சிறப்புப்பக்கங்கள்

ரசிகர்களே, தமிழ் சினிமாவைத் திருத்துங்கள்!

வெற்றிப்படங்கள்- ஹாலிவுட்டும் கோடம்பாக்கமும்

கருந்தேள் ராஜேஷ்

உலகெங்கிலும் வருடா வருடம் ஏராளமான படங்களை வெளியிட்டு பில்லியன் கணக்கில் வசூலை அள்ளுவதில் ஹாலிவுட் பெரும்பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டுக்கேற்ற திரைப்படங்கள் வெளிவந்தாலும், அவற்றையும் தாண்டி உலகம் முழுக்க இருக்கும் வணிகப்பட ரசிகர்களைப் பெரும்பாலும் ஹாலிவுட் படங்கள் திருப்திப்படுத்தவே செய்கின்றன. உதாரணமாக, ஐம்பதுகளில் இருந்தே இந்தியாவில் - குறிப்பாகத் தமிழகத்தில் பென்ஹர், டென் கமாண்ட்மெண்ட்ஸ், லாரன்ஸ் ஆஃப் அரேபியா, கிளியோபாட்ரா, கன்ஸ் ஆஃப் நவரோன், ஹடாரி, வேர் ஈகிள்ஸ் டேர், மெக்கென்னாஸ் கோல்ட், டாக்டர் ஸிவாகோ, சௌண்ட் ஆஃப் ம்யூஸிக், எண்டர் த ட்ராகன், எக்ஸார்ஸிஸ்ட், ஓமன், ஈவில் டெட், ஜாஸ், ரேம்போ, ஈ.டி, லயன் கிங், க்ளிஃப்ஹேங்கர், ஜுராஸிக் பார்க், டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மெண்ட் டே, ஹாரி பாட்டர், லார்ட் ஆஃப் த ரிங்ஸ், 300, க்ரிஸ்டோஃபர் நோலனின் பேட்மேன் படங்கள், காஞ்சுரிங் என்று ஏராளமான ஹாலிவுட் படங்கள் தமிழ்ப்படங்களை விடவும் வசூல் சாதனை புரிந்துள்ளன. இது ஒருபக்கம் என்றால், சீனத் தயாரிப்புகளான குங்ஃபு படங்களும் இவைகளுக்கு இணையாக ஓடியுள்ளன.

ஹாலிவுட் படங்களையும் தமிழ்ப் படங்களையும் எடுத்துக்கொண்டால், இவைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் என்னென்ன? ஹாலிவுட்டில் படங்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன? தமிழில் உருவாகும் படங்களுக்கு உள்ள எல்லைகள் என்ன? எல்லாவற்றையும் விரிவாகக் கவனிக்கலாம்.

ஹாலிவுட்டில் திரைப்படங்கள் என்பன துவக்கம் முதலே ஸ்டுடியோக்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொழில். ஹாலிவுட் திரைப்படங்கள் ஒரு காலத்தில் தனிப்பட்ட திரைப்படங்களாகவே எடுக்கப்பட்டன. ஆனாலும், திரைப்படங்கள் பேசத் துவங்கிய காலகட்டத்திலேயே குஞுணுதஞுடூண் என்ற, பாகம் பாகமாகத் திரைப்படங்களை எடுக்கும் முறையும் துவங்கிவிட்டது. ஆரம்பகாலத்தில் ட்ராகுலா, ஃப்ராங்கென்ஸ்டைன், கிங் காங் போன்ற வெற்றிகரமான படங்களுக்கு உடனடியாகப் பல பாகங்கள் வரிசையாக எடுக்கப்பட்டன. இவற்றுக்குப் பிறகு, அறுபதுகளின் துவக்கத்தில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் நாவல்களில் இருந்து எப்போது திரைப்படங்களுக்கு வந்ததோ, அப்போதே இந்த சீக்வெல்களின் ராஜாங்கம் முழுவீச்சில் துவங்கிவிட்டது. வரிசையாக ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எடுக்கப்பட்டன. ஆனாலும் அப்போதெல்லாம் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்றெல்லாம் பெயர்கள் வைக்கப்படவில்லை. மாறாக ஒவ்வொரு பாகத்துக்கும் தனிப்பட்ட பெயர்களே வைக்கப்பட்டன. எழுபதுகளில் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு எப்போது இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டதோ, அப்போதிலிருந்தே இந்த இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று பெயர்கள் வைக்கப்படும் முறை துவங்கியது. அது இன்றுவரை தொடர்கிறது.

இந்த சீக்வெல்கள் பற்றி ஏன் இப்போது பார்க்கவேண்டும் என்றால், தற்போது ஹாலிவுட்டின் மிக முக்கியமான ஃபார்முலா சீக்வெல்களே. எந்தப் படம் வந்து வெற்றியடைந்தாலும் உடனடியாக அவற்றுக்குப் பின் குறைந்த பட்சம் மூன்று படங்கள் எடுப்பது இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகப் பின்பற்றப்படுகிறது. ராக்கி, லீதல் வெபன், ரேம்போ, மம்மி, ஜுராஸிக் பார்க், டெர்மினேட்டர், ஹேரி பாட்டர், லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ், ஓஷன்’ஸ் லெவன், மிஷன் இம்பாஸிபிள், டாய் ஸ்டோரி என்று எந்தப் படத்தை எடுத்துக்கொண்டாலும் எடுடா வரிசையாகப் பல பாகங்களை என்பது ஹாலிவுட்டின் ஃபார்முலாவாக மாறிப் பலகாலம் ஆகிறது. ஹாலிவுட் சரித்திரத்தின் கொடூர மொக்கைகளாகக் கருதப்படும் ட்வைலைட் சாகா திரைப்படங்கள் கூட இப்படி எடுக்கப்பட்ட சீக்வெல்களே. இவைமட்டும் இல்லாமல், சூப்பர்ஹீரோ படங்களான பேட்மேன், சூப்பர்மேன், அவெஞ்சர்ஸ், ஸ்பைடர்மேன் போன்ற படங்களும் சீக்வெல்களே.

தமிழில் இப்படிப்பட்ட பாகங்கள் எப்போதோ ஒருமுறைதான் எடுக்கப்படுகின்றன. மலையாளத்தில் கூட எப்போதோ இந்த சீக்வெல்களின் ட்ரெண்ட் ஆரம்பித்துவிட்டது. ஆனால் ஏனோ தமிழில் இப்படியெல்லாம் வருவதில்லை.

ஹாலிவுட்டில் இப்படி சீக்வெல்கள் எடுக்கப்படும் காரணம் எளிமையானது. ஒரு படம் உலகெங்கும் வெற்றியடைந்துவிட்டால், அந்தக் கதாபாத்திரங்களை வைத்து இன்னொரு படம் எடுத்தால் அதுவும் வெற்றியடையக் காரணங்கள் அதிகம். எப்படியும் உலகம் முழுக்க இருக்கும் திரை ரசிகர்களைக் குறிவைத்தே இப்படங்கள் எடுக்கப்படுவதால் வசூலை அள்ளும் வாய்ப்புகளும் அதிகம்.

இனி, ஹாலிவுட் மற்றும் கோலிவுட் படங்களின் மிகப்பெரிய வித்தியாசம் பற்றிப் பார்க்கலாம்.

ஹாலிவுட்டில் எடுக்கப்படும் ஆகமோசமான கமர்ஷியல் படத்திலும்கூடத் திரைக்கதை என்பது ஓரளவு நன்றாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும். காரணம், ஹாலிவுட்டில் திரைக்கதை பற்றிய விழிப்புணர்வு அதிகம். ஆரம்பகாலம் தொட்டே, வணிகப்படம் என்றால் பார்ப்பவர்களுக்கு அலுக்கக்கூடாது என்ற கூர்ந்த கவனம் அங்கே உண்டு. இதனாலேயே பல ஹாலிவுட் வணிகப்படங்கள் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டுவரும் படங்களாகவே இருக்கும். இதனாலேயேதான் உலகம் முழுக்க அவை ஓடவும் செய்கின்றன. அங்கே ஒவ்வொரு ஸ்டுடியோவும் பல திரைக்கதை விற்பன்னர்களை ஒப்பந்தம் செய்தே வைத்துள்ளன. இவர்களால் அவர்களின் திரைக்கதைகள் செப்பனிடப்படவும் செய்கின்றன.

ஆனால் தமிழ்ப்படங்களில், இப்போதுதான் திரைக்கதை பற்றிய விழிப்புணர்வு பரவலாகிக்கொண்டுவருகிறது. ஆரம்பகாலம்தொட்டே ஸ்டியோக்களில் கதைவிவாதக் குழுக்கள் இருந்துவந்தாலும் கூட, தமிழ்ப்படங்களில் கதைக்குப் பொருத்தம் இல்லாத நகைச்சுவை, பாடல்கள், டூயட்கள், ஒரே நேரத்தில் ஐம்பது பேரை அடிக்கும் ஹீரோ ஆகிய அபத்தங்கள் இருந்தே வந்திருக்கின்றன. கிட்டத்தட்ட தொண்ணூறுகள் வரையே கூட இந்த அம்சங்கள் பல தமிழ்ப்படங்ககளிலும் இருந்தன. இதன்பின்னரே இது நின்றுபோய், ஒட்டுமொத்தத் திரைப்படத்திலும் கதை விறுவிறுப்பாகச் செல்லும் பரவலான நிலை பரவ ஆரம்பித்தது (ஐம்பதுகள் தொட்டே இதற்கு ஒருசில விதிவிலக்குகளும் உண்டு. பல படங்கள் விறுவிறுப்பானவையே. இருந்தும் பொதுவாகத் தமிழ்ப்படங்களை ஆராய்ந்தால், நான் சொன்ன அபத்தங்கள் பல படங்களின் பொதுவான அம்சம் என்பதால் அவற்றை நாம் கவனிக்கவேண்டியது அவசியமாகிறது).

ஒரு வணிகப்படத்தின் நோக்கம் என்ன? பணம் கொடுத்துப் பார்க்கும் ஆடியன்ஸ், படம் முழுக்க எந்தவித அலுப்பையும் அடையாமல், விறுவிறுப்பு குறையாமல் பார்த்துவிட்டு வெளியேறவேண்டும் என்பதே வணிகப்படங்களின் நோக்கம். அப்போதுதான் போட்ட காசை எடுத்து லாபமும் ஈட்டமுடியும். ஆனால் தமிழ்ப்படங்களில், இந்த நோக்கம் மறைந்து, எந்த நடிகருக்காகப் படம் எடுக்கிறோமோ அந்த நடிகரை மட்டும் பூதாகாரமாகக் காட்டி, அவரை ஒரு யூனிஃபார்ம் போடாத சூப்பர்ஹீரோவாக மாற்றி, நூற்றுக்கணக்கில் பாய்ந்து வரும் அடியாட்களை அடித்து வீழ்த்தி, கதாநாயகியோடு பிரம்மாண்ட பட்ஜெட்டில் அமைக்கப்பட்ட செட்டில் பாட்டுப்பாடி, மைக்கேல் ஜாக்ஸனை மிஞ்சும் நடனம் ஆடி, பல செண்ட்டிமெண்ட் வசனங்களைப் பிழியப்பிழியப் பேசி, இடையில் ஆங்காங்கே அரசியல் வசனங்களைத் திரையைப்பார்த்துப் பேசி , இதற்கு இடையில் வில்லனைப் பார்த்து மிரட்டி, ஆடியன்ஸுக்காக பஞ்ச் வசனங்களைப் பல்லைக்கடித்துக்கொண்டு உதிர்த்து, இடைப்பட்ட கொஞ்ச நேரத்தில் கதாநாயகனை தெய்வமே, கந்தர்வனே, ரிஷியே, சத்தியசந்தனே என்று பிற கதாபாத்திரங்களை விட்டுப் பேசவைத்துத்தான் பல படங்கள் எடுக்கப்படுகின்றன. முன்னணிக் கதாநாயகர்கள் நடிக்கும் எல்லாப் படங்களையும் இதற்கு உதாரணமாகத் தாராளமாகக் காட்ட இயலும். இந்த முன்னணி நாயகர்களின் படங்களில் துளிக்கூட கதை என்ற வஸ்து இருப்பதில்லை. மேலே சொன்னவற்ற்றில் ஒவ்வொரு சிறப்பியல்புக்கும் மூன்று சீன்களை எழுதிவிட்டால் இவர்களுக்கான படங்கள் தயார்.

ஹாலிவுட்டில் ஆடம் சாண்ட்லர், சக் நோரிஸ், ஸ்டீவன் செகால் போன்றவர்களின் படங்கள் வெளிவந்தால் அவற்றைக் கண்டபடி கலாய்ப்பவர்கள் அங்கே மிக அதிகம். இவர்களின் படங்களை ஒருமுறை சென்று பார்த்தீர்கள் என்றால், அப்படியே நம்மூர் முன்னணி ஸ்டார்களின் படங்களை அப்படியே அடியொற்றியிருக்கும். இவர்கள் செய்யும் சேஷ்டைகளும் ஸ்டண்ட்களும் அப்படிப்பட்டவை. இருந்தாலும்,  இவர்களின் படங்களில்கூடக் குறைந்தபட்சம் திரைக்கதை ஓரளவாவது நம்பும்படி இருக்கும். அதேசமயம் இவர்களை அங்கே இருக்கும் திரை ரசிகர்கள் தலையில் வைத்துக்கொண்டு ஆடுவதும் இல்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும், நம்பவே முடியாத சண்டைகள், கொடூரமான பாடல்கள், பஞ்ச் வசனங்கள், முதல்வர் கனவு டயலாக்குகள் ஆகியவைகளை வைத்துக்கொண்டு, பார்த்தாலே சிரிப்பு வரக்கூடிய படங்களைத் தொடர்ந்து எடுக்க வைத்து அவற்றில் நடிக்கும் முன்னணி நடிகர்களுக்கு வெறித்தனமான ரசிகர்கள் லட்சக்கணக்கில் உண்டு. இதுதான் ஹாலிவுட்டுக்கும் தமிழ்ப்படங்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு. ரசிகர்களை இப்படிப்பட்ட படங்களை எடுத்துத் தொடர்ந்து இருட்டிலேயே வைத்திருக்கிறார்கள் இவர்கள். ஆனாலும் இவர்களுக்காக இதேபோன்ற சராசரியான, சில சமயங்களில் சராசரிக்கும் கீழான அலுப்பூட்டும் படங்களே வருகின்றன. கூடவே, இவர்களுக்கு நடிக்கவும் வருவதில்லை. ஆனால் கோடிக்கணக்கில் சம்பளம்.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களில் மட்டுமேதான் நல்ல திரைக்கதை இருக்கிறது. பெரிய பட்ஜெட் என்று வந்துவிட்டால் திரைக்கதை சிதைக்கப்பட்டு, நாயகர்கள் போற்றிப் பாடப்படும் நிலையே தமிழ் சினிமாவில் இன்றுவரை தொடர்கிறது. இது எத்தனை பெரிய பிரச்னை? பணம் கொடுத்துப் படம் பார்க்கவரும் ரசிகனுக்கு நல்ல திரைக்கதையை அளிக்காமல், நாயகர்களின் வெறிபிடித்த ரசிகர்களை மட்டும் திருப்திப்படுத்தும் நோக்கில் கொடூரமான படங்கள் வருவது எவ்வளவு பெரிய கொடுமை?

இந்த நிலை போய், இப்படிப்பட்ட நாயகர்களை ரசிகர்களே நக்கல் அடிக்க ஆரம்பித்து இவர்களின் படங்கள் புறக்கணிக்கப்பட்டால் ஒழிய, தமிழில் தொடர்ந்து தரமான படங்கள் வெளியாவது நடக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து. அப்போதுதான் இத்தகைய நாயகர்களும் தங்களது பீடங்களில் இருந்து இறங்கி வருவார்கள். அப்போதுதான் ஹாலிவுட்டுக்கு நிகரான தரமான வணிகப்படங்கள் இங்கே தொடர்ந்து வெளியாகும். அப்படி வெளியாவதே, பணம் கொடுத்து, நம்பித் திரையரங்கு வரும் திரைரசிகனுக்குத் திரைத்துறை செய்யும் பரஸ்பர மரியாதை. இல்லையேல் அது ஏமாற்றுவேலை மட்டுமே.

நவம்பர், 2016.