சிறப்புப்பக்கங்கள்

வெற்றி என்கிற உந்து சக்தி!

அ.தமிழன்பன்

விண்ணைத் தாண்டி வருவாயா, அழகர்சாமியின்குதிரை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களைத் தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மதன். அடுத்து மான்கராத்தே மற்றும் பிரபுசாலமன் இயக்கும் படம் ஆகியனவற்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். நாற்பதுவயதில் அவர் திரைப்படத்துறையில் ஒரு முக்கியமான தயாரிப்பாளராக இருக்கிறார். இதற்கான தொடக்கம் பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்துவிட்டது என்கிறார் மதன்.

திருச்சியில் என்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் கௌதம் மேனன் இவருக்கு சீனியர். கல்லூரியைவிட்டு வெளியே வந்தபிறகு இவர்கள் இருவருடன் வெங்கடேஷ் என்கிற நண்பரையும் சேர்த்துக் கொண்டு ஒரு விளம்பரப்பட நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த நேரத்தில்தான் கௌதமுக்கு மின்னலே பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்தப்படம் முடிந்தபின் அதில் மோசமான அனுபவங்களைச் சந்தித்த காரணத்தால் நாமே ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கலாம் என்று கௌதம் சொன்னாராம். அதன்படி உருவான நிறுவனம் போட்டான் கதாஸ். அந்நிறுவனத்தின் மூலம் காக்க காக்க முதல் வாரணம் ஆயிரம் வரை எல்லாப்படங்களையும் முதல்பிரதி அடிப்படையில் தயாரித்தார்களாம். பின்னர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன்பிக்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்கள். அந்நிறுவனம் தொடங்கிய பிறகு கௌதம் இயக்கிய விண்ணைத்தாண்டிவருவாயா படமும் அதைத் தொடர்ந்து அழகர்சாமியின்குதிரை படமும் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு உருவாக்கிய படங்கள். அதுவரை கௌதம் காட்டிய வழியில் பயணித்துக்கொண்டிருந்தாராம் மதன். அழகர்சாமியின்குதிரை படம் தேசியவிருது பெற்றுப் பெருமைத் தேடித்தந்தாலும் மிகப் பெரிய அளவில் பொருளாதார நஷ்டத்தைக் கொடுத்தாம்.

“அது எனக்குப் பல கதவுகளைத் திறந்துவிட்டது என்கிறார் மதன். ஒரு படத்தை எப்படியெல்லாம் எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல புரிதல்களை அந்தப்படம் கொடுத்தது.  அதற்குப்பின் நானே தனியாகக் கதை கேட்டு படங்களை முடிவு செய்யத் தொடங்கினேன். இங்கு ஒரு கதையைத் தேர்வு செய்வதிலிருந்து அதற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் வரை எல்லாவற்றையும் ஒரு தனிநபரே செய்வது சரியாக இருக்காது என்று முடிவு செய்தேன். அதனால் திரையுலகில் அனுபவம் வாய்ந்த நண்பர்கள் ஜேம்ஸ் மற்றும் ராஜா ஆகியோரை உடன் வைத்துக்கொண்டு படங்களைத் தீர்மானிக்கிறோம். அவ்வாறு நாங்கள் முடிவு செய்து வெளியிட்ட படம் பாண்டிராஜ் இயக்கத்தில் வந்த கேடிபில்லா கில்லாடிரங்கா. அந்தப்படத்தின் வெற்றி எங்களுக்கு பெரிய உந்துசக்தியாக இருந்தது. அதைத் தொடர்ந்து தேசிங்குராஜா, வருத்தப்படாதவாலிபர் சங்கம் ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறோம்” என்றும் சொல்கிறார்.

    இளவயதில் ஒரு வெற்றி கரமான தயாரிப்பாளராக வலம்வரும் இவர் புதிதாக வருகிறவர்களுக்கு நல்ல டிப்ஸ் கொடுக்கிறார். “ நிறையப் பேர் திரைப்படம் என்கிற கவர்ச்சியில் மயங்கி எவ்வித முன்னனுபவமும் இல்லாதவர்களை வைத்துப் படமெடுத்துத் தோல்விகண்டு அதோடு காணாமலும் போய்விடுகிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கத்தில்உறுப்பினராகச் சேர வரும்போதே அவர்களுக்கு திரைத்துறை பற்றி ஒரு வாரம் அல்லது பத்துநாட்கள் பயிற்சியைக் கொடுக்க வேண்டும். இதனால் தோல்விகளின் சதவிகிதம் குறையும்” என்கிறார்.

    ஒருவர் தயாரிக்கிற படத்தை வெளியில் சொல்கிற மாதிரி எடுப்பது மிகமுக்கியம் என்பதும் அவருடைய கருத்து. ‘இன்றைக்குப் பலபேர் தாங்கள் தயாரித்த படத்தின் பெயரை வெளியில் சொல்லக் கூச்சப்படுவதைப் பார்க்கிறேன்’ என்று சொல்கிறார்.

செப்டம்பர், 2013