சிறப்புப்பக்கங்கள்

லட்சக்கணக்கானோர் வறுமையிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.

சஞ்சனா மீனாட்சி

‘முறுக்கு சுட்டு கிட்டுருக்கேன்.. கொஞ்ச நேரெஞ்செண்டு பேசுறியளா?” என்கிறார் ஜானகி. மதுரையில் பரமேசுவரி புட் ப்ராடக்ட்ஸ் என்ற பெயரில் சிறுதானிய முறுக்கு, தட்டை, சீடை, லட்டு போன்ற பலகாரங்களை தயார் செய்து விற்றுக்கொண்டிருக்கும் பெண்மணி.

கடன் தொல்லையால் கணவர் வேலையை விட்ட நிலையில் வறுமையான சூழலில் இட்லிக்கடை போட்டு நடத்திக்கொண்டிருந்தவர் ஜானகி. பனிரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்த மகன் இன்று சொந்தமாக தொழில் செய்துகொண்டிருக்கிறார். ஒரே பெண்ணையும் திருமணம் செய்து கொடுத்து அவரும்  கணினிப்பயிற்சி பெற்று கணக்காளராக வேலை செய்கிறார். இதற்கெல்லாம் காரணமாக அவர் சுட்டிக்காட்டுவது தானம் அறக்கட்டளையின் களஞ்சியம் இயக்கத்தை. “ சிறுதொழில்கள் செய்ய பயிற்சி கொடுத்தபோது எனக்கு அப்பளம் செய்ய பயிற்சி கொடுங்க என்று கேட்டேன். ஆனால் அப்பளம் எல்லோரும் செய்வாங்க. சிறு தானியங்களில் பலகாரங்கள் செய்யக் கற்றுத்தருகிறோம். இதுதான் எதிர்காலத்தில் நல்ல உதவியாக இருக்கும் என்று சொல்லி கற்றுத் தந்தார்கள். விவசாயக் கல்லூரியிலும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். நான் சிறுதொழிலுக்கான சான்றிதழ், அரசின் உணவுப்பாதுகாப்பு சான்றிதழ் பெறவும் உதவி செய்தாங்க. இன்னிக்கு கடைகளில் எங்கள் பொருட்களை விற்பனைக்கு வைத்துக்கொண்டு வருகிறோம். இன்னமும் விற்பனை செய்ய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கும் உதவி கேட்டிருக்கிறேன். என்னைப் போன்ற பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு பெண்ணுக்கு, அதுவும் 50 வயதுக்கு மேல் ஒரு தொழில் ஆரம்பிக்கும் துணிச்சலைத் தந்தது இந்த இயக்கம்தான்” என்று தெரிவிக்கிறார் ஜானகி.

கே.புதூர் சந்தையில் கடை வைத்திருக்கும் ஆர். மீனா இன்றைக்கு களஞ்சியம் இயக்கத்தில் உப தலைவராக இருக்கிறார். 2000-வது ஆண்டில் களஞ்சியத்தில் சேரும் வரை தனக்கு எதுவுமே தெரியாது என்கிற இவர் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். கணவர் கொத்தனார் வேலைக்குச் செல்பவராக இருந்தார்.  “கையெழுத்துமட்டுந்தான் போடத்தெரியும். சினிமா பாத்துட்டு அரட்டை அடிச்சு பொழுது போக்கிட்டு இருந்தேன். வறுமைதான் வீட்டில். ஆனா இப்போ எனக்கு நிற்க நேரம் இல்லை. அவ்வளவு பிஸியா இருக்கேன். களஞ்சியத்தில் உறுப்பினர் சேர்ப்பது, பயிற்சிகள் அளிப்பது, சேமிப்பு பற்றி சொல்வது, பெண்கல்வி, சுகாதார விழிப்புணர்வு என்று நிறைய பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கிட்டிருக்கேன். 2005-ல் ஐயாயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரு கடை போட்டேன். இப்படி தொழில் தொடங்க நம்பிக்கையே இந்த இயக்கத்தில் சேர்ந்ததால்தான் வந்துச்சு.  கருவாடு காய்கறி, வெங்காயம் எதுவனாலும் வாங்கி விப்பேன். சீசனுக்கு ஏத்தமாதிரி பொருட்களை விப்பேன். வியாபாரத்தில் அன்னின்னிக்கு போட்ட முதல் தேறணும். அதுதான் முக்கியம். அதற்கு அடுத்தபடியே கடையை விட்டுட்டு களஞ்சிய இயக்கப்பணிக்கு ஓடிடுவேன்” என்கிறார் மீனா.

மதுரையில் இருக்கும் கன்னியம்மாள் வறுமையிலிருந்து மீண்ட கதை மிகவும் சுவாரசியமானது. இன்று நான்கு ஸ்வீட் கடைகளும் பிள்ளைகள் நால்வருக்கும் சொந்த வீடுகளும் இருக்கின்றன. பக்கத்து கிராமத்தில் செக்கு வைத்து தொழில் செய்துகொண்டிருந்த குடும்பம், நொடித்துப்போய் நகருக்கு வந்தார்கள். வந்த இடத்தில் பிள்ளைகள் பல இடங்களில் வேலைக்குப் போனார்கள். கன்னியம்மாள் களஞ்சியம் இயக்கத்தில் சேர்ந்தார். அந்த இயக்கம்  முதலில் 2000, 5000, 10000 என்று கடன்களை இவர் திரும்பக்கட்டுவதைப் பார்த்து கொடுத் தது. அப்போதுதான் ஒரு இனிப்புக் கடை விற்பனைக்கு வருவதாகக் கேள்விப்பட்டு பிள்ளைகள் உதவியுடன் எடுத்து நடத்தினார். தினமும் 100 ரூபாய் கடை உரிமையாளருக்குக் கொடுக்க வேண்டும். அதற்காக  ஒருமகனை வெளியே பார்த்த வேலையை விடவேண்டாம் என்று  சொல்லிவிட்டு கடையை கவனத்துடன் நடத்தினார். வியாபாரம் நன்றாக நடந்த வுடன் மகனும் கடைக்கே வேலைக்கு வந்தார். பின்னர் கடந்த 13 ஆண்டுகளில் நான்கு கடைகளாக விரிவடைந்திருக்கிறது. “ இப்போ எனக்கு 68 வயசாகுது. இன்னிக்கும் நான் சொந்தக்காலில் நிற்கிறேன். மகன்கள் திருமணமாகி சொந்த வீடுகளில் ஆடம்பரமாக வாழ்கிறார்கள். மிகக்கடினமாக கடையில் வேலை பார்த்து, ஓய்வின்றி உழைத்ததால்தான் இந்த நிலையை அடைய முடிந்தது. ஆண்டு முழுக்க ஒரு நாள் கூட கடையை அடைக்காமல் வியாபாரம் பார்ப்போம்.” என்று பெருமையுடன் சொல்கிறார் ஏழாம் வகுப்பு மட்டுமே படித்தவரான கன்னியம்மா.

பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் சிராஜ் பானு வாடகைக்கு வசித்த வீட்டில் மின் விளக்கு கூட இல்லை.  “வறுமைக்கோட்டுக்கு மிகவும் கீழே இருந்தோம். நான் தையல் வேலைக்கு ஒரு நாள் சம்பளம் 30 ரூபாய்க்குப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது 2 ரூபாய் கட்டி களஞ்சியம் இயக்கத்தில் சேர்ந்தேன்.  என் வீட்டில் வந்து என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்று பார்த்தார்கள். டிவி, மிக்சி, மின்விசிறி, மின் விளக்கு எதுவுமே கிடையாது. முதன் முதலாக 500 ரூபாய் கடன் கொடுத்தார்கள். அச்சத்துடன் தான் வாங்கினேன். அதை வைத்து எனக்கு இருந்த  சில கடன்களை அடைத்தேன். மெல்ல மெல்ல எனக்கு அதிகமாக கடன் கிடைத் தது. குடிசை வீட்டிலிருந்து காரை வீட்டுக்கு மாறி, ஒரு  வீட்டை ஒத்திக்குப் பிடித்தேன். 50,000 ரூபாய் வரைக்கும் எனக்கு கடன் கொடுத்தார்கள். அதை வைத்து மகனை பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்திருக்கிறேன். யாரிடமும் வேலைக்குச் செல்லாமல் சொந்தக்காலில் நில்லுங்கள் என்று இயக்கக் கூட்டங்களில் ஊக்கம் தருவார்கள். பழக்கடை போட்டு வியாபாரம் செய்கிறேன். அத்துடன் இயக்கக்கூட்டங்களுக்கு சாப்பாடு தயாரித்து அளிப்பதுடன், வெளியே நிகழ்ச்சிகளுக்கும் சாப்பாடு  சமைப்பேன். இன்னும் நல்ல இடம் கிடைத்தால் இந்த சமையல் வேலையையே இன்னும் கொஞ்சம் விரிவாக செய்யலாம் என்று எண்ணம் இருக்கிறது” என்கிறார் 38 வயதாகும் இவர்.

எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்ற மனோபாவம் நிறைந்த மக்கள் மத்தியில், ‘நாங்கள் வறுமையிலிருந்து மீண்டிருக்கிறோம்’ என உற்சாகமாக பெண்கள் சொல்லும் நிலையினை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. தானம் அறக்கட்டளையின் களஞ்சிய இயக்கம் அந்த சாதனையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. சுமார் பத்து லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட களஞ்சிய இயக்கத்தின் முதன்மை நிர்வாகி சாந்தி மதுரேசனை சந்தித்துப் பேசினோம். “ஏழை மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் உன்னத நோக்கத்தோடு களஞ்சிய சமுதாய வங்கித் திட்டம் 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. முப்பதாயிரம் களஞ்சிய பெண்கள் இணைந்ததன் விளைவாக 1998 ஆம் ஆண்டு இது மக்கள் இயக்கமாக உருவெடுத்தது.

மக்களிடத்தே உயரிய பண்புகளை வளர்ப்பதும், நல்ல தலைமைத்துவ பண்புகளை வளர்த்து அவர்களை சமூகத்தில் உயர்ந்த தலைவர்களாக உருவாக்குவதும், கந்துவட்டி கொடுமையில் இருந்து ஏழை மக்களை மீட்டெடுப்பதும் களஞ்சிய இயக்கத்தின் முக்கிய நோக்கமாக வரையறுக்கப்பட்டது.

களஞ்சியம் கடந்து வந்த தனது 25 ஆண்டுகால வளர்ச்சிப்பாதையில் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.இன்று 13 மாநிலங்களில், 52 மாவட்டங்களில் 201 வட்டாரங்களில் 9.25 இலட்சம் மக்களிடையே இயக்கம் இன்று வியாபித்துள்ளது.

 இதன்காரணமாக, கடந்த 25 ஆண்டுகளில் 2 இலட்சம் பேர் வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளோம் என அவர்களே பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள். நாங்கள் இலக்கை நோக்கிச் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்பதற்கான சாட்சி” என்கிறார் அவர் பெருமையுடன். சாதாரண விஷயமில்லை இது!

மார்ச், 2017.