சென்னையைப் போன்ற நகரங்களில் வழக்கறிஞர்கள் வாடகைக்கு வீடுதேடும் அனுபவம் என்பது பெரும்பாலும் சோகமான அல்லது மோசமான அனுபவமாகவே அமைந்துவிடும். பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு சட்டரீதியான தீர்வு கண்டறிய உதவும் வழக்கறிஞர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது மட்டுமல்ல & வாழ்க்கைத் துணை, வங்கிக்கடன் உள்ளிட்ட பல அம்சங் கள் பெரும்பாலும் அரும்பாடுபட்டு அடைய வேண்டிய இலக்குகளாகவே உள்ளன.
ஒரு வீட்டு உரிமையாளர், வாடகைக்கு வீடு கேட்கும் நபரிடம் கேட்கும் இரண்டாவது கேள்வி: நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள். மற்ற இடங்களில் நெஞ்சை நிமிர்த்தி, ‘‘நான் ஒரு வழக்கறிஞர்!'' என்று சொல்லும் அனைவரும், வாடகைக்கு வீடு தேடும் இடத்தில் மட்டும் ஒருவித குற்ற மனப்பான்மையோடு செய்யும் தொழிலை கூறும் நிலைதான் நிலவுகிறது. அந்தப் பேச்சுவார்த்தை பெரும்பாலும் அத்தோடு நிறைவு பெற்றுவிடும். ‘‘இல்லை சார். வக்கீல்களுக்கு வீடு கொடுக்கறதில்லை. என் மச்சான் ஒருத்தர் ஒரு வக்கீலுக்கு வீடு கொடுத்துட்டு அவரை காலி செய்வதற்குள் படாதபாடுபட்டார். நீங்க வேற வீடு பார்த்துக்கோங்க!'' என்பதே பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் பதிலாக இருக்கும். வக்கீலுக்கு வீடு கொடுத்து வம்பில் மாட்டிய மச்சானை நான் இதுவரை நேரில் பார்த்ததே இல்லை.
இணையதளங்களிலோ, இதழ்களிலோ வரும் விளம்பரங்களைப் பார்த்து தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும்போது கிடைக்கும் எதிர்வினைகள் சில நேரம் சுவாரசியமாகவும், பல நேரங்களில் சோகமாகவும் அமைந்துவிடும். ‘‘நீங்க என்ன செய்யறீங்க'' என்ற கேள்விக்கு அடுத்து எந்த பதிலும் இல்லாமல் தொடர்பு துண்டிக்கப்படுவதும் உண்டு. ஒரு வங்கி பணியாளர், ‘‘ஸார், வேறு யாராவது பிரச்சினை செய்தால் வக்கீலின் உதவியை நாடலாம். வக்கீலிடமே பிரச்சினை என்றால் எங்கு போவது ஸார்'' என்று தத்துவரீதியான கேள்விக்கணையுடன் பேச்சைத் துண்டித்தார். பெரும்பாலான நேர்காணல்களில் இந்தக் கட்டத்திலேயே வழக்கறிஞர்களைக் கழட்டிவிட்டு விடுவார்கள்.
வீட்டுத் தரகர்கள் மூலம் வாடகைக்கு வீடு தேட முயற்சிக்கும்போது, தரகர்கள் கூறும் முதல் ஆலோசனையே, ‘‘ஸார், நீங்கள் ஒரு வழக்கறிஞர் என்பதைச் சொல்ல வேண்டாம். வீட்டில் குடியேறிய பிறகு பார்த்துக் கொள்ளலாம்!'' என்பார்கள். ஆனால் அது நடைமுறையில் சாத்தியப்படாது. வழக்கறிஞர்களின் சீருடையான கருப்புப் பேண்ட்டும், வெள்ளைச் சட்டையும் காண்பித்துக்கொடுத்துவிடும். இதைத் தரகரிடம் கூறினால், ‘‘சரி ஸார். முயற்சி செய்கிறேன். ஆனால் என் கமிஷன் கொஞ்சம் அதிகம் ஆகும்'' என்பார் அமைதியாக.
இதை மீறி அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது இன்னும் சுவாரசியமான கட்டங்களை எதிர்பார்க்கலாம். வழக்கறிஞர் திருமணம் ஆகாதவராகவோ, திருமணம் ஆகியிருந்தாலும் தற்போது தனியாக வசிப்பவராகவோ இருந்தாலோ குறிப்பிட்ட வழக்கறிஞரின் கற்புநெறி குறித்த சந்தேகங்கள் வீட்டு உரிமையாளருக்கு வந்துவிடும் போலிருக்கிறது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே வீடு தருவதற்கு மறுப்பார்.
வழக்கறிஞர் திருமணம் ஆனவராக இருந்தால் அடுத்தக்கட்ட அக்னி பரீட்சைகள் தொடங்கும். எத்தனை குழந்தைகள், அதில் எத்தனை கைக்குழந்தைகள் (இரவில் அழுது தூக்கத்தை கெடுக்கும்), வீட்டில் வயது முதிர்ந்தவர்கள் இருக்கிறார்களா (தேவையற்ற சர்ச்சைகளில் ஈடுபடுவார்கள் &அல்லது& நோய்வாய்ப்பட்டு சிரமம் கொடுப்பார்கள்), நாய் அல்லது பூனை வளர்ப்பீர்களா (அதற்கு அனுமதி கிடையாது, எங்கள் வீட்டு டாமிக்கு வேறு நாய்களைப் பிடிக்காது), வீட்டில் பூச்செடிகள் வளர்க்கக்கூடாது (கம்பளிப்பூச்சி வைத்து விடும்), வீட்டிற்கு வாடகை ஒப்பந்தம் கொடுக்கமாட்டோம், அது எங்களுக்கு வழக்கமில்லை, வாடகையை பணமாகக் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சரமாரியான கட்டுப்பாடுகள் வளர்ந்து கொண்டே இருக்கும்.
பொதுவாக வழக்கறிஞர்களுக்கு வீடு கொடுப்பதற்கு வீட்டு உரிமையாளர்கள் தயங்குவது ஏன்?
அது ஒரு அர்த்தமற்ற பயம்தான்! பொதுவாக வழக்கறிஞர்கள் வீட்டு உரிமையாளர்களுடன் சுமூகமான உறவைப் பேணவே விரும்புவார்கள். ஏனெனில் வேறொரு வீட்டைத் தேடுவதற்கு மீண்டும் ஒருமுறை சிரமப்பட வேண்டும் என்பதே முக்கியக் காரணமாக இருக்கும்.
ஆனால் வீட்டு உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையில் பிணக்கு நிலவும் சூழலில், வாடகைதாரருக்கு உதவி செய்யும் வழக்கறிஞர் எடுக்கும் சட்டரீதியான நடவடிக்கைகள்தான் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்களை மிரட்டும் அம்சமாக இருக்கின்றன.
வீட்டு உரிமையாளர்கள் விதிக்கும் தேவைக்கு அதிகமான நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் சாதாரண மனிதர்களை வெறுப்பூட்டும் விதமாகவே இருக்கும். ஆனால் இதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆனால் இதற்கு துணியும் வாடகைக்கு குடியிருக்கும் ஒரு நபர் சட்டரீதியாக தமது உரிமைகளை நிலைநாட்டும்போது, அது வீட்டு உரிமையாளர்களை மிரட்டி விடுகிறது. ஒரு சாதாரண நபரே சட்டத்தின் மூலம், வீட்டு உரிமை-யாளரான தம்மை கட்டுப்படுத்தும்-போது வழக்கறிஞருக்கு வீட்டை வாடகைக்கு விட்டால் நம் நிலை என்னவாகும் என்று வீட்டு உரிமையாளர்கள் அச்சம் கொள்கின்றனர்.
இவை அனைத்தும் பொதுவான கண்ணோட்டங்களே. விதிவிலக்காக சில வழக்கறிஞர்கள் வீட்டு உரிமையாளருடன் தகராறு செய்யலாம். அதேபோல சில வீட்டு உரிமையாளருக்கும், வாடகைக்கு குடியிருக்கும் வழக்கறிஞருக்கும் இடையே நல்லதொரு நட்பு முகிழலாம். பொதுவாக வழக்கறிஞர்கள் யாருடனும் தேவையின்றி பகை வளர்க்க விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் நட்பு மற்றும் உறவு வட்டம் பெரிதானால்தான் தொழிலில் சிறக்க முடியும். ஒரு வழக்கறிஞரிடம் முன்னர் குடியிருந்த வீட்டின் உரிமையாளரோ, அவரது சுற்றத்தினரோ சட்ட உதவியை நாட வேண்டிய சூழல் ஏற்படலாம். அந்த நிலையில் தனது பெயர் அவர்களுக்கு நினைவு வரவேண்டும் என்றே பெரும்பாலான வழக்கறிஞர்கள் ஆசைப்படுவார்கள்.
பொதுவாகவே வீட்டு உரிமையாளர்கள், அவர்தம் வீட்டில் வாடகைக்கு குடியேறுபவரை சற்று இளப்பமாக பார்ப்பது இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது. வழக்கறிஞர்களை அவ்வாறு நடத்துவது எளிதல்ல என்பதால்தான் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள், வழக்கறிஞர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட மறுக்கிறார்கள்.
இதையெல்லாம் மீறி முன்னர் குடியிருந்த மேன்ஷனின் உரிமையாளர், வீட்டு உரிமையாளர்கள் ஆகியோருடன் நல்லுறவுடன் இருக்கும் வழக்கறிஞர்கள் பலர் இருக்கின்றனர். உதாரணமாக இந்த கட்டுரை ஆசிரியரைக் கூறலாம்.
மே, 2018.