ஸ்டண்ட் யூனியன் மீது எப்போதும் தனி கவனம் செலுத்துபவர் எம்.ஜி.ஆர்  
சிறப்புப்பக்கங்கள்

‘ஸ்டண்டுக்கு எம்.ஜி.ஆர் இருக்கார்; என்னை பூ மாதிரி நடத்துங்கடா’

தா.பிரகாஷ்

1972 இல், 250 ரூபாய் கட்டி, ஸ்டண்ட் யூனியனில் சேர்ந்தேன். அதே ஆண்டு, எம்.ஜிஆருக்கு டூப் போட்டேன். ‘பட்டிக் காட்டு பொன்னையா'  படத்தில், அண்ணன் - தம்பி என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் எம்.ஜி.ஆர். சகோதரர்கள் இருவரும் குத்துச் சண்டை போடுவது மாதிரியான காட்சி எடுக்க வேண்டும். அண்ணனாக டூப் போடுவதற்கு ஜெபமணி இருந்தார். அவர் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு டூப் போட்டுக்கொண்டிருப்பவர். என்னை தம்பியாக டூப் போடுவதற்கு அழைத்தார்கள்.

இருவரையும் ஒன்றாக நிற்க வைத்துப் பார்த்தார் எம்.ஜி.ஆர். நாங்கள் ஓரே மாதிரி இருந்ததால், அந்த காட்சியை எடுக்க சொல்லிவிட்டார். இருவரும் முகமூடி அணிந்து கொண்டு, சண்டையிட்டோம்.

ஏறக்குறைய இருபத்து ஐந்து நாட்கள் அந்த சண்டைக் காட்சியை எடுத்தார்கள். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர் எங்களைப் பாராட்டினார். அடுத்து நீதிக்கு தலை வணங்கு படத்திலும் டூப் போட்டேன்,' எனச் சொல்லத் தொடங்குகிறார் சண்டைக்கலைஞர் சாகுல் அமீர். வடபழனியில் அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

 ‘ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு டூப் போட்ட ஜெபமணி, கொஞ்சம் கருப்பு என்பதால், மேக்கப் போட்ட பிறகு நீல நிறத்தில் தெரிந்திருக்கிறார். நான் வெள்ளையாக இருந்தால், என்னையே அடுத்தடுத்தப் படங்களுக்கு டூப் போடச்சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர். ஆனால் ஒரு கண்டிஷன் போட்டார், நான் வேறு யாருக்கும் டூப் போட கூடாது என. அதிலிருந்து மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை நான் தான் டூப் போட்டேன். பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்களுக்கு ஷியாம் சுந்தர் தான் மாஸ்டர். நான் எம்.ஜி.ஆர் படங்களுக்கு டூப் போட அவர்தான் காரணம்.

 1974 என்று நினைக்கிறேன். சுக்லா என்பவர் மத்திய திரைப்பட தணிக்கை குழுவிலிருந்தார். சண்டைக் காட்சிகளின் போது முகத்தில் குத்தக் கூடாது, ரத்தம் வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். சண்டைக் காட்சிகள் இல்லை என்றால், எம்.ஜி.ஆர் படம் ஓடாது என்ற நிலை. இதனால் குச்சி சண்டை, மான்கொம்பு சண்டை, கொம்பு சண்டை போன்றவற்றைச் சண்டை காட்சிக்குள் கொண்டு வந்தார். எம்.ஜி.ஆர் தன்னுடைய படங்களுக்கு சண்டை கலைஞர்கள் செய்யும் ஒத்திகையை வந்து பார்ப்பார். அவர் முன்பு எல்லாவற்றையும் செய்துகாட்ட வேண்டும். அவரும் சில மாற்றங்களை செய்ய சொல்வார். படத்திற்கு சண்டைக் காட்சிகள் எடுக்க வேண்டும் என்றால் எம்.ஜி.ஆர் வந்துதான் தொடங்கி வைப்பார். அவருக்கான சண்டைக் காட்சிகளை கச்சிதமாகவும் நடிப்பார்.

இதயக்கனி படத்தில் மைசூர் அரண்மனையில் சண்டைக் காட்சி ஒன்று எடுத்தார்கள். ஹீரோயின் ஜீவிதாவை இரண்டு ரவுடிகள் இழுத்துக் கொண்டு செல்வார்கள், எம்ஜிஆர் டூப்பான நான் அரண்மனையின் மேலேயே ஓடி, எகிறி கீழே குதித்து ரவுடிகளை உதைத்து ஹீரோயினை காப்பாற்ற வேண்டும். ‘நான் கீழே குதிக்கும் போது ஜீவிதாவை கொஞ்சம் தூரத்தில் தள்ளிவிடுங்கள்' என ரவுடியாக நடித்தவர்களிடம் சொன்னேன். நான் கீழே குதிக்கும் போது அவர்கள் அதை செய்யவில்லை. நடிகையின் தலைமீது தான் விழுந்தேன். அவங்க மண்டையை பிடித்துக் கொண்டுபோய் உட்கார்ந்துவிட்டார்கள். நான் பயந்து, ஓடிப்போய் ஒளிந்து கொண்டேன். கொஞ்ச நேரத்தில் எம்.ஜி.ஆர். வந்தார். ஷ்யாம் சுந்தர் மாஸ்டரிடம் நடந்ததை கேட்டார். நான் எங்கே என்றும் கேட்டார். நான் மெதுவாக அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தேன். ‘சரி சரி எல்லாத்தையும் விடுங்க' என்றார். விபத்துகள் நடக்கும் அளவிற்கான காட்சிகளை எம்.ஜி.ஆர் எப்போதும் எடுக்க மாட்டார். சில விஷயங்கள் தப்பித் தவறி நடந்துவிட்டால், ‘ஏன் முட்டாள் தனமா பண்றீங்க' என திட்டி சமாதானப்படுத்திவிடுவார்.

அதேபோல், எனக்கான சம்பளத்தை ஷியாம் சுந்தர் மாஸ்டரே பேசி வாங்கி தந்துவிடுவார். ஒரு படத்துக்கு ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். சில நேரங்களில் எம்.ஜி.ஆரே அழைத்து மூவாயிரம், நாலாயிரம் என்று தருவார். எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் இரவு நேரங்களில் டூப் போடவும் சென்றதுண்டு. இதுமட்டுமில்லாமல், எம்.ஜி.ஆருக்கு ஏழு வருடங்கள் பாதுகாவலராக இருந்தேன். அவருக்கு பாதுகாவலராக இருந்த பன்னிரண்டு பேரும் ஸ்டண்ட் கலைஞர்கள் தான். எம்.ஜி.ஆர் எங்கு சென்றாலும் நாங்களும் சொல்வோம். அவரின் நிழலாகவே இருந்தோம். அவர் முதலமைச்சர் ஆன பிறகு நான் மற்றவர்களுக்கு டூப் போட ஆரம்பித்துவிட்டேன்.

 எம்.ஜி.ஆருக்கு பிறகு சிவாஜிக்கு டூப் போட்டேன். நாற்பது படங்களில் அவருக்கு டூப் போட்டுள்ளேன். பொதுவாகவே சிவாஜிக்கு சண்டை காட்சிகள் மீது விருப்பம் கிடையாது. ‘பைட் பண்ண எம்.ஜி.ஆர் இருக்காருடா... நமக்கு ஆக்டிங் தான் டா... ஏதோ மக்கள் ஆசைப்படுவதால, நாலு பைட் வச்சி முடிங்கடா' என்பார். நாங்கள் தான் அவரை வற்புறுத்துவோம். ‘என்னை பூ மாதிரி வேலை வாங்குங்கடா.. ரிஸ்க் எடுக்க விடாதீங்கடா' என்பார். ‘அண்ணே நீங்க சும்மா நடிச்சுட்டு போங்கணே... எல்லாத்தையும் நாங்க பாத்துக்குறோம்' என்போம். படத்தைப் பார்த்த பிறகு தான் சொல்வார், சண்டைக் காட்சிகள் நல்லா வந்திருக்கிறது என்று.

 தெலுங்கில் சிரஞ்சீவிக்கு டூப் போட்டுள்ளேன். ஒரு முறை மாஸ்டர் ராஜுக்கும் சிரஞ்சீவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. என்னை மாஸ்டராக சொன்னார் சிரஞ்சீவி. எனக்கிருந்த பயத்தையும், சந்தேகத்தையும் தீர்த்து வைத்தார். நானும் மாஸ்டர் ஆகி, ஒரு படத்தில் வேலைப் பார்த்து முடித்துவிட்டேன். இரண்டாவது சிரஞ்சீவி நடத்த நடித்த ‘குடாச்சாரி நம்பர் - 1' படத்தின், இறுதி ரயில்

சண்டைக் காட்சியை எடுத்துக் கொடுத்தேன். இசைகோர்ப்பின் போது, அந்தக் காட்சியைப் பார்த்து பலரும் பாராட்டினார்கள். அதன் பின்னர் நிறைய தெலுங்கு படங்களில் வேலை பார்த்தேன். தெலுங்கில் அர்ஜுனை அறிமுகப்படுத்தியது நான் தான். அதேபோல், ஜெய்சங்கர், ஸ்ரீதர், சிவக்குமார், ரஜினிகாந்த் என பலபேருக்கு டூப் போட்டுள்ளேன். தமிழில் ஐந்து படங்களுக்கு மாஸ்டராக இருந்துள்ளேன். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இருநூறு படங்களில் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறேன். சினிமாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சண்டைக் காட்சிகளில் நடித்திருப்பேன்.

 1966க்கு முன்பு வரை சண்டை கலைஞர்களுக்கு, நடன கலைஞர்களுக்கு, மேக்கப் கலைஞர்களுக்கு தனி யூனியன் கிடையாது. புலிகேசி என்ற ஸ்டண்ட் மாஸ்டர் இருந்தார். ஒரு சண்டைக் காட்சியில், புலியுடன் சண்டையிட்ட போது, அவருக்கு மார்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அது ரணமாகி சில நாட்களில் அவர் இறந்துவிட்டிருக்கிறார். அவரின் இறுதி சடங்கை, பலரிடம் பணம் வாங்கி தான் செய்திருக்கிறார் விட்டலாச்சாரியா. இதை பார்த்த எம்.ஜி.ஆர் சண்டைக் கலைஞர்களிடம் சொல்லி யூனியன் தொடங்க சொல்லியிருக்கிறார். இப்போதுள்ள யூனியன் கட்டடம் 1977 - இல் கட்டுவதற்கு கணிசமான நிதியைக் கொடுத்து உதவி செய்தார். ஸ்டண்ட் யூனியன் மீது எப்போதும் தனி கவனம் செலுத்துபவராக எம்.ஜி.ஆர் இருந்தார்,' என நன்றியுடன் சொல்லி முடித்தார் சாகுல்.