கலைஞர் கருணாநிதி 
சிறப்புப்பக்கங்கள்

வெற்றிப்படிக்கட்டுகள்

ராவ்

மகாநாடுகள் நடத்தி கொள்கையை மக்களிடம் கொண்டுபோய் கட்சியை வளர்த்து சீக்கிரமே ஆட்சியைப் பிடித்த வரலாறு தி.மு.கழகத்துக்கு மட்டுமே உண்டு என்று சொல்லவேண்டும்.

அந்த மாநாடுகளில்  தன்
செல்வாக்கைப் பெருக்கிக்கொண்டு
சாதனை படைத்தவர் கலைஞர் கருணாநிதி.

மந்திரிகுமாரி திரைப்படம் வந்தபிறகு திமுக தொண்டர்களிடையே  'கருணாநிதி, கருணாநிதி' என்றே பேச்சு. பராசக்தி படம் வெளிவந்தபின்னர் கருணாநிதி கழகத்தில் உயர்ந்த இடத்தைப் பிடித்துவிட்டார். 'கலைஞர்' என்ற பட்டமும் அவருக்குக் கிடைத்துவிட்டது. மாநாடு என்றாலும் சரி, பொதுக்கூட்டம் என்றாலும் சரி அண்ணாதுரைக்கு அடுத்த இடத்தில் அமர்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஈவிகே சம்பத். கோவில்பட்டி மாநாடு என்று நினைவு. கலைஞர் தலைமை தாங்கினார். அவர் பேசப்பேச தொண்டர்கள் கரவொலி எழுப்பிக்கொண்டே இருந்தனர்.  அவரது பேச்சைப் பற்றி சம்பத் அண்ணாவிடம் ஏதோ நக்கலாக விமர்சனம் செய்ததாக அப்போது பேச்சு இருந்தது. ஏன் என்ன ஆயிற்று?

கட்சி ஆரம்பித்தபோது ஐவர் அணியில் அவர் இல்லை என்பார்கள். அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் நாவலர், சம்பத் என்றார்கள். ஆனால் சம்பத் கட்சியை விட்டே போனார். அண்ணாவின் இதயத்தை இரவலாகக் கேட்டுப்பெற்றதுடன்  அவர் வகித்த முதல்வர் பதவியும் கலைஞரிடமே! நாவலர் சில மாதம் தேச சஞ்சாரம் செய்துவிட்டு கலைஞர்
அமைச்சரவையில் இடம் பெற்றார்.

கலைஞர் பெற்ற பதவி உயர்வின் ரகசியம் என்ன?

எதையும் விரும்பி நேசித்து முழுமூச்சுடன் காரியம் ஆற்றுவார்.
சினிமாவில் வசனம் எழுதினால் தன்னை விஞ்ச ஆள் இல்லை என்று நிரூபித்தார். வசனங்களில் புதுமை பளிச்சிட்டது! இளமை துள்ளியது! சமூகத்தின் கவனத்தை ஈர்த்தது!

'ஓடினாள்.. ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்..' என்ற பராசக்தி வசனம் எல்லோரையும் திடுக்கிட வைத்தது!

கட்சி சார்பில் கூட்டம் பேச ஊர் ஊராகப் போவார். கூட்டம் முடிந்ததும் அன்றிரவு அங்கேயே தங்குவார். தொண்டர்கள், நிர்வாகிகளுடன் நெருக்கமாகப் பழகுவார். மாநிலம் முழுக்க அவருடைய ஆதரவாளர்கள் எண்ணிக்கை இப்படித்தான் அதிகரித்தது! பிறகு முதல்வர் யார் என்று உட்கட்சித் தேர்தல் வந்தபோது அவரது கை ஓங்கி இருக்க காரணமாக அமைந்தது!

மேடைகளில் எதிர்க்கட்சித் தலைவர்களை அவர் குத்திக்கிழிப்பார். எதிர்க்கட்சிக்காரர்கள் அந்தக் கூட்டத்தில் இருந்தால் எரிச்சல் அடைவார்கள். ஆனால் தாக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்தால் அன்பும் மரியாதையும் காட்டுவார். எதிர்காலத்துக்கு எல்லார் ஆதரவும் தேவைப்படும் என்பதை உணர்ந்த தலைவர் அவர்.

பிசி கணேசன், சின்னக்குத்தூசி, சோலை போன்ற திறமை மிக்க பேனா மன்னர்கள் அவருக்கு எதிராக கட்டுரை எழுதியவர்களே. பின்னர் அவருக்கு நெருக்கமானவர்களாக மாறிவிட்டார்கள்.

கலைஞரின் பார்வை சுழன்று எல்லோரையும் தன் வசமாக்கும்
சக்தி படைத்து இருந்தது. அவர்போல் வெற்றியை வசமாக்கும் குறிக்கோள் கொண்டு பாய்ந்து முன்னேறும் எண்ணத்துடன் செயல்பட்ட தலைவர் யாரும் அன்றும் இல்லை! இன்றும் இல்லை!

ஜெயலலிதா

தமிழக அரசியலில் துணிச்சல் மிக்க தலைவர் தைரிய லட்சுமி என்று புகழ்க்கொடி நாட்டியவர் ஜெயலலிதா. தான் எந்த துறையில் இருந்தாலும் அதில் 'டாப்' இடம் பிடித்தே ஆகவேண்டும் என்ற மன உறுதி மிக்கவர். படித்தபோதே டெல்லி தேர்வு ஒன்றில் இந்தியாவில் முதல் இடத்தைப் பிடித்தவர். சினிமாவில் எடுத்த எடுப்பிலேயே முதல் இடத்தைப் பிடித்தவர்.

அரசியலில் எதேச்சையாகத்தான் நுழைந்தார். ஆனால் எம் ஜிஆர் நட்பு கிடைத்தபோது அத்தோடு தன் பாதையை முடித்துக்கொள்ள அவர் தயாராக இல்லை.

ஜெ படிக்காத புத்தகம் கிடையாது. உலக அரசியல் அவருக்கு அத்துப்படி. எம்ஜிஆர் அவரது பரந்த அறிவைக் கண்டு திகைப்புடன் ரசித்தார். 'நீ அரசியலுக்கு வரணும்' என்பது அவர் சொன்ன ஒரே ஒரு வார்த்தை என்பார்கள். எம்ஜிஆர் கலைஞருக்கு எதிராக இன்னொரு வலுவான ஆளை நிறுத்த முடிவு செய்திருந்த நேரம். 'ஜெ.'  கலைஞருக்கு சரியான சவாலாக இருப்பார் என்று நினைத்தார்.

பிறகு எம்ஜிஆர் தன்னைச் சந்திக்க வரும்போதெல்லாம் தான் அரசிலுக்கு வருவது எப்போது என்று விடாப்பிடியாகக் கேட்டுவந்தார். 'திராவிட அரசியல் முழுவதும் தெரியவேண்டும்' என்றார் எம்ஜிஆர்.

சொல்லி பத்துநாட்களில் திராவிட இயக்கத்தலைவர்கள் பற்றி அயோத்திதாச பண்டிதர் முதற்கொண்டு அனைத்து தமிழர் தலைவர்கள் பற்றியெல்லாம் நுணுக்கமாகப் படித்துமுடித்தார். எம்ஜிஆரே அசந்துபோனதாக அன்று அமைச்சர்கள் நிருபர்களிடம் கூறினர்.

அவரை கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆக்கினார் எம்ஜிஆர்.  கொ.ப.செ என்று அவரை சோ முதற்கொண்டு பலர் கிண்டல் செய்ததை மறக்க முடியாது. ஆனால் அந்த சாதாரண பதவியில் இருந்துகொண்டு அவர் கட்சியை ஆட்டிப்படைத்தார்! அந்த பதவிக்கு உள்ள முழு அதிகாரத்தையும் கையில் எடுத்துக்கொண்டார்.
கட்சிக் கூட்டங்களுக்கு வருவதாக ஒப்புக்கொண்டு டிமிக்கி கொடுத்தவர்களுக்கு நோட்டீஸ் போயிற்று! ஆர்.எம்.வீக்கும் நோட்டீஸ்! எம்ஜிஆரே ஜெயின் வேகத்துக்கு  பிரேக் போடப் பார்த்து முடியவில்லை!

எம்ஜிஆர் மறைந்து கட்சி பிளவுபட்டபோது, அதிமுக தொண்டர்களின் ஒரே தலைவியாக எழுச்சி பெற்றார்! வி.என்.ஜானகி அவரிடம் கட்சியை ஒப்படைத்து விட்டு விலகிக் கொண்டார்!

அந்த சமயத்தில் ஒரு காட்சி மறக்க முடியாதது!

 'ஜெ' அணிக்கு முதலில் நாவலர் நெடுஞ்செழியன் தான் தலைவராக இருந்தார். அந்த அணி கூடியது. 'ஜெ' வை பொதுச்செயலாளராகத் தேர்வு செய்ததாக நாவலர் அறிவித்தார். அடுத்து நிருபர்கள் சில கேள்விகள் எழுப்பினர். நாவலர் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

ஜெயலலிதா அவரைப் பார்த்து நிறுத்துமாறு சைகை செய்தார்! நாவலர் கப்சிப் ஆனார்! பிறகு எல்லா கேள்விகளுக்கும் ஜெயலலிதாவே பதில் கூறினார்.

இதுதான் ஜெ. அவர் பெற்ற பதவி உயர்வுகளின் ரகசியமும் இதுதான்!