சிறப்புப்பக்கங்கள்

லெனினை சந்தித்த ஆச்சார்யா

Staff Writer

மண்டயம் பிரதிவாதி திருமலாச்சார்யா. இந்த பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இருக்கலாம் என்றே வைத்துக்கொள்வோம். பாரதியுடன் இணைந்து இந்தியா பத்திரிகை நடத்தியவர். பாரதி, புதுவைக்குச் சென்றபோது அங்கே அச்சுப்பொறியை பகுதி பகுதியாகப் பிரித்து அனுப்பியவர் இவர்தான். எம்.பி.டி.ஆச்சார்யா!

கிருஷ்ண வர்மா ஷியாமாஜி என்ற விடுதலைவீரர் லண்டனில் நடத்திய இந்தியா ஹவுஸுக்குப் போய்ச்சேர்ந்த ஆச்சார்யா, அங்கே வீர் சாவர்க்கர், வவேசு ஐயர், டி.எஸ்.எஸ்.ராஜன் ஆகியோருடன் தங்கி இருந்தார். இவர்கள் இந்திய விடுதலைக்காக லண்டனில் முழங்கினார்கள். இவர்களின் நண்பர் மதன்லால் திங்க்ரா என்னும் இளைஞர், சர் வில்லியம் கர்சான் வில்லி என்ற ஆங்கில அதிகாரியைச் சுட்டுக்கொன்றார். 1909-ஆம் ஆண்டு நடந்தது இது. லண்டனில் இருந்த இந்தியர்கள் ஒரு கூட்டம் நடத்தி இந்த கொலையைக் கண்டித்தனர். இதைக் கூட்டத்தில் இருந்த சாவர்க்கர் எதிர்த்தார். அவரை பாமர் என்ற ஆங்கிலோ இந்தியர் ஓங்கி உதைத்தார். சாவர்க்கர் கீழே விழுந்து அவரது கண்ணாடி உடைந்தது. அடுத்தகணம் பாமர் மீது ஒரு தடியடி விழுந்தது. தாக்கியவர் நம் ஆச்சார்யா!

பாமர் சாவர்க்கரை தாக்கியதை ஒரு பத்திரிகையில் உண்மையான பிரிட்டிஷ் அடி என்ற தலைப்பில் எழுதினார். பதிலுக்கு ஆச்சாரியா, தான் திருப்பி அடித் ததை ஒரு இந்தியனின் பதிலடி என்ற தலைப்பில் எழுதினார்.

இதை அடுத்து இந்தியா ஹவுஸ் மூடப்பட்டு, ஆச்சார்யா மொராக்கோ சென்று அங்குள்ள மூர் படையில் சேர்ந்து ஸ்பெயினை எதிர்க்க முயன்றார். ஆனால் அவரை அவர்கள் சேர்த்துக் கொள்ளவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பவேண்டியதாயிற்று. பாரிசுக்கு வந்து அங்குள்ள இந்திய கழகத்தில் சேர்ந்தார்.  ரொட்டர்டேம் சென்று சாவர்க்கரின் முதல் விடுதலைப்போர் என்ற நூலை அச்சிட்டார். புரட்சி வெளியீடுகளை இந்தியாவுக்கு அனுப்பினார். 1912 முதல் 14 வரை கத்தார் இயக்கப் போராளிகளுடன் அமெரிக்காவில் இருந்தார். பின்னர் பெர்லின், துருக்கியில் கான்ஸ்டாண்டினோபில். பாரிசில் இருந்தபோது பிற இந்தியப் புரட்சியாளர்களைப் போல சோஷலிசக் கருத்துக்களால் கவரப்பட்டார். 1919-ல் காபூலில் இருந்து மகேந்திர பிரதாப் என்பவர் தலைமையில் சென்ற குழுவுடன் ரஷ்யா போய் லெனினுடன் சந்திப்பு.

கம்யூனிசக் கருத்துகளால் கவரப்பட்டார். பின்னர்  காபூல் வந்து  இந்தியப் புரட்சிக் கழகம் தொடங்கினார். இந்த கழகத்தின் சார்பில் ஒடுக்கப்பட்ட மக்களை மீட்கும் முயற்சியில் இருக்கும் சோவியத் ரஷ்யாவுக்கு நன்றி தெரிவித்து லெனினுக்கு கடிதம் எழுதப்பட்டது. லெனினும் முற்போக்கு இந்தியர்களின் ஆர்வத்தைப் பாராட்டி பதில் எழுதினார். 1920-ல் இந்தியப் பிரதிநிதியாக இரண்டாம் கம்யூனிஸ்ட் அகிலத்தில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத் தது. அவர் தாஷ்கண்டில் உருவாக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவிய உறுப்பினர் ஆனார். இரண்டு ஆண்டுகள் ரஷ்யாவில் அவர் இருந்தார். அதன் பின்னர் பெர்லின் திரும்பினார். கம்யூனிச சிந்தனைகளை விட்டு விலகி அனார்க்கிஸ்ட் சிந்தனைவாதி ஆனார்.

செண்பகராமன் பிள்ளை,  விரேந்திரநாத் சட்டோபாத்யாயா, உள்ளிட்டவர்கள் அங்கே இருந்தனர். ஹிட்லர் ஜெர்மனியில் எழுச்சி பெற்ற பின்னர் இவர்களால் அங்கு இருக்கமுடியாத சூழல் ஏற்பட்டு, 1935-ல் தன் மனைவியான போலந்துப் பெண்மணியுடன் இந்தியா வந்தார். அவர் அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னைக்கு தனியாக வந்ததற்கு குறிப்பு இருக்கிறது. அதன் பின்னர் அவர் 19 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தார்.  அவரது மனைவி ஓவியராகப் பணிபுரிந்து பணம் ஈட்டினார். 1950-ல் மனைவி இறந்தபின் 1954ல் வறுமையான சூழலில் எம்.பி.டி. ஆச்சார்யா காலமானார். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தமிழன், ஐரோப்பா முழுக்க பயணம் செய்து தன் வாழ்வை  மும்பையில் முடித்துக்கொண்டான்.

ஆகஸ்ட், 2015.