சிறப்புப்பக்கங்கள்

வாட் இஸ் தி ப்ரோசீசர் டு சேஞ்ச் தி ரூம்?

அசோகன்

தனி அறைக்குள்

பயத்தை விசிறியடிக்கிறது

மின்விசிறி

(பெளத்த அய்யனாரின் மேன்ஷன் கவிதைகள் தொகுப்பிலிருந்து)

கொடூரமான வெயில் அடித்து இலை செடிகள் எல்லாம் பொசுங்கி பச்சை வாசம் வீசிக் கொண்டிருக்கும் வெய்யிற்காலம் ஒன்றில் டெல்லிக்குப் போய் இறங்கினேன்; ஓராண்டுப் படிப்பிற்காக. நண்பர் ஒருவர் கல்லூரி விடுதி ஒன்றில் அதிகாரபூர்வமற்ற விருந்தினராகத் தங்கி இருந்தார். என்னையும் விருந்தினரின் விருந்தினராக அங்கே சேர்த்துக்கொண்டார்.

விடுதிக்காப்பாளருக்கு மட்டும் தெரியாமல் பார்த்துக்கொண்டால் போதும்; சமாளித்து சில நாட்கள் ஓட்டிவிடலாம். நகரம் பழகியபின்னர் வெளியே அறை எடுத்து தங்கிக் கொள்ளலாம் என்று எண்ணம். கல்லூரிக்குப் போய்வரத் தொடங்கிய பத்தாவது நாளில் கடுமையான ஜுரம். உடல் முழுக்க கொப்புளங்கள். என்னவென்று தெரியவில்லை. அதற்குள் விடுதியில் புதிய நண்பர்கள் உருவாகி இருந்தார்கள். அவர்களில் ஒருவர் மருத்துவரிடம் அழைத்துப்போனார். அவர் உனக்கு அம்மை போட்டிருக்கிறது என்று சொல்லி மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார்.  அவர்களுக்கு இப்போது அம்மை போட்டிருப்பவனை, அதுவும் திருட்டுத்தனமாக தங்கி இருப்பவனை தாங்கி சுமக்கவேண்டிய கட்டாயம். தொற்றுநோய் என்பதால் எல்லோருக்கும் தொற்றிக்கொள்ளும் அபாயம் வேறு. அவர்களே கலந்தாலோசித்து, ஒரு அறையைக் காலி செய்து கொடுத்து என்னை உள்ளே படுக்க வைத்துவிட்டனர். எல்லாம் வழக்கம்போல நடந்தது. காலை மாலை இரவு மூன்றுவேளையும் யாரோ ஒருவர் சாப்பாடு கொண்டுவந்து வைப்பார். ஐந்து நாட்கள் ஆகியது ஜுரம் விட. முகம், தலை, உடல் முழுக்க புண்கள். அவை ஓரளவு காயத் தொடங்கி இருந்த சமயத்தில் அகோரியைப் போல் ஒரு நாள் ரகசியமாக வெளியே வந்து பொதுக்குளியலறையில் பத்துநாட்களுக்குப் பின் என் முதல் குளியலை நிகழ்த்தினேன். ஒரு டப்பா நிறைய மஞ்சள் பொடியை ஒருவர் கொடுத்திருந்தார். தேய்த்துக் குளித்துவிட்டு யார் கண்ணிலும் படாமல் பம்மி பம்மி வந்து படுத்துக்கொண்டேன். ஒரு நாள் மதியம் எல்லோரும் கல்லூரிக்குப் போயிருந்த சமயத்தில் விட்டத்தை வெறித்துக்கொண்டு படுத்திருந்த நிலையில் யாரோ கதவைத் தட்ட, திறந்தால் விடுதிக் காப்பாளர்! என் கரும்புள்ளி செம்புள்ளி கோலம் கண்டு அவரே மிரண்டு போய், யாருடைய விருந்தாளி என்று மட்டும் கேட்டுவிட்டுப் போய்விட்டார். பிறகு எப்படியோ நண்பர்கள் அவரைச் சரிசெய்துவிட்டதாக அறிந்தேன். முன்பின் தெரியாத, சிலநாட்கள் மட்டுமே பழகிய ஒருவனுக்காக, தொற்றுநோய் எனும் அபாயத்தையும் தாண்டி உடனிருந்த மனங்கள், இதுபோன்ற விடுதிவாழ்க்கையில் மட்டுமே

சாத்தியமாகின்றன.

புதுடெல்லியில் தமிழர்கள் அதிகம் காணப்படும் பகுதி முனிர்கா. பக்கத்தில் அருணா ஆசப் அலி

சாலை ஓரமாக இருக்கும் பேர்சாரை கிராமத்தின் குறுகிய சந்துகள் வழியாகப் போனால் மேல் பூச்சு பூசப்படாத கட்டடம் ஒன்று. அங்கிருந்த சில பல ஆண்கள் விடுதிகளில் அதுவும் ஒன்று. தீப்பெட்டி போன்ற அறைகள். அறையில் இரு கட்டில்கள். கட்டிலுக்கு இரண்டாயிரம் வாடகை. ஓராள் மட்டுமே நுழையக்கூடிய பொதுக்கழிப்பறைகள். இதில் என்னை சேர்த்துவிட்டான் என் சக மாணவ நண்பன் ஒருவன். அவன் ஹிமாச்சல் மாநிலத்தைச் சேர்ந்தவன். வெளிச்சமே வராத மாதிரி விடுதியின் இரண்டாம் மாடியில் நடுப்பகுதி வரிசைகளில் இருந்த அறை ஒன்று ஒதுக்கப்பட்டது. ஒரே விஷயம் என்னுடன் அந்த அறையை பகிர்ந்துகொண்டிருப்பது யார் என்றுதான் தெரியவில்லை. நானோ சுத்தமாக இந்தியே தெரியாத அக்மார்க் தமிழன் என்பதால் நண்பன் இரு நானே விசாரித்துவிட்டு வருகிறேன் என்று போய்விட்டு வந்தான். திரும்பி வருகையில் அவன் முகம் இருண்டிருந்தது.

‘அரே... உன் ரூம் மேட் (உத்தரபிரதேசத்தில் ஒரு பகுதியைச் சொல்லி)... அந்த பகுதிக்காரனாம். அந்த ஊர்க்காரர்கள் மிக மோசமான ஆட்கள். வன்முறை என்றால் அவர்களுக்கு அல்வா

சாப்பிடுவதுபோல்.. அவன் நாட்டுத்துப்பாக்கி கூட ஏதாவது வைத்திருப்பான். எதற்கும் சூதானமாக இருந்துக்கோ' என்றான்.

எனக்கு இதயம் வேகமான மிக்ஸி போல் மாறி ஓட ஆரம்பித்து, ‘வாட் இஸ் தி ப்ரோசீசர் டு ச்சேஞ்ச் தி ரூம்?...' என கேட்க ஆரம்பித்தேன். மூடிட்டு போயிரு... வேற ரூம் ஏதும் இல்லை என்று விடுதி நிர்வாகியான லாலாஜி அன்பாகக் கூறிவிட்டார்.

ஐந்தாறு நாட்கள் ஆகின. அறையில் நான் மட்டுமே. என் ரூம் மேட் ஆளையே காணவில்லை.

ஒரு நாள் இரவு பத்துமணிக்கு மேல் அறை தட்டப்பட்டது. வெளியே நின்ற இளைஞன், நான் உங்கள் ரூம் மேட் என்று இந்தியில் சொன்னவாறு உள்ளே நுழைந்தான். நான் விழிப்பதைப் பார்த்து சௌத் இண்டியன்...? என்று கேட்டான். மையமாக தலையை ஆட்டினேன். அவன் லேசாக சிரித்தான். பிறகு உறங்கிவிட்டோம்.

காலை ஆறுமணிக்கே ஏதோ சப்தம் கேட்டு விழித்தால், அவன் குளித்து முடித்து வெறும் ட்ரவுசருடன் நின்றவாறு, மின்சார அடுப்பில் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்தான். அரை லிட்டர் பாலை அப்படியே குடித்துவிட்டு அமர்ந்தவன், ஏதோ இந்திப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினான்.

அப்புறம் அவனிடம் உடைந்த ஆங்கிலத்தில் பேசியதில் கிடைத்த தகவல் இதுதான். அவன் டெல்லி போலீஸில் கான்ஸ்டபிளாக இருக்கிறான்.. போட்டித் தேர்வுகள் எழுதுவதால் இந்த அறைக்குப் படிப்பதற்காக மட்டும் வருவான். ஆங்கிலம், அவ்வளவாகத் தெரியாது என்பதால் என்னுடன் நன்றாகப் பேசிப்பழகி கற்றுக்கொள்ள விரும்புகிறான்.

என் நிம்மதிப் பெருமூச்சு நீளமாக இருந்தது. ‘டேய்..  நீ சொன்னமாதிரி இல்லை.. என் ரூம் மேட் தங்கமானவன்...' என்று வகுப்புத் தோழனிடம்  சொன்னபோது அவன் நம்பவே இல்லை!

இந்த கொரோனா காலம் மேன்ஷன்களை மூடிவிட்டது. எலிகளும் சிலந்திகளும் தனிமனிதர்கள் வசித்த அறைகளில் வாழ்கின்றன. பழையபடி இந்த அறைகளுக்கு உயிரூட்டப்பட சில காலம் பிடிக்கலாம்.  இந்த இதழில் பலர் தங்கள் மேன்ஷன் வாழ்க்கை அனுபவங்களையும், அங்கே கண்ட மனிதர்களையும் பற்றி எழுதி உள்ளனர். 

இவற்றை வாசிக்கையில் அந்த வரிகளின் ஊடாக மிதக்கும் மேன்ஷன் காற்றின் மணத்தை நுகரலாம்.

செப்டம்பர், 2021