சிறப்புப்பக்கங்கள்

வென்றது ராஜாஜியின் தொலை நோக்கு!

எச்.வி.ஹண்டே

1954 ஆம் ஆண்டில், ஆவடியில் (சென்னை அருகில்) காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அந்த காலகட்டத்தில் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி அவர்கள், மதராஸ் ராஜதானியின் முதல்வராக இரண்டாண்டுகள் பணியாற்றி விலகியதற்கு பின், பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பொறுப்பேற்றிருந்தார்.

ஆவடியில் நடைபெற்ற மாபெரும் காங்கிரஸ் மாநாட்டில், அக்கட்சியின் எதிர்கால பொருளாதாரக் கொள்கை, சோசலிஸ பாதையில் செல்ல வேண்டுமென (Socialistic Pattern of Society) முடிவெடுக்கப்பட்டது. இதற்கு மூல காரணம், அன்றைய பிரதமர் பண்டித நேரு அவர்களுக்கு ‘ரஷ்யாவின் பொருளாதாரக் கொள்கையின் மீது இருந்த மோகம் தான்,' என ராஜாஜி உணர்ந்தார். இந்த கொள்கை இந்தியாவிற்கு பயன் தராது என ராஜாஜி அவர்கள் பகிரங்கமாக கூற ஆரம்பித்தார். வளமான நாடாக, இந்தியா உருவெடுக்க வேண்டுமானால் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஒரு வலுவான வலதுசாரி கொள்கைகள் தழுவிய கட்சி தேவையென ராஜாஜி தன் கருத்தினை வெளிப்படுத்தினார். எதிர்பாராத பல இடங்களிலிருந்து ராஜாஜியின் மேற்கூறிய கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்க ஆரம்பித்தன.

4.6.1959 அன்று, ராஜாஜி அவர்களால் சுதந்திரா கட்சி தொடங்கப்பட்டது.

பேராசிரியர் என்.ஜி. ரங்கா (ஆந்திரா) இந்த கட்சியின் தலைவரானார். பொருளாதார வல்லுநரான எம்.ஆர். மாசானி (ராஜ்கோட்,- குஜராத்)பொதுச்செயலாளரானார். தயாபாய் பட்டேல் (சர்தார் பட்டேல் அவர்களின் மகன்), ராஜஸ்தானின் மகாராணி காயத்ரி தேவி, மஹாராஷ்டிராவை சேர்ந்த என்.தண்டோர். ஒரிஸ்ஸாவின் மாபெரும் தலைவர் ஆர்.என்

சிங்க்தேவ் (1967இல் ஒரிஸ்ஸாவின் முதல்வராகிறார்) இன்னும் பல தலைவர்கள் ராஜாஜியின் சுதந்திரா கட்சியில் சேர்ந்தனர். இந்த கட்டத்தில், ‘சுதந்திரமான வர்த்தகம்' (ஊணூஞுஞு கூணூச்ஞீஞு) இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் தரும் என்றும், ‘சோசலிசமும், ஜனநாயகமும், ஒன்றுக்கொன்றுமுரணானவை' எனவும் நாட்டுக்கு விளக்கினார், ராஜாஜி.

1962-இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில், பல இடங்களில் குறிப்பாக, குஜராத், ஆந்திரா, ஒரிஸ்ஸா, பீகார் போன்ற மாநிலங்களில் சுதந்திரா கட்சி காலூன்றியது. ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சிக்கு, ஒரு கௌரவ அந்தஸ்தும் கிடைத்தது. இதற்கிடையில், 1964ஆம் ஆண்டில், நான் சுயேச்சையாக சென்னை மாநகர பட்டதாரி தொகுதியிலிருந்து எம்.எல்.சி.,யாக வெற்றி பெற்றேன். அன்றைய காங்கிரஸ், தி.மு.க., சுதந்திரா கட்சி வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர். சில நாட்களுக்குப் பிறகு ராஜாஜி அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவரை சந்தித்து நான் சுதந்திரா கட்சியில் உறுப்பினரானேன். 1965இல், தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் ஒன்றாக இணைந்து இந்தி திணிப்பினை எதிர்த்து, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். 1967இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில், தி.மு.க. சுதந்திரா கட்சியுடன் கூட்டணி வைத்து, தேர்தல் களத்தில் நின்று வெற்றி பெற்று, அண்ணா அவர்கள் முதல்வராக 06.03.1967 அன்று பொறுப்பேற்றார். தமிழகத்தில் 8 நாடாளுமன்ற தொகுதிகளில் சுதந்திரா கட்சி வெற்றி பெற்றது. அகில இந்திய அளவில் லோக்சபாவில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து சுதந்திரா கட்சி (கம்யூனிஸ்ட் கட்சிகளை பின்னுக்கு தள்ளி) பிரதான எதிர்க்கட்சியாக வந்தது. குஜராத், ராஜஸ்தான், பீகார் மாநிலங்களின்

சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சியாக வந்தது. தமிழகத்தில், என்னுடன் சேர்ந்து 21 உறுப்பினர்கள் கொண்ட சுதந்திரா கட்சி எதிர்வரிசையில் அமர்ந்தது. ஒரிஸ்ஸா மாநிலத்தில் திரு. ஆர்.என்.சிங்தேவ் தலைமையில், சுதந்திரா கட்சி ஆட்சி அமைத்தது. இது தான் சுதந்திரா கட்சி எட்டிய உச்சக்கட்டம்.

1969இல், காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் தலைமையில் காங்கிரஸ் (ஐ) என்றும், திரு. நிஜலிங்கப்பா தலைமையில் காங்கிரஸ் (ஓ) என்றும், தனித்தனியாக இரண்டு காங்கிரஸ் கட்சிகள் இயங்க ஆரம்பித்தன. பெருந்தலைவர் காமராஜர் காங்கிரஸ் (ஒ)வை ஆதரித்தார். தமிழகத்தில் ராஜாஜியும், காமராஜரும் கூட்டணி அமைத்தார்கள். தி.மு.க.வும் இந்திரா காங்கிரசும் கைக்கோர்த்து நின்றன. 1971ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 38 இடங்களில் இந்திரா காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. பெருந்தலைவர் காமராஜர் ஒருவர் மட்டுமே நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். நாடெங்கும் இதே நிலைமை தான். இந்திரா காங்கிரஸ் வெற்றி பெற்று, திருமதி.இந்திரா காந்தி அவர்கள் இந்திய பிரதமர் ஆனார். காங்கிரஸ்(ஒ) பிரதான எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் அமைந்தது. தமிழகத்தில் தி.மு.க. மாபெரும் வெற்றியை ஈட்டி, கலைஞர் மீண்டும் தமிழகத்தின் முதல்வரானார். நான் மூன்றாவது முறை, சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 6 நபர்கள் கொண்ட சுதந்திரா கட்சியின் தலைவனாக வந்தேன். பொன்னப்ப நாடார் 15 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ்(ஒ) சட்டமன்ற குழுவிற்கு தலைவராக வந்தார்.

இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்ததற்கு பின், காங்கிரஸ் (ஓ) பிரதான எதிர்க்கட்சியாக வந்த காரணத்தினால், 1971 பொதுத் தேர்தலுக்குப் பின் சுதந்திரா கட்சி காணாமல் போய்விட்டது. 1972இல் மூதறிஞர் ராஜாஜி அமரர் ஆனார். இத்துடன் சுதந்திரா கட்சியின் அத்தியாயம் முடிவுக்கு வந்தது. இருப்பினும் ராஜாஜி அவர்கள் எடுத்துரைத்த பொருளாதாரக் கொள்கைகள், 1991இல் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அவர்களின் தலைமையில் புத்துயிர் பெற்றன.

சற்று பின்னோக்கி செல்வோம். திருமதி. இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்த தருணத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரம் படிப்படியாக குன்றிவரத் தொடங்கியது. உணவு பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்தது. பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் நேரடியாக அமெரிக்காவிற்கு சென்று, அமெரிக்க குடியரசு தலைவர் லிண்டன் ஜான்ஸன் (Lyndon Johnson) அவர்களை யாசகர் போல் சந்தித்து, பி.எல். 420 என்கிற ஒரு கேவலமான திட்டத்தின் மூலமாக உணவுப்பொருள்களை அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்து உணவு நெருக்கடியிலிருந்து, நாடு காப்பாற்றப்பட்டது. திரு. ராஜீவ் காந்தி பிரதமராக வந்ததற்கு பின்பும் இதே நிலைமை நீடித்தது. பொருளாதார கொள்கையை தாராள மயமாக்குவதற்கு (Open Market Economy) ராஜீவ் காந்தி சற்று தயக்கம் காட்டினார். காரணம், அவருடைய தாத்தா பண்டித நேரு அவர்களின் சோசலிச மோகத்திற்கு எதிராக செயல்பட பேரன் ராஜீவ் காந்தி அஞ்சினார்.

இதற்கிடையில்,1989ஆம் ஆண்டில், ரஷ்யாவில் திரு. மைக்கேல் கோர்பொசேவ் (Michael Gorbachev) தலைமையில், சோசலிச கொள்கை சுக்குநூறாக்கப்பட்டது. இது நடந்த அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் திரு.பி.வி.நரசிம்மராவ் இந்தியாவின் பிரதமரானார். பழைய பொருளாதார பாதையில் இந்தியா சென்று கொண்டிருந்தால், திவாலடைந்து விடும் (தற்பொழுது இலங்கையின் நிலைமை) இந்தியா என பிரதமர் பி.வி. நரசிம்மராவ் புரிந்து கொண்டார். ரஷ்யாவில் நடைபெற்ற சம்பவம் பிரதமர் பி.வி.நரசிம்மராவிற்கு தைரியம் தந்தது. மூதறிஞர் ராஜாஜி 1954இல் கோடிட்டு காட்டிய தாராளமயமான கொள்கையை (Oணீஞுண Mச்ணூடுஞுt உஞிணிணணிட்தூ) இந்தியாவில், துணிச்சலுடன் கொண்டு வந்தார், திரு. பி.வி. நரசிம்மராவ்!

இரண்டே ஆண்டுகளுக்குள், நாடு காப்பாற்றப்பட்டது. நிறைவாக கூற வேண்டுமென்றால், 1991இல் பி.வி. நரசிம்மராவ் அவர்கள், ராஜாஜி அவர்களின் பொருளாதார கொள்கையை கொண்டு வராமல் இருந்திருப்பாரேயானால், இன்று நம்முடைய நாடு இன்னொரு இலங்கையாக மாறி இருக்கும்.

ராஜாஜி அவர்களால் 1959இல் துவங்கிய சுதந்திரா கட்சி மறைந்தாலும் ராஜாஜியின் தொலைநோக்கு வென்றது!

சுதந்திரா கட்சி 1967இல் எங்கெல்லாம் வலுவாக இருந்ததோ, அங்கெல்லாம் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சி வலுப்பெற்றுள்ளது. இந்த காட்சி என் போன்றவர்களுக்கு ஆறுதல் தருகிறது.

பிற்சேர்க்கை: ராஜாஜியின் மரணத்துக்குப் பின்

 சுதந்திரா கட்சியில் தலைவராக பல ஆண்டுகளாக இருந்தவரும் ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதியுமான பேரா.என்.ஜி.ரங்கா எம்பி, இந்திரா காந்தியை தன் ஆதரவாளர்களான சுமார் 20 எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து சென்று சந்தித்தார்.  ‘உங்கள் கட்சியில் நாங்கள் இணைய விரும்புகிறோம்' என அவர் சொன்னார். அதற்கு சம்மதம் தெரிவித்த இந்திரா ஒரு நிபந்தனை விதித்தார். ‘ரங்காஜி,

நீங்கள் மக்களவைக்கு காங்கிரஸ் சார்பில் மீண்டும் ஒருமுறை போட்டியிட வேண்டும்‘ என்பதே அது. ரங்கா, குண்டூரில் போட்டியிட்டு எட்டாவது முறையாக எம்பி ஆனார்.

1973-இல் காங்கிரஸில் இணைந்த ஆந்திர சுதந்திரா கட்சி எம்.எல்.ஏக்களில் கே.ரோசையாவும் ஒருவர். நான் சுதந்திரா கட்சியின் அகில இந்திய செயலாளர் என்ற  நிலையில், தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களின் பொறுப்பாளராக  இருந்தபோது, ரோசையா குண்டூர் மாவட்ட சுதந்தரா கட்சித் தலைவராக இருந்தார். சென்னை வரும்போதெல்லாம் என் நுங்கம்பாக்கம் இல்லத்தில் என்னை அவர் சந்திப்பதுண்டு. இந்திரா, பிறகு சோனியா காந்தி ஆகியோரின் விசுவாசியாக இருந்தவர். ஆந்திரபிரதேசத்தின் நிதி அமைச்சர், முதலமைச்சர், பின்னாளில் தமிழகத்தின் ஆளுநர் போன்ற பொறுப்புகளை அவர் வகித்தார். சில மாதங்களுக்கு முன்பு அவர் காலமாகி விட்டார்.

ராஜாஜி காலமான பின்னர் நான் எம்.ஜிஆருடன் இணைந்தேன். கட்சிப் பதவிகளிலும் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பணிபுரிந்தேன். நான் அதிமுகவில் இணைந்தவுடன் பேராசிரியர் ரங்கா என் முடிவைப் பாராட்டி கடிதம் எழுதினார். எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியபோது ராஜாஜி அவரை பலமாக ஆதரித்திருந்தார். ஆனால் சில மாதங்களில் ராஜாஜி காலமாகிவிட்டார்.

மரு.எச்.வி.ஹண்டே

(முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்)

செப்டம்பர், 2022