் பற்றவைத்த சிறு நெருப்பு எரிமலையாய் வெடித்தது. இதற்குத் தேவையாய் இருந்தது எல்லாம் தமிழ் உணர்வும் தன்னலமற்ற சேவை மனப்பான்மையும்தான்.

(கட்டுரையாளர் திமுகவின் மாநில தொண்டரணிச் செயலாளர். இவை அவரது சொந்தக் கருத்துக்கள். சென்ற இதழில் வெளியான அட்டைப்படக் கட்டுரைக்கான தொடர்வினை இது).

நவம்பர், 2012.