காபி அருந்த எழும்பூர் அசோகா உணவகத்தில் அமர்ந்திருந்தோம். நம்முடன் இரு மூத்த பத்திரிகையாளர்கள் இருந்தனர். ஒருவர் அடித்துச் சொன்னார்.
‘‘சற்று முன்புதான் பார்த்தேன். (நடிகர் ஒருவர் பெயரைச் சொல்லி) அவர் செத்துட்டாரு! மரணச் சான்றிதழையே பார்த்துவிட்டேன்''
‘‘ஆனால் அவர் செத்துட்டாருன்னு எந்தத் தகவலுமே இல்லையே..?''
‘‘எப்படிச் சொல்வானுக.. லேட்டாத்தான்சொல்வானுக... செத்த பொணத்தை வெச்சு ட்ரீட்மெண்ட் கொடுக்கறதா சொல்லிகிட்டு இருக்கானுங்க'' அவர் சீரியசாகச் சொல்ல, எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் சுத்தமாக நம்பவில்லை. அவர் சொல்வதைப் பார்த்தால், நம்பாமலும் இருக்கமுடியவில்லை! இன்னொரு பத்திரிகையாளர் ஆழமாக காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தார். நம்மைப் பார்த்து
‘‘சாருக்கு ஸோர்ஸ் எல்லாம் ஹை லெவல்!'' என்று மட்டும் சொன்னார்.
அந்த நடிகர் ஓரிரு மாத போராட்டத்துக்குப் பின் பிழைத்து, மேலும் பல படங்கள் நடித்து, இன்று அறிவியலின் நம்பகத் தன்மையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. துரதிருஷ்டவசமாக நாம் பேசிக்கொண்டிருந்த இரு பத்திரிகையாளர்களும் இப்போது உயிருடன் இல்லை.
தமிழ்நாட்டில் அரசியல் உலகில் வதந்திகளும் கிசுகிசுக்களும் காலத்துக்கு ஏற்ப மாறுபட்டுக் கொண்டே இருக்கும். தேர்தல் சமயமென்றால் எல்லோரும் சூட்கேஸ்கள், ‘சி'க்கள் என்று ரகசிய கோட் வேர்டுகளில் பேச ஆரம்பித்துவிடுவார்கள். இப்போது, ஸ்வீட் பாக்ஸ் என்கிறார்கள். தொகுதிகளில் செலவு செய்யக் கொடுத்ததாக உலவும் கோடிகளின் கணக்குகளைப் பார்த்தால், ஒவ்வொரு முறையும் தலை சுற்றும். அப்புறம் இன்னின்னார் செலவு செய்யவில்லை என்று உலவும் வதந்திகள், தேர்தல் முடிந்ததும் வந்து குவியும்.
வதந்திகளை நல்ல அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும் கேட்டுக்கொள்ளவேண்டுமே தவிர, அதை எங்காவது இன்னொரு இடத்தில் கேட்டு உறுதிப்படுத்தாமல் நம்பக்கூடாது என்பது, பாலபாடம். குறைந்த பட்சம் காமன்சென்ஸுடன் அது பொருந்துகிறதா என்றாவது பார்த்துக் கொள்ளவேண்டும். ஆனால், அரசியலில் காமன்சென்ஸும் தோற்றுப்போகும் நிலையும் உண்டு.
தொழிலுக்கு வந்த புதிதில் பணியாற்றிய பத்திரிகையில், கிசுகிசு பத்தியொன்றை ஒருங்கிணைக்கும் வேலை செய்தோம். அது தேர்தல் காலம். முக்கியக் கட்சி கஷ்டப்பட்டு சில ஆண்டுகளாக ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கி இருந்தது. அதன் கூட்டணிப் பேச்சுவார்த்தை, சீட் பங்கீடுகள் எல்லாம் முடிந்த பிறகு, மாலை இதழை அச்சுக்கு அனுப்பினோம். எங்கள் செய்தியாளர் வந்து, குறிப்பிட்ட அந்தக் கூட்டணியில் ஒரு கூட்டணித் தலைவர் பிய்த்துக்கொண்டு நாளைக்கே எதிரணிக்குப் போய்விடப்போகிறார் என்று கூறினார். பிற செய்தியாளர்கள் கொடுத்த செய்தி வேறுமாதிரி இருந்தது. எனவே சற்று யோசித்து காமன்சென்ஸ்படி, கூட்டணி உடைய வாய்ப்பில்லை, இப்படியெல்லாம் தற்கொலை முடிவை அந்தக் கட்சியினர் எடுக்கமாட்டார்கள் என ஆசிரியர் குழுவில் கருதி, அந்தச் செய்தியைப் புறக்கணித்தோம்.
ஆனால், மறுநாளே அந்தத் தலைவர் பாய்ந்து எதிரணி சென்றுவிட்டார்! கிட்டத்தட்ட அது தற்கொலை முடிவாகவே வரலாற்றில் பதிவானது! அதன் பிறகு அந்தச் செய்தியை முன்கூட்டியே தந்த செய்தியாளர், ஆசிரியர் குழுவினரைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகளை அச்சில் ஏற்ற முடியாது!
தமிழக அரசியல் சூழல், தேர்தல் சமயத்தில் மட்டும் மிகவேகமாக மாறிக்கொண்டே இருக்கும். அச்சமயத்தில் வரும் வதந்திகள், கிசுகிசுக்களை வடிகட்டி எடுப்பது தனிக் கலை!
ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியை காலி செய்யவேண்டுமென்றால், அவரை நோக்கி, பாதி உண்மையும் பாதி வதந்தியும் கலந்த செய்திகள் அவிழ்த்து விடப்படும். அது வெளியே வந்து அதற்குக் கண், காது முளைத்து பெரும் பூதமாக வளர்ந்துவிடும். அது இல்லிங்கய்யா.. என்று அதில் சம்பந்தப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் கரடியாகக் கத்தினாலும் யாருக்கும் நம்ப விருப்பம் இருக்காது. அந்த வதந்தியையே உண்மை என நம்பத் தலைப்படுவார்கள். அதுதான் வதந்தியின் தனித் தன்மை! அந்தமாதிரி உண்மையை விஞ்சிவிட்ட வதந்திகள் தற்போதிருக்கும் எல்லா தலைவர்களுக்கும் இருக்கின்றன. அவற்றை வெட்டவெட்ட ,அவை முளைத்துக்கொண்டே இருக்கின்றன.
அவை உண்மை அல்ல என்று தெரிந்தாலும், எதிர்த் தரப்பால் அவை ஆயுதங்களாக ஒவ்வொரு முறையும் எடுத்துப் பரப்பப்படுகின்றன. இன்றைய சமூக ஊடகச் சூழலில் இவற்றைப் பரப்பவே ஒவ்வொரு கட்சியும் சிறப்புக் குழுக்களை வைத்துள்ளன. ஒரு வதந்தியைப் பொய் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்தாலும் சில நாட்கள் கழித்து இன்னொரு குழுவில் அது ஆவேசமாகப் பரப்பப்படும். கடைசியில் யாரைப் பற்றி வதந்தியோ அவரே அதை உண்மை என்றே நம்ப ஆரம்பித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!
இந்த வதந்திகள் பெருந்தொற்று, இயற்கைப் பேரிடர் சமயங்களில் வேறு வகையில் விஸ்வரூபம் எடுக்கும். உலகில் எங்கோ மூலையில் நடந்த விபத்தின் படத்தைப் போட்டு, இங்கே நடந்தது என்று வரும் செய்திகளை ஒருகாலத்தில் ஆவேசமாக நாமும் ஃபார்வேர்ட் பண்ணிக்கொண்டிருந்தோம். இப்போது கூட, போன ஆண்டு கொல்கத்தாவில் கொரோனா நோயாளிகள் ஓரிடத்தில் அடைபட்டிருந்த புகைப்படத்தைப் போட்டு, சென்னை நிலவரம் என பீதியைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
வதந்திகளில் ஆளைக் காலி செய்து அரசியல் எதிர்காலத்தை நசுக்கும் வதந்திகள் ஒரு வகை என்றால், இன்னொரு வகை அவருக்கு நல்ல பிம்பத்தை உருவாக்கித்தரும் வதந்திகள் பரப்பப்படும். அவர் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து வாக்கிங் போய் செய்தித்தாள் படித்து, குளித்து, பூஜை செய்து கிளம்புவார் என பத்திரிகையில் எழுதி இருப்பார்கள். நேரில் போய்ப் பார்த்தால், தலை கீழாக இருக்கும். இப்படித்தான் பல வள்ளல் பெருமான்கள், ஈகைக் கொடைவள்ளல்கள், அறிவுஜீவிகள் இங்கே உலா வந்துகொண்டிருக்கிறார்கள்.
செய்தியாளர்கள் மட்டுமே அரசியல் கிசுகிசுகளின் நாயகர்களாக வலம் வந்த காலம் இப்போது மாறிவிட்டது. ட்விட்டர் ஹேண்டில்கள், வாட்ஸப், டெலிகிராம் குழுக்களில் இப்போது அது குடிகொண்டிருக்கிறது.
‘‘சமீபத்தில் கூட பத்திரிகையாளர் ஒருவர் கொரோனா பற்றி உலவும் சதி சந்தேகத் தகவல்களை ஊதிப்பெருக்கிப் போட்டிருந்தார். அதில் எதுவுமே லாஜிக் படி இல்லை என்பதால், அது உடனே நிராகரிக்கப்படும். சமூக ஊடகங்களில் வரும் எந்த வதந்திக்கும் முகமே இல்லை. ஆனால் மையநீரோட்டப் பத்திரிகைகளுக்கு முகமும் நம்பகத் தன்மையும் உண்டு. ஆனால், இவர்களே இப்படி வலிந்து சிலவற்றை சில காரணங்களுக்காக வெளியிடும்போது, தங்களுக்குத் தாங்களே குழி தோண்டிக்கொள்கிறார்கள்,'' என்கிறார், மூத்த பத்திரிகையாளரான வி.கதிர்வேல்.
‘‘வதந்திகளும் புரளிகளும் அரசியலில் ஆயுதங்களாகப் பயன்படுத்தப் படுகின்றன என்பது, உண்மைதான். அது இன்றில்லை. மகாபாரதத்தில் அஸ்வத்தாமா இறந்துவிட்டதாக யுதிஷ்டிரர் சொன்னதிலிருந்தே உள்ளதுதான். வதந்திகள் வரும்போது அவற்றை விட தங்களை பலப்படுத்திக்கொள்ள அரசியல்வாதிகள் பழகவேண்டும். ஆனால், அவை ஏற்படுத்தும் காயங்கள் நிஜமே. கூட்டத்தை நோக்கிக் கல் எறிவதுபோலத்தான் இந்த வதந்திகள்; சிலர் மீது படத்தான் செய்யும். ஆனால் கொஞ்ச காலத்தில் இந்த ஆயுதம் துருப்பிடித்துப் போய் கைப்பிடி மட்டுமே எஞ்சும்!'' எனக் கூறுகிறார், அவர்.
நாம் அடிக்கடி கேள்விப்படும் வதந்திகளில் ஒன்று, தலைவர்களின் உடல்நிலையைச் சார்ந்தது. கலைஞர் நலமின்றி இருந்தபோது, மாதாமாதம் கிராமப்புறப் பகுதிகளில் அவர் நிலை பற்றி வதந்திகள் பரவிக்கொண்டே இருந்தன. ஜெயலலிதா இறந்தபோது அவர் மரணத்தை உறுதிப்படுத்துவதற்கு பல மணி நேரம் முன்பே தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டு, பின்னர் மாற்றிக்கொண்டதையும் நாம் பார்த்தோம். ஆனால் அதற்குள் பேருந்துகள் நிறுத்தப்பட்டு மக்கள் நடுத்தெருவில் சின்னா பின்னமானார்கள்.
குழந்தை கடத்தும் கும்பலைப் பற்றிய வதந்திகள் காலங்காலமாக உண்டு. ஆனால் இரு ஆண்டுகளுக்கு முன்பாக நாடு முழுக்கப் பரவிய வதந்தியால், சுமார் 30 பேர் வரை கொல்லப்பட்டனர்.
சென்னையிலிருந்து திருவண்ணாமலை அருகே குலதெய்வம் கோயிலுக்குச் சென்ற ஓர் அப்பாவிக் குடும்பத்தினரை ஊர்மக்கள் 200 பேர் விரட்டித் தாக்கியதில், அக்குடும்பத்தைச் சேர்ந்த ருக்மணி என்ற பெண்மணி பலியானார். பழவேற்காட்டைச் சேர்ந்த ஓர் இளைஞரை அடித்ததுடன், கழுத்தில் சுருக்கிட்டு பாலத்தில் தொங்கவிட்டனர், இந்த வாட்ஸ் அப் ரசிகர்கள்.
சமூக ஊடகங்களின் வதந்தி, புரளி பரப்பும் பலத்தை அரசியல் கட்சிகள் அறியாமலா இருக்கும்? பாஜகவின் ஐ.டி பிரிவு எதிர்க்கருத்துச் சொல்கிறவர்களை எப்படி சமூக ஊடகங்களில் குறிவைத்துத் தாக்கியது என்று ஸ்வாதி சதுர்வேதி என்ற பத்திரிகையாளர், ‘I am Troll - Inside The Secret World of the BJP"s Digital Army' என்றொரு புத்தகமே எழுதி உள்ளார். பாஜக மட்டுமல்ல, இந்த மாதிரி சமூக ஊடகங்களில் புழுதிவாரித் தூற்றும் பணிக்கென்றே எல்லா அரசியல் கட்சிகளும்
சிறப்புக் குழுக்கள் வைத்துள்ளன. தமிழக அரசியல் சூழலில் யார் சமூக ஊடகங்களிலும் பத்திரிகைப் பேட்டிகளிலும் புரளிகளைக் கிளப்புகிறார்கள் என்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். பெரும்பாலும் பொதுவாழ்வுக்கு வரும் பெண்களை மிக எளிதாக தாக்குதல் நடத்தி நிலை குலைய வைக்கிறார்கள். புகார்கள் கொடுக்கப்பட்டாலும் நடவடிக்கை எடுக்க வைப்பதற்குள் போதும்போதும் என்று ஆகிவிடுகிறது! பொதுவாக, நடவடிக்கையே கிடையாது!
அரிதான சந்தப்பங்களில், நல்ல செய்தி என்று நினைத்து எழுதப்படும் செய்திகளும்கூட ஏழரையைக் கூட்டிய சம்பவங்களும் உண்டு. அப்போதெல்லாம், தலைவர்களைப் பற்றிய ஒருவரிச் செய்திகள், நான் வேலைபார்த்த பத்திரிகையில் போடுவதுண்டு. அப்படி ஒரு மூத்த தலைவரைப் பற்றி ஒரு வரிச் செய்தி: காலையில் முதல்வேலையாக அந்தத் தலைவர் சில கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்! நல்ல செய்திதானே.. இதில் என்ன பிரச்னை?
அந்தத் தலைவருக்கு நெருங்கிய ஒரு நண்பரை அடுத்த சில நாட்களில் பார்த்தோம். அவர் எங்களைப் பார்த்ததும் கடும் கோபம் கொண்டார். ‘‘என்னங்கய்யா தப்புத்தப்பா எழுதறீங்க.. எங்க தலைவர் கோபித்துக்கொண்டார்!'' என்று சீறினார்.
நாமோ அப்பாவியாக, நல்ல செய்திதானே போட்டோம் என்றோம். ‘‘யோவ், தலைவருக்கு ப்ராஸ்டேட் ஆபரேஷன் பண்ணி ஒரு மாசமாக நடக்கவே சிரமப்பட்டுகிட்டு இருக்காரு.. நீங்க சைக்கிள் ஓட்டறாருன்னு எழுதிட்டீங்களே..'' என்றார். சொல்லி முடித்த அவர் முகத்திலும் சிரிப்பு படர, நாங்களும் சேர்ந்து சிரித்த சிரிப்பில் எங்கள் ப்ராஸ்டேட் சுரப்பியே கலங்கி இருக்கும்!
ஜூன், 2021