சிறப்புப்பக்கங்கள்

அந்திமழை: நூறுக்கு நூறு

Staff Writer

அந்திமழை 'வையத் தலைமை கொள்' என்ற தனது இலக்கில் இருந்து வழுவாமல்,  வாசகர் நெஞ்சங்களில் நீர்ப்பாய்ச்சி வேர்ப்பிடித்து நூறாவது இதழை விரித்திருக்கிறது. நூற்றாண்டு நினைவுகளை அருமையாய் வடித்திருக்கும் சிறப்பு பக்கங்கள்,  ஆள் பிடிக்கும் தேசியக்கட்சிகள் முதலிய ஆழமான கட்டுரைகள், கதை, பகிர வேண்டிய நேர்காணல் என நெஞ்சத்தை நிறைவு செய்கிறது நூறாவது  இதழ்.  சறுக்கலுக்கு ஆளாகாமல் சமரசம் செய்து கொள்ளாமல் தரமான கட்டுரைகளையும் கதைகளையும் செய்திகளையும் தாங்கி, வரிக்கு வரி வாசகனின் அறிவுப்பசிக்கு ருசியான விருந்தை  தொடர்ந்து வழங்கிவருகிறது அந்திமழை. தமிழ் இதழியல் வரலாற்றில் குறுகிய

காலத்தில் தரத்தினை நிர்ணயம் செய்யும் முன்னணி இதழாக அந்திமழை தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் வாசகர்கள் சார்பில் அந்திமழை ஆசிரியர் குழுவினருக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,

முனைவர் கி.தனவேல், மேனாள் அரசுச் செயலாளர் சென்னை.

உருக்கம்!

மாமியார் - மருமகள் சண்டையில் அம்மா கஷ்டப்படக்கூடாதென அவள் சாகும்வரை கல்யாணம் கூடாதென நினைத்து நீண்ட காலம் வாழ்ந்த அம்மாவால் கடைசிவரை கட்டை பிரம்மச்சாரியான ஏழை எழுத்தாளர் வல்லிக்கண்ணன். இது துணுக்கு வரியல்ல. உருக்கமான சிறுகதை கரு. கஷ்டப்படும் பா.ஜ.க தமிழகத்தில் காலூன்ற தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆள முடியுமா! சர்வே கட்டுரை, பிரசாந்த் கிஷோரானது. பொம்மி பேக்கரி சுந்தரி அறிமுகம் சுவாரசியம் என்றால் அமெரிக்க அதிபர் தேர்தல் அலசல் வித்தியாசம் ஆர்.கே.லட்சுமணின் பொதுஜனம் சிலையை ரசித்த போது, நம்மவூரு அப்புசாமி & சீதாப்பாட்டிக்கும் மெரினாவில் சிலை வைக்க வேண்டுமென தோன்றியது. அலைபேசிக்குள் அடங்கி வானொலி இன்னும் வாழ்வதை மாலன் வாழ்த்தியதை வழி மொழிகிறேன். அந்திமழை இன்னும் பல நூறு இதழ்களைத் தொட்டுத் தொடரும்.

அண்ணா அன்பழகன், அந்தனப்பேட்டை.

பொருத்தம்

அந்திமழை டிசம்பர் 2020 இதழ் நூறாவது இதழாகவும், நூற்றாண்டு நினைவுகளுடன் வெளிவந்தது சிறப்பு. ஆசிரியர் இளங்கோவன் ‘ஊர் கூடி இழுத்த தேர்' எனக்கூறியது மிகவும் பொருத்தம். வெகுஜன இதழ்களுக்கு நடுவே 100 இதழ்களில் 93 சிறப்பிதழ்களை வெளியிட்டது இமாலய சாதனை. தானும் உயர்ந்து, வாசகனின் தரத்தையும் உயர்த்தி உள்ளது அந்திமழை. வித்தியாசமான சிந்தனை தெளிவான கட்டுரைகள் மாற்றங்கள் என பல்வேறு தலைப்புகளில் சிறப்புப் பக்கங்கள் வாசகர்களை பிரமிக்க வைத்தது. பொது முடக்க சமயத்தில் வீட்டில் இருந்தபடியே, தொலைக்காட்சியில் தொலைந்த மனிதர்கள் & வாசிப்புப் பழக்கம் சிறிதுமின்றி மொபைலில் மூழ்கிய இளைஞர்கள் ஆழ்ந்த வாசிப்புப் பழக்கம் தொலைத்தவர்கள் ஆகியோரை மீட்டெடுக்க அந்திமழையில் சிறப்புப் பக்கங்கள் தொடர வேண்டும் என்பதே வாசகர்களின் எதிர்பார்ப்பு. ‘‘ஊர் கூடி இழுக்கும்'' இந்த அந்திமழை எனும் தேரின் வடத்தை இறுகப்பற்றிக்கொண்டு இழுக்கும் எண்ணற்ற வாசகர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு பெருமையே!

கீ.மோகன், சேலம்

சிறைக்கதவு திறக்கட்டும்!

‘தமிழில் வரும் தரமான இதழ்களுள் அந்திமழையும் ஒன்று' என்று  பாலுமகேந்திரா பாராட்டியிருப்பதும், அந்திமழையின் 100 இதழ்கள் ‘ஊர் கூடி இழுத்த தேர்' என்ற அந்திமழை இளங்கோவன் அவர்களின் பதிவும் ஏற்கத்தக்கதே! கவிதா பாரதியின் ஒரு தாயின் குரல் கண்களை பணிக்கச்செய்துவிட்டது. அற்புதம்மாளின் அழுகுரல் ஆளுநரின் செவிகளை எட்டட்டும். சிறைக்கதவு திறக்கட்டும். முற்றிலும் வணிகமாகி மாறிப்போய்விட்ட பதிப்புகளில், ஒவ்வொரு நூலையும் பிழைகளின்றி தரமாக வெளிக்கொணர்ந்து பதிப்புலகில் சுவடு பதித்துக் கொண்டு இருக்கும் க்ரியா ராமகிருஷ்ணன், எனக்கும் அவருக்குமான உறவு இளம் காதலர்களுக்கான உறவைப்போன்றது. அந்த உறவு கடைசிவரை இளமையாகவே இருந்தது என்று இமையம் பகிர்ந்திருந்த நேர்காணல் அருமை. இரா.கௌதமன் எழுதியிருக்கும் பெரிய மனிதர்கள் கட்டுரை படித்தேன். வங்கிகளை ‘கபளீகரம்' செய்ய காரணமானவர்களை விட்டுவிட்டு அப்பாவிகளை மாட்ட வைத்திருப்பது காலக்கொடுமை. இன்னும் படிக்கவேண்டிய பகுதிகள் நிறைய இருக்கின்றன. நன்றி!

நவீன்குமார், நடுவிக்கோட்டை

வெளிநாட்டினர் வணக்கம்!

அந்திமழை வண்ணமலர்களாலும், சரிகைத் தோரணங்களாலும் அலங்கரிக்கப் பட்டதோ, தேரோடும் தமிழ்நாட்டின் வீதிகளில் வளமாக பல்லாண்டு, பல்லாண்டு பவனி வர வாழ்த்துகிறேன். மகனின் விடுதலை ஒன்றுதான், அற்புதம்மாள் வேண்டிநிற்கும் அற்புதம். தமிழ்நாடே அந்த எழுவரின் விடுதலையை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நீதிக்கட்சி அளித்த பெண்களுக்கான, சம வாக்குரிமையோடு, அமெரிக்காவில் சம உரிமை வழங்கப்பட்டதை எண்ணியும் நூற்றாண்டு விழாக் கொண்டாடலாம். பாங்காக்கில், ஒரு கோழித்துறைக்கான காட்சிக்குப்போயிருந்தபோது ‘‘இந்தியாவில் இதை விற்க முடியாது. சந்திரசேகர்ன்னு ஒரு டாக்டர் இலவசமாகவே இது போன்ற மென்பொருட்களைக் கொடுத்துள்ளார்'' வெளிநாட்டினர் வணக்கம் செய்த திறமான புலமை.

இராம.இலக்குமணன், திம்மராஜாம்பேட்டை.

பாடம்!

தனித்துவம் காட்டி, தடங்கலில்லாமல் தரமும் மாறாமல் அந்திமழை நூறாவது இதழை கடப்பது பிரமிப்பான பெருமிதமே! பருவ இதழ்களுக்குரிய வழக்கமான ஃபார்மூலாவை திட்டமிட்டு தவிர்த்து, வித்தியாசமான அதிலும் ஆழமான படைப்புகளால் நிஜமான இதழியலை முன்னுதாரணமாக்கி முன்னேறுவது வணக்கத் துடன் வாழ்த்தத்தக்கது. வல்லிக்கண்ணன் முதல் வானொலி வரை நூற்றாண்டு காணும் சக சாதனைகளையும் உச்சிமுகர்ந்தது, பரந்த மனசுக்கு ஒரு பாடமானது. வாழ்க, வளர்க!

அ.யாழினி பர்வதம், சென்னை.

பிரமாண்டம்!

அந்திமழை 100வது இதழின் அட்டைப்படம் பிரமாண்டமாய் இருந்தது. பொம்மி பேக்கரி சூரரைப்போற்று திரைப்படத்தின் கதாநாயகி உடனான பேட்டி அருமை. அபர்ணா பாலமுரளியின் திரைத்துறை பயணம் பற்றியும், அவரைப்பற்றியும் சில விஷயங்கள் தெரிந்து கொண்டேன். எதிர்பாராத நேரத்தில், எதிர்பார்த்திராத மாற்றங்களை, வாய்ப்புகளை வாழ்க்கை நமக்கு தரும் என்பதற்கு அபர்ணா பாலமுரளியின் திரைத்துறை பயணமும் ஓர் உதாரணம்.

அந்தி மழையில் நனைவது எப்போதும் ஆனந்தமே..!!! 100வது இதழ் பேரின்பமாக இருந்தது.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி(மின்னஞ்சல்).

அருமை

23035 பொய்கள் கட்டுரை சூப்பர், நம் நாட்டு அரசியல்வாதிகளையும் விஞ்சிவிட்டார் ட்ரம்ப். வானொலி பற்றிய மாலனின் கட்டுரை மிகவும் அருமை.

அ.முரளிதரன், மதுரை

வாழ்த்து

ஒவ்வொரு அந்திமழை இதழும் ஸ்பெஷல் தான். அதுவும் 100 வது இதழ் என்றால் சொல்லவா வேண்டும்.படிக்க படிக்க குஷி பொங்கியது.முழுக்க முழுக்க தேவையான செய்திகள்.அந்திமழையின் 1000 ஆவது இதழுக்காக காத்திருக்கிறேன்.விரைவில் அப்படிப்பட்ட இதழை படிக்க ஆசை.

அந்திமழை மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்களும் ஆசிகளும்!

பா.ரேஷ்மா, வந்தவாசி

தொடர்க!

25 ஆண்டுகளின் சாதனையை  குறுகிய காலத்தில் செய்திருக்கிறீர்கள். தீவிரமான, அழுத்தமான காலடிச்சுவடுகள். பல சிறப்பிதழ்கள். அருமையான பணி. தொடரவும்

சுப்ரபாரதிமணியன் (மின்னஞ்சல்)

வலிமை

ஊர் கூடி இழுத்த தேர் வலிமையாக இலக்கிய தடம் பதித்து  செல்கிறது...

காரணம் வலிமையான வாசகர்கள், படைப்பாளிகள், வலிமையான ஆசிரியர்குழு!...

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு  ‘ஓடு ராஜா‘ - தனிக்காட்டு குதிரையாக வலிமையாக ஓடிக் கொண்டிருக்கிறது கம்பீரமான இலக்கிய குதிரை அந்திமழை.

எஸ்.பஞ்சலிங்கம், மடத்துக்குளம்

ஜனவரி, 2021