வி ளையாட்டை மையமாகக் கொண்ட, விளையாட்டை பின்னணியாகக் கொண்ட திரைப்படங்கள் மனதுக்கு மிகவும் உவப்பானவை. அதற்குப் பல காரணங்கள்.
எனக்கு விளையாட்டு மிகவும் விருப்பமானது. உடலையும் மனசையும் லேசாக வைத்திருப்பது அது. கபடி, கிரிக்கெட், டென்னிஸ் , டென்னிக்காய்ட் போன்ற மைதான விளையாட்டுகளும் கேரம்,செஸ், தாயம் போன்ற திண்ணை விளையாட்டுகளும் இளமைப் பருவத்தில் முக்கியமான பங்கு வகித்திருக்கின்றன. எனது முதல் சிறுகதையே கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாகக் கொண்ட ஒன்றுதான்.
விளையாட்டை மையமாக வைத்த திரைப்படங்களின் பால் நாம் ஈர்க்கப்படுவதன் அடிப்படையான காரணம் அவ்வகைப் படங்களின் அடிநாதமாக உள்ள சில விஷயங்கள்தான். நம்பிக்கை தருதல், நமக்கான முக்கியத்துவத்தை மீட்டெடுத்தல், போராட்டம், தோல்விகளிலிருந்து மீண்டெழுதல் போன்ற அம்சங்களே அவை.. இவை நம் வாழ்வின் அம்சங் களும் கூடத்தான். அல்லவா? ஒரு விளையாட்டின் வழியே இது அனைத்தும் நடக்கையில், கதை ஒன்றின் வழியே நிகழ்த்தி இது காட்டப் படுகையில் பார்ப்பவனின் மனதில் நம்பிக்கையை விதைக்கிறது, வாழ்வின் மீதான பிடிப்பை உறுதிப் படுத்துகிறது. தோல்வியும் வாழ்வின் ஒரு பகுதியே என்கிற பக்குவத்தையும் கூட இது தருகிறது. ஒரு மேட்ச் நடந்து முடிகின்ற அந்த சில மணி நேரங்களில் ஒரு மனிதன் தன் வாழ்வின் பல தருணங்களில் அடையும் அத்தனை உணர்வுகளையும் அடைந்து அனுபவித்து மீள்கிறான். ஒரு சிறிய வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறான். எனவேதான் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிற விளையாட்டை பின்னணியாக கொண்ட திரைப்படங்கள் நம்மை வசீகரிக்கின்றன.
முழு விளையாட்டையும் அதன் நுட்பங்களையும் காட்டுவதற்கு ஏகப்பட்ட விளையாட்டு சேனல்கள் இருக்கின்றன. திரைப்படங்கள் விளையாட்டு நுட்பங்களோடு தனி மனித உணர்வுகளையும், சமுதாய பிரச்சினைகளையும் ஒரு சரி விகிதத்தில் கலந்து தர வேண்டியிருக்கிறது.. அந்தக் கலவை சரியானதாகவும், பாசாங்கற்றதாகவும் பார்க்கும் அனைவரும் தங்களோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளும் இயல்புடையதாகவும் இருக்கும்
பட்சத்தில் அந்தப் படம் நிச்சயம் வெற்றி அடைகிறது... அனைத்தும் இப்படி கச்சிதமாக அமைந்த ஒரு படமாக ‘வெண்ணிலா கபடிக் குழு' படத்தை தயக்கமின்றி சொல்வேன். தமிழில் இதுவரை வந்திருக்கும் விளையாட்டுப் பின்னணி கொண்ட படங்களில் அதுவே சிறந்தது என்பது என் கருத்து.
சமூகத்தினால் சம வாய்ப்பு மறுக்கப்பட்ட, வறுமையினால் கல்வி மறுக்கப் பட்ட ஒரு இளைஞனின் கதையை வெண்ணிலா கபடிக் குழு பேசியது. அவனது வாழ்க்கை வறுமையும் துயரும் மிக்கதாக இருந்தாலும் அந்தப் படம் எந்த இடத்திலும் புலம்பாமல் அவனது மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும், காதலையும் தோல்வியையும் வெற்றியையும் இணைத்துப் பேசியது. எளிமையான திரைப்படங்கள் சமயங்களில் தொடும் உயரம் அசாத்தியமானது.. அப்படி உச்சம் தொட்ட திரைப்படம் ‘வெண்ணிலா கபடிக் குழு' நான் எனது கல்லூரிக் காலத்தில் திரைப்பட விழா ஒன்றில் பார்க்க நேர்ந்த திரைப்படம் Zoltan fabri எனும் ஹங்கேரிய இயக்குனரின் ''Two half times in hell'' . ஒரு அன்னிய மொழிப் படம் இந்த அளவுக்கு நம்மை தொந்தரவு செய்ய முடியும் என்பதை உணர்த்திய முதல் படம். கால் பந்து விளையாட்டுதான் அதன் பின்னணி. கால்பந்து விளையாட்டு மட்டும் அல்ல என்பது அதன் சிறப்பு... இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் தரப்பின் வசமுள்ள ஹங்கேரி முகாம் ஒன்றில் நிகழ்கிறது கதை. ஒரு முக்கிய நிகழ்வை ஒட்டி கேளிக்கை கொண்டாட்டத்துக்காக கால்பந்தாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள் நாஜிக்கள். கைதிகள் அணியானது..அவர்களை யார் அடக்கி கைதியாக வைத்திருக்கிறார்களோ அந்த ராணுவ வீரர்கள் அணியோடு மோத வேண்டும். அங்கே இருக்கும் கைதிகளில் ஒருவனான ஹங்கேரிய கால்பந்தாட்ட வீரனிடம் டீமை ரெடி பண்ணச் சொல்கிறார்கள். சரியான உணவின்றி சோர்ந்து போய் கிடக்கும் கைதிகளில் இருந்து அவன் ஆட்டக்காரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.அவன் முகாம் அதிகாரியிடம் எங்களுக்கு கொஞ்சம் ரொட்டிகள் அதிகம் வேண்டும்.. அப்போதுதான் விளையாட தெம்பிருக்கும் என்று கேட்டுக்கொள்ள அதிகாரி சம்மதிக்கிறார். கைதிகள் அணி பரிதாபகரமான முறையில் பயிற்சிகளை மேற்கொள்கிறது. விளையாடித் தோற்பதற்கென்றே உருவாக்கப்படும் அணி அல்லவா? அந்த மனோபாவம் எல்லாருக்கும் இருக்கிறது.
அந்தப் பக்கம் ராணுவ வீரர்களின் அணி வெகு மிதப்பாக கொழு கொழு என்று ஆணவமாக ப்ராக்டிஸ் பண்ணுகிறது. போட்டி தினம் நெருங்குகிறது.. அப்போது கைதிகள் அணியிலுள்ள சிலர் ப்ராக்டிஸ் பண்ணும் போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தப்ப முயன்று பிடிபடுகின்றனர். பொதுவாக அவர்களை அந்த நொடியே சுட்டுக் கொன்று விடுவார்கள். ஆனால் மேட்ச் இருக்கிறதே? எனவே உங்களை மன்னித்து விடுகிறோம் என்று எச்சரித்து விடப் படுகின்றனர்.
மேட்ச் துவங்குகிறது. முதல் பாதியில் கைதிகள் அணி மகா பரிதாபமாக அடி மேல் அடி வாங்குகிறது. ராணுவ அணி இவர்களை அடித்துத் துவைக்கிறது. இடைவேளையின் போது கைதிகள் அணியின் கேப்டன் ஒரு முடிவு எடுக்கிறான். சாவைப் பற்றிய கவலையை உதறி இரண்டாம் பாதியை விளையாட முடிவு செய்கிறான்.
அந்த இரண்டாம் பாதிதான் அந்தக் கைதிகளின் எஞ்சியுள்ள ஆயுள் காலம். அதில் அவர்கள் ஆடுகிறார்கள். தங்களை எந்த நேரமும் சுட்டுத் தள்ளக் கூடிய ராணுவத்தினர் சூழ்ந்திருக்க உயிரை துச்சமென மதித்து அவர்கள் ஆடும் அந்த இரண்டாம் பாதி ஆட்டம் அத்தனை உயிர்ப்பான ஒன்று..பார்வையாளனை மெய்சிலிர்க்க வைக்கிற ஆட்டம்..தங்களை இந்தத் துயரிலும் இழிநிலையிலும் தள்ளிய நாஜிக்களை வெல்லக் கிடைத்திருக்கும் வாய்ப்பு இந்த ஆட்டம் மட்டுமே என்று ஆடுகிறார்கள். வெல்கிறார்கள். வெற்றியின் முடிவில் கொல்லப் படுகிறார்கள்.
இந்தத் திரைப்படம் எப்போதும் என் ஆழ்மனதில் இருக்கிறது. லகான் வந்த போது அந்தப் படத்தில் நான் இந்தப் படத்தின் சாயலை உணர்ந்தேன். பல விளையாட்டுத் திரைப்படங்களின் அடிப்படை சூத்திரமே இதுதான். எளியோர் வலியோரை வெல்வது.. பலவானை நோஞ்சான் ஜெயிப்பது. வாய்ப்புகளால் வளம் பெற்று முழு பலத்துடன் இருப்பவனை, வாய்ப்பு மறுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்டவன் வெல்வது..
வெண்ணிலா கபடிக் குழுவின் முக்கியமான ஒரு காட்சி. தோற்றுக் கொண்டிருக்கும் ஹீரோவின் அணியை உற்சாகப்படுத்தும் படியான ஒரு பேச்சை கோச் நிகழ்த்தி உத்வேகமூட்டும் காட்சி...பல முறை எழுதியும் சரியாக வரவில்லை... யோசனையில் அமர்ந்திருந்தபோது என் ஆழ்மனதில் இருந்த ‘ Two half times in hell'' நினைவுக்கு வந்தது... அதில் வரும் இடைவேளை நேரத்தில் பேசப்பட்ட வசனங்கள் எதுவும் நினைவில் இல்லை.. அந்தக் காட்சியில் பெரிதாக வசனங்களும் இல்லை... ஆனால் அந்த தருணம் மனதுக்குள் இறங்கியது. ‘‘அடுத்த இரண்டாம் பகுதி மட்டும்தான் நமது வாழ்நாள் என்று உணர்கையில் வரும் உத்வேகமும் வெறியும்தானே அவர்களை அப்படி ஆடத் தூண்டியது?'' என்கிற சிந்தனை எனக்குள் வந்தவுடனே அந்தக் காட்சிக்கான வசனங்கள் வந்து விழுந்தன.
ஒரு படைப்பு இன்னொன்றை தூண்டுவது இந்த விதத்தில்தான்... ஒரு வெடியை இன்னொரு வெடியால் பற்ற வைப்பது போல...
ஜூன், 2020.