சமஸ்கிருத அறிஞரான தாய்லாந்து இளவரசியுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் 
சிறப்புப்பக்கங்கள்

ஹீப்ரூ, சமஸ்கிருதம், தமிழ்! மீட்பு இயக்கங்கள்!

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு

அசோகன்

பென் யெஹுதாவும் அவரது மனைவியும் 1881 ஆம் ஆண்டு  எடுத்த  ஒரு முடிவு யூதர்களின் வரலாற்றில் மிக முக்கியமானது.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைமை உடையதாக இருந்து, இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னால் பேச்சு வழக்கில் இருந்து அற்றுப்போய் இருந்த ஹீப்ரூ என்னும் யூத மொழியை மட்டுமே தங்கள் வீட்டில் பேசுவது என்று அவர்கள் முடிவு செய்தார்கள். அவர்களிடம் இருந்தது மிகப்பழைய யூத வேதமான தோராவில் இருந்த மொழிதான். அன்றாடம்  புழங்கும் பல பொருட்களுக்கு ஆயிரமாண்டு பழமையான வேதத்தில் சொற்கள் இல்லை. அவர்கள் வேர்ச்சொல்லில் இருந்து புதிய சொற்களை உருவாக்கி அவற்றையே பேசினார்கள். பென் யுஹூதா யூத மொழியை வாழ்நாளெல்லாம் கற்றவர். ஆனாலும் அவரால் யூத மொழியில் பேச இயலாது. அவரது மனைவியோ ஜெருசலத்துக்குப் படகு ஏறுகையில்தான் ஹீப்ரூ பேச ஆரம்பித்தார்.

பென்யெஹுதா ரஷ்யாவில் பிறந்த யூதர். சின்ன வயதிலிருந்தே யூத மத  குரு ஆவதற்காக  யூத வேதங்களைப் படித்துத் தேர்ந்தவர். ஜெர்மன், ப்ரெஞ்சு போன்ற மொழிகளையும் கற்றார். அந்தகாலகட்டத்தில்  ஐரோப்பாவில்  உருவான யூதர்களுக்கென்று இஸ்ரேல் என்ற நாடுவேண்டும் என்ற தேச நிர்மாண இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் இவர். ஒரு நாடு அங்கீகாரம் பெற முக்கியமாக ஒரு பொதுமொழி வேண்டும் என்ற நோக்கிலும் அதே சமயம் ஹீப்ரூ உயிர்பெற வேண்டுமானால் ஒரு நாடு வேண்டும் என்றும்  அவர்  உணர்ந்திருந்தார். ஜெருசலேம் நோக்கி இடம்பெயர்ந்த முதல் அலையில் அவரும் சேர்ந்துகொண்டார்.

அந்த தம்பதிக்கு ஜெருசலத்தில் மகன் பிறந்தான். பிறந்ததிலிருந்தே  தாய்மொழியாக ஹீப்ரூவைக் கொண்டுவாழ்பவர்களே எந்த ஒரு மொழியின் வளர்ச்சிக்கும் நிலைபெறலுக்கும் அவசியம் என்பதை இவர்கள் உணர்ந்தனர். எனவே ஏழு வயதுவரை அவர்கள் மகனுக்கு ஹீப்ரூவை மட்டுமே புகட்டினர். ரஷ்ய மொழியில் ஒருமுறை தாலாட்டுப்பாடிய தன் மனைவியைக் கூட அவர் கடுமையாக கடிந்துகொண்டார்.  நான்கு வயதுவரை அவனால் எதுவுமே பேசமுடியவில்லை. வீட்டில் தாய் தந்தை, எப்போதாவது வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் மட்டுமே பேசிய மொழி அது. எனவே அவனது கிரகித்தல் மெதுவாக இருந்தது. ஒரு வழியாக ஏழு வயதிற்குள் அவன்  ஹீப்ருவில் பேசத்தொடங்கிவிட்டான். நவீன ஹீப்ரூ பேசிய முதல் யூதன் ஆனான் அவன்.

1884-ல் பாலஸ்தீனத்துக்கு வந்த மூன்று ஆண்டுகளில் அங்கு முதன்முதலாக பென் யெஹுதா ஒரு ஹீப்ரூ செய்தித்தாளையும் தொடங்கினார். அரசியல் முதல் எல்லா செய்திகளும் அந்த மொழியில் அச்சாகி வரத்தொடங்கின. ஐரோப்பாவில் வெளியாகிக்கொண்டிருந்த  சில ஹீப்ரூ செய்தித்தாள்களில் மதவிவகாரங்கள் மட்டும் வெளிவந்தன. பைபிள் கால யூத மொழி பயன்படுத்தப்பட்டது. நிறைய கருத்துக்குகளுக்கு சொற்கள் கிடைக்காமல் உள்ளூரில் புழங்கும் மொழியில் இருந்து சொற்களைக் கடன் வாங்கிப் பயன்படுத்தினர். பென் யெஹூதா  அதற்கு பைபிளுக்கு பிந்தைய யூத வேதங்களில் இருந்தும், ஜெருசலேமின் சந்தைகளில் புழங்கிய ஹீப்ரூவில் இருந்தும் பிற ஆதாரங்களில் இருந்தும் பயன்படுத்தினார். ப்ளீஸ், தேங்க் யூ போன்ற ஆங்கிலச் சொற்களுக்குக் கூட அவர் பிந்தைய ஆதாரங்களில் இருந்துதான் சொற்களைப் பிடித்தார்.

அதன் பின்னர் ஒரு குழுவை உருவாக்கி அகராதி ஒன்றை உருவாக்கினார். இந்த குழு பத்தாண்டுகளுக்கும் மேலாக உழைத்து 1913-ல் ஒரு அகராதி உருவாக்கியது. அதற்குள் மக்களே தங்கள் தேவைக்கு ஏற்ப புது சொற்களை உருவாக்கி பேச ஆரம்பித்திருந்தனர். சுதந்தரமான யூத நாட்டை உருவாக்குகையில் தங்கள் மொழியையும் உருவாக்கவேண்டும் என்ற வேட்கை அவர்களுக்கு இருந்தது. பல நாடுகளில் இருந்து பாலஸ்தீன் நோக்கி புலம்பெயர்ந்து வந்த மக்கள் தொகை இதில் செயல்பட்டது. அனைவருக்குமான பொதுமொழியாக ஹீப்ரூ அந்நாட்டில் உருவெடுத்தது.

பென் யெஹுதா: பேச்சுவழக்கில் ஹீப்ரூ

(2)

சமஸ்கிருதம் என்பது  இன்றைக்கு இந்தியாவில் அது அரசிடம் இருந்து பெறும் கரிசனத்தால் மிகவும் சர்ச்சைக் குரியதாக  இருக்கிறது. காவியங்கள், வேத மந்திரங்கள், பகவத் கீதை ஆகியவற்றைப் படிக்கிறவர்களும் புரிந்துகொள்கிறவர்களுமான சமஸ்கிருத அறிஞர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். கல்லூரிகள், வேத பாடசாலைகள் என்று சமஸ்கிருதம் ஜெகஜோதியாக ஒலிக்கிறது. இருப்பினும் பொதுமக்கள் பயன்பாட்டில் அது வரவில்லை. சமஸ்கிருதத்தை பொதுமக்களின் பேச்சுமொழியாக்க வேண்டும்; மக்களிடையே  புழங்காத இம்மொழியை உயிர்ப்பிக்கவேண்டும் என்று பல முயற்சிகள் நடக்கின்றன. மக்களால் பேசப்படாத எந்த மொழியும் நிலைபெற முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். மிகப்பழைமையான மொழியான சம்ஸ்கிருதம் பொதுமக்களின் பேச்சுமொழி என்கிற நிலையை இழந்து காலவெள்ளம் வெகுதூரம் ஓடிவிட்டது. நிறுவனங்கள் இன்று அம்மொழியை உயிர்ப்பிக்கப்பாடுபடுகின்றன. அதைப்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக தனிமனிதர்களின் செயல்பாடுகளும் நடைபெறுகின்றன.

 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 14,000 பேர் தங்கள் தாய்மொழி சமஸ்கிருதம் என்று குறிப்பிட்டனர்.

கர்நாடகாவில் உள்ள ஷிமோகா மாவட்டத்தில் உள்ளது மத்தூர். துங்கா நதிக்கரையில் இருக்கும் இந்த கிராமத்தில் வசிக்கும் பிராமண சமூகத்தினர் சமஸ்கிருதத்திலேயே உரையாடிக்கொள்கிறார்கள். இது பல நூற்றாண்டுகளாக நடப்பதாக எண்ணவேண்டாம். 1981-ல் சமஸ்கிருத மீட்புக்கான இயக்கமான சமஸ்கிருத பாரதி இங்கே இதைத் தொடங்கி வைத்தது. உடுப்பி  பெஜாவூர் மட  தலைவரின் ஏற்பாடுதான் இது. அவரது அழைப்பை ஏற்று மத்தூர் வாசிகள் சமஸ்கிருதத்தில் பேசுகிறார்கள். இவர்கள் சங்கேதி பிராமணர்கள். சமஸ்கிருதம் தமிழ் கன்னடம் தெலுங்கு கலந்த சங்கேதி என்ற மொழியைப் பேசுகிறவர்கள். இதற்கு எழுத்துவடிவம் கிடையாது.

சமஸ்கிருதம் உத்தராகாண்ட் மாநிலத்தில் ஆட்சி மொழியாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எப்படி தமிழில் அரிய இலக்கியங்களை உவேசா கண்டெடுத்தாரோ அதுபோல் சமஸ்கிருதத்திலும் கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்துள்ளது. கௌடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் காணாமல் போய் ஆர்.சாமா சாஸ்திரி அதை 1904-ல் கண்டுபிடித்துப் பதிப்பித்தார். இதுபோல் எண்ணற்ற ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருத படைப்புகள் கிடைக்கின்றன. அவற்றில் என்ன அறிவு பொதிந்திருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துகளை விஞ்ஞானிகளே சமஸ்கிருதம் குறித்து பெருமையடித்துக்கொள்ளப் பேசிக் கொண்டாலும் கூட இந்தியத்துணைக் கண்டத்தின் பெருமையை  முழுமையாக அறிய சமஸ்கிருத அறிவும் அவசியம்.  தமிழின் தொன்மையை  சமஸ்கிருதமும் அறிந்த அறிஞர்களால்தான் நிறுவ முடிந்திருக்கிறது. ‘தேவ பாஷை’யாகி மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட்ட சமஸ்கிருதம் இன்று மனித பாஷை யாக  மாற்றப்படும் முயற்சிகள் நடக்கின்றன.  மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றபோது பல அமைச்சர்கள் சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் ஏற்றதைப் பார்த்திருக்கலாம்.

 (3)

சென்னையில் ஆங்கிலவழி ஆரம்பப் பள்ளியில் குழந்தையைச் சேர்க்க  குழந்தையுடன் செல்கிற பெற்றோரில் பலர்  நிச்சயம் இந்த  கேள்வியை எதிர்கொண்டிருப்பார்கள்.  குழந்தையிடம்  சற்றுநேரம்பேசிவிட்டு, அதற்கு ஆங்கிலத்தில் சில சொற்கள் தெரியாவிட்டால் ”வீட்டில் ஆங்கிலம் பேசுவதில்லையா நீங்கள்?” என்று குற்றம் சாட்டும் தொனியில் கேட்கும் பள்ளிப்பொறுப்பாளர்கள்.  படித்துப் பட்டம்  பெற்ற நகர்ப்புற நடுத்தரவர்க்கத்தினர் பெரும்பாலும்  ஆங்கிலத்திலேயே தங்கள் குழந்தைகளிடம் உரையாடுகிறார்கள். பொதுவெளியில் கடைத்தெருக்களில் ஆங்கிலம் புழங்குவதைக் கண்டால் நாம் இலண்டனில் இருக்கிறோமோ என்று  தமிழன் திகைப்பான் என்று எழுதினால் அது அதிகப்படி. ஏனெனில் அவன் இதற்குப் பழகி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது பெரும்பாலும் தமிழ்நாட்டில் இருப்பது ஆங்கிலவழிக்கல்வியில் படிக்கும் இரண்டாம் தலைமுறை.  ஆங்கிலம் கற்று அகில உலக நிறுவனங்களில் தங்கள் சந்ததிகள் வேலைக்குப்போகவேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார்கள்.  வீடுகளில்  முழுக்க ஆங்கிலம் பேசவேண்டும்; பொதுவெளியில் மதிப்பாகத் தெரிய ஆங்கிலம் பேசவேண்டும் என்று இவர்கள் நினைக்கிறார்கள்; செயல்படுகிறார்கள். இத்துடன் வீடுகளில் ஹீப்ரு தவிர எதுவும் பேசக்கூடாது  என்று  இருநூறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய யூத இயக்கத்தை ஒப்பிடுங்கள். சுமார் கால் நூற்றாண்டாக சமஸ்கிருதம் தவிர வீட்டில் எதுவும் பேசமாட்டோம் என்று முடிவெடுத்திருக்கும் சமஸ்கிருத மீட்பு இயக்கத்துடன் ஒப்பிடுங்கள். 1916-ல் தமிழில் உள்ள வடமொழிச் சொற்களைக் களையவேண்டும் என்று தொடங்கிய தனித்தமிழ் இயக்கத்துடன் ஒப்பிடுங்கள்; 

ஆங்கிலம் செத்த மொழி என்பதால் அதை தமிழர்கள்தான் மீட்டெடுக்கவேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுவதாகத் தோன்றுகிறது அல்லவா?

தமிழனின் முயற்சி வெல்க என்று வாழ்த்துவோம்!

செப்டெம்பர், 2016.