சுகுமாரன் 
சிறப்புப்பக்கங்கள்

வாசகர்கள் எல்லாம் கவிஞர்களாக மாறிவிட்டால்...

சுகுமாரன்

முன்னரே பள்ளி ஆண்டு மலரிலும் உள்ளூர் நாளிதழிலும்  சில வெகுஜன இதழ்களிலும் நான் எழுதிய   கவிதைகள்  வெளியாகி இருந்தன.

 நான் நம்பும் இன்றைய வடிவத்தில்  அமைந்த கவிதை என் பதினேழாவது  வயதில் ‘கண்ணதாசன்' மாத இதழில் வெளிவந்தது. அந்தக் கவிதைதான் 'நீ கவிஞன் என்று சொல்லிக் கொள்ளலாம் ' என்ற சலுகையை எனக்கு நானே அளித்துக் கொள்ளத் துணையாக இருந்தது. 

கவிதை வெளிவந்த சில நாட்களுக்குப் பிறகு அஞ்சல் அட்டையில் ஒரு பாராட்டுக் கடிதம் வந்தது. எட்டு வரிக் கவிதைக்கு பத்துவரிப் பாராட்டு. பெறுநர் முகவரியில் என்  பெயருக்கு ஓர் அடைமொழியும் சேர்க்கப்பட்டிருந்தது. கவிஞர் சுகுமாரன். அதை நான் பார்த்துக் கொண்டிருந்த  வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நொடியில் கோயமுத்தூர் காக்கைகளும் குருவிகளும்   கின்னர, கந்தர்வ  கீதங்கள்  பாடின. மரங்களும் செடிகளும் அதற்குத் தலையாட்டின. அட்டையைத் திருப்பி அனுப்புநர் முகவரியைத் தேடினேன். ‘தமிழ்க் கனல்' , கோவை  என்ற ஊதா நிற ரப்பர் ஸ்டாம்புப் பதிவு மட்டுமே இருந்தது. கடிதத்தை நுணுகி ஆராய்ந்ததில் அஞ்சல் முத்திரையில் அஞ்சல் குறிப்பு எண்ணைத் தெரிந்து கொண்டேன். அதன் வழியே  குறிப்பிடப்படும் பகுதி கோவை வடக்கு என்பதையும் தெரிந்து கொள்ள  முடிந்தது. வடகோவை ஜன சமுத்திரத்தில் அந்த வாசகத் துளியைக் கண்டு பிடிப்பது அவ்வளவு  எளிதல்ல. எனவே முதல் வாசகரை நேரில் சந்திக்கும் ஆசையைக் கைவிட்டேன். வாசிப்பு முதிர்ந்து பல நூல்களையும் தேடித் திரிந்த, பல பத்திரிகைகளையும் புரட்டிப் பார்த்த  அனுபவத்தில்  ஒரு உண்மை புலப்பட்டது. தமிழகம் முழுவதும் வட்டாரத்துக்கு ஒரு தமிழ்க் கனல் இருக்கிறார்.  கோவை தமிழ்க் கனல் என்றே நான்கு பேர் இருந்தார்கள். இதில்  ஏதோ ஒரு தமிழ்க்கனல்  என் வாசகர். என்னைக் கவிஞனாக மதித்தவர். அவரே என் முதல் வாசகர். வெம்மையான பெயருடன் ஒருவர் வாசகராகக் கிடைப்பது எளிதல்லவே.

‘கஙய' என்று ஒரு சிறு பத்திரிகை. உண்மையிலேயே அது சிறு பத்திரிகைதான். எட்டுப் பக்கங்கள் கொண்டது. அதன் முதல் இதழில் ஒரு கவிதை வெளியாகி இருந்தது. 'நிகழ்' என்று தலைப்பு. அந்தக் கவிதையைப் பற்றிப் பத்திரிகையின்   இரண்டாவதோ மூன்றாவதோ இதழில் ஒரு வாசகர் குறிப்பு வெளிவந்தது.  சின்னக் கவிதையை பற்றி எழுதப்பட்ட  பெரிய குறிப்பு. கவிஞனுக்கே தெரியாமல் கவிதைக்குள்ளிருக்கும் பல கூறுகளை விமர்சன பூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் அந்த வாசகர் எழுதியிருந்தார். பெயரும் ஈர்க்கக்  கூடியதாக இருந்தது. சந்திரமூலரசன் . பின்னர் அவரைத் தேடி புஞ்சைப் புளியம்பட்டி என்ற ஊருக்கே சென்று சந்தித்தேன். அவர் வாசகர் மட்டுமல்ல; எனக்கும் முன்னால் கவிதை க்கும் இலக்கியத்துக்கும் வந்து விட்டவர். அவருடன் சேர்ந்து தேநீர் அருந்திக் கொண்டாடியது வாசக சந்திப்பா, படைப்பாளி  சங்கமமா என்று அப்போது குழப்பமாக இருந்தது.  இப்போது அது மகத்தான் இலக்கியச் சந்திப்பு என்று புரிகிறது. காற்று வாங்கும் ஸ்டூடியோவை நம்பாமல் போட்டோ ஃபிரேம் தொழிலை  சரணடைந்திருந்தவரும் விற்பனைப் பிரதிநிதியாக ஊமை அழுகையுடன் முனகிக்கொண்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்தவனும் தம்மை மறந்து இலக்கிய விசாரத்தில் ஈடுபட்டது மகத்தானதுதானே?  

முதல் தொகுப்பான கோடை காலக் குறிப்புகள் வெளியானது. அதற்கு முன்பே சிற்றிதழ்களில் கவிதைகள் வெளியாகி பெயரும் ‘பிரபலம்' அடைந்திருந்தது. தொகுப்பை வாசித்த  பலரும் கடிதங்கள் எழுதவோ நேரில் பார்த்தபோது பாராட்டவோ செய்திருந்தார்கள். சுந்தர ராம சாமி, வெங்கட் சாமிநாதன், வல்லிக் கண்ணன் போன்ற இலக்கியப் பெரியவர்கள் எழுதி யிருந்தார்கள். ஒருவர் விரிவாகக் கடிதம் எழுதியிருந்தார். ஒவ்வொரு கவிதையையும் மேற்கோள் காட்டி விலாவரியாக எழுதியிருந்தார். ‘இவையெல்லாம் ஒரு வாசகனாக  என் கருத்துக்கள் 'என்று பொறுப்புத் துறப்பும் செய்திருந்தார். அவரை வாசகராக மட்டுமே மதிப்பதா இல்லை விமர்சகராகக் குறிப்பிடுவதா என்று அன்று குழம்பினேன். பல  ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய பழுத்த வயதில் நேரில் சந்தித்தேன். உரையாடலின்போது இதை  நினைவுபடுத்தினேன். நீங்கள் என் வாசகர் என்று எழுதியது  இலக்கிய  நாகரிகம் கருதித்தான் இல்லையா? என்று கேட்டேன். பெரியவர்  ‘இருங்கய்யா, பல் செட்டை மாட்டிக்கிடுதேன். இல்லேன்னா சிரிப்பு இளிப்பாட்டமிருக்கும் ' என்று எழுந்து போய் பற்களைப்  பொருத்திப் புன்னகைத்து விட்டுச் சொன்னார். ‘உமக்கு என்னய்யா சந்தேகம். நான் வாசகன்தான்யா. எல்லாருக்கும் வாசகனா இருந்தாத்தான விமர்சகனாக  இருக்க முடியும்? இப்ப புதுமைப்பித்தனைச் சாடையா சொல்றாப்போல ஒரு கவிதை எழுதியிருந்தீங்கல்லா, அதுக்கும் நான் வாசகன்தான்' என்றார். எல்லா இளம் படைப்பாளி களுக்கும் முதல் வாசகராகச் சொல்லப்பட்டவர் எனக்கும் முதல் வாசகர்களில் ஒருவராக இருந்தார் என்பதில்  நாற்பது ஆண்டுகளுப்பிறகு லேசான கர்வத்தை உணர்ந்தேன். அந்தப்  பெரியவர் தி.க.சி. 

கோடை காலக் குறிப்புகள் தொகுப்பில் சாஸ்திரத்துக்குக் கூட ஒரு காதல் கவிதையும் இல்லை. தொகுப்பின் கைப்பிரதியைப் பார்த்துவிட்டு வாசக சிநேகத்தாலோ அல்லது கவிதைகளில் தெரிந்த துயருக்கு மனமிரங்கியோ ‘நான் அவரைக் காதலிக்கிறேன் என்று சொல்லு' என்று இருவருக்கும் பொதுவான நண்பரிடம் அந்தப் பெண் தெரிவித்தார். அவர் காதலித்தது கவிஞனையா இல்லை கவிதைக்குள் புழுங்கிக் கொண்டிருந்த இளைஞனையா என்பது இன்றும் புரியாத புதிர். ஒருவேளை காதல் கைகூடியிருக்கும் என்றால் எனக்குக்  கிடைத்த வாசகர்களில் ஒருவரை இழந்திருப்பேன். நல்ல வேளை அவர் வாசகராகவே தொடர்ந்தார். இப்போதும் தொடர்கிறார் என்றே நினைக்கிறேன். அந்தக் காதலுக்குப் பிறகு  நிறையக் காதல் கவிதைகள் எழுதியிருக்கிறேன். துரதிர்ஷ்டவசமான எந்தப் பெண்ணும் அந்தக் கவிதைகளைப் படித்து விட்டு விண்ணப்பம் செய்யவில்லை. கவிதைக்கு கவிதையை மீறிய ஒன்று வேண்டியிருப்பதுபோல காதலுக்கும் காதலை மீறிய ஒன்று தேவைப்படுகிறதுபோல.

அடுத்தடுத்த தொகுப்புகள் வெளியான பின்னர் புதிய வாசகர்கள் என்று யாராவது வந்தார்களா என்று தெரியவில்லை. சில கடிதங்கள் வந்தன. இலக்கியக் கூட்டங்களில் சந்திக்கும்போது நான் எழுதிய கவிதையை மனப்பாடமாகச் சொன்ன சிலரைச் சந்தித்திருக்கிறேன். அடுத்த முறை சந்தித்தபோது அவர்களும் கவிஞர்களாக மாறியிருந்தார்கள். என்னு டைய முதல் தொகுப்பு என்று பெருமிதத்துடன் புத்தகத்தை நீட்டுவார்கள். வாசகர்கள் எல்லாம் கவிஞர்களாக மாறிவிட்டால் எந்த வாசகருக்காக எழுதுவேன் என்ற பெரும் சோகம்  என் மேல் கவிந்து கொள்ளும். கூடவே வாசகர்களுக்காக எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுமோ என்ற பதற்றமும் கவ்விக் கொள்ளும். அதை எதிர்கொள்வதற்காக யாராவது நான் உங்கள் வாசகன் என்றால் வேண்டுமென்றே பேச்சை வேறு திசைக்குத் திருப்பி விடுவதும் அந்தரங்கமாக அதை ரசித்துக் கொள்வதுமாக இருந்திருக்கிறேன். இருக்கிறேன். 

சில வாசகர்கள் ஆர்வத்தில் செய்யும் செயல்கள் சில சமயம் இறும்பூது எய்தச் செய்திருக்கின்றன. நண்பர் ஒருவரின் சகோதரியின் திருமண அழைப்பிதழில் வாசகர் ஒருவர் என் கவிதை ஒன்றை அச்சிட்டிருந்தார். வெகு காலத்துக்குப் பின்பு அந்த அழைப்பிதழை எனக்கு அனுப்பினார். உடன் அவருடைய முதல் கவிதைத் தொகுப்பும் அனுப்பப்பட்டிருந்தது.  எவ்வளவு சீக்கிரம் ஒரு வாசகரை இழந்திருக்கிறேன் என்று மனம் ஒப்பாரி வைத்த போது ‘அட,  எவ்வளவு விரைவில் ஒரு வாசகர் கவிஞராகி இருக்கிறார் ' என்று புத்தி கும்மாளமிட்டது. கவிஞராக மாறிய அந்த வாசகர் இன்று மூத்த கவிஞராகிக் கலக்குக்கிறார். அவ்வப்போது லைட்டா பொறாமைப்படவும் வைக்கிறார். கவிஞர் பெயர் - இசை. 

அதேபோலத் திருமண அழைப்பிதழில் தன் கவிதை வரியுடன் என் கவிதை வரியையும் சேர்த்து வெளியிட்டார் ஒரு நண்பர். திருமணத்துக்குப் பிறகு அவர் கவிதை எழுதுவதை  விட்டுவிட்டார்  என்று நினைக்கிறேன். அது பற்றி எனக்குத் தீரா வருத்தமிருக்கிறது. ஆனால் அவர் தொடர்ந்து கவிதை எழுதிக் கொண்டிருந்திருப்பார் என்றால் நவீனத் தமிழ்  உலகம் ஒரு நல்ல பதிப்பாளரை இழந்திருக்கும். மூத்த எழுத்தாளர் ராஜ நாராயணனின் படைப்புகள் ஒரே சாளரத்தின் வழியாகக் கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.  அன்னம் கதிர், இனிமேல் கவிதை எழுதுவார் என்று நம்ப எனக்கு விருப்பமில்லை. ஒரு வாசகரை இழக்க எந்தக் கவிஞனாவது விரும்புவானா?

கோடை காலக் குறிப்புகள் தொகுப்பை மனப்பாடமாக ஒப்பித்த வாசகர்கள், ஒரு கவிதைக்காகக் கடிதம் எழுதிய வாசகர்கள், மேடையில் வாசித்த கவிதையில் ஆழ்ந்து போய்  ஓடிவந்து சாக்லேட் விஸ்கி வாசனையுடன் முத்தமிட்ட ஐ.ஏ.எஸ் வாசகர், சரக்கின் முறுக்கில் தொலைபேசியில் அழைத்து, கவிஞரே நான் எழுதிய கவிதையை வாசிக்கிறேன்,  நல்லா இருக்கான்னு சொல்லுங்க' என்று என் கவிதையையே வாசித்துக் காட்டிய வாசகர் முதலாகப் பல வாசகர்களைக் காண வாய்த்திருக்கிறது. வாசகர்களே இல்லாத இலக்கியப்  பிரிவு கவிதை என்ற என் எண்ணத்தை இவை தவறு என்று நிரூபித்திருக்கின்றன. 

கொஞ்சமும் எதிர்பாராத  இடத்தில் என் கவிதையையும் கவிதைக்கான வாசகரையும் கண்டடைய நேர்ந்திருக்கிறது எனக்கு. ஐந்தாறு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை வளசரவாக்கம் பகுதியில் குடியிருந்தேன். முடிதிருத்தம் செய்ய வழக்கமாக ஒரு கடைக்குப் போவேன். ஒருமுறை அருகிலிருந்த கோவில் உற்சவத்தையொட்டி நடந்த சுவாமி வீதியுலா நடந்தது. ஊர்வலத்தில் நாயனம் வாசித்து வந்தவர் என்னை பார்த்ததும் வெட்கத்துடன் சிரிப்பதைப் பார்த்தேன். என்னுடைய சிகை அலங்கார நிபுணர். அவரை அப்படிப் பார்த்ததும் நெஞ்சை அடைத்துக்கொண்டது. ஏன் என்று விளங்க வில்லை. மறுமுறை மாதந்திர சிகைப் பராமரிப்புக்குப் போனபோது அந்த இளைஞர் தனது கதையைச் சொன்னார்.  அடிப்படையில் நாகஸ்வரக் கலைஞர். கலை சோறு போடாது என்பதால் தலைகளைத் தட்டி வெட்டிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். அது ஏனோ உறுத்தியது. இனிமேல் இந்தக்  கடைக்கு வரக்கூடாது என்று தீர்மானித்தேன். அதைப் பற்றியே கவிதை எழுதி அது கல்கி இதழில் வெளியாகவும் செய்தது. மறுபடியும் கடைக்குப்போன சந்தர்ப்பத்தில்  கட்டண  விவரங்களுக்குப் பக்கத்தில் தொங்கவிடப்பட்டிருந்த லாமினேட் செய்த அட்டை பார்வையை ஈர்த்தது. ‘திருத்தம்' என்ற என் கவிதை வெளியாகியிருந்த கல்கி இதழின் பக்கம்  அது. கடை உரிமையாளர் எம். கே.சாமி பூரிப்புடன் அதைக் காட்டி ‘கவிதை நல்லாருக்கு சார், ஆனா அதற்குப் பிறகு சலூனுக்குப் போகல; காரணம் தெரியலன்னு எளுதியிருக்கறதுதான் புரியல' என்றார். 

சிறிது கழித்து  ‘ஆனா நீ இங்க வராம இருக்கறதுதான் சார் சரி. உன்னைப் பார்த்தா என்மேல வருத்தப்படற மாதிரி இருக்கு. அது எனக்கு வேணாமே?  இன்னிக்கு வந்துட்டே , ஹேர் கட் பண்ணி விடுறேன். அடுத்த வாட்டிக்கு வேறே கடை பார்த்துடு சார்' என்றும் சொன்னார். நான்  அவர் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு அடர்ந்து  வளர்ந்திருந்த சிகையைக் கோதிக்கொண்டே வெளியே வந்தேன்.  ஒரு வாசகராக மட்டுமே நான் அவரை எண்ணியிருக்கவில்லை என்று நான் நினைத்தது அவருக்குத் தெரிந்திருக்க வழியில்லை.

ஜனவரி, 2018.