இந்தியாவின் முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மரணமடைந்த செய்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியிருக்கிறது. அவருடன் சேர்ந்து ஹெலிகாப்டரில் பயணம் சென்ற அவருடைய மனைவி மதுலிகா ராவத்துடன் மேலும் 12 அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.
எப்படி நடந்தது இந்தக் கொடூரம்? ஹெலிகாப்டர் விபத்துக்கு முதன்மையான காரணம் என்ன?
சர்வதேச தரமிக்க, ஏராளமான பாதுகாப்பு வசதிகள் நிரம்பியதாகச் சொல்லப்படும் MI 17 V5 ரக ஹெலிகாப்டர் விபத்தைத் தவிர்க்கமுடியாமல் போனது எப்படி? மோசமான வானிலைதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா? என்பன போன்ற கேள்விகள் அடுத்தடுத்து எழுந்திருக்கின்றன.
இந்தியாவில் விமான விபத்து என்று சொன்னதும் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களுள் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மட்டுமே. அவருக்குப் பின்னால்தான் மற்ற அனைவருமே நினைவுக்கு வருவார்கள்.
இந்தியாவில் சுதந்தரப் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த தருணம் அது. 1945 ஆகஸ்டு 18 அன்று ஒரு செய்தி வெளியானது. தைவானில் நடந்த விமான விபத்து ஒன்றில் நேதாஜி மரணம் அடைந்து விட்டார் என்பதுதான் அந்தச் செய்தி. ஜப்பான் வானொலியில் வெளியான அந்தச் செய்தி இந்தியாவில் மிகப்பெரிய பதற்றத்தையும்
அச்சத்தையும் ஒருசேர ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த தேசமும் நேதாஜியின் மரணம் பற்றியே பரபரப்புடன் விவாதித்தன.
பிறகு அந்த விபத்தில் நேதாஜி மரணமடைய- வில்லை என்றும், நல்வாய்ப்பாக உயிர்பிழைத்து விட்டார் எனவும் மறுப்புச் செய்திகள் வந்தன. முத்துராமலிங்க தேவர் போன்றோர் நேதாஜி உயிருடன் இருப்பதாகக் கூறினார்கள். இப்படி, நேதாஜி குறித்த செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருந்ததால், அதுபற்றி விசாரிக்க ஷாநவாஸ் கமிட்டி, கோஸ்லா கமிஷன், நீதிபதி முகர்ஜி கமிஷன் என்று பலவும் வெவ்வேறு தருணங்களில் நியமிக்கப்பட்டு, விரிவான விசா ரணை நடத்தப்பட்ட பிறகும் நேதாஜியின் மரணம் இன்றுவரை மர்ம மரணமாகவே இருக்கிறது.
நேதாஜியின் விமான விபத்துக்கு முன்பு ஒரு விமான விபத்து இந்தியாவுக்கு வெளியே நடந்தது. அது நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவரான ஏ.டி.பன்னீர்செல்வத்தை பலிவாங்கியிருந்தது. ஆம். 1940 பிப்ரவரி இறுதியில் லண்டன் செல்வதற்காக விமானத்தில் புறப்பட்டிருந்தார் ஏ.டி.பன்னீர் செல்வம். கராச்சியில் இறங்கியபிறகு அங்கிருந்து பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் விமான தாமதம் காரணமாக லண்டன் செல்வது தள்ளிப்போகிறது என்று எழுதியிருந்தார். பிறகு 1940 மார்ச் முதல் தேதியன்று ஒரு செய்தி வந்தது.
ஏ.டி.பன்னீர்செல்வம் பயணம் செய்த ஹனிபால் என்ற விமானம் ஓமன் தீபகற்பத்தில் காணாமல் போய்விட்டது என்பதுதான் அந்தச் செய்தி. அந்த விமானத்தில் ஏ.டி.பன்னீர்
செல்வம், நான்கு ராணுவ அதிகாரிகள், மூன்று பிரிட்டிஷ் அதிகாரிகள் பயணம் செய்திருந்தனர். இன்றுவரை அந்த விமானம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
1973 மே 31 அன்று இரவு சென்னையிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் போயிங் விமானத்தில் 65 பேர் இருந்தனர். டெல்லியை அடைவதற்கு அரைமணி நேரம் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் விமான நிலையத்துடன் விமானத்துக்கு இருந்த தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. அடுத்த சில நொடிகளில் விமானம் கீழே விழுந்து, தூள் தூளாக நொறுங்கியது.
அந்த விமானத்தில் மத்திய இரும்பு மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் மோகன் குமாரமங்கலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலதண்டாயுதம், மத்திய இணை அமைச்சர் பாலகோவிந்த வர்மா, இந்திரா காங்கிரஸ் எம்.பி விஜயலட்சுமி உள்ளிட்டோர் பயணம் செய்திருந்தனர். விபத்தைத் தொடர்ந்து அதில் பயணம் செய்த மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம், பாலதண்டாயுதம் எம்.பி உள்ளிட்ட 48 பேர் கருகி உயிரிழந்தனர்.
காதுகேட்கும் கருவியை வைத்தே அமைச்சர் மோகன் குமாரமங்கலத்தின் உடல் அடையாளம் காணப்பட்டது. கடைசிவரை பாலதண்டாயுதத்தின் உடல் எது என்பதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அந்த விபத்து நிகழ்ந்த மூன்று ஆண்டுகளில் மற்றொரு விமான விபத்துக்கு பலியானவர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொன்னப்ப நாடார்.
அப்போது இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்தது. 1976 அக்டோபர் 10 அன்று நடக்கவிருந்த மாநாட்டில் பங்கேற்க எட்டாம் தேதி பம்பாய் புறப்பட்டார் அவர். மாநாட்டை முடித்துக்கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஏதுவாக, சென்னைக்குப் புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறினார் பொன்னப்ப நாடார்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென தீப்பற்றியது. அடுத்த சில நிமிடங்களிலேயே விமானம் முழுதாகப் பற்றி எரிந்து, விமானத்தின் முகப்புப்பகுதி தரையில் மோதவே, அதில் பயணம் செய்த பொன்னப்ப நாடார் உள்ளிட்ட அத்தனை பேருமே கருகி உயிரிழந்தனர். அந்த விமான விபத்தில் பொன்னப்ப நாடார் மட்டுமல்ல, பத்ரகாளி என்ற படத்தில் நடித்த நடிகை ராணி சந்திரா தனது தாயார் மற்றும் மூன்று சகோதரிகளுடன் உயிரிழந்தார்.
அந்த விபத்துக்குப் பிறகு நிகழ்ந்த பெரிய விமான விபத்து என்று சஞ்சய் காந்தியின் விமான விபத்தைச் சொல்லலாம். இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகனான சஞ்சய் காந்தி, ஆரம்ப காலத்தில் கார் காதலனாக இருந்தவர் திடீரென விமானத்தின் மீது கவனம் செலுத்தத் தொடங்கினார்.
நன்றாக விமானம் ஓட்டப் பழகிய சஞ்சய் காந்தி 23 ஜூன் 1980 அன்று விமானப் பயிற்சியாளர் கேப்டன் சுபாஷ் சக்சேனாவுடன் பிட்ஸ் ரக விமானத்தில் புறப்பட்டார். காலை எட்டு மணிக்குப் புறப்பட்ட சஞ்சய், வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில், வெலிங்டன் க்ரஸ்ட் என்ற இடத்துக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்த தருணத்தில் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. மூன்று முறை அந்தப் பகுதியில் வட்டமிட்ட விமானம், திடீரென தரையை நோக்கி வேகமாக இறங்கத் தொடங்கியது. சில நொடிகளில் விமானத்தின் முகப்புப்பகுதி தரையில் மோதவே, சுக்குநூறாகச் சிதறியது விமானம்.நொறுங்கிப் போன விமானத்துக்குள்ளே ரத்த வெள்ளத்தில் கிடந்தார் சஞ்சய் காந்தி.
பிரதமர் இந்திரா காந்தியை மட்டுமல்ல, இந்தியாவையே உலுக்கிய நிகழ்வு அது.
அதன்பிறகு அவ்வப்போது விமான விபத்துகள் நிகழ்ந்தபோதும் தொண்ணூறுகளில் மத்தியில் இமாச்சல பிரதேசத்தில் நடந்த விமான விபத்தில் பஞ்சாப் மாநில ஆளுநர் சுரேந்திர நாத் மரணம் அடைந்தது அதிர்ச்சியூட்டும் நிகழ்வு. 1994 ஜூலை ஒன்பதாம் தேதி தனது குடும்ப உறுப்பினர்கள் ஒன்பது பேருடன் அரசுக்குச் சொந்தமான சூப்பர் கிங் விமானத்தில் பயணித்தார் ஆளுநர் சுரேந்திர நாத். அப்போது ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தைச் சந்தித்தது. அதில் சுரேந்திரநாத் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினர் மோசமான முறையில் உயிரிழந்தனர்.
மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் ஒருவர் வான்வெளி விபத்தில் மரணமடைந்தது 1997 ஆம் ஆண்டில்தான். ஏற்கெனவே பிரதமர் தேவே கௌடா அமைச்சரவையிலும், அதன்பிறகு பிரதமர் ஐ.கே.குஜ்ரால் அமைச்சரவையிலும் ராணுவத்துறை இணை அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த என்.வி.என்.சோமு.
1997 நவம்பர் 13 அன்று ராணுவப் பணி நிமித்தமாக டெல்லியில் இருந்து கொல்கத்தா வழியாக அருணாச்சல பிரதேசத்துக்கு விமானத்தில் சென்றார் மத்திய இணை அமைச்சர் என்.வி.என்.சோமு. மறுநாள் காலை எட்டரை மணி அளவில் அருணாச்சலப்பிரதேசத் திலிருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான
சேடக் ரக ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அடுத்த அரை மணி நேரத்துக்குள் அமைச்சர் என்.வி.என்.சோமு பயணம் செய்த ஹெலிகாப்டருக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே இருந்த தொடர்பு அறுந்தது.
மத்திய அமைச்சர் சென்ற ஹெலிகாப்டர் என்னவானது என்ற கேள்வி எழுந்தது. தேடுதல் பணிகள் தீவிரமடைந்தது. சுமார் மூன்று மணி நேரத் தேடலுக்குப் பிறகு நண்பகல் 12 மணி அளவில் அது விபத்துக்குள்ளாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அடர்ந்த காட்டுப்பகுதியில் விழுந்து கிடந்தது கண்டறியப்பட்டது
விபத்தில் மத்திய அமைச்சர் என்.வி.என்.சோமுவும் அவருடன் பயணம் செய்த மேஜர் ஜெனரல் ஆர்.சி.நாக்பால், விமானப் படையைச் சேர்ந்த விமான ஓட்டிகள் அகர்வால், சர்மா ஆகியோரும் உயிரிழந்தனர். பின்னர் விபத்து நடந்த இடத்திலிருந்து தேஜ்பூருக்குக் கொண்டுவரப்பட்ட அமைச்சர் என்.வி.என்.சோமுவின் உடல் விமானப்படை விமானத்தில் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது. மத்திய ராணுவத்துறை இணை அமைச்சர் ஒருவர் ராணுவம் சார்ந்த பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கி மரணம் அடைந்தது அதிர்ச்சியூட்டும் நிகழ்வு.
அந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வுக்குப் பிறகு நடந்த குறிப்பிடத்தக்க விமான விபத்து என்று முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியா எதிர்கொண்ட விமான விபத்தைச் சொல்லவேண்டும். மத்திய ரயில்வே அமைச்சர், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் இருந்த மாதவராவ் சிந்தியா 2001 செப்டெம்பர் 30 அன்று பீச்கிராஃப்ட் கிங் ஏர் சி 90 ரக விமானத்தில் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஏழு பேருடன் பயணம் செய்தார்.
அந்த விமானம் உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்பூரி மாவட்டத்தில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றிக்கொண்டது. அதன் காரணமாக விமானத்தில் பயணம் செய்த மாதவராவ் சிந்தியா, அவருடைய தனி உதவியாளர் ரூபிந்தர் சிங், இந்தியன் எக்ஸ்பிரஸின் சஞ்சீவ் சின்ஹா, இந்துஸ்தான் டைம்ஸின் அஞ்சு ஷர்மா, ஆஜ் தக்கின் கோபால் பிஷ்ட், ரஞ்சன் ஜா, விமான ஓட்டிகள் ரே கௌதம், ரிது மாலிக் ஆகிய அனைவருமே கருகி உயிரிழந்தனர். மாதவராவ் சிந்தியா அணிந்திருந்த துர்கா டாலரைக் கொண்டே அவரது உடலை குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.
மாதவராவ் சிந்தியாவின் விமான விபத்து மரணம் ஏற்படுத்திய பரபரப்பும் பதைபதைப்பும் அடங்கி சில மாதங்கள் ஆவதற்குள் இந்திய நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த ஜி.எம்.சி.பாலயோகியின் மரணம் நடந்தேறியது. அதுவும் வான்வெளியில் நிகழ்ந்த விபத்துதான்.
இது நடந்து சில ஆண்டுகளில் ஆந்திராவுக்கு மற்றொரு அதிர்ச்சி அந்த மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மூலம் வந்து சேர்ந்தது.
ஆந்திர முதலமைச்சராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2009 செப்டெம்பர் 3 அன்று ஹைதராபாத்தில் இருந்து சித்தூருக்கு ஹெலிகாப்டரில் புறப்படார். அது கர்னூலைத் தாண்டிய சில நொடிகளில் திடீரென திசைமாறி ஆத்மகூரை நோக்கிச் செல்லத் தொடங்கியது. அடுத்த சில நொடிகளில் ஹெலிகாப்டருக்கும் விமான நிலையத்துக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதனால் முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது.
பிறகு நடந்த தீவிரத் தேடுதலுக்குப் பிறகு வேலுகோடு என்ற கிராமத்துக்கும் மற்றொரு கிராமத்துக்கும் இடையே பறந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே இருந்த குன்றின் மீது மோதி நொறுங்கிக் கிடந்தது அந்த ஹெலிகாப்டர். சுமார் 24 மணி நேரத் தேடலுக்குப் பிறகே அந்த ஹெலிகாப்டரைக் கண்டறிய முடிந்தது. குன்றின் மீது மோதியிருந்ததால் ஹெலிகாப்டர் சிதறிக்கிடந்தது. அதன்பிறகுதான் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி, அவருடைய சிறப்பு செயலாளர் சுப்ரமணியன், தலைமைப் பாதுகாப்பு அதிகாரி வெஸ்லி உள்ளிட்டோர் இறந்துபோனது தெரியவந்தது.
முதலமைச்சராக இருந்தபோது வான்வெளி விபத்தில் ராஜசேகர ரெட்டி மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மற்றொரு மாநில முதலமைச்சரான டோர்ஜி காண்டுவும் வான்விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அருணாச்சல பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த டோர்ஜி காண்டு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக 2011 ஏப்ரல் இறுதிவாரத்தில் தவாங் என்ற இடத்தில் இருந்து தலைநகர் இடாநகர் நோக்கி ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.
புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஹெலிகாப்டருக்கும் கட்டுப்பாட்டு மையத்துக்குமான தொடர்பு அறுபட்டுப் போனது. தேடுதல் பணிகள் வேகமெடுத்தன. அப்போது முதலமைச்சர் பயணம் செய்த ஹெலிகாப்டர் பூடானில் தரையிறங்கியிருப்பதாகச் செய்திகள் வந்தன. ஆனால் அந்தச் செய்தி தவறானது என்று தெரியவந்தது. பிறகு ராணுவம் களமிறங்கி தேடத் தொடங்கியது.
சுமார் நான்கு நாட்கள் நடந்த தொடர் தேடலுக்குப் பிறகே அந்த ஹெலிகாப்டர் மீட்புப்படையினரின் கண்களில் அகப்பட்டது. அருகில் சென்று பார்த்தபோது முதலமைச்சர் டோர்ஜி காண்டுவின் உடல் சிதைந்த நிலையில் காணப்பட்டது. அவருடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களும் கருகி உயிரிழந்திருந்தனர். அருணாச்சல பிரதேச முதலமைச்சர் டோர்ஜி காண்டுவின் மரணம் அந்த மாநில மக்களை அதிர்ச்சியில் உறையவைத்த நிகழ்வு.
அதன்பிறகு வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு இடங்களில் நடந்த வான்வெளி விபத்துகளில் ஹரியானா மாநில மின்சாரத்துறை அமைச்சராக இருந்த ஜிண்டால், விவசாயத்துறை அமைச்சராக இருந்த சுரேந்திர சிங், நடிகை சௌந்தர்யா என்று பலரும் மரணமடைந்துள்ளனர். ஆனால் அந்த மரணங்களைத் தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியெடுத்த நிகழ்வு என்று இந்திய முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் ஹெலிகாப்டர் விபத்தைத் தான் சொல்லவேண்டும்.
ஜனவரி, 2022