அது 1982. நான் சென்னைக்கு வந்த புதிது. வில்லிவாக்கத்தில் ஒரு அறையில் தங்கி இருந்தேன். 50 ரூபாய் வாடகை. 5 ரூபாய் மின் கட்டணம். என் அறைத்தோழர் பாண்டியன். அவர்தான் ராஜாராணி படத்தில் ஜெய் அப்பாவாக வருகிறவர்.
நாங்கள் இருவரும் ஸ்டில்ஸ் ரவியிடம் உதவியாளர்களாக இருந்தோம். எங்கள் வீட்டின் உரிமையாளர் பி அண்ட் சி மில்லில் தொழிலாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். அவர் வீட்டில் குடியிருப்பவர்கள் என்பதால் ஏரியாவில் எங்களுக்கு தனி மரியாதையே இருந்தது. பிஅண்ட்சி மில்லில் தொழிலாளர் போராட்டங்கள் நடந்த நேரம் அது. அவரைத் தேடி அடிக்கடி போலீஸ் வரும். பின்னர் ஒருநாள் அந்த மில் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள். எங்கள் வீட்டு உரிமையாளரும் வேலை இழந்தார். இப்போதும் அந்த மில் கட்டடங்களில் படப்பிடிப்புக்காகப் போகும்போது என் முதல் வீட்டு உரிமையாளரின் நினைவு வராமல் போவதே இல்லை.
கோடம்பாக்கத்தில் உள்ள கங்கை அம்மன் கோவில் தெருவில் அடுத்ததாக குடி வந்தேன். இரண்டு படுக்கை அறை, உள்ளேயே குளியலறை கொண்ட அந்த வீட்டுக்கு வாடகை 150 ரூபாய். நாங்கள் மூன்று பேச்சிலர்கள் அந்த அறையைப் பகிர்ந்துகொண்டிருந்தோம். சினிமாக்காரர்கள் என்றால் வீடு தரமாட்டார்கள். ஆனால் இதற்குத் தயங்காதவர் எங்கள் உரிமையாளர். முன்பு ஒரு காலத்தில் கோழிப்பண்ணையாக இருந்தது அந்த இடம். எங்கள் வீட்டைச் சுற்றி பட்டுநூல் நெசவு செய்யும் தறித் தொழிலாளர்கள் வாடகைக்கு இருந்தார்கள். அதில் பலர் வறுமையில் அடிபட்டவர்கள். அவர்களிடம் குறைத்து வாடகையை வாங்குவார் எங்கள் வீட்டு உரிமையாளர். ரொம்ப ஸ்ட்ரிக்டாக இருக்கமாட்டார். தெருவில் சாக்கடை அடைத்துக் கொண்டால் அந்த தெருமுழுக்க கையில் க்ளவுஸ் மாட்டிக்கொண்டு சுத்தம் செய்வார். மாநகராட்சியிலிருந்து ஆள் வந்தால் தான் ஆச்சு என்று காத்திருக்கும் நபர் அல்ல அவர். அந்த நேரத்தில் அவர் வீட்டில் போன் இருந்தது. அது பெரிய வசதி. என்னைப்போன்ற ஆட்களுக்கு அழைத்து தகவல் சொல்ல போன் வசதி இருக்கிறது என்றால் வாய்ப்புகள் பெறுவதற்கும் ஏதுவாக இருந்தது. 1983 ல் கிரிக்கெட் உலகக்கோப்பையின்போது இங்கே கலர் டிவி அறிமுகமானது. அவர் வீட்டில் கலர் டிவியை முதன்முதலாகப் பார்த்தேன். 50 ஓவர் கிரிக்கெட் போட்டிபார்க்கவேண்டுமென்றால் பத்து பைசா கொடுக்கவேண்டும். ஆனால் எங்களுக்குப் ஃப்ரீ!
இரவென்றால் நைசாக இரண்டு பெக் போட்டு விட்டு அமர்ந்து மகிழ்வாகப் பேசிக் கொண்டிருப்பார். தந்தையைப் பிரிந்துவாழும் எங்களுக்கு ஒரு தந்தையைப் போல் அவர் ஆலோசனை கூறிக்கொண்டிருப்பார். ஒருநாள் இரவு அவருடன் பேசிக்கொண்டிருக்கையில் எங்கள் நடுவே ஒரு தென்னை மட்டை விழுந்தது. அய்யோ இது நம் தலையில் விழுந்தால் என்ன ஆகியிருக்கும் என்று சொல்லிகொண்டிருந்தவர் பின்னர் எழுந்து உறங்கச் சென்றார். கொஞ்சநேரம் ஆகியிருக்கும். அவரது மனைவி எழுந்து வந்து எங்கள் அறைக்கதவைத் தட்டினார். வீட்டு உரிமையாளருக்கு திடீர் உடல் நலக்குறைவு. ‘மருத்துவமனைக்குக் கூட்டிப்போங்கப்பா'என்றார். அவரது மகன்கள் பக்கத்தில்தான் குடியிருந்தனர். அவர்களுக்குத் தகவல் சொல்ல ஆளனுப்பிவிட்டு நான் ராம் தியேட்டர் வரை நடந்துபோய் ஆட்டோ பிடித்துவந்து 24 மணி நேர மருத்துவமனை ஒன்றுக்கு அவரை அழைத்துச் சென்றோம். அங்கிருந்த பயிற்சி மருத்துவர், ஒன்றுமில்லை சாதாரண வயிற்றுக்கோளாறு என்று ஊசி போட்டு திருப்பி அனுப்பிவிட்டார். மீண்டும் எல்லோரும் உறங்கச் சென்றபின்னர் சற்று நேரம் கழித்து எங்கள் அறைக்கதவு தட்டப்பட்டது. போய்ப்பார்த்தால் அவர் பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறார். உடல் சில்லிடத்தொடங்கியது. உடனே விஜயா மருத்துவமனைக்குப் போன் செய்தோம். ஆம்புலன்ஸ் வந்தது. ஆனாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை, இறந்துவிட்டார். மறுநாள் காலையில் தேநீர் அருந்த கடைக்குப் போனோம். சமூக ஊடகங்கள் இல்லாத அந்த காலகட்டத்தில் அவரது மரணம் பெரிய செய்தியாக அங்கே கடையில் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. கண் காது மூக்கு வைத்து ஒரு மனிதரின் மரணம் வதந்தியாக பேசப்படுவது கண்டு வருத்தமுற்றேன். பின்னாளில் இதுவே பழகிவிட்டது.
இங்கிருந்து மூன்றாவதாக நான் குடிபோனது சாலிகிராமத்தில் ஒரு வீடு. அப்போது எனக்குத் திருமணமாகி இருந்தது. அந்த வீட்டு உரிமையாளர்கள் ஜெயராமன் & ஆலம்மாள் தம்பதி. இரண்டு கிரவுண்ட் இடத்தில் கட்டப்பட்ட வீடு. வீட்டுக்கு முன்னால் தோட்டம் இருக்கும். அதில் காலையில் தென்கச்சி சுவாமி நாதனை வானொலியில் கேட்டுக்கொண்டு தண்ணீர் பாய்ச்சுவார். என் மகனை அருகில் அமர வைத்துக்கொண்டு திருக்குறள் சொல்லிக்கொடுப்பார். அவனை தோளில் வைத்துக் கொண்டு திரிவார். அவர்களைத்தான் அவன் தாத்தா, அப்பத்தா என்று அழைப்பான். வாடகை கொடுக்கத் தாமதமானால் அவரிடம் சொன்னால் போதும். அதுக்கென்ன என்று சொல்லிவிடுவார். நான் அப்போது உதவி காமிரா மேன். 30 &40 நாட்கள் படப்பிடிப்புக்குப் போய்விடுவேன், மனைவி குழந்தையுடன் இங்கேஇருப்பார். அப்போது மொபைல் போன் இல்லை. கடிதம் போடலாம். அவர்கள் வீட்டில் போன் இருந்தது. நான் எங்கே இருந்தாலும் தினமும் என் மனைவியிடம் பேசவேண்டும் என்று அவர்கள் வற்புறுத்துவார்கள். எனக்குத்தான் கூச்சமாக இருக்கும். என் மகனை பள்ளியில் சேர்க்கவேண்டிய நேரம் வந்தது. அப்போது கையில் காசு இல்லை! பெருந்துயரம்... சரி இந்த வருசம் வேண்டாம். அடுத்த ஆண்டு சேர்த்துக் கொள்ளவேண்டியதுதான் என்று நான் முடிவெடுத்துவிட்டேன்! இது எங்கள் வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்துவிட்டது. அவர் உடனே தன் மனைவியின் சங்கிலியை வாங்கிச் சென்று வங்கியில் அடகு வைத்து அந்தப் பணத்தைக் கொடுத்து பள்ளியில் சேர்க்கச்சொன்னார்!
நான் நடிகனாகி வேறு வீடு சென்ற பின்னரும் கூட அவர்கள் இருவரும் எங்களுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார்கள். அவரது மகன் இன்று ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மிக முக்கியமான பதவியில் இருக்கிறார்!
எந்தக் காரணமும் இன்றி மனிதர்களை நேசிக்கும் பண்பாட்டை இந்த மனிதர்கள்தான் எனக்குக் கற்றுக்கொடுத்திருப்பதாக நான் நினைக்கிறேன்!
மே, 2018.