நடிகை லதா 
சிறப்புப்பக்கங்கள்

ரசிகர்களின் நாடித்துடிப்பு அவருக்கு அத்துப்படி - நடிகை லதா

எம்ஜிஆர் நூற்றாண்டு

Staff Writer

அழகான குஷன் சோபாக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அந்த வரவேற்பறை முழுவதும் எம்.ஜி.ஆர். நினைவுகளால் நிரம்பி வழிகிறது. அனைத்தும் கருப்பு-வெள்ளை மற்றும் வண்ணங்களில் பழைய ஞாபகங்களைப் புரட்டிப் போடும் புகைப்படங்கள். ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘உரிமைக்குரல்’, ‘பல்லாண்டு வாழ்க’ என ஒவ்வொன்றையும் ரசித்துக் கொண்டிருக்கும் போது, ‘அம்மா இப்போ வந்திடுவாங்க. உங்கள இங்க உட்காரச் சொன்னாங்க’ என்கிறார் வீட்டிலிருக்கும் பெண் உதவியாளர். அடுத்த சில நொடிகளில் மாடிப்படியிலிருந்து இறங்கி வருகிறார் எழுபதுகளின் கனவுக்கன்னியும் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கதாநாயகியுமான லதா.

 “எம்.ஜி.ஆரை முதன் முதலா நான் பார்த்ததே ஒரு சுவராஸ்யமான சம்பவம்தான். என்னோட அப்பா சண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராமநாதபுரம் ராஜா. அவர் ராஜாஜி, காமராஜர் ஆட்சியில் அமைச்சரா இருந்தவர். எனக்கு 12 வயசா இருக்கும் போதே தவறிட்டார். என் அம்மாதான் என்னை வளர்த்தாங்க. நான் சென்னையில ஹோலி ஏஞ்சல்ஸ் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தேன். எனக்கும் சினிமாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல. எனக்கு டான்ஸ்ன்னா உயிர். ஸ்கூல்ல கலைநிகழ்ச்சின்னா என்னைத் தான் கூப்பிடுவாங்க. அப்படி ஒரு நிகழ்ச்சியில என்னை ஒரு போட்டோகிராபர் படமெடுத்தார். அவர் யாருன்னு எனக்குத் தெரியாது. ஆனா, அவர் வில்லன் நடிகர் ஆர்.எஸ்.மனோகர் சாரோட மேடை நாடகத்தை போட்டோ எடுப்பவர். என்னோட புகைப்படத்தை எம்.ஜி.ஆரும், ஆர்.எஸ்.மனோகரும் இருக்கும் போது காட்டியிருக்கார். எம்.ஜி.ஆர். அதைப் பார்த்திட்டு உங்கப் பெண்ணா? நாடகத்துல நடிக்கிறாங்களானு கேட்டிருக்கார். மனோகர் சார் இல்லனு சொன்னதும், போட்டோகிராபர் என்னைப் பத்தி சொல்லியிருக்கார். உடனே, எம்.ஜி.ஆர். நடிப்பாங்களானு கேட்டுச் சொல்லுங்க. என்னோட அடுத்த படத்துக்கு ஆர்ட்டிஸ்ட்டா எடுத்துக்கலாம்னு கேட்டிருக்கார். மனோகர் சார் எங்க அம்மாவுக்கு போன் பண்ணி பேசினார். ஆனா, அம்மா ‘அவ 9 வது தான் படிக்கிறா. நடிக்க மாட்டா’னு சொல்லிட்டாங்க. பிறகு, மனோகர் சார் வீட்டுக்கு வந்து, ‘இதை எம்.ஜி.ஆர்கிட்டயே நேரடியா சொல்லிடுங்க’னு

சொல்லி எங்களை அழைச்சிட்டு போனார். அன்னைக்குதான் அவரை முதல் முறையா நான் நேர்ல சந்திச்சேன்,” என்கிறவர், அந்த நிகழ்வை நினைத்து சிலிர்க்கிறார்.

“எங்கிட்ட நடிக்கிறீயானு கேட்டார். எனக்கு நடிக்க ரொம்ப ஆசை. சரினு

சொன்னேன். பிறகு, அவர் அம்மாகிட்ட, ‘உங்க கணவரை எனக்கு நல்லா தெரியும். நான் குண்டடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில இருந்தப்போ எனக்கு பக்கத்து அறையில அவர் இருந்தார். என்னை வந்து பார்த்தார். நானும் அவரைப் போய் பார்த்தேன். அவ விரும்புறா. நீங்க நடிக்க விடுங்க. நான் பார்த்துகிறேன்’னு சொன்னார். அப்படிதான் நான் சினிமாவிற்குள்ள வந்தேன். அப்போ எனக்கு பதினைஞ்சு வயசு. எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நடிகை நான்தான். என் இயற்பெயர் நளினி. அப்போ, அந்தப் பெயர்ல ஒரு நடிகை இருந்ததால எம்.ஜி.ஆர்தான் என் பெயரை லதானு மாத்தி வச்சார். கூப்பிட எளிமையா இருக்கும்னு சொன்னார். என்னுடைய குருநாதர் அவர்தான். அவரை வெல்விஷர், அட்வைஸர்னு நிறைய சொல்லிட்டே போகலாம். சிறந்த மாமனிதர்” எனச் சொல்லும் போதே லதாவின் கண்களில் இருந்து நீர்துளிகள் எட்டிப் பார்க்கின்றன.

“முதல் படத்திலேயே வெளிநாடு போகிற வாய்ப்பு. எனக்கு சினிமா பத்தி எதுவும் தெரியாது. எம்.ஜி.ஆர்தான் அவர் ஆபீஸ்ல வச்சு டிரைனிங் கொடுத்தார். இப்போ நினைவு இல்லமாக இருக்குதே அந்த இடம். டான்ஸ் மாஸ்டர் சோப்ரா, புலியூர் சரோஜா, சி.சகுந்தலா அம்மா, பி.டி.சம்பந்தம்னு டான்ஸுக்கும் உச்சரிப்புக்கும் கிளாஸ் எடுத்தாங்க. எம்.ஜி.ஆருக்கு எல்லாமே நேர்த்தியா இருக்கணும். அவர் மாதிரி சினிமாவை கரைச்சு குடித்த மனிதரை பார்க்க முடியாது. காட்சி அமைப்பு, காட்சித் தொகுப்பு, பாடல், இசைன்னு எல்லாமே அவருக்குத் தெரியும். எல்லாத்தையும் பார்த்து ரசிச்சு செய்வார்.

இன்னைக்குக் கூட உலகம் சுற்றும் வாலிபன் படத்துல நீருக்கு அடியில் எடுக்கப்பட்ட, ‘அவள் ஒரு நவரச நாயகி’ பாடல் பலருக்கும் பிரமிப்பு ஏற்படுத்தும். என்கிட்டயே நிறைய இயக்குநர்கள், ‘வாத்தியார் அன்னைக்கே எப்படியம்மா இப்படியொரு விஷயத்தைப் பண்ணினார்’னு கேட்டு இருக்காங்க. அந்தப் படத்தை 50 ஆயிரம் அடியில் எடுத்தார். பிறகு, அதைச் சுருக்கி 15 ஆயிரம் அடியாக்கி வெளியிட்டார். ஆங்கிலப் பட லெவலுக்கு செஞ்சார். சினிமாவுல அவர் ஒரு இன்ஸ்டிடியூட்னு சொல்லலாம். அவர் ஸ்ரீதர்கிட்ட மட்டும் எதுவும் சொல்லமாட்டார். ஏன்னா ஸ்ரீதர்கிட்ட காட்சியமைப்பு சென்ஸ் நல்லாயிருக்கும்னு அவருக்குத் தெரியும். ஆனா ஒருமுறை, ‘உரிமைக்குரல்’ படத்துல ‘விழியே கதை எழுது’ பாடல் ஒரு பாலைவன பின்புலத்துல சோகமா எடுத்திருந்தார் ஸ்ரீதர். பிறகு, எம்.ஜி.ஆர்தான் அவர்கிட்ட அதை கனவுப் பாடலா மாத்துங்க. அப்போதான் ரசிகர்கள் விரும்பிப் பார்ப்பாங்கனு  சொன்னார். அவர் சொன்னமாதிரியே அந்தப் பாடல் பயங்கர ஹிட் அடிச்சது. இதேமாதிரி மீனவ நண்பன் படத்துலயும் ‘தங்கத்தில் முகமெடுத்து’ பாடலும் கனவுப் பாடலா மாத்தச் சொன்னார். அதுவும் ஹிட். ரசிகர்களின் நாடித்துடிப்பு அவருக்கு அத்துபடி” என்றவர் தொடர்ந்தார்.

“என்னை தண்டாயுதபிள்ளைகிட்ட நடனம் கத்துக்க வச்சு முறைப்படி அரங்கேற்றமும் பண்ண வச்சார். பிறகு, மதுரை, திருச்சி, கோவைனு பல இடங்கள்ல சகுந்தலம்னு என்னுடைய நாட்டிய நாடகம் போட்டு 35 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியா கொடுத்தேன். 1973ல் இருந்து அவர் முதல்வராகிற 1977ம் ஆண்டு வரை பெரும்பாலான படங்கள்ல நான்தான் அவர் ஹீரோயின். அப்போ, அவர் கட்சி நடத்த எவ்வளவு கஷ்டப்பட்டார்னு எனக்குத் தெரியும். அவர் கட்சியின் மூன்றாவது பெண் உறுப்பினர் நான்.

‘உழைக்கும் கரங்கள்’ படத்தின் ஷூட்டிங் மைசூர் சாமுண்டேஸ்வரி கோயில் பக்கம் நடந்துச்சு. இயக்குநர் சங்கர் சார்கிட்ட சீக்கிரம் என்னோட போர்ஷனை முடிச்சிடுங்க. நான் கோயிலுக்குப் போய் சாமி தரிசனம் பண்ணிட்டு, மைசூர் சில்க் சேலை வாங்க வேண்டியிருக்குனு சொன்னேன். ஆனா, லேட்டாகிடுச்சு. வெளியே வரும் போது எம்.ஜி.ஆர் கார்ல உட்கார்ந்திருந்தார். என்னை வண்டியில ஏறச் சொல்லி டிரைவரை நேரா கோயிலுக்குப் போகச் சொன்னார். போய் கும்பிட்டுட்டு சீக்கிரம் வானு சொல்லி வண்டியில காத்திருந்தார். பிறகு, ரூம் வந்ததும் நூறு மைசூர் சில்க் சேலைகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகிட்டேன். நான் இயக்குநர்கிட்ட சொன்னது அவருக்கு எப்படியோ தெரிஞ்சு இதை செய்தார். உனக்கு பிடிச்ச சேலைகள் போக இன்னும் ஏழெட்டு சேலைகள் எடுத்துக்கோ. அதை ஜானகி அம்மா தம்பி குழந்தைகளுக்குக் கொடுக்கணும்னு சொல்லிப் போனார். அதே மாதிரி ஊட்டியில ஒரு ஷூட்டிங் போது பணியாளர்கள் எல்லோரும் குளிர்ல நடுங்கினாங்க. அவங்க எல்லோருக்கும் தன்னோட  சொந்தச் செலவுல ஸ்வெட்டர் வாங்கித் தந்தார். அவர் மாதிரி கவனிக்க யாராலுயும் முடியாது. எல்லோரையும் தன்னைப் போல நினைச்ச மனிதர். சாப்பாடு விஷயத்திலும் அப்படிதான். யூனிட்ல எல்லோருக்கும் ஒரே மாதிரியான   சாப்பாடு பரிமாற்றம்தான் நடக்கும். லைட்மேன்ல இருந்து அவர் வரை அப்படிதான்” என்கிற லதா, “அவர்பத்தி பேச நிறைய இருக்கு. டைம் போதாது” என்கிறார்.

“எனக்குத் திருமணமாகி சிங்கப்பூர் போயிட்டேன். 1986ல் என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால சென்னை வந்தேன். அப்போ எம்.ஜி.ஆருக்கும் உடல்நிலை சரியில்லை. ஜானகி அம்மாவும் இதய அறுவை சிகிச்சை பண்ணியிருந்தாங்க. அதனால, வீட்டுக்குப் போய் பார்க்க போனேன். அம்மா பத்தி அவர்கிட்ட எதுவும் சொல்லல. பிறகு, விஷயம் தெரிஞ்சு ரெண்டு நாள் கழிச்சு எம்.ஜி.ஆர் அப்பல்லோ வந்திட்டார். ஏன் சொல்லலன்னு  வருத்தப்பட்டார். அப்புறம், பிரதாப் ரெட்டியைக் கூப்பிட்டு “அவங்களுக்கு வெளிநாட்டுல மருத்துவம் பார்க்க கூட்டிட்டுப் போங்க. செலவு எல்லாம் நான் ஏத்துக்கிறேன்”னார்.  ஆனா, துரதிஷ்டவசமா அம்மா இறந்துட்டாங்க. அவரும், ஜானகி அம்மாவும் என் வீட்டுக்கே வந்து ஆறுதல் சொன்னாங்க. அப்புறம், அவர் இறக்கிற பத்து நாட்களுக்கு முன்னாடிதான் அவரை நான் கடைசியா பார்த்தது. பெட்ல இருந்தவர் என்னைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தார். அப்பவும் என்கிட்ட உனக்கு ஏதாவது வேணுமானு கேட்டார். எதுவும் வேண்டாம்ங்க. நீங்க நல்லானாலே போதும்னு சொன்னேன். மறுபடியும், ‘நீ கார்ல தானே வந்தே? ஏன் வியர்த்திருக்கு? ஏ.சி கார் வாங்கித் தரட்டுமா’னு கேட்டார். அதுதான் எங்கிட்ட அவர் கடைசியா பேசியது” என நெகிழ்ந்து முடிக்கிறார் லதா.  

சந்திப்பு: லக்குவன்

டிசம்பர், 2017.