என்னுடைய பெற்றோர் பள்ளி ஆசிரியர்கள். அத்துடன் பள்ளி வளாகத்தினுள் தான் எக்கள் வீடு அமைந்திருந்தது. அதனாலேயே குரு மரியாதையும் பணிவும் எனக்குப் பால பாடம்.
‘குரு‘ என்ற சொல்லிற்கு இருளைப் போக்குதல் என்று அர்த்தம். அறியாமை இருளை விலக்கும் அனைவரும் குரு தான். இருபது முப்பது வருடங்களுக்கு முன்பாக ஆசிரியர்கள் தான் குருவாக இருந்தனர் ஆனால் இன்றைய சூழ்நிலை அப்படியில்லை . ஏனெனில் ஆசிரியர்களை விட மாணவர்கள் அதிகம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். வகுப்பறையில் கேள்விகளுக்கு தவறாக பதில் சொல்லிவிட முடியாது. ஏனெனில் அடுத்த நொடியே பதிலை இணையத்தில் சரிபார்க்கிறார்கள் இளைய தலைமுறையினர்.
இளையவர்களிடம் தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்கிறேன். அவர்கள் தான் மின்னஞ்சல் , கணினி, ஸ்மார்ட் போன் போன்றவற்றை அவர்கள்தான் பயன்படுத்த எனக்குக் கற்றுத் தந்தார்கள்.
யார் வேண்டுமானாலும் குருவின் இடத்திற்கு வரலாம். சிலசமயம் தகுதியில்லாதவர்கள் தலைமைப் பொறுப்பிற்கும் / குருவின் இடத்திற்கும் வந்துவிடுகிறார்கள். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் பொறுப்பிற்கு ஏற்றவாறு அவர்கள் அதன் பின்னராவது தங்களைத் தகுதிப் படுத்திக் கொள்ளாததே இன்றைய சமூக சீர்கேடுகள் அத்தனைக்கும் காரணம்.
இன்றைய நவீன உலகத்தில் குருவென தங்களைத் தாங்களே பிரகடனப் படுத்திக் கொண்டு ஏதாவதொரு தொலைக்காட்சியில் ஸ்லாட் எடுத்து பேசிக் கொண்டேயிருக்கும் கார்ப்பரேட் சாமியார்கள் பெருகி விட்டார்கள் .
நாம் குருவோடு நேரடித் தொடர்பு கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய நற்பண்புகளை மேற்கொண்டாலே போதும். அதன் வழியே நம் வாழ்வை நல்வழிப் படுத்திக் கொள்ளலாம். தன் மகனையே குருவாக ஏற்று பிரணவ மந்திரத்தைக் கற்றுக்கொண்ட ஈஸ்வரனின் பெருந்தன்மையைஎன்ன சொல்வது? அதே நேரம் அப்படியான பெருந்தன்மை, கற்றுக்கொள்ளும் ஆர்வம், அர்ப்பணிப்பு இன்றைய இளைய தலைமுறையிடம் இருக்கிறதா? என்று கேட்டால் எனக்கு வருத்தமே மிஞ்சுகிறது.
ரமண மகரிஷி மற்றும் காஞ்சிப் பெரியவரை நாம் இன்றும் நினைப்பதற்கு காரணம் அவர்கள் மிகக் குறைவாக பேசினார்கள் ,தங்களுடைய சின்னஞ்சிறு செயல்களின் வழியே நிறைய உணர்த்தினார்கள் . பேசுவதைவிட உணர்த்துவது தான் மிகப் பெரிய குரு தன்மை !
நம் வாழ்வில் ஒவ்வொரு பருவத்திலும் ஒருவரை குருவாக, முன்மாதிரியாக கொண்டிருப்போம். என் சிறுவயதில் எம்ஜியாரைத்தான் குருபோல் வழிகாட்டிபோல் நினைத்திருந்தேன். பின்பு சாலமன் பாப்பையா அவர்களைத்தான் குருவாகக் கொண்டேன். பட்டிமன்ற பேச்சாளர்கள் அனைவருக்குமே சாலமன் பாப்பையா அவர்கள் மானசீகக் குரு எனச் சொன்னால் மிகையில்லை. ஏனெனில் அவர் வலியுறுத்துவது நேர்மை, மற்றும் புகழுக்கு மயங்காமை. அத்துடன் முக்கியமாக நாம் பேசுவது பாமரனுக்கும் புரியும்படியாகவும், சிந்திக்கத் தூண்டுபவையாகவும் இருக்கவேண்டும் என தன் செயல்களின் வழி நிரூபித்துக் கொண்டிருப்பவர் .
வரும் மார்ச் பதினான்காம் தேதி மகாத்மா காந்தியின் சிலையை லண்டனில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் திறந்து வைக்கிறார். அதற்கு காரணம் ‘தன் வாழ்க்கையே உலகத்திற்கான செய்தி’ என சொல்லிலும் செயலிலும் வாழ்ந்து காண்பித்தவர் மகாத்மா காந்தி. அதனாலேயே மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர் , மற்றும் நெல்சன் மண்டேலா போன்றோர் காந்தியை தங்களுடைய மானசீகக் குருவாக ஏற்றிருந்தனர். இன்றும் உலக மக்கள் அனைவரும் பின்பற்றக் கூடிய அளவுக்கு அறம் மற்றும் நேர்மையை வாழ்ந்து காண்பித்ததால் காந்தியை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
குருகுலம் மிகச் சிறிய வட்டத்தினருக்கே அன்று சாத்தியமானது. அதுவுமில்லாமல் அதிகாரத்தில் இருந்தவர்களின் குழந்தைகளும், மேல் சாதிக் குழந்தைகளும் மட்டுமே கற்கும் இடமாக இருந்தது . குருகுலம் மாற்றமடைந்து ஆங்கிலேயர்களின் கல்வி முறை வந்ததால் தான் பெரும்பான்மை மக்களுக்கு கல்வி சாத்தியமாயிற்று .
ஒவ்வொருவரும் குரு ஆகலாம். விளையாட்டுத் துறையில் சச்சின் டெண்டுல்கரின் தனிநபர் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு எனக்குப் பிடிக்கும். சினிமாவில் ரஜினிகாந்தின் எளிமை பிடிக்கும். இப்படி நாம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு நற்பண்புகளை எடுத் தாண்டால் நல்லதொரு குருவாகலாம் என்பது என் கருத்து.
பால்யத்தில் பெற்றோர் நமக்கு குரு, வயோதிகத்தில் பிள்ளைகள் தான் குரு ஏனெனில் மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நாமும் மாற வேண்டும். கடைசியாக ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன். நேரமும் சிறந்த குருதான்.
(சந்திப்பு: கடங்கநேரியான்)
மார்ச், 2015.