தயாரிப்பாளர் வெங்கட் சுபா 
சிறப்புப்பக்கங்கள்

லாபமாக சினிமா எடுப்பது எப்படி?

Staff Writer

தமிழ் சினிமா தரத்தின் அடிப்படையில் ஆரோக்கியமாக இருக்கிறது. ஆனால் அதன் தயாரிப்பாளர்களைப் பற்றிக்கேட்டால் நிரந்தரத் தயாரிப்பாளர்கள் என்று இப்போது யாரும் இல்லை. மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

புதிதுபுதிதாகப் படமெடுக்க வருகிறார்கள்; போகிறார்கள். ஒருவர் சென்றதும் இன்னொருவர் வருவார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தால் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், விநியோகஸ்தர்கள் என்று சிறுசிறு குழுவாக இருப்பார்கள். வேறுயாரும் இதற்குள் வரமாட்டார்கள். பாரதிராஜாவின் வருகைக்குப் பின்னால் பெரிய கதவு திறந்தது.
சினிமா மீது சென்னைக்கு வெளியேயும் நாட்டுக்கு வெளியேயும் இருப்பவர்களுக்கு ஆர்வம் வந்துவிட்டது. புதியவர்கள் வந்து படங்களை எடுத்தபோது ஏற்கெனவே தயாரிப்பாளர்களாக இருந்தவர்களால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை. புதியவர்கள்  நடிகர்களின், இயக்குநர்களின் சம்பளத்தை உயர்த்தினார்கள்.  படங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது. சாதாரண நடிகர்கள்கூட நிறைய படங்கள் பண்ணுகிறார்கள். ஆனால் எதுவும் வெற்றி பெறுவதில்லை. ஏனெனில், படம் பார்க்கிற ரசிகர்களுக்கு நிறைய குறுக்கீடுகள் வந்துவிட்டன. நான் சொல்லும் பழைய பொற்காலத்தில் படம் பார்ப்பதற்கு என்றே பெரிய கூட்டம் இருந்தது. இது ஒரு முக்கியமான அம்சம்.

இன்றைய சினிமாவை வாழவைப்பவர்கள் யார் என்றால் ரியல் எஸ்டேட்காரர்கள், அங்கீகாரம் தேடும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், அரசியல்வாதிகளின் கள்ளப் பணத்தை முதலீடு செய்பவர்கள், இவர்களுடன் கடைசியாக என்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் சினிமாவுக்கு வந்துள்ளவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இன்று வெற்றிகரமான தமிழ்த் தயாரிப்பாளர்கள். அதாவது பணத்தை நிஜமாகவே சம்பாதித்தவர்கள் என்று சொல்லவேண்டுமென்றால் சூப்பர்குட் ஃபில்ம்ஸ், சவுத்ரியைச் சொல்லலாம். இன்று அவர் நேரடியாகப் படம் தயாரிக்காவிட்டாலும் பின்னணியில் இயங்குகிறார். தாணு, எஸ்.ஆர்.பிரபு, சன்
பிக்சர்ஸ் போன்ற வேறு சிலர், லாபத்தில் இயங்கும் தயாரிப்பாளர்களாகச் சொல்லலாம்.

இன்று எவ்வளவு ரூபாயில் படம் எடுத்தால் லாபம் கிடைக்கும்?

ஓர் அழகான படத்தை திட்டமிட்டு அறுபது லட்சத்தில் எடுத்தால் அந்தப் படம் நஷ்டமானாலும் நஷ்டம் அறுபது லட்சம்தானே.. ஆகவே அந்தப் படம் லாபமான படம் என்றுதான் சொல்லவேண்டும். அத்துடன் யாரெல்லாம் படம் எடுத்து மூன்று நான்கு மாதங்களில் வெளியிட்டுவிடுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் நஷ்டம் குறைவு. அனுபவம், திட்டமிடுதல், சரியான நேரத்தில் வெளியிடுதல் போன்றவை மிக முக்கியம். பெரிய நடிகர்கள், புதுமுகங்களை நம்பலாம். இதற்கு இடையில் இருக்கும் நடிகர்களை நம்புவது ஆபத்தானது. பெரும்பாலானவர்கள் கடன் வாங்கித்தான் படம் எடுக்கிறார்கள். அப்படிக் கடன் வாங்கும் இடமும் சினிமா ரசனை உடையவர்களாக இருப்பது நல்லது.

எல்லா தயாரிப்பாளர்களுக்கும் பணம், மனம் ரீதியாக அழுத்தம் இருப்பதைக் காண்கிறேன். நடிகர்கள் சம்பள அதிகரிப்பு, இயக்குநர்கள் அதிகம் செலவு வைப்பது ஆகியவை அவர்களுக்குப் பிரச்னை தருகின்றன. வீழ்ந்து கஷ்டத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களின் பெயர்களைச் சொல்லி நான் நோகடிக்க விரும்பவில்லை. ஒரு நிறுவனத்தை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன்.   பெரிய
சாம்ராஜ்யமாக வருவதற்கான எல்லா வாய்ப்புகளுடன் சில நூறுகோடிகளுடன்  ஹைதராபாத்தில் இருந்து வந்தது ஒரு நிறுவனம். போதுமடா சாமி என்று சில அனுபவங்களுடன் திரும்பி அங்கேயே போய்விட்டார்கள். அதற்குக் காரணம், அவர்கள் இங்கே நம்பிய பெரிய நடிகர்களும் பெரிய இயக்குநர்களும். அந்த நிறுவனம்,பிவிபி!

( நமது செய்தியாளரிடம் பேசியதிலிருந்து)

ஆகஸ்ட், 2019.