சிறப்புப்பக்கங்கள்

வாசகனுடைய தேவையை துல்லியமாகவே உணரமுடிகிறது

முதல் புத்தகம்

மு. வேலாயுதம்

பணத்துக்கு நான் எப்பவும் ஏங்கினதில்லை. ஆனா சின்ன வயசுலயிருந்தே புது புத்தகத்துக்கு நான் ஏங்கின ஏக்கம் இருக்கிறதே. அதை வார்த்தையால் சொல்ல முடியாது. அதனால்தான் இன்று வீட்டில், ஹாலில், சமையலறையில், ஓய்வறையில், பாத்ரூமில் என எல்லாமே புது புத்தகங்களை அடுக்கி அழகு பார்த்திருக்கிறாரோ இறைவன் என எண்ணத்தோன்றுகிறது!’

 இதை சொல்லும்போதே அந்த 74 வயது மனிதரின் கண்களுக்குள்ளிருந்து கண்ணீர் மளுக்கென்று எட்டிப்பார்த்து கன்னங்களில் உருள்கிறது. விஜயா பதிப்பகம் நிறுவனர் மு.வேலாயுதம் அண்ணாச்சி என்றால் கோவையில் மட்டுமல்ல; தமிழகத்தின் எந்த மூலையில் உள்ள புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள், எழுத்தாளர்களுக்கும் பரிச்சயமான மனிதர்.

“என் ஊர் உலகநாதபுரம். மதுரையிலிருந்து 18 மைல் மேலூர். அங்கிருந்து இரண்டரை மைல் எங்க கிராமம். உள்ளூர்ல பள்ளிக்கூடம் இல்லை. மேலூர் நடந்தே போகணும். 8வது வகுப்பு (3ம் பாரம்) வரை நன்றாக படித்தேன். கணக்குல ரொம்பவும் புலி. 4ம் பாரம் படிக்க அம்மா அனுப்பலை. பள்ளிக்கூட எச்எம் வந்து அம்மாகிட்ட பேசறார். நல்லா படிக்கிற பையன், படிக்க வைக்காம விட்டுடாதீங்கன்னு.

அப்பா ஊர்ல விவசாயம் சரியில்லைன்னு பர்மா வேலைக்குப் போனவர். அண்ணன் கட்டிட வேலை, கூலி வேலைன்னு போயிட்டிருந்தார். பெரிசா எந்த வரும்படியும் இல்லை. அம்மா ஓன்னு அழறாங்க. அம்மா ரொம்ப வசதியான வீட்டுப்பெண். அவங்க வீட்ல ஆண் வாரிசு இல்லைங்கிறதால அவரோட சித்தப்பா வகையில கொழுந்தன் வீட்டுக்கு முழு சொத்தும் போயிடுது. அதுல நொந்து போன வாழ்க்கை. அப்படிப்பட்டவங்க அழுதது தாங்க முடியலை. ‘நீ அழாதேம்மா. நா கூலி வேலைக்கு போயாவது உன்னை காப்பாத்தறேன்!’னு அப்ப உறுதியெடுத்தவன்தான்.

மணப்பாறை ஜவுளிக்கடை ஒண்ணுல சோத்துக்கூலிக்கு வேலைக்கு சேர்ந்தேன். கடையில் பாடுபடணும். சாப்பாடு மட்டும்தான் கிடைக்கும். அதுதான் கூலி. அந்த ஜவுளிக்கடையில் இருந்தபோதே, கடை முதலாளி பசங்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பேன். அதில் பிரியப்பட்டு முதலாளியும், முதலாளியம்மாவும் ஓரணா, ரெண்டணா துட்டு கொடுப்பாங்க. அதை சேர்த்தி வச்சா மாசம் ஒரு ரூபா, ரெண்டு ரூபா கூட சேரும். அப்ப லிப்கோ நூலக வண்டி மணப்பாறைக்கு மாசத்துக்கு ஒருவாட்டி வரும். அதுல சங்கர்லால், சிரஞ்சீவி புத்தகங்கள் எல்லாம் கிடைக்கும். நான் சேர்த்தி வச்ச காசுக்கு புத்தகங்கள் வாங்கி படிப்பேன். அடுத்த மாதம் லிப்கோ வண்டி எப்ப வரும்ன்னு முந்தினமாதமே கேட்டு வச்சுக்குவேன். அது வர்ற நாள்ல வண்டி எப்ப வரும், எப்ப வரும்ன்னு கடைக்குள்ளேயிருந்து எட்டிப்பார்த்துட்டே இருப்பேன்.

புது புத்தகம்ன்னா எனக்கு ரொம்ப இஷ்டம். நான் பள்ளியில் படிச்ச காலத்துல புது புத்தகமே வாங்கியது கிடையாது. முந்தின வருஷம் படிச்சவங்ககிட்ட பழைய புத்தகத்தை வாங்கி பைண்டிங் அண்ணணே போட்டுக் கொடுப்பார். நோட்டுகளை கூட ரப் பேப்பர் குயர் கணக்கில் வாங்கி அவரே பைண்டிங் போட்டுக் கொடுப்பார். ஒரு நாளாவது நல்ல பேப்பர் நோட்டு, புது புத்தகம் வாங்க மாட்டோமான்னு ஏக்கமா இருக்கும்.

டூத் பிரஷ், காலிற்கு செருப்பு, அரிசி சாப்பாடு என்பதெல்லாம் எனக்கு அந்தக்கால கனவாகவே இருந்தது. மணப்பாறையில் வேலைக்குப் போனதை வச்சுத்தான் முதல்முதலாக காலிற்கு செருப்பே வாங்கினேன். அதுக்குப்பிறகு கோவைக்கு வந்து ஜவுளிக்கடையில் வேலைபார்த்தேன். ரங்கே கவுடர் வீதியில் ஆர்.கே.வேலாசாமி ஸ்டோர், செல்லையா ஸ்டோர்ன்னு மாறினேன். முந்தையதில் மாதம் ரூ.20 சம்பளம். அடுத்ததில் மாதம் ரூ.25 சம்பளம். கோட்டைமேடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்திருந்தேன். கடை முதலாளி இங்கிலீஸ் மெயில் பத்திரிகை வாசித்துவிட்டு என்னிடம் கொடுப்பார். அதை நான் வாசிப்பேன்.  ஒரு கட்டத்துல புத்தகவாசிப்பு ஆர்வம், அதன் தொடர்புகளில் தீபம், கணையாழி பத்திரிகைகளின் ஏஜண்ட் ஆனேன். அதே சமயம் செலக்சன்னு ஒரு கடை தனியா வச்சேன். அதுவே குடும்பம், குழந்தைகன்னு ஆன பின்னாடி விற்க வேண்டிய நிலை வந்தது. அதை தவிர்க்க அதை வாங்கினரோடவே பார்ட்னரா சேர்ந்து பணியாற்றினேன்.

அந்த கடையே செலக்‌ஷன் எம்போரியம் என பெயர் மாற்றம் கொண்டது. அது மளிகை கடையாக இருந்தாலும், அதில் ஒரு பகுதியாக புத்தகங்கள் விற்பனை நடந்தது. அங்கேதான் புவியரசு, மேத்தா, சிற்பி, அக்னி, ராஜேஷ்குமார் போன்றவர்களின் நெருக்கமான நட்பும், வானம்பாடி கவிஞர்களின் தொடர்பும் ஏற்பட்டது.

செலக்ஷன் எம்போரியத்தினுள்ளேயே சிதம்பரம் அண்கோ என்ற பெயரில் ஸ்டேஷனரி கடை வைத்திருந்தோம். அதிலேதான் இலக்கிய புத்தகங்களும் விற்பனைக்கு வைத்திருந்தேன். 1967ல் நா.பாவின் குறிஞ்சிமலர் மலிவு பதிப்பு ரூ.5க்கு கொண்டு வந்தோம். அந்த விழாவை கவிஞர் அக்னிபுத்ரன், எழுத்தாளர் சுப்ரபாலன், காந்திஅமைதி நிறுவனம் சி.பி.சடகோபன், நான் உள்பட ஐந்து பேர் நடத்தி வெற்றி கண்டோம். அதன் வெளியீட்டு விழாவுக்கு தொழிலதிபர் ஜிஆர்டியை வைத்து (குறிஞ்சி மலர் தொடராக வந்தபோது அதற்கு நிறைய கடிதங்கள் எழுதியவர் என்ற முறையில் அவரையே அழைக்க சொல்லி நா.பா கேட்டுக் கொண்டார்) நடத்தினோம். அதில் மட்டும் 110 புத்தகங்கள் விற்பனையானது. அதைப்பார்த்து புத்தக வெளியீட்டாளர் கண முத்தையா மிகவும் மகிழ்ந்து போய் நல்ல கமிஷன் கொடுத்து, எங்களுக்கு ஒரு விருந்தும் கொடுத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மாதம் முன்பு சென்னையில் நடந்த விழாவில் 20 புத்தகங்கள் கூட விற்கவில்லை என்பதையும் அவரே சொல்லி சந்தோஷப்பட்டார். அவர்தான் உனக்கு நல்லா வரும்பா; நல்ல புத்தகங்கள் வாங்கி வச்சு விற்பனை செய் என்று கேட்டுக் கொண்டார். அவரின் வழிகாட்டுதலே இந்த புத்தக விற்பனை என்னிடம் இப்படி பற்றிக் கொண்டதற்கு முக்கிய காரணம். ஒரு கட்டத்தில் செலக்ட் எம்போரியத்தில் என்னால் இயங்க முடியவில்லை.

அதை பார்ட்னருக்கே விட்டு விட்டு அதற்குள் இருந்த சிதம்பரம் அன் கோ ஸ்டேஷனரி கடை மட்டும் பிரித்தெடுத்துக் கொண்டு அதே ரெங்கே கவுடர் வீதியில் வைக்கிறேன். அதில்தான் விஜயா பதிப்பகம் வெளியீடுகளையும் உள்ளுக்குள் வைத்தேன். அதுவும் குறுகிய காலம்தான். அந்த சிதம்பரம் அன்கோவை நடத்த முடியாமல் அதை ஒருவருக்கு விற்றுவிட்டேன். அதற்குள் இருந்த விஜயா பதிப்பகத்தை எடுத்துக் கொண்டு வந்து ராஜவீதியில் 10க்கு 20 சதுர அடி அறையில் வைத்தேன். 1983, ஜனவரி 31ந்தேதி. அப்போது ரூ.1000 வாடகை. அதுதான் படிப்படியாக இன்று உயர்ந்து 3 மாடிகளிலும் கோடிக்கணக்கான புத்தகங்கள் விற்பனை நிலையமாக வளர்ந்து நிற்கிறது. இப்போது இதற்கு வாடகை கிட்டத்தட்ட 50 மடங்கு. அந்த அளவுக்கு மற்ற செலவுகளும் உள்ளது. அதையெல்லாம் ஈடு செய்வது இந்த புத்தகங்கள் விற்பனையே என்பதைத்தான் நீங்கள் இதில் ஊன்றி கவனிக்க வேண்டும்.

நா.பாவின் தேவதைகளும், சொர்க்கமும், மணிவண்ணன் கவிதைகள், புதிய பார்வை விமர்சனக்கட்டுரைகள் என மூன்று நூல்களையும் என் வீட்டு முகவரியை வைத்து பதிப்பித்தேன். அது விற்பனையில் பெரிய சக்ஸஸ். அங்கிருந்துட்டே மேத்தாவினுடைய கண்ணீர் பூக்கள், ஊர்வலம் போட்டேன். அது விஜயா பதிப்பகம் பெயரில் வெளிவந்தது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் பதிப்பித்து விட்டோம். எந்த இடத்திலும் சோர்வு தட்டியதில்லை.

ஏனென்றால் வாசகனுக்கு எது தேவை என்பதை எங்களால் உணர முடிகிறது. அதற்கான தன்மையை ஓயாது வாசிப்பு ஏற்படுத்தி தந்துவிடுகிறது. அதை தெளிவாக வாசகனுக்கு சுட்டிக்காட்டும்போது அவன் எடுத்துக் கொள்கிறான்”

பதிப்பு உலகத்தோடும், புத்தக விற்பனையோடும் இப்படி ஒன்றி நிற்கும் விஜயா மு.வேலாயுதம் தற்போது கோவைவாசி ஆகிவிட்டாலும் உலகநாதபுரத்தில் உள்ள தனது சொந்த வீட்டை நூலகம் ஆக்கியிருக்கிறார். அதில் உள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களை வாசிக்க மக்களுக்கு தருகிறார்.

ஜூன், 2016.