சிறப்புப்பக்கங்கள்

வில்லன்களால் நிரம்பி வழிந்த கதாநாயகன்

தேவேந்திர பூபதி

நாடகமரபிலே வில்லன்களை கதாநாயகனாக்கிய ஒரு உண்மையான கதாநாயகன் திரு.ஆர்.எஸ். மனோகர். அகஸ்தியர் திரைப்படத்தில் இலங்கேஸ்வரனாக, யார் வந்தால் என்ன? காம்போதி  ராகமொன்றே போதும் எந்த நாட்டையும் ராகத்தால் வென்றிடுவேன் என்கிற தொனி இராவணனை, அதுவும் வீணையை கொடியாய் வைத்து அரசாள்கிற ஒரு மன்னனின் மேல் ஒரு தீர்க்கவியலாத காதலையும் மதிப்பையும் உருவாக்கியது. இராவணனின் முக பாவம் அங்க அசைவுகள், பேச்சுமுறை, எதிராளியைக் கையாளும் இலாவகம் அனைத்தும் ஆர்.எஸ்.மனோகர் என்கிற ஒரு நபரை இராவணனாகவும் அறிவின் வெளிச்சமாகவும் எனக்குக் காட்டியது.

இராவணனின் மேல் ஏற்பட்ட என் பற்றின் பின்னணி இன்னும் சிறிது பின்னால் சென்றால் வீணைக் கொடியுடைய வேந்தனாய் இராகங்களின் முக்கியத்துவத்தை பாடிக்காண்பித்த டி.கே.எஸ். சகோதரர்களில் டி.கே.பகவதியின் நடிப்பிலிருந்து தோன்றியது எனலாம். புராணங்களிலும் இதிகாசங்களிலும் புனை கதைகளிலும் வீர புருஷர்களாய் சித்தரிக்கப்பட்டவர்கள் எதை எதையோ கொடியாகவும், திறனை அணியாகவும் காட்டிய வேளையில் வீணையை கொடியாகவும் ராகத்தை ஆயுதமாகவும் வைத்திருந்த இராவணன் எப்படி கொடியவனாக முடியும்? ஏதோ சதி நடந்துவிட்டது.  சரியான இராவணனை காட்டிய டி.கே.பகவதியும் ஆர்.எஸ்.மனோகரும் எனக்குள் உண்மையை சொல்லும் நிஜ கதாநாயகர்கள் ஆனார்கள். இப்படித்தான் என்னுள் ஆர்.எஸ்.மனோகர் புகுந்தார்.

ஆர்.எஸ்.மனோகர் என்கிற ராமசாமி சுப்பிரமணிய மனோகரனின் இயற்பெயர் லட்சுமி நரசிம்மன். நாமக்கல்லில் 1925ஆம் ஆண்டு ஜுன் 25ம் தேதி பிறந்த அவர் தன் நடிப்பின் திறமையால் மனோகரன் ஆனார்.  ஆம், அவர் கல்லூரி நாட்களில் நடித்த நாடக பாத்திரத்தின் பெயரிலே பின்னால் அனைவருக்கும் அறியப்பட்டு ஆர்.எஸ்.மனோகர் ஆனார்.

கிட்டத்தட்ட முன்னூறு திரைப்படங்கள் நடித்திருந்த போதும் அவர் தன்னை ஒரு நாடகக்காரனாக முன்னிறுத்துவதில் ஒரு பேரானந்தம் அடைந்தார்.  தமிழ் நாடக மரபில், நவாப் ராஜமாணிக்கம், டி.கே.சண்முகம், பகவதி சகோதரர்கள் ஆர்.எஸ்.மனோகர், கே.ஏ.தங்கவேலு, சோ.ராமசாமி, சிவாஜிகணேசன், எஸ்.வி.சேகர், கிரேஸிமோகன் என பல்வேறு வகையான மாற்றங்களும் வளர்ச்சியும் கண்டபோதும் மனோகரின் நாடக பாணி மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது.  மேலும் முப்பரிமாண முறை மேடை அமைப்பையும், (ஒலி ஒளி அமைப்புகளை) சப்தங்களை வேறுபடுத்திக் காண்பிக்கும் முறையையும், புராண பாடல் காட்சிகள் வெடி மருந்துகொண்டு வேடிக்கை நிகழ்ச்சி காட்டியதும் அவரை நாடகத்தில் நிலை நிறுத்துகிறது.

புராணங்களை மீட்டுருவாக்கம் செய்யும் விதத்திலும் பல புதுமைகளை நாடகத்தில் புகுத்துவதிலும் மிகச்சிறப்பான பங்களிப்பை செய்துள்ள அவர் தனது 31 நாடகங்களை 7950 முறை அரங்கேற்றியுள்ளார்; அவருடைய ஆரம்பகால படங்களான வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள் போன்றவற்றில் முக்கிய நாயகனாக நடித்திருந்த போதும், நடிகர் திலகம் எம்.ஜி.ஆரோடு நடித்த படங்களில் குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன், பல்லாண்டு வாழ்க, அடிமைப்பெண் ஆகிய படங்களில் அவர் ஏற்ற வில்லன் வேடம் அவரை ஒரு நிஜ வில்லனாகவே தமிழ் மக்களுக்கு அறிய வைத்துள்ளது.

ஜனவரி 10, 2006 ஆம் ஆண்டு அன்று சென்னையில் உடல் நலமின்றி இறந்த போது அவருக்கு வயது 80.

நாடகத்தையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்த அவர், நாடகம் நடத்துவதற்காக வைத்திருந்த தளவாடங்கள் விலை மதிப்பற்றவை.  நாடகத்தில் நிஜத் தன்மைக்காக அவர் செலவு செய்தவை அந்த நாடகத்தின் வருவாய்க்கு ஏற்றதா எனக் கூட நினைக்காமல் கலைக்காக தன்னை அர்ப்பணித் தவர்.  அவருடைய நாடகத்தின் பால் கொண்ட பற்றை வியந்த எம்.ஜி.ஆர் அவருக்கு 1970ல் நாடகக் காவலர் விருது அளித்தார். 

இதிகாச புராண மரபில் வெறுத்தொதுக்கும் பாத்திரங்களின் முக்கியமான பங்களிப்பை அந்த பாத்திரத்தின் நியாயங்களை எடுத்துரைத்த பாங்கும் அதை அவரே ஏற்று நடத்திய விதமும் உண்மையிலேயே எவரும் துணிந்திராத முயற்சி.  அவரது படைப்புக்களில் வரிசையில் மிக முக்கியமானவை இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரஜித், சுக்ராச்சாரியா, நரகாசுரன் மற்றும் தன்னுடைய வயதான காலங்களில் நடித்த திருநாவுக்கரசர் போன்றவையாகும்.

ஜூன், 2014.