தபால்காரர் என்பவர் வெறும் அஞ்சல் கொண்டுவந்து தருபவர் மட்டுமல்ல. பல கிராமங்களில் அவர்தான் மிகமுக்கியமான தகவல் தொடர்பு சாதனமாக விளங்கியவர். அவருடனான உறவு மிகவும் அருமையானது. கடிதத்தை தேடிவந்து தருவதும், அதை வாசித்துக்காட்டுவதும், பதில் கடிதம் எழுதுவதும், வேறு தகவல்களைப் பரிமாறிக்கொள்வதுமாக மிக அருமையான பாத்திரத்தை கிராமங்களில் தபால்காரர்கள் வசித்தார்கள். சின்ன வயசில் என் தாத்தாவுக்கு நான் மாதந்தோறும் கடிதம் போடுவேன். ஒரு சின்ன இடத்தைக் கூட விடாமல் வளைத்துவளைத்து எழுதிவிடுவேன். அவர் சொல்வார்: விட்டால் இவன் தபால்காரரின் முதுகில்கூட எழுதி அனுப்பிவிடுவான்!
எனக்கு சின்னவயசில் இருந்தே தபால் துறை மீது பெரும் ஆர்வம் இருந்தது. என் சொந்த ஊர் கம்பம். அங்கே எனக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுத்ததே ஒரு தபால்காரர்தான். பிரான்சில் நான் படிக்கச் சென்றிருந்தபோது அங்கே உள்ளூர்க்காரர் ஒருவர் நான் இந்தியனா என்று கேட்டுவிட்டு, நாங்கள் இந்தியாவின் நண்பர்கள். உலகிலேயே உங்கள் நாட்டில்தான் முதல்முதலாக ஏர்மெய்ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கான விமானத்தை எங்கள் உறவுக்காரர்தான் ஓட்டினார். அதற்கான புகைப்படம் ஒன்று எங்களிடம் இருக்கிறது என்றார். இந்தியா போன்ற நாட்டில் இருந்து சென்று வெளிநாட்டில் படிக்கையில் நம் நாட்டைப் பற்றி யாராவது பெருமையாகச் சொன்னால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் என்று அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். அந்த புகைப்படத்தை நான் பெற்றுக்கொண்டேன். அதுபோல் பல அரிய புகைப்படங்கள், பொருட்களைச் சேகரித்தேன். எனக்கு பொதுவாகவே பாரம்பரியத்தின் மீது இருந்த ஆர்வமும் ஒரு காரணம்.
தபால்துறை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே இங்கே அறிமுகம் ஆகிவிட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பல்லாண்டுகள் ஆட்சி நடத்த இந்த தபால்துறை மிகப்பெரிய உதவியாக இருந்திருக்கிறது. இதை இந்த துறையின் தலைவர்களாக இருந்த சிலர் பதிவு செய்துள்ளனர்.
தபால்துறை மிகவும் மனிதநேயம் மிக்க துறை. கொடைக் கானலில் ஒரு பாதிரியாரைச் சந்த்தித்தேன். அப்போது அவருக்கு 93 வயது. அவர் தபால்துறையில் போஸ்ட் மாஸ்டராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். நான் பெரும் ஆச்சரியம் அடைந்தேன். 93 வயதில் ஒரு அரசு ஊழியர்! ‘’நான் என்னுடைய திருச்சபைக்குப் பணிபுரிந்ததைவிட தபால்துறைக்குத்தான் அதிகமாகப் பணிபுரிந்திருக்கிறேன். என் உடல், உணர்வு, மனம் அனைத்தையும் தபால் துறைக்கே கொடுத்துள்ளேன்” என்று பெருமை பொங்கக் கூறினார். அவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டிருந்தது.
இதுபோன்ற பல அபூர்வமான மனிதர்கள் இந்த துறையில் உழைத்துள்ளனர். இந்த துறையின் மீது எனக்கு இருந்த காதலால்தான் கடிஞ்ஞுணிணண் tணி கOகுகூ என்ற நூலை எழுதினேன். பிரிட்டிஷ் மியூசியத்திலிருந்து சுமார் 30 லட்சரூபாய் வரைசெலவழித்து புகைப்படங்களை வாங்கித் தொகுத்து இந்த நூலை உருவாக்கினேன். அதில் பெருமையும் அடைகிறேன். இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சியால் தபால்துறை பிரச்னையில் இருக்கிறது. ஏற்கெனவே ஒருமுறை தபால்துறை பிரச்னையில் இருந்து மீண்டுவந்துள்ளது. இப்போதும் அது மீளவேண்டும். ஏனெனில் 70 சதவீத கிராமங்களில் இன்றைக்கும் தபால்காரர் முக்கியமான நபரே.
முதலில் ஒரு மாதத்துக்கு ஒருமுறை இரவில் அமர்ந்து பாசத்தைக் கொட்டி கடிதம் எழுதிக் கொண்டிருப்போம். இப்போது தொழில்நுட்பம் மனிதர்களை மிகவும் நெருக்கமாக்கிவிட்டது. இந்த நெருக்கத்தால் ஒருவர் இன்னொருவராகவே ஆகிவிடமுடிகிறது. பழைய கடித காலங்களையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லைதான். மாற்றங்களை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
தபால் துறை பற்றிய மிக அருமையான கதை இது. கணவன் இருந்தவரை பண்டிகைக் காலத்தில் ஊருக்கே வான்கோழி சமைத்துப் பறிமாறுவது அந்தப் பெண்மணிக்கு வழக்கமாக இருந்தது. கணவர் இறந்துவிட்டார். மனைவி பெரும் வறுமைக்கு ஆட்பட்டார். பண்டிகைக்காலம் வந்தது. வான்கோழி வாங்கப் பணம் இல்லை. பெரும் கவலை ஆட்கொண்டது. அந்த அப்பாவி ஏழைப்பெண்மணி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினார்: ‘கடவுளே எனக்கு 100 டாலர் அனுப்பு. வான்கோழி சமைத்து ஊருக்கே பறிமாற உதவி செய்’ என்று எழுதினார். முகவரி எதையும் எழுதாமல் தபால் பெட்டியில் போட்டார். அட்ரஸ் இல்லாத கடிதங்கள் என்ற பிரிவுக்கு அதுபோய்ச் சேர்ந்தது. அங்கே ஒரு அதிகாரி அதைப் பிரித்துப்படித்தார். அந்த பெண்மணியை நினைத்து அவர் பெருங்கவலை கொண்டார். அவருக்கு உதவ முடிவு செய்தார். தன் தொப்பியைக் கழற்றி சக அலுவலர்களிடம் நீட்டி பணவசூல் செய்தார். 92 டாலர்கள் சேர்ந்தது. அதை அப்பெண்மணிக்கு அனுப்பி வைத்தார். அவர் மகிழ்ச்சியுடன் வான்கோழியை வாங்கி அந்த பண்டிகைக் காலத்தை சமாளித்தார். சில நாட்கள் கழித்து கடவுளுக்கு கடிதம் எழுதினார்: “அன்புள்ள கடவுளுக்கு, பணம் அனுப்பி வைத்ததற்கு நன்றி. ஆனால் ஒரு விஷயம். இந்த தபால்துறைக்காரர்கள் மிகவும் மோசமானவர்கள். எட்டு டாலர்களைத் திருடிக்கொண்டு 92 டாலர்கள் மட்டுமே கொடுத்தார்கள்.”
(ஸ்டீவ் போர்ஜியா, ஈகோடெக் ஹோட்டல்களின் அதிபர். PIGEONS TO POST என்கிற காபிடேபிள் நூலின் ஆசிரியர். நம் செய்தியாளரிடம் அவர் உரையாடியதில் இருந்து இக்கட்டுரை எழுதப்பட்டது)
எனது குழந்தைகளுக்கு,
சரியானது என்று தோன்றுவதைச் செய்யவும், தனது தத்துவத்தில் ஒருபோதும் பின் வாங்காமல் வாழவும் செய்த ஒருவராக இருந்தார் உங்கள் தந்தை. நீங்கள் நல்ல புரட்சியாளர்களாக வளர வேண்டும் என்பது தான் இந்த தந்தையின் விருப்பம். மனதில் பதிகிற மாதிரி படிக்கவும். இயற்கையை நமது சொற்படி நிறுத்துகிற தொழில்நுட்ப வித்தையில் நிபுணத்துவம் பெறவும் வேண்டும். முழு முக்கியமானது புரட்சிதான் என்றும் தனியாகக் கையில் எடுத்தால் நம் எல்லோருக்கும் எந்தவித முக்கியத்துவமும் இல்லையென்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
அதைவிட முக்கியமானது அநீதியை எங்கு பார்த்தாலும் எதிர்க்க முடிய வேண்டும் என்பது தான். ஒரு புரட்சியாளனின் மிகவும் வணக்கத்திற்குரிய குணம் அதுதான்.
குழந்தைகளே, இந்த தந்தையைப் போக அனுமதியுங்கள்.
என்றாவது ஒருநாள் நாம் பார்க்க முடியுமென்று விரும்பலாம். என் பொன் முத்தங்களையும் தழுவல்களையும் இத்துடன் அனுப்புகிறேன்.
உங்கள் தந்தை,
சே
மே, 2014.