தெறி படத்தில் விஜய் 
சிறப்புப்பக்கங்கள்

விஜய்யின் அர்ப்பணிப்பும் அஜீத்தின் அக்கறையும்!

ஜெகன் கவிராஜ்

எதையும் வெளிப்படையாகப் பேசும் மறைந்த இயக்குநர் ஒருவர் துரத்தல் காட்சி ஒன்றைப் படமாக்கிக் கொண்டிருந்தார். இயக்குநர் சொன்ன காட்சியமைப்பை உள்வாங்கி அந்தப்படத்தின் சண்டைப்பயிற்சி இயக்குநர் ஃபைட்டர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். படத்தின் ஹீரோ ஓர் ஓரமாக இருந்தார். ஹீரோ போலவே ஆடைகள் போட்டிருந்த இன்னொரு ஃபைட்டர் ஷாட் ரெடி என்றதும் உயரமான இடங்களில் பாய்ந்து ஏறினார்.

யூனிட் மொத்தமும் அந்த டூப் கலைஞரை வியந்து பார்த்தபடி இருந்தது. ஹீரோவும் மனதிற்குள், ‘ரசிகனுக்கு இதை எல்லாம் நாம் செய்வதாகத் தானே தோன்றும்' என்ற சின்ன சந்தோஷம். அந்தக் காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டது. டூப் கலைஞரை எல்லோரும் பாராட்டினார்கள். அந்த ஹீரோ , படத்தின் இயக்குநரிடம், ‘என் டூப் நல்லா பண்ணான்ல!' என்றார். உடனே அந்தக் குசும்பு பிடித்த இயக்குநர், ‘யோவ் அவன் தான்யா ஒரிஜினல். நீதான் டூப்பு' என்று கலாய்த்தார். அந்த இயக்குநர் விளையாட்டாகச் சொல்லியிருந்தாலும் அதில் நிஜம் இருக்கிறது. ஒரிஜினலாக சாகசத்தை நிகழ்த்துவது அவர்கள் தானே! அதேநேரம் சில காட்சிகளில் சம்பந்தப்பட்ட நடிகர்களே டூப் வேண்டாம் என்று சொல்லும் சம்பவங்களும் உண்டு. டூப் கலைஞர்களுக்கும் நம் ஹீரோக்களுக்குமான ஸ்பாட் பந்தம் எப்படி இருக்கும்? என்பதை அறிய ரஜினி, கமல் ஆகியோருக்கு டூப் போட்டு நடித்த, தற்போது ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கும் விஜய்யிடம் பேசினோம்.

‘விஜயகாந்த் சாரோட திரைவாழ்வில் சின்னக்கவுண்டர் மிக முக்கியமான படம். பட்டிதொட்டி எங்கும் பெரும் ஹிட்டடித்த அப்படத்தில் ஒரு மாட்டு வண்டி சண்டைக்காட்சி உண்டு.

அந்த சண்டைக்காட்சியில ஒரு சண்டைக் கலைஞர் விஜயகாந்திடம் அடிவாங்கி விழுவதாக ஷாட். அந்தக் காட்சியில் எக்குத்தப்பாக விழுந்த அவரது தலை நெட்டுக்குத்தாக மணலில் இறங்கி விட்டது. அந்த ஒரு கணத்தில் படக்குழு மொத்தமும் பதறிவிட்டது. விஜயகாந்த் சார் உடனே துரிதமா செயல்பட்டார். அவருக்கு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அதுவும் தனது பேமிலி டாக்டரை அழைத்து உதவி செய்தார். அந்தச் செலவுகளையும் அவரே பார்த்துக் கொண்டார். அது அவருமேல் பெரிய மரியாதையை உருவாக்கிடுச்சி.

அதேபோல் அண்ணாமலை படத்தில் ரஜினி சார் கண்ணாடியை உடைத்து வருவது போன்ற சண்டைக்காட்சி ஒண்ணு வரும். அந்தக் காட்சிக்கு நான் தான் டூப்பு. இளமை வேகத்தில அப்ப நான் டப் டப்னு கண்ணாடியை உடைச்சேன். ரஜினி சார் கெட்டப்லே நின்னு பண்ணும் போது எனக்குள்ள நானே ரஜினியா மாறிட்ட மாதிரி feel. அந்த ஷாட் ரொம்ப சூப்பரா வந்தது. உடனே ரஜினி சார் என்னைக் கூப்பிட்டு, ‘என்னப்பா நீ...இவ்ளோ சூப்பரா பண்ற...Good Good' னு சொன்னார்.. எனக்கு அப்படியே வானத்துல மிதக்குறதா இருந்துச்சு. ஏன்னா எங்க கிட்ட பெரும்பாலும் ஸ்பாட்ல ஹீரோக்கள் பெருசா பேசமாட்டாங்க. எதும் டவுட்னா கூட ஸ்டண்ட் மாஸ்டர்ட்ட தான் கேப்பாங்க.. அதனால ரஜினி சார் அப்படி பேசுனது ஆச்சர்யமா இருந்துச்சு. இதேபோல் கமல் சாரும் ஒரு விசயம் செய்தார்.

தேவர் மகன் படத்தில் நாசர் சாரிடம் கமல் சார் அடிவாங்கும் ஃபைட் சீன் ஒன்று. அந்தக் காட்சியில் கமல் சாரின் டூப் நான் தான். நாசர் சாரிடம் அடிவாங்கி கீழே விழுந்தேன். அந்தக் காட்சி எமோஷனலான சண்டைக்காட்சி என்பதால் எல்லோரின் கவனமும் காட்சியில் மட்டுமே இருந்தது. கமல் சார் வேடத்தில் நான் விழும் போது என் முதுகில் ஒரு இரும்பு கிழித்து ரத்தம் வழிந்திருக்கிறது. காட்சி நன்றாக வரும் திருப்தியில் நான் முதுகில் வழியும் குருதியை கவனிக்கவில்லை. கமல் சார் போலவே கெட்டப்பில் இருக்கும் என் வெள்ளைச்சட்டையில் ரத்தம் கொட்டுகிறது. வெள்ளைச்சட்டை ரத்தச் சட்டையாக மாறுகிறது. இதனை தூரத்தில் இருந்த கமல் சார் கவனித்து ஓடோடி வந்தார். அவர் தனக்கு ஏதேனும் காயம்பட்டால் போட்டுக்கொள்வதற்காக ஒரு வெளிநாட்டு மருந்தை வைத்திருந்தார். அதை உடனே எனக்குத் தந்து முதுகில் போடச்சொன்னார். மருந்தைக் கையில் வைத்துக்கொண்டு பேந்த பேந்த விழித்தேன். அதைக் கவனித்தவர், மருந்தை அவர் கையாலே எனக்கு போட்டுவிட்டார். யூனிட்டில் உள்ள அனைவரும் பார்க்கும்படி அவர் எனக்கு மருத்துவம் பார்த்தது வலியை மறந்து என்னை சந்தோசப்பட வைத்தது,' ஸ்டண்ட் மாஸ்டர் விஜய்யின் வார்த்தையில் இப்பவும் பெருமிதம் மின்னுகிறது.

விஜயைப் போலவே ஸ்டண்ட் கலைஞரான விக்ரம் சொன்ன செய்திகளும் படு சுவாரஸ்யம் மிகுந்தவை. பாட்ஷா படத்தில் ரஜினியிடம் அடி வாங்கும் சண்டைக்கலைஞராக விக்ரமின் சித்தப்பா வெற்றிவேல் இருந்துள்ளார். அப்போது சிறு பையனாக இருந்த விக்ரம் ரஜினி போலவே மழலை மொழியில் டயலாக் பேசுவாராம். இதை வெற்றிவேல் ரஜினியிடம் சொல்ல, ரஜினி, செல்லமாக அந்தப் பையனை வாழ்த்தினார். காலம் செல்ல..ரோபோ பட ஷுட்டிங் ஸ்பாட். வெற்றிவேல் முதன்மை உதவி சண்டைக்கலைஞர். அப்போது ரஜினிக்கு டூப் ஆக ஒரு இளைஞன் ரஜினி முன் நிற்கிறான். வெற்றிவேல் ரஜினியிடம், ‘சார் பாட்ஷா பட ஷூட்ல உங்களை மாதிரியே ஸ்டைல் பண்ண பொடியன் இவன் தான்' எனச்சொல்ல ஆச்சர்யப்பட்ட ரஜினி, ‘என்னடா என்னை மாதிரி நடிச்சி நடிச்சி எனக்கே டூப்பா வந்துட்டியா?' என்று சொல்ல, விக்ரம் நெகிழ்ந்து போனாராம். ரஜினியுடன் உள்ள அனுபவம் போலவே விஜய், அஜித், ஜெயம் ரவி ஆகியோரிடம் பணியாற்றிய அனுபவத்தையும் பகிர்கிறார் விக்ரம்.

‘எங்க பேமிலியே ஸ்டண்ட் பேமிலி தான். அப்பா பெயர் தளபதி. அவரும் மாஸ்டர் தான். எனக்கு ஸ்டண்ட்ல மறக்க முடியாத அனுபவங்கள் நிறைய இருக்கு. மங்காத்தா பட ஷுட்ல நான் செம்ம பிட்-ஆ இருப்பேன்..பாலிங் ரோலிங்லாம் ஈசியா செய்வேன். அது அஜித் சாரோட ஓப்பனிங் சீன் பைட். எங்களுக்கு ஷில்வா மாஸ்டர் சொல்லித்தர நாங்க சண்டைக் கலைஞர்கள் எல்லாம் ரிகர்சல் பார்த்துக்கிட்டிருந்தோம். கேமரா ஆன் பண்ண பிறகு எப்படி பண்ணுவோமோ அதேபோல் ஒரிஜினலாகவே விழுந்து ரிகர்சல் பண்ணோம். அப்போ அங்க வந்த அஜித் சார், மாஸ்டரை கூப்பிட்டு, ‘ ரிகர்சல்ல ஏன் இப்படி ஒரிஜினலா விழ வைக்கிறீங்க.. காட்சி வரிசையை மட்டும் தெளிவா சொல்லிட்டு டேக் போகலாம். சும்மா சும்மா அவங்களை விழ வைக்கவேண்டாம்' என்றார். இதுவே பெரிய விசயம். ஆனால் இதுக்கு அடுத்து ஒரு விசயம் செய்தார் அஜித் சார். அதுதான் மறக்கவே முடியாது. காட்சிப்படி அவரிடம் அடிவாங்கி பொத் என்று தரையில் விழ வேண்டியது நான். அப்போது என்னை தோளில் தட்டி ஊக்கப்படுத்திய அஜித் சார் என் முதுகில் சேப்டி பேரிங் இல்லாததை கவனித்து விட்டார். ஃபைட்டர்ஸ் தரையில் விசையுடன் விழும் போது சேப்டி பேரிங் போடுவது வழக்கம். எங்களில் சிலர் போடாமலும் நடிப்போம். அன்று அந்த ஸ்பாட்டில் மற்ற உபகரணங்கள் எதுவும் வைக்க முடியாது என்பதால் பேரிங்கை எடுத்து வரவில்லை. அது ஸ்பாட்டிலிருந்து தூரமான இடத்தில் இருந்தது. அதனால் நான் அஜித் சாரிடம், ‘பரவாயில்ல சார்..ஒண்ணும் பிரச்னை இல்ல. அதை எடுத்துட்டு வர்றதுக்கு டைம் ஆகும். டேக் போயிடலாம்,' என்றேன். அஜித் சார் ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு ஒரு வண்டியை அனுப்பி சேப்டி பேரிங்கை எடுத்து வந்தார்கள். நான் அதை மாட்டிய பிறகு தான் அந்தச் சண்டைக்காட்சியை படமாக்க அஜித் சார் சம்மதித்தார். இப்படி ஒரு சாதாரண காட்சியில் கூட நாம் காயப்படக்கூடாது என்று அவர் நினைப்பார். ‘உனக்கு உடம்பு தான் மூலதனம். அதை கவனமா பார்த்துக்க.. உன் உடம்பு நல்லாருந்தா தான் உன்னை வேலைக்கே கூப்பிடுவாங்க‘ என்று அக்கறையோடு அஜித் சார் சொன்னார். நெகிழ்வா இருந்துச்சு..

விஜய் சாரைப் பொருத்தவரை பெரும்பாலான சண்டைக்காட்சிகளில் அவரே ரிஸ்க் எடுப்பார். அவருக்கு சண்டைக்காட்சிகளில் ரிஸ்க் எடுப்பது ரொம்ப பிடிக்கும். திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா பாட்டில் ஒரு ஜம்பிங் காட்சி இருக்கும். அதற்கு விஜயின் அப்பா எஸ்.ஏ.சி சார், ‘டூப் வச்சு பண்ணுங்க..அவரைப் பண்ண வச்சுடாதீங்க‘ என்று சொன்னாராம். ஆனா விஜய் சார் அப்பா போனதும் அந்தக் காட்சியை படமாக்கச் சொல்லி தானே செஞ்சுட்டாராம். இது எங்க டீம் சொன்ன தகவல். குருவி படத்தில் நிறைய காட்சிகள் அவரே தான் செய்தார். அதை நானே அருகில் இருந்து பார்த்திருக்கேன். இதைவிட அவர் எடுத்த பெரிய ரிஸ்க் என்ன தெரியுமா?

தெறி படத்தில் ஜோசப் குருவிலா என்ற பெயரில் வரும் விஜய் ஆற்றுக்குள் குதிக்கும் ஒரு காட்சி. அதற்கு ஸ்டண்ட் மாஸ்டர் முதல் படக்குழு மொத்தமும் டூப் தான் செய்ய வேண்டும் என்று உறுதியாகச் சொன்னார்கள். சற்றுநேரம் யோசித்த விஜய், ‘இல்ல இது மகள் செண்டிமெண்ட் காட்சி. அப்பாவான நானே குதிச்சா தான் சீன் டெப்த்தா இருக்கும்' என்று எல்லோர் எதிர்ப்பையும் மீறி அவரே செய்தார். இப்படி சண்டைக்காட்சிகளில் கூட முழு அர்ப்பணிப்பை கொடுக்கும் நடிகர் அவர். பீஸ்ட் பட ஷூட்டிங் போது பில்டிங் விட்டு பில்டிங் தாவும் காட்சிகள் தவிர்த்து மீதி எல்லாக் காட்சிகளிலும் டூப் இன்றி அவராக தான் செய்தார். சர்கார் படத்தில் இடம்பெற்ற இடைவேளை பைட்டில் எல்லாம் ஒரு ஷாட்டுக்கும் டூப் போடவில்லை. அதேபோல் பைட் சீக்வென்ஸ் மொத்தமாக முடிந்ததும் விஜய் சார் பைட்டர்ஸ் எல்லோருக்கும் பர்ச்சேஸ் அமௌண்ட் என ஒரு கணிசமான தொகையை தருவார். அதை எங்க டீம் செம்ம ஜாலியாக பிரித்து எடுத்துப்போம். மேலும் குடும்பம் பற்றியெல்லாம் அக்கறையாக விஜய் சார் விசாரிப்பார்.

இளம் ஹீரோக்களில் ஜெயம் ரவி மிகவும் துணிச்சலான நடிகர். போகன் படத்தின் ஒரு சண்டைக்காட்சியை சென்னையில் உள்ள பின்னிமில்லில் எடுத்தார்கள். அந்தக் காட்சியில் பில்டிங் மேல் ஓடவேண்டும். சரியான பாதுகாப்பு இல்லை. அதனால் டூப் போடலாம் என நாங்கள் தயாராகிவிட்டோம். ஜெயம் ரவி சார் கேட்கவே இல்லை. நானே பண்ணுவேன் என்று அவரே செய்தார். துரதிஷ்டவசமாக அன்று அவர் கீழே விழுந்துவிட்டார். காலில் பலத்த காயம். மூன்று நாள் படிப்பிடிப்பை நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று. பின் மீண்டும் படிப்படிப்பைத் தொடங்கினோம். நான் ஜெயம் ரவி கெட்டப்போடு அவருக்குப் பதில் பில்டிங் மேல் ஓட ரெடியாக நின்றேன். ஆனால் ஜெயம்ரவி என்னைச் செய்ய விடவில்லை. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நானே பண்ணுவேன் என்று சிறப்பாக செய்தார். இப்படி அவர் ரிஸ்க் எடுக்கத் தயாங்காதவர்‘ என்றார் ஸ்டண்ட் நடிகர் விக்ரம்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு இந்த ஸ்டண்ட் கலைஞர்கள் மீது தனிப்பாசம். இயல்பிலே வீரக்கலைகள் மீது பிரியமுள்ள எம்.ஜி.ஆர் ஸ்டண்ட் கலைஞர்கள் வாழ்வில் ஒரு முக்கியமான விசயத்தைச் செய்தார். அவர்தான் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு என்று ஒரு யூனியனை துவங்க வைத்தார். இன்று அந்த யூனியன் தான் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு உறுதிமிக்க பாதுகாவலனாக செயல்பட்டு வருகிறது.

திரையில் ஹீரோக்களுக்கு மாஸ் மொமெண்ட்களை ஏற்படுத்தித் தரும் இந்த ஸ்டண்ட் கலைஞர்களை மக்கள் யாருக்கும் தெரியாது. யாரோ ஒரு ரசிகன் குறிப்பிட்ட சண்டைக்காட்சியை வியந்து பாராட்டும் போது சம்பந்தப்பட்ட நடிகரை தாமாக பாவித்துக் கொண்டு மனதுக்குள் மகிழ்வான் ஒவ்வொரு ஸ்டண்ட் கலைஞனும்.