சிறப்புப்பக்கங்கள்

வீட்டில் பூத்த அந்தச் செடி

ஷீலு

நகர்ப்புற அடித்தட்டுப் பெண்கள் பெரும்பாலும் வீட்டு வேலை செய்கிறார்கள். சித்தாள் வேலைகளுக்குச் செல்வார்கள். காய்கறி, பூ, பழம் விற்பார்கள். இன்று காலையில்கூட ஒரு பூக்காரம்மா என்னிடம் அவர்களின் குடும்பப் பிரச்னை ஒன்றுக்காக வந்தார்கள். அவரிடம் பேசியபோது, “ நான் இரண்டு நாளாக பூக்கடை போடவில்லை. அதனால் சாப்பாட்டுக்கு வழியில்லை” என்றார்.

 “என்னங்க இது, ரெண்டுநாள் கடை போடாவிட்டால் சாப்பாட்டுக்குப் பிரச்னை வந்துவிடுமா?”

 “நான் ஒவ்வொரு நாளும் கடைபோட்டு, பூ விற்று அப்போது கிடைப்பதை அன்றைய உணவுக்கு வைத்துக் கொள்கிற ஆள். இன்றும் ரேஷன் அரிசிதான் சாப்பாடு”               “ சரி.. ஏன் பூக்கடை போடவில்லை?” என்றேன். அவர் சொன்ன பதில் எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. “பக்கத்துவீட்டில் சாவும்மா.. எப்படிம்மா நான் போய் கடை திறக்கமுடியும்?”

 பக்கத்துவீட்டு சாவை எட்டிக்கூடப் பார்க்கப் போகாத மனிதர்கள் வாழும் இந்நகரத்தில் இப்படி ஒரு மனுஷியா? என்று தோன்றினாலும் எனக்குப் புரிந்தது. அந்த அம்மா புளியந்தோப்பு பகுதியில் ஒரு குடிசைப்பகுதியில் இருக்கிறார். அங்கே இன்னும் இந்த பழக்கங்களும் புரிதல்களும் இருக்கின்றன. அவர் காலையில் 4 மணிக்கு எழுந்து கோயம்பேடுக்குப் போய் பூ வாங்கிவரவேண்டும். தனித்தனியாகப் போகமுடியாது குழுவாகத்தான் போகமுடியும். ஆண் பெண் வித்தியாசம் பார்க்காமல் பயணிக்கவேண்டும். அவர் ஒரு வார்த்தை சொன்னார்:  “மேடம் எனக்கு எல்லாமே மரத்துப்போச்சு!” அவர் திருமணம் ஆகாமலேயே வாழ்க்கையை ஓட்டிவிட்டவர். இப்போது ஐம்பதைக் கடந்திருக்கிறார் அவர்.

வீட்டு வேலைக்குப் போகிறவர்களுக்கு பாலியல் தொல்லை ஒரு பிரச்னை. நிறைய பணம் கிடைக்கிறது என்பதற்காக பொறுத்துப்போகும் பெண்களும் உண்டு. சித்தாள் வேலையைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். பெண்கள் வீட்டை விட்டு வெளியே போனாலே பிரச்னைகள்தான். அதே சமயம் வீட்டுக்குள்ளும் பிரச்னைதான். இதில் வித்தியாசம் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த பிரச்னையைக் கையாளும் விதமும் அதற்குக் கீழே வயதுள்ள பெண்கள் கையாளும் விதமும் மாறுபட்டு இருக்கின்றன. நாற்பது வயதுக்கும் மேற்பட்டவர்கள் குடும்பம் என்பதை பாதுகாக்கவேண்டும் என்பதற்காக குடும்பப் பிரச்னைகளைப் பொறுத்துக்கொண்டு செல்கிறார்கள். இளையவர்கள் போடா உனக்காச்சு.. எனக்காச்சு என்று நிறைய பிரிந்து சென்றுவிடுகிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் இதை அதிகமாகக் காண்கிறேன். குழந்தைகள், குடும்பம் என்கிறபோது இது சிக்கலை உண்டாக்குகிறது.

கிராமப்புறங்களை எடுத்துக்கொண்டால் அடித்தட்டுப் பெண்கள் எல்லோருமே ஏதோ ஒரு வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். காலையில் பக்கத் தில் இருக்கும் ஒரு கம்பெனியின் வேன் வந்து அவர்களை அழைத்து செல்கிறது. இன்ன வேலைதான் என்றில்லை. பெருக்கிற வேலையோ, வெங்காய பேக்டரி வேலையோ, சுமாராக 8000 ரூபாய் கிடைக்கிறது என்றால் அதில் தான் இருக்கிறார்கள். விடிகாலையில் போனார்கள் என்றால் மாலை  அஞ்சரை ஆறரை மணிக்குத்தான் திரும்பமுடியும். அந்த எட்டாயிரம் ரூபாயுடன் சரி. வேலை நிரந்திரம் இல்லை. பிஎப் இல்லை. ஓய்வூதியம் இல்லை. எந்த சலுகைகளும் இல்லை. அதுவும் விடுமுறை என்றால் அந்த நாளுக்கான சம்பளம் துண்டாகும். அத்துடன் கிராமங்களில் இளம் பெண்களையே பார்க்கமுடிவதில்லை. வயதானவர்கள்தான் இருக்கிறார்கள்.  முன்பெல்லாம் ஒரு பிரச்னை என்றால் தெருவுக்கு வர பெண்கள் தயாராக இருந்தார்கள். ஆனால் இப்போது அப்படி வர முடியவில்லை. எல்லாரும் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். ஆனால் ஒரு நல்ல விஷயம் குடும்பங்களில் அவர்களின் மதிப்பு கொஞ்சம் உயர்ந்துள்ளது. வீட்டு வேலையும் செய்கிறார்கள். இப்படி வெளியே வேலைக்குப் போயும் சம்பாதிக்கிறார்கள். அதனால் மதிப்பு உயர்ந்துள்ளது. அதைத்தவிர அவர்கள் எதிர்கொள்ளும் வழக்கமான பாலியல் சுரண்டல்களின் நிலவரம் அப்படியேதான் உள்ளது.

இங்கே நகர்ப்புறங்களில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே கூட பல்வேறு பழக்கங்களுக்கு ஆளாவதைக் காண்கிறேன். அவர்களைக் கையாளும் திறனும் குறைவாகவே ஆசிரியர்களுக்கு இருக்கிறது. எனக்குத் தெரிந்த இருபாலாரும் படிக்கும் ஒரு பள்ளி இப்போது பெண்கள் பள்ளியாக மாற்றப்பட்டுவிட்டது. கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கூடப் புழங்குகின்றன. ஆசிரியைகளாக வேலை பார்க்கும் பெண்களும் இதையெல்லாம் எப்படி சமாளிப்பது என்று திணறுகிறார்கள். கடந்த மாதம் ஒரு பள்ளிக்கு கவுன்சலிங் விஷயமாகச் சென்றிருந்தேன். அங்கிருந்த தாளாளர் சொன்ன விஷயம்  எனக்குத் திகிலூட்டியது. அவர்கள் பள்ளியில் பணி புரியும் ஓர் ஆசிரியை டியூஷன் எடுப்பார். நிறைய மாணவர்கள் அவர் வீட்டுக்குச் சென்று பயில்வர். அவருக்கு சில நாட்களாக தோலில் அலர்ஜி. எதனால் என்று மருத்துவர்களால் கண்டுபிடிக்கமுடியவே இல்லை. அவர் பயன்படுத்தும் சோப், திரவங்கள் எல்லாம் மாற்றியும் பிரயோசனம் இல்லை. வீட்டில் இருக்கும் செடி எதாவது பிரச்னை தரலாம், தேடிப்பாருங்கள் என்று கூறி இருக்கிறார் மருத்துவர். வீட்டில் இருந்த செடிகளை ஆராய்ந்தபோது அழகான பூக்களுடன் இருந்த ஒரு செடி என்னவென்று தெரியவில்லை. அதை ஆய்வு செய்தபோது அது கஞ்சா செடி என்று தெரிய வந்திருக்கிறது. அதன் மகரந்தம் தான் ஆசிரியைக்கு அலர்ஜி ஆகி இருக்கிறது. வீட்டுக்கு டியூசன் படிக்க வந்த மாணவர்கள் மூலம்தான் இந்த செடி முளைத்திருக்கிறது என்று தெரியவந்த பின்னர் டியூசன் எடுப்பதையே அந்த ஆசிரியை தலை முழுகி விட்டார்.

குடிப்பழக்கம் இருக்கும் கணவனை பெற்ற பெண்கள் நிலை மிக மோசம். உதாரணத்துக்கு சமீபத்தில் ஒரு பெண் என்னிடம் சொன்னது: “என் புருஷனை குடிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் குடித்துவிட்டு சும்மா இருக்கச் சொல்லுங்கள், மிக மோசமான கெட்டவார்த்தைகளால் திட்டுகிறார். இதனாலேயே நாங்கள் ஏழு வீடுகள் மாறிவிட்டோம். எங்கும் என்னால் மானத்துடன் வாழமுடியவில்லை”. கணவனைத் திருத்த குடி அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் செலவு செய்தும் திருத்தமுடியாத நிலையை எதிர்கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள்.

வீட்டுவேலை செய்யும் பெண்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தர அமைப்புகள்  உள்ளன. பிற வேலைகள் செய்பவர்களுக்கு அமைப்புசாரா தொழிலாளர் அமைப்புகள் இருக்கின்றன. எல்லோரும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்துகிறார்களா என்றால் இல்லை.

- ஷீலு, பெண்கள் இணைப்புக்குழுவின் மாநிலத்தலைவர். இந்த அமைப்பு 1994-ல் தொடங்கப்பட்டது. கிராமப்புற பெண் விவசாயிகள், தொழிலாளர்கள் அடங்கிய ஒரு லட்சம் பேர் இந்த குழுவில் இருக்கிறார்கள். நமது செய்தியாளரிடம் பேசியதில் இருந்து இக்கட்டுரை எழுதப்பட்டது.

மார்ச், 2017.