வண்ணதாசன்  
சிறப்புப்பக்கங்கள்

வண்ணதாசன் : இசைமை

சுகா

நான்கைந்து மாதங்களுக்கு முன் சேலத்தில் நடைபெற்ற எழுத்தாளர் மாரி செல்வராஜின் திருமண வரவேற்பில் வண்ணதாசன் அண்ணாச்சியுடன் கல்யாண மண்டபத்தின் பின் வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்தேன். மண்டபத்தில் ஏற்கனவே இருந்த வெக்கையை மின்விசிறிகள் மேலும் அதிகரித்தபடி சுற்றிக் கொண்டிருந்தன. ‘ரொம்பப் புளுக்கமா  இருக்குல்லா’ என்று எங்களுக்குள் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தோம். தூரத்தில் நான்கு இளைஞர்கள். உடன் ஓர் யுவதி. வண்ணதாசன் அண்ணாச்சியைப் பார்த்து கைகளை உயர்த்தி, வணங்குவது போலுமல்லாமல், குட்மார்னிங்  சொல்வது போலுமல்லாமல் ஏதோ ஒரு வகையில் தங்களின் அன்பையும், மரியாதையையும் சொல்ல முயன்றனர். முதலில் இதை வண்ணதாசன் அண்ணாச்சி கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் அந்த இளைஞர்கள் தயங்கித் தயங்கி நாங்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு வந்தார்கள். என்னைத் தாண்டி எனக்கருகில் அமர்ந்திருந்த அண்ணாச்சியை அவர்கள் நெருங்கும் போது, அவர்களில் ஓர் இளைஞனை மட்டும் மற்றவர்கள்  மெல்ல முன்னுக்குத் தள்ளினார்கள். அந்த இளைஞன் அருகே வரவும் அண்ணாச்சி எழுந்து கொண்டார்கள். அவனது தயக்கத்தை உடைக்கும் விதமாக அவனது கைகளைப் பிடித்துக் கொண்டார்கள். பையன் அழுதுவிடுவான் போலிருந்தது. ஏதோ சொல்ல வாயெடுத்தவனுக்கு வார்த்தைகள் ஏதும் சிக்கவில்லை. பின்னாலிருந்து அவனது தோழி, ‘டேய் கார்த்தி. அழுதுராதடா! என்னென்னவோ பேசணும்னு சொன்னியே! பேசுடா’ என்றார். ‘பேசலேன்னாலும் பரவாயில்லப்பா. இதுவே நல்லாத்தான் இருக்கு’ என்றார், அண்ணாச்சி. இன்னும் அவனது கைகளை அவர் விடவில்லை. கார்த்தி என்கிற இளைஞன் உடைந்த குரலில் பேச ஆரம்பித்தான். ‘உங்களோட ஓர் உல்லாசப் பயணம் கதய நான் எத்தன வாட்டி படிச்சிருப்பேன்னு எனக்கே தெரியாது’ என்று தொடங்கி, இன்னும் சில வார்த்தைகள் பேசினான். இதைக் கேட்ட வண்ணதாசன் அண்ணாச்சிக்கு மட்டுமில்லாமல் எனக்குமே ஆச்சரியம் தாங்கவில்லை. ‘ஓர் உல்லாசப் பயணம்’ கதை வெளியான ஆண்டில் அந்த இளைஞனின் தகப்பனாரே சின்னஞ் சிறுவனாகத் தான் இருந்திருப்பார். ‘தலைக்கு எண்ணெய் தேய்க்காத தலைமுறை வந்து விட்டது’ என்று தன் கவிதை ஒன்றில் எழுதிய, தலைமுறைகளைத் தாண்டி இன்னும் ஈர்க்கிற எழுத்துக்குச் சொந்தக்காரரான வண்ணதாசன் என்னும் படைப்பாளி இன்னும் என் மனதில் உயர்ந்த இடம் அது.

வண்ணதாசனின் எழுத்துகளை சிறுவயதிலிருந்தே வாசித்து வருகிறேன். அமரர் சுஜாதா சிலாகித்த ‘நிலை’ உட்பட பல கதைகளை எந்த நேரத்திலும் நினைவுகூர்ந்து என்னால் சொல்ல இயலும். அவரது புகழ் பெற்ற சிறுகதைகளான ‘தனுமை, சங்கிலி, ஆறு, சைகைகள் மூலம் செய்திகள்’ தவிர, என்னுடைய தனிப்பட்ட விருப்பக் கதையான ‘பற்பசைக்குழாயும் நாவல் பழங்களும்’, மொத்தக் கதையோட்டத்தையும் கடைசி வரிகளினால் புரட்டிப் போட்டு விடும் ‘அப்பாவைக் கொன்றவன்’ போன்ற கதைகளை மீண்டும் படிக்காமலேயே அதன் வரிகளை இன்றைக்கும் மனதுக் குள் வாசிக்க முடிகிறது.

வண்ணதாசனின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான ‘ஒரு சிறு இசை’யில் இடம் பெற்றுள்ள கதைகளை  வாசித்து விட்டு, அவரது துவக்க காலச் சிறுகதைகள் சிலவற்றை வாசிக்க நேர்ந்த போது இப்போது முதிர்ந்திருக்கிற அவரது எழுத்தின் நேர்த்தியையும், உயரத்தையும் அந்தக் கதைகளிலேயே காண முடிகிறது. அவரது எழுத்து எழுதி எழுதிப் பழக்கத்தில் உருவானதல்ல. காகிதத்தில் எழுதத் துவங்கும் முன்பே அவர் மனதில் அத்தனையையும் எழுதிப் பார்த்து விட்டுத்தான் வந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அதனால்தான் ‘கன்னங்கரேல் என்று  சிறு சிறு குழிழ்களுடன் அசைவே அற்றுப் போன பல வருடங்களாகக் கிடப்பது போன்று தோன்றுகிற அந்தச் சாக்கடையைத் தொடர்ந்து போனாலே ஜூடி வீடு வந்து விடும்’ என்று அவரால் ஒரு சிறுகதையின் துவக்க வரிகளை எழுத முடிகிறது. ‘சோப்பு நுரை அப்பி அப்பி முகம் முழுவதும் மறைந்த பொழுது, தாத்தா அவனிடம் சகஜமாகப் பேச ஆரம்பித்திருந்தார் ‘என்று ஒரு சிறுகதையை நிறைவு செய்ய முடிகிறது. ‘அவனுடைய நதி அவளுடைய ஓடை’ என்கிற தலைப்பை ஒரு  சிறுகதைக்குச் சூட்ட முடிகிறது.

சமீபகாலத்தில் அவர் எழுதிய ‘கல்பனா ஸ்டூடியோவில் ஒரு ஃபோட்டோ  ‘ சிறுகதையை அவரது சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் கருதுகிறேன். கதை நிகழ்கின்ற நிலப்பரப்பில் சுற்றி நடக்கின்ற அத்தனையையும் இவரால் எப்படி கவனித்து, நம்மையும் கவனிக்க வைக்க முடிகிறது என்ற ஆச்சரியம் கதை முழுவதும் தொடர்ந்து கொண்டே வருகிறது. தன் கண் முன்னால் கடந்து செல்கிற ஓர் இறுதி ஊர்வலத்தை இப்படிச் சொல்கிறார். ‘எனக்கென்னவோ பள்ளத்துக்குள் இறங்குகிற மழைத் தண்ணீர் மாதிரி அத்தனை பேரும் ஒரு சரிவுக்குள் பாய்ந்து அப்படியே காணாமல் போய் விட்டதாகவே தோன்றியது’. இன்னொரு இடத்தில், ‘எதிர்த்த ஹோட்டலில் ‘சாப்பாடு ரெடி’ என்கிற போர்டைக் கூரை மாதிரி இரண்டு பக்கமும் பிளந்து வைத்து விட்டுப் போனார்கள்’ என்கிறார். ‘பதினாறு பதினேழு வயசுப் பையன் கல்லிடைக்குறிச்சியில புரோட்டா கடைல நிக்கானாம். அவன் எனக்குப் பிறந்தவனாம். அவ சொல்லுதா மாப்பிளே’ என்று பிரமு கதறும் போது நாமும் கூடச் சேர்ந்து கலங்குகிறோம்.

‘கதையை எழுதி முடித்து வாசிக்கையில், அந்தக் குறிப்பிட்ட வரிகளைத் தாண்டும் தருணத்தில், மெய்யாகவே நான் ஒரு சிறு இசையை அந்த வரிகளில் உணர முடிந்தது. கேட்கிற இசையை விட உணர்கிற இசை கூடுதல் இசைமை உடையது’- ‘ஒரு சிறு இசை’ தொகுப்பின் முன்னுரையில் ‘ஒரு சிறு இசை’ என்கிற தலைப்பில் உள்ள சிறுகதையைப் பற்றி வண்ணதாசன் இப்படிக் குறிப்பிடுகிறார்.  எனக்கு அவரது ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ தொகுப்பிலுள்ள கதைகளைப் படித்த போதே அப்படித்தான் தோன்றியது. அதுதான் வண்ணதாசனின் முதல் தொகுப்பு.

(சாகித்ய அகாடமி விருது பெற்றமைக்காக வண்ணதாசன் அவர்களுக்கு அந்திமழை வாசகர்கள்  சார்பில் வாழ்த்துகள்!- ஆசிரியர் குழு)

ஜனவரி, 2017.