சிறப்புப்பக்கங்கள்

ராகுல்ஜி தந்த ஒளி

கே. வி. ஷைலஜா

பதினைந்து பேர் கொண்ட கூட்டுக் குடும்பம் எங்களுடையது. அம்மா, அக்காக்கள், பாட்டி, பாட்டியின் அக்கா, மாமா, மாமி, அவர்களின் குழந்தைகள் என பெரிய குடும்பம். 20 வயதிலேயே அப்பா இறந்து போக என் அம்மாவின் வாழ்நாள் துக்கத்திற்கு வடிகாலாயிருந்த அய்யப்ப சாமியும் எனக்குள் அமைதியான நீங்காத இடம் பெற்றிருந்த குடும்ப உறுப்பினர். அவரைக் கேட்காமல் வெளியே எங்கும் போவதில்லை. அய்யப்பன் என்னோடு பேசுவார். விவாதிப்பார். சில இடங்களுக்கு போக வேண்டாமென அறிவுறுத்துவார். வீடு நிறைய சாமிகளும் நெற்றி நிறைய கலர் கலராய் பொட்டுகளுமாக திரிந்த காலம்.

வயதும் காலமும் புது நண்பர்களும் கல்லூரியின் மேற்படிப்பு முடித்த நாட்களில் கடவுள் நம்பிக்கைக் குறித்தும், பூர்வ புனர் ஜென்மங்கள் குறித்தும் பாவ புண்ணியங்கள் குறித்தும் பேசும்போது நான் என் அய்யப்பனோடு லகுவாக ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தாலும் மனசுக்குள் அவ்வப்போது ஏதோ ஒரு குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது. அதற்கு விடையாய், இரண்டு பக்கமும் அடர்ந்து ஓடும் நதியாய் என்னருகே வந்து முழுமையாய் என்னை குளிர்வித்தது, எல்லோரும் ப்ரியமாய் அழைக்கும் ராகுல்ஜி எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை' புத்தகம்தான்.  

ஆதி மனிதனின் வாழ்விலிருந்து ஆரம்பிக்கும் புத்தகம் பெண் வழி சமுதாயம், இனம், மொழி, கடவுளை நிர்மாணித்தது யார், பூர்வ ஜென்ம பாவங்களை சில இன மக்கள் மட்டுமே சுமந்து திரிவது எதனால் என்றும் நாடு நகரம் எப்படிப் போனாலும் சிலர் மட்டுமே எப்படி எந்த சிக்கல்களின் இடிபாடுகளுக்குள்ளும் மாட்டாமல் இருக்கிறார்கள் என்றும், பாவம் புண்ணியம்,அதன் வகைகள் பற்றியும் தெளிவுபடுத்திய புத்தகம்.  என்னிலிருந்த கேள்விகளும் குழப்பங்களும் தெளிவின்மையும் பாம்பின் தோல் உரித்து புதிதாய் உருமாற்றம் கொள்வது போல நான் மாறினேன். அது யாரும் நிர்பந்திக்காத மாற்றம். யாரோடும் விவாதிக்காமல், கடுமையான வாக்குவாதம் இல்லாமல் எனக்குள்ளாகவே போராடிப் போராடி நடந்த வேதியியல் மாற்றம். அண்ட சராசரத்தின் ஜல தாரையிலிருந்து மேலெழுந்து வந்தது போல பரிசுத்தமானேன் நான். அது முழுமையானது, குழப்பமில்லாதது, தெளிவானது.

மனிதன் தாங்கவொணா துக்கத்தில், எல்லா கைகளும் நழுவவிட்டு அதல பாதாளத்தில் தலைகுப்புற விழும்போது மனம் நேராக கடவுளிடம் தஞ்சம் புகுவது இயல்புதானே. அது போன்ற ஒரு நாளில், நானும் பவாவும் காதலர்களாய், தம்பதிகளாயிருந்து அம்மா, அப்பா என்ற சிலிர்ப்பூட்டும் மாற்றம் தந்த எங்கள் மூத்த மகன் சிபி ஒரு விபத்தில் எங்களை விட்டு பிரிந்தபோது நண்பர்களின், உறவினர்களின் சொற்கள் இருட்டு மூலையிலிருக்கும் விக்ரகங்களையே தஞ்சமடையச் சொன்னது. அப்போதும் இது ஏன் நடந்தது என தெளிவுபட செய்து இனி எப்படி இருக்க வேண்டுமென எங்களை ஆற்றுப்படுத்தியதும் ராகுல்ஜிதான்.

ஜூலை, 2018.