சிறப்புப்பக்கங்கள்

வாடகை வீட்டில் வசதியாக வசிப்பதில் என்ன தவறு?

நேர்காணல்

மதிமலர்

சமீபத்தில் ‘டு லெட்' படத்துக்கு சிறந்த தமிழ்ப்படத்துக்கான தேசிய விருது வாங்கி இருக்கிறார் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன். நேர்த்தியான சினிமாவுக்காக அறியப்படும் செழியனின் இந்தப் படம் நகரத்தில் வாடகைக்கு வீடு தேடி அலையும் ஒரு இளம் தம்பதியின் கதை.

சென்னைக்கு வந்து வாடகை வீடுகளில் தங்கி வாழ்க்கையைத் தொடங்கிய செழியன் வாடகை வீடுகள் குறித்த தன் அனுபவங்கள் பற்றி நம்மிடம் பேசுகிறார்.

‘‘சென்னைக்கு வந்த புதிதில் நண்பர் ஒருவரின் அறைக்குத் தங்குவதற்காகச் சென்றேன். என்னை அவர் யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்றார். செருப்பெல்லாம் அறைக்கு உள்ளேயே போடச்சொல்லிவிட்டார். வீட்டு உரிமையாளர் சற்று நேரத்தில் வந்து அறைக்குள் எட்டிப்பார்த்துவிட்டுச் சென்றார். எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. எங்கள் ஊரில் உள்ள வீட்டில் யார் வேண்டுமானாலும் வந்து செல்லலாம். தங்கலாம். இந்த நண்பரும் என் வீட்டுக்கு வந்திருக்கிறார். பின் நான் போய் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்தேன். அப்போது கதவை பலமாகத் தட்டி யார் உள்ளே என்று கேட்கிறார் வீட்டு உரிமையாளர். என்னை அழைத்துச் சென்றிருந்த நண்பர் எனக்குத் தெரியக் கூடாது என்று அவரிடம் ஏதோதோ சொல்லி சமாளிக்கப் பார்க்கிறார். ஆனாலும் ஹவுஸ் ஓனர் தண்ணீர் இவ்வளவு செலவாகிறதே என்று குறை சொல்கிறார். அன்று மாலையே நான் அந்த வீட்டை விட்டுக் கிளம்பி வேறு இடம் சென்றுவிட்டேன்.

தி.நகரில் இன்னொரு நண்பரின் வாடகை வீட்டில் தங்கி இருந்தபோது வாய்ப்புத் தேடி மாலையெல்லாம் அலைந்துவிட்டு இரவு வீட்டுக்குத் திரும்பினேன். என் நண்பர் சொன்னார் ஹௌஸ் ஓனரின் நண்பர் ஒருவர் வந்திருக்கிறார். அவருக்கு உன் இடத்தைக் கொடுக்கவேண்டும். நீ இன்று இரவு மட்டும் வெளியே எங்கேயாவது தங்கிக்கோ என்று சொல்லி விட்டார். இரவில் திடீரெனத் தங்குவதென்றால் எங்கே போவது? சாலை நடுவே நிற்கும்போது அதிர்ஷ்டவசமாக நண்பர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார். அவரிடம் இரவு மட்டும் வெளியே தங்கவேண்டும்  எங்கே போவது என்று தெரியவில்லை என்றதும் என்னுடன் வாருங்கள் என்று அவர் வட சென்னைப் பக்கம் வெகுதூரத்தில் இருந்த தன் வீட்டுக்கு அருகே இருந்த தன் நண்பரின் வீட்டுக்குப் போய், ‘பிரதர் ஏறிக்குதிங்க' என்று ஒரு சுவரை ஏறிக் குதிக்கச்சொல்லி அங்கிருந்த பூட்டை திறந்து இரவு தங்கச்சொன்னார். 

சென்னையில் என் தம்பி பாலவாக்கம் பக்கம் ஒரு வீட்டில் தங்கி இருந்தான். நான் ஊரில் இருந்து பேருந்தில் வந்து விடியற்காலையில் அவன் முகவரியைக் கண்டுபிடித்துப் போய்ச் சேர்ந்தேன். அந்த வீட்டு வாசலில் ஒரு கடை இருந்தது. அவரிடம் இதுதான் அந்த முகவரியா என்று சரி செய்துகொள்வதற்காகக் கேட்டேன். பெட்டியுடன் இருந்த என்னை அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு அந்தப் பையன் இந்த வீட்டைக் காலி செய்துவிட்டுப்போய் இரண்டு மாதம் ஆகிவிட்டதே என்றார். இரண்டு மாதம் ஆகிவிட்டதா? ஒருகடிதம் கூடப் போடவில்லையே.. இனி எங்கே போய் தம்பியைக் கண்டுபிடிப்பது? இப்போது எங்கே போய் தங்குவது? எனக்குப் பெரும் அதிர்ச்சியாகிவிட்டது. சற்று நேரம் என்ன செய்வதென்றே தெரியாமல் நின்றுவிட்டேன். சரி நகரலாம் என்று நினைத்தபோது வீட்டின் கதவு திறந்து என் தம்பி பால் வாங்குவதற்காக வெளியில் வந்தான். ‘‘ நீ ஏன் போய் அவரிடம் கேட்டாய்? அவருதான் ஹவுஸ் ஓனர். வீட்டுக்கு யார் வந்தாலும் அவருக்குப் பிடிக்காது'' என்றான். சென்னையின் முகம் எனக்கு நன்றாகப் புரிந்தது.

வீட்டை காலி செய்ய பதினைந்து நாள் டைம் கொடுத்து கடைசி இரண்டு நாள் வரை வீடு கிடைக்காமல் தவித்து சிரமப்பட்ட நண்பர்களையும் எனக்குத்தெரியும். வாடகைக்கு வீடு விடுகிறவர்கள் வேலை, என்ன ஏது என்று எல்லாவற்றையும் விசாரித்துத்தான் கொடுக்கிறார்கள். நானும் வாடகைக்கு வீடு தேடும்போது கிடைத்த அனுபவங்களைப் பார்க்கும்போது இதில் ஒரு கதை இருக்கிறதே என்று தோன்றியது. அதைத்தான் நான் படமாக எடுத்தேன். 

இன்றும் 15,000  ரூபாய்க்குக் கீழே வரை வாடகைக்கு இருக்கிறவர்களுக்கு அதிகம் சிரமம் இருப்பதைப் பார்க்கிறேன். நான் இதுவரை வாடகை வீட்டில் இருக்கிறேன். சொந்த வீடு என்பதை கௌரவம் சம்பந்தப்பட்ட விஷயமாகப் பார்க்கிறார்கள். பொருளாதார நிபுணர்கள் கடன் வாங்கி வீடு வாங்காதீர்கள் என்கிறார்கள். ஊரில்  இருந்து வந்த எனக்கு சென்னையே ஒரு ஷாப்பிங் மால் போலத் தோன்றுகிறது! ஒரு ஷாப்பிங் மாலில் நீங்கள் குடியிருப்பீர்களா? இருந்தாலும் ஒவ்வொருமுறையும் வீடுகளைக் காலிசெய்து பெட்டி படுக்கைகளைக் கட்டும்போது  வீடு வாங்கித்தான் ஆகவேண்டும் என்ற எண்ணம் இப்போது தோன்றுகிறது. 

மனிதனுக்கு உணவு உடை உறைவிடம் ஆகியவை மிகவும் முக்கியமானவை. முன்பு  ஒரு அறையில் தங்கியிருந்தேன். மூன்றாவது மாடியில் அறை. வெக்கை தாங்கமுடியாது. இரவில் போர்வையை நனைத்துப் போட்டு அதன்மீது படுத்துத் தூங்கிய நண்பர்களை நான் பார்த்திருக்கிறேன். வேலைவாய்ப்புகளுக்காக கிராமங்களை விட்டு வருகிறவர்கள் இதையெல்லாம் எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

நிறைய ஹவுஸ் ஓனர்கள் நல்லவர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள். என் நண்பர் ஒருவருக்கு ஹவுஸ் ஓனர் வீட்டில் இருந்துதான் தினம் சாப்பாடு வரும். மோசமானவர்களும் இருக்கிறார்கள். 

இதுவரையில் தனிப்பட்ட முறையில் பெரிதாக ஹவுஸ் ஒனர்கள் பிரச்னை கொடுத்தது இல்லை. இருந்தாலும் சொந்த வீடு என்பது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு முக்கியமானதாகப் படுகிறது. நாம் வேலைக்காக வெளியில் போய்விடுகிறோம். வீட்டில் நிறைய நேரம் இருப்பவர்கள் அவர்கள்தானே!

இந்தப் படத்தில் நான் வாடகைக்கு வீடு தேடுவதில் இருக்கும் சிரமங்களைத்தான் காட்டி இருக்கிறேன். வீடு வேண்டும் என்று தேடி நீங்கள் புறப்பட்டுவிட்டால் இந்த நகரம் அதன் முகத்தை உங்களுக்குக் காட்டிவிடும். இதில் இருக்கும் கதையைத்தான் படமாகக் காட்ட விரும்பினேன்!   எங்கெல்லாம் பிரச்னைகள் உள்ளனவோ அங்கெல்லாம் நல்ல கதைகள் உள்ளன. கதைக்காக யாரும் ரூம் போட்டு யோசிக்க வேண்டாம். வாழ்க்கையைக் கவனித்தால் போதும் கதை கிடைத்துவிடும்! அதை சுவாரசியமாகச் சொன்னால் போதும்! ‘டு லெட்' படமும் அப்படித்தான். அதனாலதான் இது உலகத்தின் பார்வையாளர்களுக்கும் பிடிக்கிறது. இதுவரை 30 திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 20 விருதுகள் வரை பெற்றுள்ளது! இந்த தேசிய விருதின் மூலம், டூலெட்  மீது கூடுதல் வெளிச்சம் பாய்ந்திருக்கிறது. 

வீடு தேடுவதில் உள்ள எல்லாப் பிரச்னைகளையும் ஒரு படத்தில் சொல்லிவிட முடியுமா? இந்தக் கடலில் என் வலையில் சிக்கிய மீன்களைப் பிடித்திருக்கிறேன். அவ்வளவுதான். கடல் முழுக்க மீன்கள் இருக்கின்றன. இதை முன்வைத்து இன்னும் பல படங்கள் எடுக்கும் அளவுக்குப் பிரச்னைகள் இதில் இருக்கின்றன!'' சொல்லி முடிக்கிறார் செழியன்.

மே, 2018.