சிறப்புப்பக்கங்கள்

யாழ்ப்பாணம் ஆன கனடா!

செல்வம் அருளானந்தம்

பா ரிஸில் இருந்து என் மனைவி மற்றும் குழந்தையுடன் விமானமேறி 1987 - ஆம் ஆண்டு கனடாவின் மாண்ட்ரியல் விமான நிலையத்தில் வரிசையில் நின்றோம். குடியேற்றப்பிரிவில் தங்கள் பாஸ்போர்ட்களுடன் எல்லோரும் வரிசையாக நின்றபோது நாங்கள் கடைசியில் நின்றோம். கவுண்ட்டரில் ஒரு வெள்ளைக்கார அம்மணி அமர்ந்திருந்தார் நாங்கள் எல்லோரும் போனபின்னர் கடைசியாக அவரிடம் போய் நின்றோம். பாஸ்போர்ட்? என்றார். நான் எங்களிடம் கிடையாது. நாங்கள் அகதிகளாக வந்தவர்கள் என்று  கூறினேன். அவர் பிரெஞ்சில் தள்ளி நில்லுங்கள் என்று சொல்லிவிட்டு கோப்புகளைப் பார்க்கத் தொடங்கினார். எனக்கு பிரெஞ்சு புரிந்தாலும் புரியாத மாதிரி நின்றேன். ஓரமாக தள்ளி நிற்கச்சொல்லி சைகை காட்டினார். எங்களுக்குப் பின்னால் யாரும் இல்லை!  ஒரு பத்துநிமிடம் அப்படி நின்றிருப்போம். அப்போது உயரமாக இருந்த ஓர் வெள்ளைஅதிகாரி வந்து என்னைக் கட்டி அணைத்து வெல்கம் என்றார். எங்களை ஒரு தனி அறைக்குக் கொண்டுபோய் உட்கார வைத்து குழந்தைக்குப் பால், வெந்நீர் வேண்டுமா என்று கேட்டு வழங்கினார். அங்கே சில மணிநேரம் அமர்ந்தபோது, எங்களைப் போல் அகதிக் கோரிக்கையுடன் வந்த பலர் வந்து அமர வைக்கப்பட்டனர். .  என்னிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. எங்கள் மீது வழக்கு ஓராண்டு நடக்கும். ஆனால் அதற்கு முன்பாக விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் நீங்கள் சொல்வதை ஞாபகம் வைத்திருக்கவேண்டும். மாற்றி மாற்றிச் சொல்லக்கூடாது என்று என்னை விமானத்தில் ஏற்றி விட்டவர்கள் சொல்லி இருந்தனர். என்னை ஏற்றிவந்த விமானம், அதன் எண் எதுவும் ஞாபகம் இல்லை என்ற நான், ஏதாவது சொல்லித்தான் ஆகவேண்டும் என்பதால் உங்களை ஏற்றிவிட்ட ஏஜெண்டின் பெயர் என்ன எனக் கேட்கப்பட்டபோது  ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமே என்பதற்காக சொன்னேன்: அவர் பெயர் கமல்ஹாசன் என்று! ( பிரபஞ்சநாயகன் மன்னிக்க!)

நாங்கள் பிடிபடாமல் வந்துசேரமாட்டோம் என்ற நம்பிக்கையில்(!) டொராண்டோவில் இருந்த என் மனைவியின் உறவுக்காரர்கள் யாரும் அழைத்துப்போக வந்துசேரவில்லை! மாண்ட்ரியலில் ஒரு பாதிரியாரின் இல்லத்தில் தங்கினோம். ஒரு வாரம் கழித்து டொராண்டோ போய் அவர்களைப்பார்த்துவந்தோம். நான் மாண்ட்ரியலில் தான் தங்குவது என்று முடிவெடுத்தேன். ஒருவேளை மனைவியின் சொந்தக்காரர்கள் இருக்கிற ஊரில் தங்கவேண்டாம் என்ற குறுக்குப்புத்தியும் காரணமாக இருக்கலாம். ஆனால் ஒரு வருஷத்தில் இந்த முடிவில் தோற்று டொரண்டோவுக்கே போய்விட்டோம்.

கனடாவில் நல்லவேலை கிடைக்கும், வீடு கிடைக்கும், குடியுரிமையும் கிடைக்கும் என்ற காரணத்தால்தான் பாரிசில் வாழ்ந்த என் போன்ற ஈழத்தமிழர்கள் கனடாவுக்கு வெளிக்கிட்டோம். ஆனால் எனக்குத் தெரியாத விஷயம் பாரிசிலிருந்து நானொரு யாழ்ப்பாணத்துக்குத்தான் வருகிறேன் என்பது. ஏனெனில் கனடாவில் அப்போது ஒரு யாழ்ப்பாணம்தான் ஈழத்தமிழரால் உருவாக்கப்பட்டிருந்தது. திரும்பவும் நாங்கள் யாழ்ப்பாணம் வாழ்க்கைக்குத் தயாராகவேண்டிய சூழல்.  நான் வரும்பொழுது 87ல் மொன்றியலில் இரண்டு சஞ்சிகைகள் வந்துகொண்டிருந்தன. ‘தமிழ் எழில்', ‘பார்வை' என்றவை. வேறுபல விடயங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தமிழ் ஒளி, தமிழ் ஒன்றியம், விடுதலைப்புலிகள் அமைப்பு என மூன்று முக்கியமான அமைப்புகள் இருந்தன. தமிழ் ஒளிக்கு பத்திரிகை படிக்கப் போனபோது பார்வை என்ற பெயரில் கையெழுத்துப் பிரதியில் ஒரு சஞ்சிகையைக் கண்டேன். அதைத் தொடர யாரும் இல்லாததால் தொடராதிருந்தது. அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்த  சஞ்சிகையை நடத்தினேன். தளையசிங்கத்தை, சுந்தர ராமசாமியை, சிவத்தம்பியை திரும்பவும் மறுபிரசுரம் செய்துதான் அதை நடத்தினேன். அதை விநியோகிக்கும்போது தொடர்பானவர்கள்தான் ஜயகரன், ஆனந்த பிரசாத், குமார் மூர்த்தி போன்றவர்கள். அப்போது தொடர்பானவர்தான் கவிஞர் செழியன்.

ரொறன்ரோவுக்குப் போனபிறகு நண்பர்களுடன் இணைந்து தேடல் என்ற சஞ்சிகையைச் செய்தோம். தாயகம் என்ற பத்திரிகை நடத்திய ஜோர்ஜ் உதவியுடன் தேடலை அச்சாக்கினோம். நான் இலக்கியத்துக்கு முன்னுரிமை கொடுக்க விரும்பியதால் அதிலிருந்து செழியனுடன் மெல்ல வெளியேறினேன். இந்தியாவில் சி.மோகன் உதவியோடு ‘காலம்'சஞ்சிகையின் முதல் இதழ் 1990ல் அச்சாகியது. அதில் இலங்கையில் இருந்து கிருஸ்ணகுமார், கனடாவிலிருந்து குமார் மூர்த்தி, தயாபரன் என்று கூறப்படுகிற குமரன், செழியன், நான் என பலரின் விடயங்களைத் தாங்கி அது வெளிவந்தது. இலங்கைக்கு பொறுப்பாக குகமூர்த்தியும், பாரிசுக்கு சபாலிங்கமும் பொறுப்பாக இருந்தனர். இருவரும் இப்போது உயிருடன் இல்லை. கிட்டத்தட்ட இருபத்தியெட்டு ஆண்டுகளாக காலம் இதழை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கிறோம்.

இங்கே பல ஆண்டுகளாக விளம்பரம், உதயன் என்கிற பத்திரிகைகள் சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. தாய்வீடு என்ற பத்திரிகையும் அர்ப்பணிப்புடன் வந்துகொண்டிருக்கிறது. அதன் ஆசிரியர் டிலீப்குமார் என் நண்பர். சுமார் இருபது பக்கங்கள் இலக்கியத்துக்காக ஒதுக்கிவருகிறார்.

யாழ்ப்பாணத்தில் இருக்கும் அளவுக்கு தமிழர்கள் எண்ணிக்கை கனடாவில் இருக்கிறார்கள். கலை இலக்கிய, நாடகச் செயல்பாடுகளுக்காக நல்ல அமைப்புகள் செயல்படுகின்றன. டொரண்டோவில் வாரந்தோறும் இரண்டு மூன்று இலக்கிய நிகழ்வுகளாவது நடக்கின்றன. ஐரோப்பாவில் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியாகும்போது டொரண்டோவிலும் வெளியிடப்படுகின்றன. யாழ்ப்பாணம் சாதிக்கட்டமைப்பு கொண்ட ஒரு சமூகம். இடையில் புலிகள் கை ஓங்கியிருந்தபோது சாதி சற்று விலகி இருந்தாலும் இப்போதும் அந்த உணர்வு இருந்துகொண்டுதான் உள்ளது. ஒடுக்கப்பட்ட சமுக இளைஞர் ஒரு உயர்சாதிப் பெண்ணைக் காதலித்து மணம் செய்தாலும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தும்போது அவரவர் சமூக ஆட்களுக்கென தனித்தனியாக நிகழ்ச்சி நடத்தும் நிலைதான் உள்ளது. இன்னமும் காதல் திருமணங்களை விட அதிகமாக அவரவர் பெற்றோர்களால் பேசிமுடிக்கப்படும் மணங்களே இங்கேயும் நடக்கின்றன. வேற்று இனத்தவரை மணம் முடிப்பது என்பது குறைவுதான். இங்கிருக்கும் சீனர்கள், ஆப்பிரிக்கர்கள் இடையிலும் இதுதான் நிலை. எனவே தமிழர்கள் தனிச்சமூகமாகத் இருக்கும் நிலை தொடரும் என்றே நினைக்கிறேன்.

இங்கே எழுத்தாளர்கள் என்று பார்த்தால் அ.முத்துலிங்கம் முக்கியமான மூத்த எழுத்தாளர். சேரன் இருக்கிறார். அருள்மொழிவர்மன், டிசே தமிழன் போன்ற புதிய தலைமுறை எழுத்தாளர்களும் கீதா சுகுமாரன், தமிழ்நதி, அவ்வை  உள்ளிட்ட பல  பெண் எழுத்தாளர்களும் சிறப்பாகச் செயல்படுகின்றனர்.  நினைவில் வருகிற பெயர்களை மட்டுமே இங்கு  சொல்கிறேன். டொரண்டோவில் இயங்கும் தமிழ்ச்சங்கம் சுமார் மூன்று ஆண்டுகளாக முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. அகில், சுப்பிரமணிய ஐயர், லம்போதரன் போன்றவர்கள் இதில் ஆர்வத்துடன் செயல்படுகிறார்கள். கனடிய தமிழ் வானொலிகளும் குறிப்பிடத்தகுந்தவை.

சிறியளவில் வீட்டில் நூல்களை வைத்திருந்த என்னை குகன், நவரஞ்சன், எல்லாளன் போன்றவர்கள் உற்சாகப்படுத்தியதில் வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சி என்ற கண்காட்சியை 1991ல் ஆரம்பித்தோம். ஏறத்தாழ இருபது வருடங்களாகிவிட்டது. வருடாந்தம் குறைந்தது ஒரு புத்தகக் கண்காட்சியாவது நடத்துகிறோம்.  ஆரம்பத்தில் குடும்பத்தின் உதவி கிடைத்தது. பின்னர் இது ஒரு லூசுத்தனமான வேலை என்று அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். என்னைப் பொறுத்தவரை நான் ஜீவனோபாயத்துக்காக வேலைசெய்து கொண்டே கிட்டத்தட்ட 20 வருடமாக இயங்குகிறேன். புலம்பெயர்ந்து வந்து கனடாவில் ஸ்காபுரோவுக்கோ, அல்லது மார்க்கத்துக்கோ மட்டும் ஒரு புத்தகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. நான் ஒட்டுமொத்த தமிழ் என்றே பார்க்கிறேன்.  

 (செல்வம் அருளானந்தம் கனடாவில் காலம் என்ற இலக்கிய இதழ் நடத்துகிறார். அவரிடம் தொலைபேசியில் பேசி இக்கட்டுரையை எழுதியவர்: பூச்சியப்பன்)

ஏப்ரல், 2018.