சிறப்புப்பக்கங்கள்

வெள்ளையனுக்கு எதிராக வேலும் வாளும்

ஸ்டாலின் குணசேகரன்

தமிழகத்தில் வெள்ளையர்களை எதிர்த்து தமிழர்கள் நடத்திய ஆயுதப் போர்கள் வீரம் செறிந்த வரலாறு. வியாபாரக் கம்பெனியாக உள்ளே வந்த வெள்ளையர்கள் தமிழ் மண்ணின் பாளையக்காரர்களை அடிமைப்படுத்தியபோது அவர்களை எதிர்த்து நின்றவர்களின் வீரம் எதிர்காலத்தில் மக்கள் மத்தியில் புரட்சிக்கனல் கொழுந்துவிட்டெரியக் காரணம் ஆனது. அழகுமுத்துகோன், பூலித்தேவர் போன்றவர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துச் செய்த போர்கள்தான் இதற்கு ஆரம்பம். இவர்களுக்குப் பின்னால் வெள்ளையர்களை எதிர்த்தவர்கள்தான் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், கட்டபொம்மன், ஊமைத்துரை, கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை உள்ளிட்ட பலர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத் திலேயே இவர்களை வெள்ளை அரசு ஒடுக்கிவிட்டாலும் 1857-ல் நடந்த சிப்பாய்க்கலகத்துக்கு முந்தைய முக்கியமான ஆயுதம் தரித்த போர் தமிழர்களுடையது.

 1800 -ல் நடந்த கோவைப்புரட்சி மிக முக்கியமானது. திண்டுக்கல் அருகே உள்ள விருபாட்சியை ஆண்ட பாளையக்காரரான கோபால நாயக்கர் இதில் முக்கிய பங்கு வகித்தார். கேரளவர்மா,  தீரன் சின்னமலை, மருது சகோதர்கள், மராட்டிய தளபதி துந்தியா வாக் உள்ளிட்ட பலர்  அமைத்த கூட்டணி அது. கோவையில் இருந்த ஆங்கிலப் படையைத் தாக்க முடிவு செய்கிறார்கள்.  இவர்கள் திரட்டிய படையில் ஊர் ஊராகக் கூட்டம் போட்டு சாமானியமக்கள் சேருகிறார்கள். இந்த மக்களிடம் ஒற்றர்கள், கடிதப்போக்குவரத்து எல்லாம் இருந்திருக்கிறது. பெரும் படையாக கோவையை நோக்கிச் செல்கிறார்கள்.  கோவையில் இருந்த ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கைப் பாதுகாத்த படையினரில் முக்கால்வாசிப்பேர் முஸ்லிம்கள். அவர்கள் முகரம் பண்டிகையைக் கொண்டாடி களைப்பாக இருக்கும் நேரத்தில் தாக்குவது என்பது திட்டம். இந்த படையிலும் இஸ்லாமியர்களும் இந்துக்களும் இருக்கிறார்கள். ஆனால் எதிர்பார்த்த படையினர்கள் வேறு இடங்களில் இருந்து வந்து சேரமுடியவில்லை. முன்கூட்டியே சிலர் தாக்குதலைத் தொடங்கியதால் முறியடிக்கப்பட்டனர். இவர்களில் நூற்றுக்கணக்கானோர் தூக்கிலிடப்பட்டனர். தாராபுரம் சத்தியமங்கலம் பகுதிகளில் புரட்சியாளர்கள் ஒரே மரத்தில் ஆறு பேர் ஏழுபேர் தூக்கில் தொங்கவிடப்பட்டு இத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.  இந்த கோவைப்புரட்சியைப் பற்றி குணிதtட ஐணஞீடிச்ண ணூஞுஞஞுடூடூடிணிண என்ற பெயரில் பேராசிரியர் ராஜய்யன் எழுதி உள்ளார். 

இந்த புரட்சிக்கு அடுத்து குறிப்பிட வேண்டியது 1806-ல் நடந்த வேலூர் சிப்பாய்கள் புரட்சி. பின்னால் 1857-ல் நடந்த சிப்பாய்க்கலகத்தில் இருந்த முக்கிய அம்சங்கள் அனைத்தும் வேலூர் புரட்சியிலும் இருக்கும்.  ஆனால் இது ஆறுமணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான சிப்பாய்கள் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டனர்.

பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாளையக்காரரான கட்டபொம்மனின் எதிர்ப்புப்போர் ஒரு தன்மானப்போர். 1797-ல் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டபோது  மக்கள் எதிர்ப்பு ஏற்பட்டது. பல கிராமங்கள் வரிகொடாமல் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த கலகத்துக்கு கட்டபொம்மன் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

சிவகிரி பாளையக்காரர் ஆங்கில ஆதரவாளர். அவரது மகன் எதிர்ப்பாளர். எனவே மகனுக்கு ஆதரவாக 3000 பேர் கொண்ட படையை தம்பி ஊமைத்துரை தலைமையில் அனுப்பியிருக்கிறார். வரிகொடுக்காமல் காலம் தாழ்த்துவது, கம்பெனியாரின் ஆட்சிக் குட்பட்ட பகுதிகளில் தானே வரிவாங்குவது, ஆங்கில ஆதரவாளர்களான பாளையக்காரர்களின் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சங்கடம் ஏற்படுத்துவது, ஆங்கில அதிகாரிகளின் ஆணைகளை அலட்சியம் செய்வது என்று கட்டபொம்மன் எதிர்ப்பு அரசியல் செய்திருக்கிறார். மாவட்ட கலெக்டர் ஜாக்சனை சந்திக்கப்போனபோதுதான் கலவரம் வெடித்தது. தன்னை முறைப்படி கவுல் கொடுத்து அழைக்காத ஆங்கில அதிகாரிகளை சந்திக்க மறுத்த தன்மானம் கட்டபொம்மனுக்கு இருந்தது. பாஞ்சாலக்குறிச்சி கோட்டை இறுதியில் மேஜர் பானர்மேனால் 1799 செப்டம்பரில் தாக்கப்பட்டது. “ஆறு பவுண்ட் பீரங்கியால் தாக்கி உடைக்கப்பட்ட கோட்டையில் தெற்கு வாயில் வழியாகவும் உடைந்த கோட்டைச் சுவர் வழியாகவும் நம் வீரர்கள் நுழையவே அஞ்சுகிறார்கள். போர் நெடுநேரம் நடந்தது. நம் பக்கம் இழப்பு கடுமையாகவே இருக்கிறது” என்று எழுதிய மேஜர் பானர்மேன் 24 பவுண்ட் பீரங்கிப்படை பாளையங்கோட்டையிலிருந்து வரும்வரை முற்றுகையை நீட்டிக்க முடிவு செய்தார். அது வந்தால் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் கட்டபொம்மன் தப்பித்துச் சென்றார். ஆனால் அவர் பிடிபட்டு கயத்தாறில் சில நாட்கள் சிறைவைக்கப்பட்டு பாளையக்காரர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு அக்டோபர் 16ம் தேதி தூக்கிலிடப்பட்டார். ஆனால் அந்த சமயங்களில் கட்டபொம்மன் காட்டிய மனவுறுதியை பானர்மேன் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இவரது தம்பி குமாரசாமி என்ற ஊமைத்துரை பாளையங்கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தார். 16 மாதங்களில் அவர் சுமார் 200 பேர் கொண்ட ஆதரவுப் படையால் தப்புவிக்கப்பட்டு, ஆறே நாட்களில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை எழுப்பி எதிர்த்து நின்றார். பின்னர் அவரும் அங்கிருந்து தப்பி ஓடி மருதுபாண்டியர்களிடம் அடைக்கலம் புகுந்தனர். அதன் பின்னர் பல இடங்களில் போர். இறுதியில்  மருது பாண்டியர்களும் வீழ்ந்தனர். வத்தலகுண்டுவில் மூன்று நாட்கள் உணவோ ஓய்வோ இன்றி நடந்த போருக்குப் பின் ஊமைத்துரை தன் தம்பி செவத்தையா உட்பட 65 பேருடன் பிடிபட்டார். 1801, நவம்பர் 15-ல் இவரும் பாஞ்சாலக்குறிச்சியில்  தூக்கிலிடப்பட்டார்.

தீர்த்தகிரி என்ற இயற்பெயர் உடைய தீரன் சின்னமலை கொங்கு பகுதியில் போராடிய பெரும் வீரர். திப்புவுக்கு ஆதரவாக வெள்ளையர்களை எதிர்த்து மழவல்லியில் நடந்தபோரில் படைகளுடன் கலந்துகொண்டவர். விருபாச்சியிலிருந்து கோவை நோக்கி 1800-ல் கிளம்பிய படையின் ஒரு பகுதிக்கு தீரன் சின்னமலை தலைமை தாங்கியிருந்தார். அதன்பின்னர் அவர் சுமார் ஐந்து ஆண்டுகள் ஆங்கிலேயரை எதிர்த்து யுத்தம் நடத்தினார். மூன்று போர்களில் வெள்ளைப்படையை மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறார். ( 1801- காவிரிக்கரை, 1802-ல் ஓடாநிலை, 1804-ல் அரச்சலூர்).  கள்ளிகோட்டையிலிருந்து அவரது ஓடாநிலை கோட்டையைத் தாக்க பீரங்கிப் படை வந்தது. அங்கிருந்து தப்பிய அவர் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சங்ககிரிக் கோட்டையில் ஆதரவாளர்களுடன் தூக்கிலிப்பட்டார்.

1772-ல் சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரைத் திடீரெனத் தாக்கிக் கொன்று வெள்ளையர்கள் சிவங்கைச் சீமையைக் கைப்பற்றினர். அவரது ராணி வேலு நாச்சியார்,  படைத்தளபதிகளாக இருந்த பெரும் போர்வீரர்களான மருது சகோதரர்கள் ஆகியோர் ஆங்கிலப்படையையும் ஆர்காட்டு நவாப் படையையும் எதிர்த்துப் போர் செய்து சிவகங்கையை பத்தாண்டுகளுக்குப் பின் மீட்டனர். அதன்பின்னர் ஆங்கிலேயருக்கு எதிரான கூட்டணியை மருது சகோதரர்கள் கட்டமுயன்றனர். இதில் உருவானதுதான் விருபாட்சியில் கோபால்நாயக்கர் முன்னிலையில் உருவான கூட்டணி. தோற்ற பின்னர் ஊமைத்துரை பாஞ்சாலகுறிச்சியில் இருந்து தப்பி வந்து இவர்களுடன் சேர்கிறார். இந்நிலையில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போர்புரியுமாறு ஆட்களைத் திரட்ட இவர்கள் வெளியிட்ட பிரகடனம் (1801 )மிக முக்கியமானது: திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் உள்ளிட்ட பல இடங்களில் இந்த பிரகடனங்கள் ஒட்டப்பட்டு ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட்டம் தூண்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஏமாற்றி இந்த தேசத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். இந்த நாட்டு மக்களை நாய்களை விடக் கேவலமாக நடத்தினர் என்றெல்லாம் இந்த பிரகடனம் கூறுகிறது. வெள்ளையர்கள் படை காளையார் கோயிலை 1801-ல் சூழ்ந்தனர். பல நாட்கள் நடந்த போருக்குப் பிறகு மருது சகோதரர்கள் தப்பிச் சென்று காடுகளில் பதுங்கினர். அக்டோபர் 14-ம் தேதி பெரிய மருதுவும்  சில நாள் கழித்து  சின்னமருதுவும் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் இருவரும்  அதே மாதம் 24 ந்தேதி திருப்பத்தூரில் தூக்கில் போடப்பட்டனர். அவர்களின் வீரம் கதைப்பாடலாகவும் அம்மானையாகவும் பாடப்பட்டு மக்களிடையே எழுச்சியை ஊட்டியது.

(ஸ்டாலின் குணசேகரன் விடுதலைவேள்வியில் தமிழகம் என்ற நூலின் ஆசிரியர். மக்கள் சிந்தனைப்பேரவையின் தலைவர்.  நம் செய்தியாளரிடம் பேசியதில் இருந்து)

மே, 2015.