சிறப்புப்பக்கங்கள்

வெறுப்பை உமிழ்தல்!

வினோத் ஆறுமுகம், ஊடக ஆய்வாளர்

இணைய உலகம் ஆப்கள் என்கிற செயலிகளை முக்கியமாகக் கொண்டு இயங்குகிறது. யூடியூப், ட்விட்டர், பேஸ்புக்... போன்றவை அந்த தளங்களில் தரும் இடத்தில் நாம் பேசுகிறோம்.

இவை உருவாக்கப்பட்டது, இலாப நோக்கத்துக் காக மட்டும்தான்! அவர்களுக்குத் தேவை, நீங்கள் செய்யும் அரசியலோ காமெடியோ அல்ல.எத்தனை பேரை அந்தத் தளங்களில் நிறுத்திவைக்கிறீர்கள் என்பதுதான். அதன் மூலம் அவர்கள் வருமானம் பார்ப்பார்கள். செயற்கை நுண்ணறிவு அல்காரிதம்தான் இதை இயக்குகிறது. அல்காரிதம் சொல்வதுதான் இறுதியானது. ஒருவர் சீரியஸாக சமத்துவக் கொள்கையைப் பேசுவார்.இன்னொருவர், சாதியையொட்டிய அரசியல் பேசுகிறார். சாதியோ மதமோ அதை ஆதரித்துப் பேசுவதால் சமூகத்தில் ஏற்கெனவே அதற்கு வரவேற்பு இருப்பதால், அந்த வெறுப்பை உமிழும் உள்ளடக்கத்துக்கு பார்வைகள் அதிகம். நிறைய பேர் சும்மாவேனும் வந்து எட்டிப் பார்த்துவிட்டாவது போவார்கள். வெறுப்பை உமிழ்வதை இந்த அல்காரிதம்கள் இயல்பானதாக ஆக்கிவிட்டன.

இன்று எந்தக் கொள்கையைப் பேசினாலும், வெறுப்பின் வடிவத்தில் கொடுத்தால்தான் சேரும் என்று ஆகிவிட்டது. யூடியூப் ஊடகத்தில் வெறுப்புடன் ஒரு பக்கச் சார்பும் ஏற்பட்டுவிடுகிறது. இப்படி இருப்பதால், இயல்பிலேயே அல்காரிதம் அனுமதிக்கும் வழியில்தான் அரசியல் உரையாடலை நிகழ்த்த முடியும். அதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது. தவறாகத்தான் போகும். எப்போது சுயசார்பாகச் செய்கிறீர்களோ, அதாவது பார்வையாளர் எண்ணிக்கைக்காக அல்ல, பத்து பேர் பார்த்தால்கூட போதும்; உடனடி கவனம் தேவையில்லை; என்னுடைய நிலையை மாற்றிக்கொள்ள மாட்டேன் என தொடர்ந்து இயங்கினால்தான், சில பல ஆண்டுகள் தாமதமானால்கூட குறிப்பிட்ட அரசியல் உரையாடலுக்குள் கொண்டுவர முடியும்.

சைபர் தளம் அல்ல, வெளியே இருக்கும் அரசியல் களம்தான் இறுதியானது. சைபர் தளம், அரசியல் களத்துக்குத் துணையாக இருக்கமுடியுமே தவிர, அதுவே களம் அல்ல. அப்படிச் சொல்வது பொய். களத்தில் வேலைசெய்ய வேண்டும்; அப்போது சைபர் தளத்தில் உங்கள் ஊடகத்தைக் கட்டமுடியும். அப்போது, இணையம்  உங்களுக்கு வேலைசெய்யும். மற்றபடி,  யூடியூபில் பேஸ்புக்கில் அரசியலாக நல்ல விவாதம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை; இதை கவனித்தும் ஆய்வுசெய்தும் பார்த்தாயிற்று. சமூக ஊடகப் பயனாளிகளிடம் பொதுவாக பொறுமை இருக்காது; எடுத்தவுடனே முத்திரை குத்துவார்கள். எந்தக் கருத்துக்கும் பொறுமை இல்லாத& பகுத்தறிவற்ற விவாதம்தான் இங்கு நடக்கிறது.

இப்படிச் சொல்வதால், இணையவெளியில் அரசியல் உரையாடலே நடக்காது என்றும் சொல்லிவிட முடியாது. சூழல் இப்படியாக இருக்கிறது... இதில், சும்மா கவனம் ஈர்க்கவும் அதிக பார்வையாளர்களைத் தேடியும் என இல்லாமல், நிச்சயமாக நீண்ட கால நோக்கில் அரசியல் உரையாடலை நிகழ்த்தமுடியும்.

கடலில் கப்பலில்தான் போகவேண்டும்; தரையில் பேருந்தில்தான் போகவேண்டும். இல்லை, பேருந்தை கடலில் இறக்கிப் போகவேண்டும் என்றால், அதற்கேற்ப அதை மாற்றியாக வேண்டும். பொத்தாம் பொதுவாக, கடலில் போய் விழவேண்டும் எனப் போனால், தொப்பென விழுந்துவிடுவீர்கள். யூடியூபில் மாற்று அரசியல் பேசுபவர்களில் சில தரப்பினர் ஏற்கெனவே சிறு பத்திரிகையில் எழுதியதைப் போல இங்கும் செய்ய முயல்கிறார்கள். அந்த ஊடகம்போல இது இல்லை. பிறகு பார்வைகள், சந்தாதாரர்கள் என இவர்களும் வலைக்குள் விழுந்துவிடுகிறார்கள். போலியான ஒளிவட்டத்தையும்  இது கொடுக்கிறது. இதில் கவனமாக இல்லாவிட்டால், அரசியல் உரையாடல் நடைபெறாது. 

பணத்தை எதிர்பார்த்து என் ஊடகத்தை நடத்தவில்லை; களத்தில் நான் பார்க்கும் வேலையின் மெய்நிகர் தளத்து வேலை இது என வைத்துக் கொண்டால், அரசியல் யூடியூப் ஓகே. பணம் வராவிட்டாலும் பரவாயில்லை; என்னுடைய அரசியல் இதன்மூலம் போய்ச் சேர்ந்தால் பரவாயில்லை என்பதுதானே சரியாக இருக்கும். 400 பேர் பார்க்கக் கூடிய மொக்கையான விசயத்தைவிட, நான்கே பேர் பார்க்கும் நல்ல விசயம் மதிப்பிற்குரியது. இது ஒரு கட்டத்தில் வெற்றியைக் கொடுக்கும். 

இன்னொரு செய்தி... சிலர் ஆவணப்படுத்தலாக தொடர்ந்து செய்துவருகிறார்கள். அது அரசியல் உரையாடலுக்கு இட்டுச்செல்லும் என நான் நினைக்கவில்லை. இவை, புதியவர்களுக்கானதாக இருப்பதில்லை. ஏற்கெனவே, அந்த விசயத்தில் புழங்கக்கூடிய நபர்கள் மட்டுமே பார்வையாளர்களாக இருக்கிறார்கள். புதியவர்களைப் பார்க்கவைப்பதும் பார்ப்பவர்களை வினையாற்ற வைப்பதும்தான் அரசியல் உரையாடல் எனக் கூறமுடியும்.

சமூக ஊடகம் என்பது தவிர்க்கமுடியாதது. ஆனால், வீட்டில் உட்கார்ந்தபடியே சமூக ஊடகத்தை 10 ஆயிரம் பேர் கவனிக்கிறார்கள் என்றால், அதனால் பலன் என்ன? அவர்களில் 100 பேர் விஷயத்துக்குள் போகிறார்கள்; அவர்களில் 10 பேர் களத்துக்கு வரவைக்கிறீர்கள் என்றால் அது வெற்றி. எண்ணிக்கையின் பின்னால் போவதுதான் சிக்கல். சரியான ஆட்கள் 10 பேர் சமூக ஊடகத்தில் இருந்தாலும் அரசியலில் தாக்கம் ஏற்படுத்தமுடியும்.

சமுக ஊடகங்கள் உணர்ச்சிமயத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வைக்கின்றன; சிந்திக்க வைப்பதில்லை. இதற்கு மாற்றுகளை உருவாக்க வேண்டும். அமெரிக்காவில் இதைப் பற்றிய விவாதம் பெரிய அளவில் நடந்துவருகிறது. தமிழ்ச் சூழலில் நீங்கள் இதைத் தொடங்கிவைக்கலாம். எதிர்மறையாக அணுகவும் கூடாது. இது ஊடகமா இல்லையா என்பது அல்ல, இதுதான் இப்போதைக்கு கையில் இருக்கிறது. மாற்றை உருவாக்குவது எப்படி என்பதுதான் விசயம். நேர்முறையாகத்தான் இதை நான் அணுகுகிறேன். நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்குள் போய் சிக்கிக்கொண்டு பலியாகிவிடக் கூடாது!

(நமது செய்தியாளரிடம் பேசியதில் இருந்து)