சிறப்புப்பக்கங்கள்

விரிந்துகொண்டே செல்லும் வெற்றி ராஜ்யம்!

வெற்றிப்படங்கள்- ரஜினி

ஜெ. ராம்கி

ஆண்டுக்கு 12 படங்கள் நடித்த எழுபதுகளின் இறுதியிலும் சரி, கடந்த 15 ஆண்டுகளில்  8 படங்களில் மட்டுமே நடித்திருந்தபோதிலும், ரஜினி தன்னை  சினிமாவுலகின் உச்சம் என்று நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். எந்தவொரு துறையைச் சேர்ந்தவராக  இருந்தாலும், எத்தகைய அனுபவம் பெற்றிருந்தாலும் அந்தந்த துறையில் உச்சத்தை எட்டுவது கஷ்டமான காரியம்.அதை விட கஷ்டமானது, உச்சத்தை எட்டிவிட்டு அதை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வது. ரஜினி, அதை அநாயசமாக செய்துகாட்டுகிறார்.

ரஜினியின் வெற்றிப்பாதையில் மைல் கற்கள் நிறைய. அவற்றில் பில்லா, முரட்டுக்காளை, மூன்று முகம், மனிதன், அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா, சந்திரமுகி, எந்திரன் மற்றும் கபாலி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதற்குக் காரணம், படத்தின் கதையம்சமோ அல்லது அவை  பெற்ற பிரம்மாண்ட வெற்றிகளோ அல்ல. படம் வெளிவருவதற்கு முன்னர் இருந்த எதிர்பார்ப்புகளும், அவை தந்த சவால்களும்தான். ஒருவேளை, இவையெல்லாம் தோற்றுப் போயிருந்தால் ரஜினியின் சினிமாவுலக செல்வாக்கில் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது நிச்சயம்.

பில்லாவிலிருந்து ஆரம்பிக்கலாம். வில்லன், செகண்ட் ஹீரோ என்றொரு பரபரப்பான இன்னிங்ஸ் முடித்து, ஓர் ஓய்வுக்குப் பின்னர் வெளியான தர்மயுத்தம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது என்று சொன்னால், அடுத்து வெளியான ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து தரப்பு மக்களையும் கட்டிப்போட்டது. ரஜினி, வெறும் ஆக்‌ஷன் நடிகர் மட்டுமல்ல சிவாஜி, எம்ஜிஆர் வரிசையில் சேர எல்லாத் தகுதி களும் இருக்கின்றன என்பதைச் சொல்வது போல் அமைந்துவிட்டது.

அன்னை ஓர் ஆலயம், ரஜினிக்கு நிறைய இளைய ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. ஆறே மாதத்தில் அடுத்தடுத்து வெளியான வெவ்வேறு படங்கள்  ரசனையின் பெயரால் பிரிந்து கிடந்த மக்களை ஒரு ஹீரோவால் திரும்பவும் ஒன்றிணைக்க முடியும் என்கிற நம்பிக்கையைத் தந்தது. பில்லாவுக்கு முன்னரே ஒரு பரிபூரண சூப்பர் ஸ்டாராக பரிணமித்திருந்தார் ரஜினி. இனி எம்ஜிஆர்  அல்லது சிவாஜி வகுத்துக்கொடுத்த பாதையில் ரஜினி செல்வார் என்கிற எதிர்பார்ப்பை தலைகீழாக மாற்றியமைத்தது பில்லா. 

பில்லா, எதிர் நாயகனாக ரஜினி ஒரு புது வழி கண்டிருந்தார். வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகனாக ராஜப்பாவாக சில காட்சிகள் வந்தாலும், பெரும்பாலான காட்சிகளில் கோட்டும் சூட்டும் அணிந்து தமிழ்ச் சூழலுக்கு அந்நியனாக, வில்லனாக நடித்திருந்தார். இப்படியொரு மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை. பில்லா, தமிழ் சினிமாவுலகில் தனியொரு நட்சத்திரமாக, உச்ச நட்சத்திரமாக ரஜினியை உயரத்தில் கொண்டுபோய் வைத்தது.

ஏவிஎம் மெய்யப்பச் செட்டியார், ரஜினியை வைத்து ஒரு படமெடுக்க அட்வான்ஸ் கொடுத்திருந்தார். ஏவிஎம் போன்ற பெரிய பட நிறுவனங்கள் திரும்பவும் படமெடுக்க முன்வந்தது பரபரப்பாக பேசப்பட்டது. அதில் ரஜினி கதாநாயகனாக நடிக்கப்போகிறார் என்றதும் வந்த கிசுகிசுகளுக்கு குறைவில்லை. முதல்முறையாக விக் வைத்து, ரஜினியை பொள்ளாச்சிக்கு அழைத்துப்போய் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

நகர வாழ்க்கை சம்பந்தப்பட்ட படங்களுக்குத்தான் ரஜினி சரியாக வருவார், கிராமத்தானாக நடித்தால் படம் ஓடாது என்றார்கள். கிராமத்து கதையாக இருந்தாலும் ஆக்‌ஷன் கதை என்று சொல்லித்தான் ஆரம்பித்தார்கள். எடுத்தவரையில் படத்தை பார்த்தபோது, மிகச்சாதாரண குடும்பக்கதையாக வந்திருந்தது. உலகம் சுற்றும் வாலிபனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகபட்ச போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்தது முரட்டுக்காளைக்குத்தான். அதுவரை எடுத்த கிளைமாக்ஸை வெட்டி எறிந்துவிட்டு, பரபரப்பான ரயில் சண்டைக்காட்சிகளை படத்தோடு இணைத்தார்கள். வில்லனாக நடித்த ஜெய்சங்கருக்கு போஸ்டர்களில் ரஜினிக்கு இணையான இடம் தரப்பட்டது. காமெடி, ஆக்‌ஷன், டிராமா, சென்டிமெண்ட், கொண்டாட்டம் என அனைத்து அம்சங்களையும் கொண்ட முரட்டுக்காளை, தமிழ் சினிமாவுலகில் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி வைத்தது.

முரட்டுக்காளை, தமிழ் சினிமாவின் வியாபாரத்தை பரவலாக்கியது. 1980ல் டிசம்பர் மாதத்தில் வெளியான முரட்டுக்காளையின் படப்பெட்டி, ஆறு மாதங்கள் வெவ்வேறு திரையரங்குகளில் ஓடி, 1981 மே மாதம்தான் திரும்பி வந்தது என்கிறார் திருச்சி, தஞ்சை ஏரியாவின் விநியோகஸ்தர். வெளியான நாளிலிருந்து எத்தனை நாளில் பெட்டி திரும்ப வருகிறது என்பதுதான் ஒரு படம் பெற்ற வெற்றியின் நிஜமான அளவுகோலாக அப்போது இருந்தது.

முரட்டுக்காளைக்கு பின்னர் ரஜினிக்கு திரும்பிப் பார்க்க நேரமில்லை. மூன்று மொழிகளிலும் ரஜினியின் படங்கள் ஒரே நேரத்தில் தயாராகின. ஒரு சில படங்கள் தமிழில் எடுக்கப்பட்டு, மற்ற மாநிலங்களில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி, தமிழ் சினிமாவின் வெற்றியை தென்னிந்திய சினிமாவின் வெற்றியாக உயர்த்தி வைத்தன. தென்னிந்தியாவின் ஸ்டாராக உயர்ந்த ரஜினி, வட இந்தியாவிலும் கால் பதிக்க நினைத்தார். அந்தா கானுன் மூலமாக வட இந்தியர்கள் பெரிய வெற்றியை பரிசாக அளித்து அரவணைத்துக்கொண்டார்கள் என்றாலும் இந்திப்படவுலகில் ரஜினியின் உச்சத்திற்கு காரணமாக இருந்தது மூன்று முகம்.

சிவாஜிக்கு பின்னர் மூன்று வேடங்களில் யாரும் நடித்ததில்லை என்கிற நிலையில் மூன்று வேடங்களிலும் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து ரஜினி, தன்னுடைய முத்திரையைப் பதித்தார். அலெக்ஸ் பாண்டியனை, மாநிலம் கொண்டாடியது. மூன்று முகம், ஜான் ஜானி ஜனார்த்தனனாக உருவெடுத்தபோது பாலிவுட் பிரமித்துப்போனது. 1984 தீபாவளி தினத்தில் நல்லவனுக்கு நல்லவன் வெளியாகி வெற்றிபெற்ற ஒரு சில நாட்களில் வட இந்தியாவில் வெளியான ஜான் ஜானி ஜனார்த்தன் பெரும் வெற்றியடைந்து, நாடு முழுவதும் ரஜினியின் பெயரை உரத்துச் சொன்னது.

வேலைக்காரன், ஊர்க்காவலன் என அடுத்தடுத்த வெற்றிகளைத் தொடர்ந்து இன்னொரு வெற்றிக்காக ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஏவிஎம்/ எஸ்பிஎம் / ரஜினி கூட்டணி ஆறாவது முறையாக இணைந்திருந்தது. 1987ல் புதியவர்களின் அலை உச்சத்தில் இருந்தது. ஒரு பக்கம் மணிரத்னமும், இன்னொரு பக்கம் பிலிம் இன்ஸ்டியூட் மாணவர்களும் பெரிய அலையை உண்டாக்கியிருந்தார்கள். வெறும் மசாலா மட்டும் போதாது என்பதை பல தமிழ்ப்படங்களின் தோல்வி உணர்த்தியிருந்தது. இந்நிலையில் அக்மார்க் மசாலா என்கிற அறிவிப்போடு, காமிராவை முடுக்கி மனிதனை ஆரம்பித்திருந்தார்கள். மனிதன், ஏவிஎம் சினிமாவுலக வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. மிகப்பெரிய ஹாட்ரிக் வெற்றி, ரஜினிக்குக் கிடைத்தது. நாயகன், ஏ சென்டர்களில் கொண்டாடப்பட்டாலும், பி மற்றும் சி சென்டர்களில் மனிதனின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. ஒரு மாத வசூல் சூறாவளிக்குப் பின்னர், அண்ணா சாலையின் வாராந்திர பத்திரிக்கையில் ரஜினியை சூப்பர் மேனாக சித்தரித்து கவர் ஸ்டாரி வந்திருந்தது.  1987 தீபாவளி தினத்தன்று 10 படங்கள் வெளியாகி அதில் பாதி படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஒரே படமாக மனிதனை குறிப்பிட்டிருந்தார்கள். 

அண்ணாமலையும் ஹாட்ரிக் வெற்றிதான். ஆனால், படவெளியீட்டுக்கு முன்னர் விநியோகஸ்தர்கள் பீதியில் இருந்தார்கள். தயாரிப்புச் செலவு எகிறியிருந்தது. தளபதியின் மூலம் ரஜினி, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறியிருந்தார். மன்னனும் அதை உறுதிப்படுத்தியது. எதிர்பார்த்த லாபம் கிடைக்குமா என்கிற கவலையே அண்ணாமலை வியாபாரத்தில் ஏகப்பட்ட சிக்கல்களை ஏற்படுத்தியிருந்தது.

ரஜினி படமென்றால் குறைந்தபட்ச வசூலுக்கு உத்தரவாதமுண்டு. ஆனால், ஏகப்பட்ட செலவில் தயாரிக்கப்பட்ட அண்ணாமலை பெரும் வெற்றி பெற்றால் மட்டுமே விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைக்கும். கதையைக் கூட முடிவு செய்யாமல், பூஜை தினத்தன்று இரண்டு இயக்குநர்களையும் மாற்றி, அவசர கதியில் ஆரம்பமான ஒரு படத்தின் மீது யாருக்கும் நம்பிக்கை வரும்? படம் வெற்றி பெறாவிட்டால், நஷ்டத்தை ஈடுகட்டுவதாக ரஜினி முன்வந்து வாக்குறுதி கொடுத்தார். படமும் வெளியாகி, அதுவரை இருந்த தமிழ் சினிமாவின் வசூல் சாதனைகளை முறியடித்தது. பின்னாளில் பாட்ஷா வரும்வரை, அண்ணாமலைதான் ரஜினி பட வரிசையில் நம்பர் ஓன்.

பாட்ஷாவும் முத்துவும், அருணாச்சலமும் படையப்பாவும் அந்தந்த நேரத்தில் அரசியல் பரபரப்புகளால் நெருக்கடியை சந்தித்தன. பல நேரங்களில் அரசியல் பரபரப்புகள், படத்தின் வசூலுக்கு காரணமாகவும் இருந்தன. பாட்ஷா, தமிழ் சினிமாவின் முக்கியமான ஆக்‌ஷன் படமாக அமைந்தது. பாட்ஷா பாணியில் திரைக்கதையை அமைத்துக்கொண்ட தமிழ்ப்படங்களாக குறைந்தபட்சம் 50 படங்களை குறிப்பிடலாம். படத்தின் திரைக்கதையில் ரஜினியின் பங்களிப்பு அதிகம் என்பதை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும், வசனகர்த்தா பாலகுமாரனும் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஒரு குடும்ப டிராமா படத்தை, ஆக்‌ஷன் படத்தை மிஞ்சுமளவுக்கு பரபரப்பாக எடுக்கமுடியும் என்பதை படையப்பா நிரூபித்தது. படையப்பா, தமிழ் சினிமாவின் பல சாதனைகளை உடைத்தெறிந்தது. 86 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய ஒரே படமானது.  படையப்பாவை மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்ட நரசிம்மா கூட, ஆந்திரப் பிரதேசத்தில் 49 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தது.

பாபாவின் தோல்வி இன்றும் பேசப்படும் விஷயம். பாபாவின் சமகாலத்து வெற்றிப்படங்களான விக்ரமின் ஜெமினி, விஜயின் கில்லியை விட அதிகமான வசூலைப் பெற்றிருந்தாலும் ரஜினியின் தோல்விப்படங்கள் வரிசையில் பாபா சேர்க்கப்பட்டதற்கு ஒரே காரணம், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதுதான். பாபாவுக்கு முன்னரே ரஜினி படங்களுக்கான வெற்றி, தோல்வி அளவுகோல் மாறிப்போயிருந்தது. பாபாவின், ஆன்மீக நெடி ரசிகர்களுக்கு பிடிக்காததால் ரஜினியின் அடுத்தபடம் பாட்ஷா போன்ற ஆக்‌ஷன் படமாக மட்டுமே இருக்க முடியும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.

முதல்முறையாக தன்னை முன்னிலைப்படுத்தாமல் சந்திரமுகி என்னும் பெயரிட்டு பரபரப்பான த்ரில்லரோடு வந்தார் ரஜினி. நான் யானை அல்ல, குதிரை. விழுந்தா, சட்டுன்னு எழுந்துடுவேன் என்று ரஜினி பேசியது, படத்தில் பேசிய பஞ்ச் டயலாக்கை விட பெரிய வரவேற்பைப் பெற்றது. சந்திரமுகியின் சாதனையால் தமிழகம் மட்டுமல்ல தென்னகமே அதிர்ந்தது. படையப்பாவின் சாதனையை முறியடித்து, 156 திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்த படமாகவும், தென்னிந்திய சினிமாவிலேயே அதிக பட்சமாக 804 நாட்கள் ஓடிய படமாகவும், ஒரு மாபெரும் சாதனையைப் படைத்தது.

சந்திரமுகியின் வெற்றியைத் தொடர்ந்து, இன்னொரு  பெரிய வெற்றி சாத்தியமில்லை என்றுதான் கருதப்பட்டது. 60 வயதைத் தொட்ட ரஜினியால் இனி சந்திரமுகியை மிஞ்சி என்ன செய்யமுடியும் என்கிற கேள்வியில் நியாயம் இருந்தது. ஷங்கர் கைகொடுத்தார். சிவாஜி, ரஜினி பட வசூலை 100 கோடிகளுக்கு நகர்த்தியது. ரஜினியால் இன்னுமொரு 100 படங்களில் நடிக்கமுடியும் என்கிற நம்பிக்கையையும் தந்தது.

சிவாஜி, எந்திரன் என அடுத்தடுத்த அதிர்வெடிகளின் மூலம் ரஜினி படங்களின் வியாபார எல்லை விரிவடைந்தது. ரஜினி பட அறிவிப்பு தலைப்புச்செய்தி ஆன காலம் போய், ரஜினி படத்தைப் பற்றிய ஒவ்வொரு செய்தியும் தலைப்புச் செய்திகளானது.

கபாலி, ரஜினி படங்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பைச் சந்தித்த படம். தாடி வைத்த ரஜினியின் ஒற்றை ஸ்டில், கபாலி  என்னும் சுனாமியின் முதல் அலையை ஆரம்பித்து வைத்தது. படம் பற்றிய ஒவ்வொரு துணுக்குச் செய்திகளும் வாட்ஸ் அப்பில் உலா வந்தன. ஒரு சாதாரண நாளில் இந்தியா முழுவதும் 3200 திரையரங்குகளில் வெளியான கபாலி, முதல் நாளில் மட்டும் ஏறக்குறைய 70 கோடி ரூபாயை வசூலித்து, இந்திய சினிமாவில் ஒரு புதிய வசூல் சாதனையை படைத்தது.

ஏற்கனவேமுத்துவின்மூலம்வசமானஜப்பானைத்தொடர்ந்து, கபாலியின்மூலம்மலேசியாவையும்வசப்படுத்தியிருக்கிறார்ரஜினி.  எப்படிப்பார்த்தாலும், கபாலிக்குபிந்தையஎந்தவொருரஜினிபடத்தையும்தமிழ்ப்படமாகஅடையாளப்படுத்தமுடியாது. நிச்சயம், இந்தியப்படமாகவும்அடையாளப்படுத்தமுடியாது. அதையும்தாண்டி, கிழக்காசியதிரைப்படமாகத்தான்கருதவேண்டியிருக்கிறது

நவம்பர், 2016.