தற்காலத்தில் பேய்ப்படங்கள் எடுப்பது என்பது கொஞ்சம் சவாலான விஷயம். காரணம் மௌனப்படக் காலகட்டத்தில் இருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான பேய்ப்படங்கள் உலகெங்கும் வெளியாகிவிட்டன. அவற்றில் நாம் பார்க்காத பேயே இல்லை.
இந்தக் கட்டுரையில் முடிந்தவரை அனைவருக்கும் தெரிந்த பேய்ப்படங்களைப் பார்க்காமல், கொஞ்சம் தெரியாத, நல்ல படங்களைக் கவனிப்போம்.
முதன்முதலில் எடுக்கப்பட்ட பேய்ப்படம் என்ற பெருமையை லூமியர் சகோதரர்கள் எடுத்த Le Squelette Joyeux என்ற படம் பெறுகிறது. 1895ல் வெளியானது இது. ஒரு நிமிடத்துக்கும் குறைவானது. ஒரு எலும்புக்கூடு கண்டபடி கைகால் எலும்புகள் பிய்ந்து, ஒட்டி ஆடும் நடனம் இது (கண்ணோடு காண்பதெல்லாம் பாடல் உங்கள் மனதில் தோன்றினால் அதற்கு நிறுவனம் பொறுப்பாகாது). இதன்பின் ஜோர்ஜ் மெலியெஸ் (Georges Méliès & இதைத் தமிழில் உச்சரிக்கவே முடியாது) 1896ல், Le Manoir du Diable என்று ஒரு படம் எடுக்க, முதன்முதலில் ஒரு பேய்ப்படம் என்றால் அதில் என்னென்ன இடம்பெறும் என்ற டெம்ப்ளேட் உருவானது. மூன்று நிமிடப் படமான இது துவங்கியதுமே ஒரு வவ்வால் வரும். அதில் இருந்து ஒரு மனிதன் உருவாவான் (சூனியக்காரன்?). இதன்பின் ஒரு பெரிய பானையை உருவாக்கி, அதில் எதையோ காய்ச்ச, பின்னர் ஒரு சித்திரக்குள்ளன் உருவாகி, பின் ஒரு எலும்புக்கூடு தோன்றி அது வவ்வாலாக மாறி.. மூன்றே நிமிடப் படத்தில் இப்போது நான் சொன்னது முதல் நிமிடம் மட்டுமே.
இப்படியாகப் பேய்ப்படங்கள் உருவாயின. ஃப்ரெஞ்சில் இருந்து ஜெர்மனிக்கு இந்த அலை நகர்ந்தது, முதல் உலகப்போரின்போது. அந்தச் சமயத்தில் ஜெர்மன் அரசு, பிற நாட்டுப் படங்களைத் தடை செய்ததால், எக்கச்சக்கப் படங்கள் ஜெர்மனியிலேயே உருவாயின. (அக்காலத்தில்தான் சாப்ளினும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்). இக்காலகட்டத்தில், The Golem (1915), The Cabinet of Doctor Caligari (1919) ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் கேபினெட் ஆஃப் டாக்டர் காலிகாரி படம் இன்றும் பிரபலம். இப்போதும் எடுக்கப்படும் பல பேய்ப்படங்களின் முன்னோடியான படம் இது. இப்படங்களுக்குப் பின்னர்தான் Nosferatu (1922) வெளியாகிறது. இதற்கு முன்னர் வெளிவந்திருந்த படங்கள் எல்லாமே ஜெர்மன் எக்ஸ்ப்ரஷனிஸத்தை அடிப்படையாகவே கொண்டு எடுக்கப்பட்டிருந்தன (எக்ஸ்ப்ரஷனிஸம் என்பது, நிஜவாழ்க்கையின் தருணங்களை வேண்டுமென்றே உருமாற்றி, அதைப் பார்ப்பவர்களுக்கு அந்தப் படைப்பைப் பற்றிய பல எண்ணங்களை உருவாக்குவது). முதன்முறையாக, நிஜவாழ்க்கை எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட விதமாகவே, எந்தப் பெரிதுபடுத்துதலும் இல்லாமல் உள்ளது உள்ளபடி (ரியலிஸம்) எடுக்கப்பட்ட முதல் பேய்ப்படமாக நாஸ்ஃபெராட்டூ விளங்குகிறது. இந்தப் படத்தை இயக்கியவர் F.W Murnau. இப்படம் ஒரு ரத்தக்காட்டேரியைப் பற்றிய வேம்ப்பையர் படம். இதில் வரும் ரத்தக்காட்டேரி வேறு யாரும் அல்ல& டிராகுலாவில் இருந்து அப்பட்டமாக சுடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் (ஓர்லாக் பிரபு). பெரிதாகப் பேசப்பட்ட படமும் கூட. பிற்காலத்தில் பிரபல இயக்குநர் வெர்நர் ஹெர்ஸாக் இப்படத்தை 1979ல் ரீமேக் செய்து வெளியிட்டார். அதுவும் சிறப்பாகவே இருக்கும்.
நாஸ்ஃபெராட்டூ வெளியானபின்னர் Haxan (1922), The Hunchback of Notre Dame (1923), The Phantom of the Opera (1925) ஆகிய படங்கள் வெளியாயின. இதில் கடைசி இரண்டு படங்கள் யுனைடட் ஸ்டேட்ஸில் எடுக்கப்பட்டவை. இவற்றில் நடித்தவர் லியோனிடாஸ் செனி
(Leonidas Cheney). அக்காலத்தில், The Man with a thousand faces என்றே அறியப்பட்ட நடிகர். பெற்றோர்களால் வாய்பேச, காதுகேட்க இயலாததால், அவர்களுடன் பழகியே, எப்பேர்ப்பட்ட விஷயத்தையும் வசனமே பேசா மல் நடிக்கத் தெரிந்தவர். பெலா லுகோஸி நடித்த புகழ்பெற்ற டிராகுலா (1931) படத்தில் நடிக்கவேண்டியவர், அப்படம் எடுக்கப்படுவதற்குள் தொண்டையில் வந்த புற்றுநோயால் அகால மரணம் அடைந்தார்.
இக்காலகட்டத்திலேயே திரைப்படங்கள் பேசத் துவங்கிவிட்டன. யுனைடட் ஸ்டேட்ஸ், உலகின் பெரிய திரைப்பட கேந்திரமாக உருவாகிவிட்டது. எனவே, பல திகில் படங்கள் எடுக்கப்பட்டன. மேலே கவனித்த டிராகுலா (1931) அவற்றில் முக்கியமானது. இயக்கியவர் டாட் ப்ரௌனிங். இப்படம்தான் டிராகுலாவின் முதல் திரை அறிமுகமாக அமைந்தது. அதே வருடத்தில் Frankenstein படமும் வெளியானது. இந்த இரண்டு படங்களும் நன்றாக ஓடியதால், தடதடவென்று பல திகில் படங்கள் இவற்றைத் தொடர்ந்து வெளியாகின. உதாரணத்துக்கு, 1932ல் வெளியான The Mummy படத்தைச் சொல்லமுடியும். இதைத்தான் தொண்ணூறுகளின் இறுதியில் ஸ்டீவன் சாம்மர்ஸ் ரீமேக் செய்து, உலகெங்கும் பிரம்மாண்ட ஹிட்டாக அமைந்தது. இதன்பின்னர் King Kong (1933)ல் வெளியாகிறது. இது பேய்ப்படம் அல்ல & ஒரு மான்ஸ்டர் படம் என்றாலும், அக்காலத்தில் மிகப்பெரும் ஹிட்டாக அமைந்த படம் இது. 1930ல் இருந்து 1934 வரையிலும் இருந்த காலகட்டத்தை, திகில் படங்களின் பொற்காலம் என்றே பத்திரிகைகள் வர்ணிக்கின்றன. அத்தனை திகில் படங்கள் அவ்வருடங்களில் வெளியாகியிருக்கின்றன.
இப்படங்களுக்குப் பிறகு, Werewolve of London (1935) மற்றும் The Wolf man (1941) படமும் குறிப்பிடத்தக்கவை. ஓநாய் மனிதனைக் காட்டிய படங்கள். இவற்றுக்கு இடையிலேயே ஏராளமான திகில் படங்கள் வந்தாகிவிட்டன. அவற்றில் டிராகுலா, ஃப்ராங்கென்ஸ்டைன் படங்களுக்கு வெளியான பல பாகங்களைச் சொல்லமுடியும்.
இக்காலகட்டத்துக்குப் பிறகு, Creature Features என்று அழைக்கப்பட்ட, ஜந்துகளை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் பிரபலமாகத் துவங்கின. இது ஐம்பதுகளின் துவக்கம். 1953ல் The Beast From 20,000 Fathoms வெளியாக, இதைத் தொடர்ந்தே இப்படிப்பட்ட ஜந்துப் படங்கள் எடுக்கப்பட்டன. உண்மையில் இந்தப் படம்தான் காட்ஸில்லா படத்தின் முன்னோடி. இப்படத்துக்குப் பிறகுதான் ஜப்பானில் காட்ஸில்லா (கோஜிரா என்று அங்கே அதற்குப் பெயர்) படங்கள் எடுக்கப்பட்டன. இப்படத்தின் கதையும் காட்ஸில்லாவின் கதையும் ஒரேபோன்றுதான் இருக்கும்.
இந்த creature படங்களுடனேயே, ஏலியன்களைப் பற்றிய வரிசையான படங்களும் அப்போது எடுக்கப்பட்டன. திகில் படம் என்ற கணக்கில் இவையும் வரும். Invasion of the Bodysnatchers (1956) ஓர் உதாரணம். ஐம்பதுகளின் இறுதிவரை இந்த இரண்டுவகைப் படங்களும் ஹாலிவுட்டில்
சக்கைப்போடு போட்டன.
ஐம்பதுகளின் முடிவில்தான் இதுவரை மறக்கமுடியாத ஒரு திகில் படம் வெளிவந்தது. ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் எடுத்த ‘சைக்கோ'. இதைப் பேய்ப்படம் என்று சொல்ல முடியாது. இருப்பினும், இந்தப் படம் எழுப்பிய தாக்கம் மிக முக்கியமானது. உலகெங்கும் இப்படம் பார்த்து அனைவரும் பயந்தனர். உளவியல் சார்ந்த திகில் படங்களுக்கு ஒரு அட்டகாசமான பாதை போட்டுக் கொடுத்தது சைக்கோ படமே. இன்றும் ராட்சசன் போன்ற படங்களுக்கு ஆரம்பப் புள்ளி இந்தப் படம்தான். இப்படத்தைத் தொடர்ந்து, இன்னொரு அட்டகாசமான படமாக "Birds' வெளியானது. அதே ஹிட்ச்காக், இம்முறை பறவைகளை வைத்து ஆடியன்ஸை திகிலில் ஆழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து, ‘The Night of the Living Dead' ஒரு புதிய அலையை எழுப்பியது. முப்பதுகளிலேயே ஸாம்பிகளை வைத்துப் படங்கள் வந்திருந்தாலும், அருமையான மேக்கப், நல்ல நடிப்பு, திகிலைக் கிளப்பும் jump scares என்று ஜார்ஜ் ஏ. ரொமேரோ எடுத்த படம் இது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும், இன்றுவரை ஸோம்பிகளை வைத்துப் படங்கள் வெளிவர இப்படம் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.
அறுபதுகளின் இறுதியிலும், எழுபதுகளின் முடிவு வரையிலும், திகில் படங்களில் குறிப்பாகக் குழந்தைகளை மையப்படுத்தும் வழக்கம் உருவானது. திகிலூட்டும் தீய சக்திகளால் குழந்தைகள் படும் பாடு இந்தக் காலகட்டம் முழுதுமே இருந்தது. அது இன்றுவரை அவ்வப்போது தொடர்கிறது. இது, 1973ல் வெளியான "The Exorcist' படம் மூலம் உலகெங்கும் பரவியது. இன்றும், இப்படத்தின் ரசிகர்கள் உள்ளனர். கடவுளின் சக்தி Vs சாத்தானின் சக்தி என்ற, இன்றுவரை பிரபலமாக இருக்கும் கரு இப்படத்தில் பரக்கக் கையாளப்பட்டிருக்கும். இப்படத்தை மையமாக வைத்து எண்டமூரி வீரேந்திரநாத் 'துளசிதளம்' என்று ஒரு நாவல் எழுத, அது தமிழில் சுசீலா கனகதுர்காவால் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழிலும் பலரைப் பயமுறுத்தியது. பின்னர் அது படமாகவும் வெளியானது. (எக்ஸார்ஸிஸ்ட், யுனைடட் கிங்டமில் 1999 வரை வீடியோவாக வரத் தடைவிதிக்கப்பட்டிருந்தது). இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதிய வில்லியம் பீட்டர் ப்ளாட்டி மிகவும் பிரபலம் அடைந்தார். படத்தை இயக்கியவர் வில்லியம் ஃப்ரைட்கின். பல படங்கள் இயக்கியிருந்தாலும், எக்ஸார்ஸிஸ்ட்டே இன்றுவரை அவரது பெயரைப் பலருக்கும் நினைவுபடுத்தும் படமாக இருக்கிறது. வில்லியம் பீட்டர் ப்ளாட்டியால் 1971ல் நாவலாக எழுதப்பட்டு, அதன்பின் திரைப்படமாக வெளிவந்த படைப்பு இது. வில்லியம் பீட்டர் ப்ளாட்டிக்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கரும் கிடைத்தது (மொத்தம் பத்து வகைகளில் நாமினேட் செய்யப்பட்டிருந்தது இப்படம்). சிறந்த படத்துக்கான ஆஸ்கருக்குத் தேர்வுசெய்யப்பட்ட முதல் திகில் படமாகவும் இது அமைந்தது.
இப்படத்துக்குப் பின்னர் பல திகில் படங்கள் வரிசையாக வெளியாயின. அதேசமயம், இன்றுவரை திகிலுக்காகவே நினைவுகொள்ளப்படும் ஒரு மனிதரும் பிரபலம் அடைய ஆரம்பித்திருந்தார். அவர்தான் ஸ்டீஃபன் கிங். திரைப்படமாக எடுக்கப்பட்ட அவரது முதல் நாவலாக,
Carrie அமைந்தது. இப்படத்தை இயக்கியது ப்ரையன் டி பா(ல்)மா. அக்காலகட்டத்தின் மிகப்பெரிய ஹிட படமாகவும் இது அமைந்தது. பள்ளியில் இறுதியாண்டு படிக்கும் Carrie என்ற, பிறருடன் பொருந்திப் போகாத மாணவி, பிறரது அவமானப்படுத்துதலைத் தாங்கமுடியாமல் என்ன செய்கிறாள் என்பதே கதை. அவளுக்குள் இருக்கும் அமானுஷ்ய சக்திகளை ஒரு கட்டத்தில் அவள் உபயோகிக்க ஆரம்பிக்க, அதனால் விளையும் அனர்த்தங்களே க்ளைமேக்ஸ். ஆனால், படத்தின் முதல் பாதியைப் பார்த்தால் ஒரு high school
romance படமாகத்தான் இருக்கும். சிறுகச்சிறுக திகில் வெளிப்பட ஆரம்பிக்கும். இப்படத்தில் துவங்கி, ஸ்டீஃபன் கிங்கின் பல திகில் நாவல்கள் இன்றுவரை படமாக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. சில உதாரணங்களாக, The Shining, Pet Cemetary, Dream Catcher, The Mist, IT ஆகியவற்றைச் சொல்லலாம். திகில் அல்லாமல், அவரது பிற நாவல்களுமே நிறையப் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஹாலிவுட் திகில் திரைப்பட வரலாற்றில் ஸ்டீஃபன் கிங்கின் பங்களிப்பு மிக முக்கியமானது.
Carrie படத்துக்குப் பின், இன்னொரு மிக முக்கியமான படம் வெளியானது. இப்படமும் உலகெங்கும் பிய்த்துக்கொண்டு ஓடிய படம். பலரை பயமுறுத்திய படமும் கூட. தமிழிலும் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. The Omen. இதுவும் குழந்தை ஒன்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான். இயக்கியவர் ரிச்சர்ட் டான்னர். நடித்தது க்ரெகரி பெக். சைத்தானின் குழந்தை பூமியில் பிறந்து, அந்த உண்மை தெரியாமல் வளர்க்கும் பெற்றோர்கள் மத்தியில் சிறுகச்சிறுக தனது சக்திகளை வெளிப்படுத்த ஆரம்பிப்பதே கதை. தமிழில் அர்ஜுன் நடித்து யார்? என்ற படமாக இப்படத்தின் தழுவல் வெளியானது.
இந்தக் காலகட்டம்தான் திகில் படங்களின் மன்னரான ஜான் கார்ப்பெண்டர் முழுவீச்சில் வெளிவந்த காலமும் கூட. அவரது "Halloween' 1978ல்தான் வெளியானது. அதைத்தொடர்ந்து பல்வேறு படங்களை அடுத்த பல வருடங்களுக்கு எடுத்துத் தள்ளினார். கார்ப்பெண்டருக்குப் பல முகங்கள் உண்டு. அவர் இசையமைப்பதிலும் கில்லாடி. அவர் எடுத்த ஹாலோவீன் படத்துக்கு நாற்பது வருடங்கள் கழித்து நேரடி இரண்டாம் பாகம் 2018ல் வெளியானது. பிரமாதமான வெற்றியும் அடைந்தது. இப்படத்துக்கு அவரே இசை (இடையில் ஹாலோவீனின் பல பாகங்கள் வெளியாகிவிட்டன).
எழுபதுகளின் இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவெனில், அக்காலகட்டம்தான் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ப்ரையன் டி பா(ல்)மா, மார்ட்டின் ஸ்கார்ஸேஸி, ஜார்ஜ் லூகாஸ் போன்ற இளைஞர்கள் முழுவீச்சில் திரைப்படங்களுக்குள் புகுந்த காலகட்டம். இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய பாணியில் படங்கள் எடுத்தனர். ஜார்ஜ் லூகாஸ் சயின்ஸ் ஃபிக்ஷன் பக்கம் தாவ, பாக்கி மூவரும் பலவகையான படங்கள் எடுத்தனர். அவற்றில் திகில் படங்களும் அடக்கம். ஸ்பீல்பெர்க்கின் Jaws வெளிவந்து, மிருகங்கள் மூலம் திகிலூட்டிய திரைப்பட வகையை மீட்டது. அதேபோல், எழுபதுகளில்தான் ஸ்பெஷல் எஃபெக்ட்கள் முழுவீச்சில் இறக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, எண்பதுகளில் வெளியான அத்தனை திகில் படங்களும், விஷுவலாகப் பிரமாதமாக எடுக்கப்பட்டன. இது இன்றுவரை தொடர்கிறது. ஸ்டான்லி க்யுப்ரிக் எடுத்த "The Shining' 1980ல்தான் வெளியானது. இதுவும் ஸ்டீஃபன் கிங்கின் நாவலே. ஆனால் நாவலுக்கும் படத்துக்கும் பல வேறுபாடுகள் உண்டு. இருவருக்கும் இதனால் விரோதமும் உருவானது. ஷைனிங் படத்தின் பிரத்யேக அம்சம் என்னவென்றால், இப்போது பார்த்தாலும் அது நேற்று எடுக்கப்பட்ட படம் போலவே இருக்கும். அத்தனை செய்நேர்த்தியுடன் எடுக்கப்பட்ட படம் அது.
ஸாம் ரெய்மி என்ற இளைஞன், தொண்ணூறாயிரம் டாலர்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு, சில நடிகர்களுடன் காட்டுக்குள் புகுந்து எடுத்து வெளியிட்ட "The Evil Dead' படம் 1981ல் வெளியானது. இப்போது கல்ட் படம் என்று
சொல்கிறோமே & அப்படிப்பட்ட படமாக அது அமைந்தது. இந்தியாவிலும் இப்படம் மிகுந்த பிரபலம் அடைந்தது. இதற்குப் பின்னர் ஸாம் ரெய்மி மிகுந்த பிரபலம் அடைந்து, மூன்று ஸ்பைடர்மேன் படங்களையும் இயக்கினார். இவரும் குறிப்பிடத்தகுந்த திகில் பட இயக்குநர்களில் ஒருவர். இவரது Drag me to Hell திரைப்படம் குறிப்பிடத்தகுந்த திகில் படமாகும்.
1984ல் Nightmare on Elm Street வெளியானது. இதுவும் இன்றுவரை பேசப்படும் ஒரு திகில் படம்தான். இந்திய ரசிகர்களுக்கு இப்படம் நினைவிருக்கலாம். அக்காலத்தில் ஈவில் டெட், Howling ஆகிய படங்களுடன் இதுவும் வெளியானது. வெஸ் க்ராவன் எடுத்த இந்தப் படத்தின் ஃப்ரெட்டீ க்ரூகர் என்ற கதாபாத்திரம், மனிதர்களைக் கொடூரமாகக் கொல்லும். அதுவும் குறிப்பாக, அவர்களின் கனவுகளுக்குள் புகுந்து அவர்களைக் கொல்லும். பயந்துபோய் விழிக்கும் அவர்களின் உடல்களில் கனவில் நடந்தவைகளின் அடையாளம் இருக்கும். இதன்பின் ஃப்ரெட்டீ என்ற ஜந்துவால் நிஜத்திலும் அவர்கள் கொல்லப்படுவார்கள். இந்தப் படத்துக்கு இதன்பின் பல பாகங்கள் வந்தன.
தொண்ணூறுகளில் திகில் படங்களில் சைக்கோ கொலைகாரர்கள் அதிகம் இடம்பெற ஆரம்பித்தனர். காதலியின் கண்முன்னர் கொல்லப்பட்ட காதலன், பேயாகத் திரும்பி வந்து காதலியைப் பல சிக்கல்களில் இருந்து காத்து, தன்னைக் கொன்றவனை அடையாளம் காட்டும் படமாக Ghost வெளியாகி, உலகெங்கும் பிய்த்துக்கொண்டு ஓடியது. டெமி மூர் மிகப்பிரபலம் ஆன படங்களில் இதுவும் ஒன்று. அதேபோல், Scream, I know what you did last summer போன்ற slasher வகையைச் சேர்ந்த படங்களும் வர ஆரம்பித்தன. எண்பதுகளிலேயே உருவாகிவிட்ட Friday the 13th படத்தின் பல பாகங்களையும் இங்கே சேர்த்துக்கொள்ளலாம்.
2000த்துக்குப் பின்னர், ஹாலிவுட் படங்கள், 2001 செப்டம்பர் 11ம் தேதி நிகழ்ந்த பேரழிவினால் பாதிக்கப்பட்டன. கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் இறந்து, ஆறாயிரம் பேருக்கும் மேல் காயமடைந்த அந்தச் சம்பவம், அமெரிக்க மக்களின் மனதில் தீராத பயத்தை விதைத்தது. இதனால் அக்காலகட்டத்தில் வெளியான திகில் படங்கள் மக்களால் உளவியல் ரீதியாக ஒதுக்கப்பட்டன. இந்த நிலை ஒரு சில வருடங்கள் தொடர்ந்தது. இதற்குப் பின் வந்திருக்கும் பல திகில் படங்கள் பற்றி நமக்கே தெரியும். இக்காலகட்டத்தில்தான் ஆசிய நாடுகளின் ஹாரர் படங்கள் ஹாலிவுட்டில் பிரபலமாயின. அவற்றின் உரிமைகளை வாங்கிப் படம் எடுக்கும் நோக்கம் அதிகரித்தது. குறிப்பாக Ringu (The Ring), A Tale of Two sisters (The Uninvited), Ju-On (The Grudge) ஆகிய திகில் படங்களைச் சொல்லமுடியும். இவற்றில் The Ring மற்றும் The Grudge ஆகியவை ஆங்கிலத்திலும் நன்றாக ஓடின. ஜேம்ஸ் வான் ஹாரர் படங்களுக்குள் வந்து Insidious, The Conjuring ஆகிய படங்களை இயக்குகிறார். அவை உலகெங்கும் ஹிட் ஆகின்றன. Annabelle வெளியாகிறது. It Follows, Lights Out, It comes at Night, The Babadook, Under the Shadow போன்ற வித்தியாசமான பரிசோதனை முயற்சிகள் நடைபெறுகின்றன (இவற்றுக்குப் பல ஆண்டுகள் முன்னர் வெளிவந்த "The Blair Witch Project' படத்தை அவசியம் பாராட்டலாம். மிக வித்தியாசமான பரிசோதனை முயற்சி அது). மேலே சொன்ன படங்களுக்கு அடுத்தடுத்த பாகங்களும் எடுக்கப்படப்போகின்றன (ஒருசில பாகங்கள் ஏற்கெனவே வந்தும் விட்டன).
பயம் என்ற உணர்வு உலகில் இருக்கும்வரை திகில் படங்களுக்கான தேவையும் இருந்துகொண்டுதான் இருக்கும். அதுவரை நாமும் இப்படங்களைப் பார்த்து, கொடூர
சொப்பனங்களைக் கண்டு கொண்டுதான் இருக்கப்போகிறோம்.
பிப்ரவரி, 2019.