சிறப்புப்பக்கங்கள்

விழுவதும் எழுவதும் இங்கே வாடிக்கை!

ஒரு தயாரிப்பாளரின் வாழ்க்கை!

ஜி.கௌதம்

ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் கவுந்தப்பாடியைச் சேர்ந்த பள்ளிப் பையன் அவன். சினிமா அவனுக்குப் பிடிக்கும். சினிமாவுக்கு அவனைப் பிடித்திருக்கிறது என்பது அவனுக்குத் தெரியாது!

கே.பாலசந்தரின் படங்கள் சொல்லும் சமுதாயக் கருத்துக்களால் ஈர்க்கப்படுகிறான். தப்புத்தாளங்கள் பார்த்தவுடன் அநியாய சமுதாயத்தின் மீது கோபம் கொப்பளிக்கிறது. தண்ணீர் தண்ணீர் பார்த்ததும் நியாயத்தின் பக்கம் நிற்கும் தாகம் எடுக்கிறது. பாலசந்தர் மீது தீராக் காதலும், சினிமா என்கிற கலையின் மீது மாபெரும் மரியாதையும் ஏற்படுகிறது அவனுக்கு.

அரும்பு மீசைப் பையனை, பாரதிராஜாவின் திரைக் காதல்களும் அள்ளி அணைக்கின்றன. தன் எதிர்காலம் சினிமாவில்தான் என்ற முடிவுக்கு வருகிறான் அவன். பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகச் சேருவதென முடிவெடுக்கிறான்.

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும் தன் சினிமா ஆசையை பெற்றோரிடம் சொல்கிறான். அப்பா ஒரு போட்டோகிராஃபர். ஊரில் இருக்கும் ஒரே ஒரு போட்டோ ஸ்டுடியோ அவருடையதுதான். மகனின் எதிர்காலத்தை அவனே தீர்மானித்துக் கொள்ள அனுமதிக்கிறார் அப்பா. செலவுக்குப் பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.

1980 ஆம் ஆண்டு சென்னைக்குள் அடியெடுத்து வைத்த அந்தப் பையன் இப்போது  56 வயது ஆளுமை. இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் வந்தவர் இன்னும் அதை அடையவில்லை. ஆனால், திரையுலகில் மிகப்பெரிய வெற்றிகளை அடைந்துவிட்டார்! சிகரங்கள் பல கண்டிருக்கிறார். சிறந்த தயாரிப்பாளர் என்ற பெயர் பெற்றிருக்கிறார்.

அவர்தான்.. டி.சிவா. அம்மா கிரியேஷன்ஸ்.. இவரது தயாரிப்பு நிறுவனம்.

பூந்தோட்டக் காவல்காரன், பாட்டுக்கு ஒரு தலைவன், நந்தவனத் தேரு, தெய்வ வாக்கு, மாணிக்கம், ராசய்யா, சின்ன மாப்ள, அரவிந்தன், சரோஜா, மரியாதை, அரவான்.. உட்பட பல படங்களின் தயாரிப்பாளர். ஒரே சமயத்தில் 3 திரைப்படங்கள் தயாரித்தவர் என்ற பெயரும், ஒரே வருடத்தில் 3 திரைப்படங்களை வெளியிட்டவர் என்ற பெருமையும் தமிழ்த் திரையுலகில் (ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் பட்டியலிட்ட குறிப்புகளின் படி) இவருக்கு மட்டுமே இருக்கிறது.

இப்போதும் ஒரே நேரத்தில் பல படங்களின் தயாரிப்பை செய்து கொண்டுதான் இருக்கிறார். இவரது தயாரிப்பில் சார்லி சாப்ளின் 2 சமீபத்தில்தான் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி படப்பிடிப்பு முடிந்து விட்டது. மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் அக்னிச் சிறகுகள் படப்பிடிப்புக்குத் தயார். ப்யார் பிரேமா காதல் இயக்குநர் இளன் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்கும் வேலைகள் ஆரம்பித்திருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் இன்னொரு படத்துக்கான வேலைகளிலும் இருக்கிறார்.

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவராகவும், செயலாளராகவும் பொறுப்பேற்ற அனுபவசாலி. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் துணைத்தலைவராகவும், ஃப்லிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவின் துணை தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.  இவர், தான் கடந்து வந்த கலைப் பாதையை & பயணத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

'பாரதிராஜாவின் உதவியாளராகச் சேர வேண்டும் என்ற ஆசை மட்டுமே இருந்தது. அதை அடைவதற்கான வழி தெரியவில்லை. ஊர் சுற்றி ஓய்ந்தேன். டிப்ளமோ இன் போட்டோகிராஃபி பாடம் படித்தேன். திருவல்லிக்கேணியில் மேன்ஷன் வாழ்க்கை.

ஒன்றரை வருடங்கள் ஓடின. படிப்பு முடிந்ததும் என்ன செய்வதென்று தெரியவில்லை. பிலிம் இன்ஸ்டியூட்டில் ஒளிப்பதிவு படிக்க விண்ணப்பித்தேன். கிடைக்க வில்லை. மண்டைக்குள் இருந்த சினிமா தாகம் வேறு வழியில் செல்ல அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் கண்ணப்பர் எம்.எல்.சி மூலமாக ஜேப்பியாருடைய அறிமுகம்
கிடைத்தது. அந்த நேரத்தில் நேதாஜியின் இயக்கத்தில் உன்னைவிட மாட்டேன் என்ற படத்தையும், ஈரோடு முருகேஷ் இயக்கத்தில் மாறுபட்ட கோணம் என்ற படத்தையும் ஒரே நேரத்தில் தயாரித்துக் கொண்டிருந்தார் அவர்.

என்ன வேணும் உனக்கு என்று என்னிடம் ஜேப்பியார் கேட்டதும், பாரதிராஜாவிடம் சேர்த்து விடுங்கள் என்று கூறினேன். என்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் கேட்டார். 'நான் எடுக்கும் ரெண்டு படத்துக்கும் நீதான் ஸ்டில் போட்டோகிராஃபர். நான் நடத்தும் மூக்குத்தி பத்திரிகைக்கும் நீதான் போட்டோகிராஃபர்' என்று அந்த நிமிடமே கூறி விட்டார்.

போட்டோகிராஃபர் வேலையுடன் தயாரிப்பில் உறுதுணையாக இருக்கும் பணிகளையும் எடுத்துப்போட்டுச் செய்தேன். ஜேப்பியாரின் அன்புக்குப் பாத்திரமானவனாகவும் ஆனேன்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலம் ஜேப்பியாரின் அன்புத்தம்பியாகவே இருந்தேன். அந்தக் காலகட்டத்தில் இயக்குநர் நேதாஜியுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. அவரது இயக்கத்தில் சொந்தப்படம் தயாரிக்க முடிவெடுத்தேன். உதவி இயக்குநராகும் ஆசை மறந்து போனது.

ஊருக்குச் சென்று அப்பாவிடம் என்
ஆசையைத் தெரிவித்தேன். கவுந்தப்பாடியில் இருந்த ஸ்டுடியோவை விற்று விட்டு, கோபிச்செட்டிப் பாளையத்தில் புதிதாக ஸ்டுடியோ ஆரம்பித்திருந்தார் அப்பா. குடும்பம் கோபியில்தான் குடியிருந்தது. என்கூடப் பிறந்தவர்கள் ஒரு அண்ணன் மற்றும் ஒரு தங்கை. அப்பாவுக்கு என் மீது ப்ரியம் அதிகம். அவர் கிராமத்தில் நடத்திய ஸ்டுடியோவின் பெயர் சிவா ஸ்டுடியோ. கோபியில் ஆரம்பித்த ஸ்டுடியோவுக்கும் என் பெயர்தான் வைத்திருந்தார்.

என்னை உற்சாகப்படுத்தினார் அப்பா. அம்மாவின் நகைகளை விற்று மூன்றரை லட்ச ரூபாய் திரட்டிக் கொடுத்தார். அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய பணம். மொத்தப் பணத்தையும் என் இடுப்பில் வைத்துக் கட்டி, அப்பாவின் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து கிளம்பினேன். கோபியில் இருந்து பஸ் பிடித்து, ஈரோடு வந்து, அங்கிருந்து சேலம் வந்து, அங்கிருந்து சென்னை வந்து சேர்ந்தேன். பொட்டுத் தூக்கமில்லை!

படமெடுக்கும் வேலைகளை ஆரம்பிக்க பணம் ரெடி. விஜயகாந்த் தான் ஹீரோ. அப்போது அவரது சம்பளம் ஐந்து லட்சம். மூன்றரை லட்சம் இருந்தால் போதும், படத்தை ஆரம்பித்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இருபது லட்சத்துக்குள் படத்தை முடித்து விடலாம் என்று ஆரம்பித்தோம். இருபத்தெட்டு லட்சம் வரை செலவானது. பணப் பற்றாக்குறை ஏற்பட்டது. சந்திரன் என்ற நண்பரையும் தயாரிப்பாளராகச் சேர்த்துக் கொண்டேன். அதுவும் போதாததால் மறுபடியும் அப்பாவிடம் இருந்து ஒன்றரை லட்சம் வாங்கினேன்.

கடலோரக் கவிதைகள் படத்துக்கு அடுத்த படம் நடிகை ரேகாவுக்கு. அசோக்குமார்  ஒளிப்பதிவாளர். நெஞ்சத்தைக் கிள்ளாதே படம் பார்த்தபோதே நம் முதல் படத்துக்கு இவர்தான் கேமராமேன் என முடிவு பண்ணி வைத்திருந்தேன். தாயன்பன் இசை. அப்போதே வைரமுத்து காஸ்ட்லி பாடலாசிரியர். ஒரு பாட்டுக்கு ரெண்டாயிரம் ரூபாய் சம்பளம்.

1985 - ல் வெளியானது சொல்வதெல்லாம் உண்மை என்ற அந்தப் படம். ஒரு தயாரிப்பாளராக அதுவே என் தலைப்பிரசவம். நல்ல படம் என்ற பெயர் கிடைத்தது. ஆனால், கடன்களை அடைத்தது போக என் பங்குக்கு மூன்றரை லட்ச ரூபாய் நஷ்டம்! அப்போது தி.நகரில் ஒரு கிரவுண்டு நிலமே ஒரு லட்ச ரூபாய்தான்!

எந்த நம்பிக்கையில் அப்பாவிடம் இருந்து பணம் வாங்கினேனோ அந்த நம்பிக்கை மொத்தமும் தகர்ந்து போயிருந்தது. வீட்டுக்குச் சென்று கண் கலங்கி நின்றேன். குடும்பமே எனக்கு ஆறுதல் சொன்னது. அன்று இரவு நான் ஏதேனும் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவெடுத்து விடுவேனோ எனப்பயந்து போய், விடிய விடிய விழித்திருந்தார்கள் அப்பாவும் அம்மாவும். அடுத்த நாள் காலைதான் அது எனக்குத் தெரிய வந்தது..''

தன் சினிமா வாழ்க்கையின் முதல் அத்தியாயத்தை கவலையுடன் சொல்லி முடித்தார் சிவா. அடுத்த கட்டம் என்னவென்று தெரியாமல், ஒரே ஒருபடத் தயாரிப்பாளர் என்ற அடையாளத்துடன் கோபியில் நடைப்பிணமாக இருந்தவரை,  விஜயகாந்த்தின் போன் அழைப்பு மறுபடியும் சென்னைக்கு வரவழைத்திருக்கிறது. ஆரம்பம்.. அடுத்த அத்தியாயம்.

''சொல்வதெல்லாம் உண்மை படப்பிடிப்பின் போது நான் நடந்து கொண்ட விதம் விஜயகாந்த்துக்குப் பிடித்துப் போனது. ஒரு பாடல் காட்சிக்காக காலை ஆறு மணிக்கு ஷூட்டிங் வைத்திருந்தோம். ஆறில் இருந்து ஏழு மணி வரைதான் கால்ஷீட் எங்களுக்கு. அதன்பிறகு அடுத்தடுத்த கமிட்மெண்ட்ஸ் அவருக்கு இருக்கும். ஐந்தரை மணிக்கு எழுப்பச் சொல்லுவார். முதல் நாள் ஐந்தரை மணிக்கு அவரை எழுப்பச் சென்றேன். எழுந்ததும் காபி கேட்டார். அதன் பிறகு ஒரு பையனை எழுப்பி, அவனை காபி வாங்கி வரச் சொல்லி வெளியே அனுப்பி, அதன் பிறகு கிளம்பி.. மிகவும் தாமதமாகி விட்டது. அடுத்த நாள் ஐந்து மணிக்கே சென்று காத்திருந்தேன். ஐந்தரை மணிக்கு எழுப்பினேன். காபி என்று விஜயகாந்த் கேட்டதும், கையோடு எடுத்துச் சென்ற ஃப்ளாஸ்க்கில் இருந்து ஊற்றிக் கொடுத்தேன். அட, உஷாராகிட்டியே என்று பாராட்டினார் அவர்.

இப்படி எல்லா விஷயங்களிலும் என் ஈடுபாடுகளைக் கவனித்தவருக்கு என் மீது ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தது. நான் ஊருக்கே திரும்பிப் போய்விட்டதாக தகவல் கேட்டதும், போன் செய்து பேசினார்.
சென்னைக்கு வரச் சொன்னார். வந்தேன்.

உங்ககிட்ட திறமையும் வேகமும் இருக்கு. உங்களை எனக்கு பிடிச்சிருக்கு. தயாரிப்பில் இருக்கும் உழவன் மகன் படத்தின் புரடக்‌ஷன்ஸ் வேலைகளைக் கவனிக்க உங்களை மாதிரி ஒருத்தர் தேவை.
நீங்க இறங்கி வொர்க் பண்ணிக் கொடுங்க. அடுத்த படத்தை நாம் பார்ட்னர்ஷிப்ல தயாரிக்கலாம்.. என்று சொன்னார் விஜயகாந்த். என்னாலான எல்லா வேலைகளையும் உழவன் மகன் படத்துக்காகச் செய்தேன். படத்தின் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தருடன் நெருங்கிப் பழக வாய்ப்புக் கிடைச்சது. அவருக்கும் என்னைப் பிடித்துப்போனது நான் செய்த புண்ணியம்.

சொன்னபடியே அடுத்த படத்தில் என்னை பார்ட்னராகச் சேர்த்துக் கொண்டார்கள். தமிழன்னை கிரியேஷன்ஸ் என்று புதிய கம்பெனி ஆரம்பித்தோம். ராவுத்தர் சாரின் சகோதரி மகள் ஒரு பார்ட்னர். விஜயகாந்த், ராவுத்தர் இருவரது நண்பர்கள் இரண்டு பேர் பார்ட்னர்கள். நானும் ஒரு பார்ட்னர். ஆனால், என் பெயர்தான் முதலில் இருக்கும். என்னை முன்னிலைப்படுத்தித்தான் எல்லா விஷயங்களும் நடக்கும்.

தமிழன்னை கிரியேஷன்ஸின் முதல் படம் பூந்தோட்ட காவல்காரன். சூப்பர் ஹிட். லாபத்தில் ராவுத்தர் சார் எனக்குக் கொடுத்த பங்கில் இருந்த கடன்களையெல்லாம் அடைத்தேன். ஊருக்குச் சென்று, அப்பாவிடமும் பணம் கொடுத்தேன். ஒரே படத்தில் நிமிர்ந்து உட்கார்ந்து விட்டேன்.

தமிழன்னை கிரியேஷன்ஸின் அடுத்த படம், பாட்டுக்கு ஒரு தலைவன். அதுவும் வெற்றி. அதற்கடுத்த படமான சாமி போட்ட முடிச்சும் வெற்றி. தவிர, ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த படங்களுக்கும் நானே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வேன். சினிமா தயாரிப்பாளராக எனக்குக் கிடைத்த மறுபிறவிக்கு ராவுத்தர் சாரும் விஜயகாந்துமே காரணம் என்பதால் அங்கேயே கிடப்பேன். அவர்களும் என்னை ராஜா மாதிரி நடத்தினார்கள்.

கேப்டன் பிரபாகரன் வரை அந்த கேம்பஸிலேயே இருந்தேன். அப்போதுதான் எனக்கு திருமணம் ஆகியிருந்தது. நான் தனியாக அம்மா கிரியேஷன்ஸ்னு ஒரு கம்பெனி ஆரம்பிச்சு, அதில் படங்கள் தயாரிக்கலாம்னு இருக்கேன் என்று ராவுத்தர் சாரிடம் சொன்னேன். மனதார வாழ்த்தினார். அவரே முன் பணமா ஒரு தொகையையும் எனக்குக் கொடுத்தார்.

பிரபு, கார்த்திக் இருவருக்கும் அட்வான்ஸ் கொடுத்தேன். இரண்டு படங்களுக்கு ப்ளான் பண்ணினேன். கடன் கேட்டு, ஃபைனான்சியரிடம் சென்றேன். என்னை வெளியே உட்கார வைத்து விட்டு உள்ளே சென்று, ராவுத்தர் சாருக்கு போன் செய்தார் பைனான்சியர். ராவுத்தரிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அங்கே சென்றிந்தேன் நான். அதிலெல்லாம் ஈகோ பார்க்கவில்லை அவர். அவன் என் தம்பிங்க.. அவனுக்கு கொடுக்குற பணத்துக்கு நான் பொறுப்பு என்று சொன்னார். யாருக்கு வரும் அந்த குணம்? அந்த வகையில் என் சினிமா வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்துக்கும் ராவுத்தர்
 சாரே காரணமாக இருந்தார்..''.

இப்படிச் சொல்வது மட்டுமல்ல.. தன் அலுவலகம், வீடு, கார் எல்லா இடங்களிலும் இப்ராஹிம் ராவுத்தர் படத்தையும் கே.பாலசந்தர் படத்தையும் வைத்துப் பூஜிக்கிறார் சிவா. பாலசந்தரை தன் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். ராவுத்தர், அவருக்கு உடன் பிறவா அண்ணன்.

மூன்றாவது அத்தியாயமாக.. டி.சிவாவின் தனிக்குடித்தனமாக.. அம்மா கிரியேஷன்ஸின் திரைப்பயணம் தொடங்குகிறது. விஜயகாந்த், ராவுத்தர் இருவரும் நேரில் வந்து அலுவலகத்தைத் திறந்து வைத்து வாழ்த்துகிறார்கள்.

''கார்த்திக் நடித்த தெய்வ வாக்கு முதல் படம். ஓரளவுக்கு வெற்றி பெற்றது. அடுத்து வந்த சின்ன மாப்ள பெரும் வெற்றி. அதற்கடுத்ததாக தயாரித்த நந்தவன தேரு பிடரியில் அடித்து விட்டது. மிகப்பெரிய தோல்வி! கிழக்கு வாசல் வெற்றிக்குப் பிறகு ஆர்.வி.உதயகுமார், கார்த்திக் காம்பினேஷனில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான படம் அது. ஆனால்.. சுமார் ஒரு கோடி ரூபாய் நஷ்டத்தில் என்னைத் தள்ளியது.

அடுத்த படம் ராசய்யா. லாபம் கொடுத்து என்னைக் காப்பாற்றியது. அதற்கடுத்த படம் மாணிக்கம். தொடர்ந்து மூன்று சில்வர் ஜூப்ளி படங்களைக் கொடுத்திருந்தவர் ராஜ்கிரண். மூன்றுமே சொந்தப்படங்கள். அவரை அம்மா கிரியேஷன்ஸுக்காக படம் பண்ணித் தரும்படி கேட்டேன். 'ரஜினி சாருக்குத்தான் இப்ப அதிக சம்பளம்.. ஒரு கோடி ரூபாய்னு பேசிக்கறாங்க. எனக்கு ஒரு கோடியே பத்து லட்சம் தருவாயா?' என்று கேட்டார் ராஜ்கிரண். கூடுதலாக ஒரு கோடியே 25 லட்சத்தில் மொத்தப்படத்தையும் எடுத்துக் கொடுப்பதாகச் சொன்னார். ஒப்புக் கொண்டேன். அது மிகுந்த பரபரப்பான செய்தியாக அப்போது பேசப்பட்டது. ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கினார் ராஜ்கிரண் என்றார்கள்.

அந்தப் படம் வெளியாக தாமதம் ஆனது. வட்டிச் செலவு அதிகமானது. வெளியான பின்னர் பெரிய நஷ்டத்தையும் எனக்குக் கொடுத்தது. அதன் பின்னர் பிரபு நடித்துக் கொடுத்த சீதனம் மூலம் சின்னதாக லாபம் கிடைத்தது.

அந்த சூழ்நிலையிலும் கே.எஸ்.ரவிக்குமார் &சரத்குமார் காம்பினேஷனில் ஒரு பிரும்மாண்டமான படம் தயாரிக்கப் பேசி வைத்திருந்தேன். நாட்டாமை வெற்றிக்குப் பிறகு அவர்கள் இருவரின் காம்பினேஷனில் உருவாக இருந்த படம். திடீரென்று ரவிக்குமாருக்கு முத்து படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினி சார் பட வாய்ப்பு.. கேபி சார் பேனர்.. அதை முடிச்சுட்டு வந்துடறேனே.. என்று என்னிடம் சொல்லி விட்டுப் போனார். ஆனால், சரத்குமாருக்கு அது பிடிக்கவில்லை. ரவிக்குமார் இல்லாவிட்டால் என்ன, நாம வேற படம் பண்ணலாம்னு சொன்னார். நாகராஜ் என்ற இயக்குநரை அறிமுகப்படுத்தினார். அரவிந்தன் படத்தை ஆரம்பித்தோம்.

ரொம்ப நல்ல ப்ராஜக்ட் அது. பெரிய அளவில் கடன் வாங்கித்தான் படம் எடுத்தேன். படு தோல்வி அடைந்தது. படம் வெளியான நேரத்தில் சரத்குமாரின் அரசியல் நிலைப்பாடும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. அதே காலகட்டத்தில் எடுத்த கண்டக்டர் மாப்ள என்ற படத்தையும் வெளியிட முடியாதபடி பண நெருக்கடி உருவானது.

பழைய கடன், புது கடன் என நாலு கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் சுமை. விழி பிதுங்கியது. இன்னும் பத்து வருடத்துக்கு நீ ஜாக்கிரதையா இருக்கணும், தொடர்ந்து படமெடுத்தால் தொடர்ந்து நஷ்டம் தான் என்று அறிவுரை சொன்னார் என் ஆஸ்தான ஜோதிடர். அது உண்மைதான் என்பதை நானும் நம்பினேன். எனக்கு முன்னால் இருந்த பாதாளம் எனக்கு நன்கு தெரிந்தது.

1997 -0 ல் இருந்து பத்து வருடங்கள் எனக்கு நானே வனவாசம் கொடுத்துக் கொண்டேன். சினிமா என்பது புலிவால் பிடிப்பது போல. தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் ரொட்டேஷன் இருக்கும். கடன்காரர்களை சமாளித்து, அடுத்தடுத்து கடன் வாங்கிக் கொண்டே இருக்க முடியும். திடுதிப் என்று ஒரு வெற்றி கிடைக்கும். மொத்தக் கடன்களை அடைக்க வாய்ப்புக் கிடைக்கும்.

ஆனால், புதிதாக படமேதும் எடுக்காமல், கடன் கொடுத்தவர்களை சமாளிக்கவும் முடியாமல், அந்த பத்து வருடங்களும் நான் பட்ட துன்பங்கள் சொல்லி மாளாது. கோர்ட்டுக்கு இழுத்தார்கள். அடிதடிக்கு வந்தார்கள். அவமானப்படுத்தினார்கள். எல்லா பங்கங்களும் நடந்தன. அப்படித்தான் இருக்கும் என ஜோதிடரும் எச்சரிக்கை கொடுத்திருந்தார். பல்லைக் கடித்துக் கொண்டு சமாளித்தேன்.

ஏறக்குறைய நடுத்தெருவுக்கு வந்து விட்ட நிலை. அப்போதுதான் எனக்கு முதல் குழந்தை பிறக்கிறாள். இப்போது நினைத்தாலும் வேதனை கொடுக்கும் அன்று நான் இருந்த நிலை!

சினிமா தவிர வேறு தொழில் தெரியாதே.
 சர்வைவலுக்காக சின்னச் சின்ன வேலைகள் செய்தேன். நட்சத்திர கலைவிழாக்கள் நடத்தினேன். வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த உதவுவதை தொழிலாகவே செய்தேன்.

என் மானசீக குருநாதர் கே.பாலசந்தர் இயக்கிய பொய் படத்தின் பெரும்பகுதியை இலங்கையில் படமாக்கினார்கள். நான் தான் மொத்த ஏற்பாடுகளையும் கவனித்தேன். என் வனவாச காலத்தில் எனக்குக் கிடைத்த ஒரே ஒரு நன்மை இது மட்டுமே. மற்றபடி..ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகவே கழிந்தது..''.

தான் கடந்து வந்த கடும் துயரத்தை நினைத்துப் பார்க்கும்போது கூட வலிக்கிறது சிவாவுக்கு. அவரது பத்து வருட காத்திருப்பைப் போக்க வந்தது பிரமிட் சாய்மீரா திரைப்பட நிறுவனம். ஆரம்பம் அடுத்த அத்தியாயம்!

''எனக்கு மறுபிறவி கொடுத்தவர் சமீபத்தில் இறந்துபோன பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் பிதாமகன் சாமிநாதன். அவரை என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. அவருக்காக ஒரு படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்துக்
கொடுக்க என்னை அழைத்தார்.

இயக்குநர் கே.எஸ்.அதியமான் எனக்குப் பிடித்த இயக்குநர். அவரிடம் படம் பண்ணித்தரும்படி கேட்டேன். அவர், சீமானைக் கை காட்டினார். அப்போதுதான் மாதவனை வைத்து தம்பி என்ற ஹிட் படத்தைக் கொடுத்திருந்தார் சீமான். அவரை அழைத்துக் கொண்டு பிரமிட் சாய்மீரா அலுவலகம் சென்றேன்.

எனக்கு உடன்பாடில்லாத கதையை சீமான்
சொன்னார். ஆனால், எக்சலண்ட் ஸ்டோரி.. கவிதை மாதிரி இருக்கு.. அப்படியே எடுத்துக் கொடுங்க என்று பாராட்டினார்கள் சாய்மீரா
சாமிநாதனும், பிரமிட் நடராஜனும். அதற்குப் பிறகு என்னை ஒரு பொருட்டாகவே கருதவில்லை சீமான். காலத்துக்குப் பொருந்தாத கடும் தமிழ் வசனங்களுடன் வாழ்த்துகள் படம் வெளியானது. எனக்கு நஷ்டமேதும் இல்லை. ஆனாலும், லாபமும் ஏதுமில்லை. கடன் சுமை அப்படியே இருந்தது. பத்து வருடங்கள் கழித்து நான் எடுத்த படம், தோல்விப்படமாகவே ஆனது. பல வருடங்கள் கழித்து இதைக் குறிப்பிட்டு, வேறு ஒரு நல்ல படம் எடுத்துக் கொடுத்திருக்கலாம் உங்களுக்கு என்று என்னிடம் வருத்தம் தெரிவித்தார் சீமான். மணிவண்ணனின் சிஷ்யர் அவர். திறமைசாலிதான். என் நேரம்தான் என்னைக் கைவிட்டது. 

வாழ்த்துகள் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார் வெங்கட் பிரபு. அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததுதான் அந்தப் படத்தால் கிடைத்த பலன். வாழ்த்துகள் முடிவதற்கு முன்னரே, சென்னை 28 படத்தை இயக்கும் வேலைகளை ஆரம்பித்து விட்டார் வெங்கட்.

சென்னை 28 படத்தை விற்பனை செய்து கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் பிரமிட்
சாய்மீராவின் கதவுகளைத் தட்டினேன். ப்ரிவியூ பார்த்து விட்டு, இது ஓடாது என்றார்கள். விலைமதிப்பற்ற எங்கள் மூன்று மணி நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டீங்க என்றார்கள். ஆனால், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது அந்தப் படம். அது எனக்குச் சாதகமாகவும் அமைந்தது.

வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்தை நான் தயாரித்தேன். கடந்த முறை எங்கள் ஜட்ஜ்மெண்ட் தப்பாகிடுச்சு, அதனால் இம்முறை நீங்கள்
சொல்வதை அப்படியே நம்புகிறோம் என்றார்கள் பிரமிட் சாய்மீராவில். ஆடியோ ரிலீஸ் அன்று படத்தை வாங்கிக் கொண்டார்கள். நல்ல லாபம் கிடைத்தது. என் கடன் சுமைகள் குறைந்தன.

அம்மா கிரியேஷன்ஸ் பேனரில் விஜயகாந்தை நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை பல வருடங்களாக எனக்கு இருந்தது. விக்கிரமன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிக்க.. மரியாதை படம் தயாரித்தேன். நல்ல படம். ஆனால் ரிலீஸான நேரம் சரியில்லை. அரசியலில் தனித்துப் போட்டி என அறிவித்திருந்தார் விஜயகாந்த். எல்லாக் கட்சிக்காரர்களும் அவர் படத்தைப் புறக்கணித்தார்கள். விஜயகாந்த்
 ரசிகர்களோ தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள். தியேட்டர்களில் கூட்டமில்லை!

பின்னர், நடிகை சோனாவுக்காக ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ஒரு படம் தயாரித்துக் கொடுத்தேன். கனிமொழி என்று டைட்டில் வைத்தோம். மிக அருமையான படம் அது. ஓடவில்லை!

அங்காடித் தெரு பார்த்ததும் வசந்த பாலன் மீது பெரிய மரியாதை ஏற்பட்டது. அவரது வெயில் படமும் அற்புதம் தான். எனக்குள் இருக்கும் பாலசந்தரின் சீடன் அவ்வப்போது இப்படி விழித்துக் கொள்வான். வசந்த பாலனைச் சந்தித்து படம் பண்ணலாமா என்று கேட்டேன். அரவான் கதையைச் சொன்னார்.

ஆறு கோடியில் முடிக்கத் திட்டமிட்டு படத்தை ஆரம்பித்தோம். பன்னிரெண்டு கோடியைத் தாண்டியது. டைரக்டர் கேட்பதை, நானே விரும்பிச் செலவு செய்து கொடுத்தேன். ரசித்துப் படமெடுத்தோம்.

படத்தை ரிலீஸ் செய்யக்கூட முடியவில்லை. அந்த அளவுக்கு ஃபைனான்ஸ் நெருக்கடிகள்! கடன்காரர்களைச் சமாளிக்க முடியவில்லை. நல்ல நண்பனாக உதவிக்கு ஓடி வந்தார் பிரகாஷ் ராஜ். எல்லா கடன்காரர்களிடமும் அவரே பேசினார். தன் பணம் ஒரு கோடி ரூபாயை எனக்காகக் கொடுத்தார். வேந்தர் மூவிஸ் மதன் வந்தார். அவரே படத்தை வாங்கி வெளியிட்டார். அந்த நேரத்தில் என் தலை தப்பியது இவர்கள் இருவரது நட்பினால்தான்!

ஆனால்.. மறுபடியும் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்தாக வேண்டும் என்ற நிலையில் இருந்தேன் அப்போது! மூன்றரை வருடங்கள் உனக்கு நேரம் சரியில்லை என்றார், ஜோதிடர். பொறுமையாகக் காத்திருந்தேன்.. மறுபடியும் ஒரு வனவாசம்!''.

மறுபடியும் பள்ளத்துக்குள் விழுந்த வேதனையோடு முடிந்தது சிவாவின் நான்காவது சினிமா அத்தியாயம்.

''மூன்றரை வருடங்களுக்குப் பிறகு கடவுள் இருக்கான் குமாரு படம் தயாரித்தேன். சின்ன லாபத்துடன் தப்பித்தேன். அதனை அடுத்து, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் எடுத்தேன். மிக மிக அருமையான படம். ரசித்து ரசித்து உருவாக்கினோம். ஜிஎஸ்டி பிரச்னை நிலவிய காலத்தில் வெளியானது. மக்கள் தியேட்டருக்கே வரவில்லை.

சரோஜாவுக்குப் பிறகு தொடர்பு எல்லையில் இருந்து கொஞ்சம் விலகி இருந்த வெங்கட் பிரபு சென்னை 28 இரண்டாம் பாகம் எடுத்தபோது என்னை அதில் நடிக்க வைத்தார். அப்போது பேசிப்பேசி அடுத்த படத்தில் மறுபடியும் இணைய முடிவெடுத்தோம். பார்ட்டி படம் ஆரம்பித்தோம். பெரிய பட்ஜெட் படம் தான். துணிந்து இறங்கியிருக்கிறேன்.

இடையில் சார்லி சாப்ளின் 2 தயாரித்து வெளியிட்டேன். இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்றுதான் முடிந்தது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இப்போதும் கோடிக்கணக்கான ரூபாய் கடன்களுடன் தான் இருக்கிறேன். ஆனாலும் நம்பிக்கை கொஞ்சமும் குறையவில்லை. பார்ட்டி படப்பிடிப்பு முடிந்து விட்டது. அக்னிச் சிறகுகள் படம் ஆரம்பிக்கப் போகிறோம். மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படமும், இளன் இயக்கத்தில் இன்னொரு படமும் தயாரிக்க முடிவெடுத்து வேலைகளை ஆரம்பித்து விட்டேன்..''

ஆக.. ஐந்தாவது அத்தியாயத்தில் இருக்கிறது
டி.சிவாவின் திரை வாழ்க்கை.

''ஏண்டா இந்த தொழிலை தேர்ந்தெடுத்தோம் என்று வருந்தியதுண்டா?'' என்று கேட்டதும் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

''விரக்தியில் அப்படி எப்போதாவது தோன்றும். ஆனால், சீரியஸாக யோசிக்க மாட்டேன்.  சிகரங்களையும் பாதாளங்களையும் கொண்டதுதான் சினிமா தயாரிப்பு. மற்ற தொழில்களில் எல்லாம் நாம் ஒழுங்காக இருந்தால் நமக்குத் தோல்வி ஏற்படாது. ஆனால் இங்கே அப்படியல்ல. யார் என்ன தவறு செய்தாலும், அது தயாரிப்பாளரின் தலையிலேயே விடியும். நஷ்டம் அவருக்கு மட்டுமே.

சுருக்கமாக ஒன்று சொல்கிறேன்.. வெறும் ஏழு சதவிகிதம்தான் சினிமா தயாரிப்பில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த ஏழு சதவிகிதமும் ஒரே நபருக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருப்பதில்லை. அங்கும் இங்கும் அவருக்கும் இவருக்கும் என இடம் மாறிக்கொண்டே இருக்கும். என்றாவது ஒரு நாள் அந்த ஜாக்பாட் நமக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஓடிக்கொண்டே இருப்பதுதான் ஒரு தயாரிப்பாளரின் கடமை!''

தெள்ளத் தெளிவாகச் சொல்கிறார் சிவா. இந்த தெளிவு இல்லாத எத்தனையோ தயாரிப்பாளர்கள் என்ன ஆனார்கள் என்ற புள்ளி விவரம் எடுத்துப் பார்த்தால் பரிதாபத்துக்குரிய கதைகளே அதிகம் கிடைக்கின்றன. சினிமா தயாரிப்பு தவிர, ஹோட்டல் தொழிலிலும் மிகச் சமீபத்தில் இறங்கி இருக்கிறார் சிவா. வளசரவாக்கத்தில் அப்பா மெஸ் என்றொரு உணவகம் ஆரம்பித்திருக்கிறார்.

''அப்பா மெஸ்.. அம்மாவின் கைப்பக்குவம்.. இதுதான் எங்கள் நோக்கம். ஈரோட்டில் இருந்து ஆர்கானிக் காய்கறிகள், செக்கில் ஆட்டிய எண்ணெய் வரவழைத்துச் சமைக்கிறோம். வீட்டுச் சாப்பாடு போல விருந்து கொடுக்கிறோம்..'' என்றார்.

''சினிமா கைவிட்டாலும், ஹோட்டல் தொழில் கைகொடுக்கும் என்ற முன் ஜாக்கிரதையா?'' என்று கேட்டதும், சத்தம்போட்டுச் சிரித்தார். சிரிப்பை நிறுத்திவிட்டு நிமிர்ந்தார். '' சினிமா எனக்குப் பேரின்பம். மற்றதெல்லாம் சிற்றின்பங்கள் மட்டுமே. எத்தனை முறை விழுந்தாலும் ஒவ்வொரு முறையும் எழுவேன்,'' என்றார் கண்ணுக்குக் கண் பார்த்து!

ஆகஸ்ட், 2019.