சிறப்புப்பக்கங்கள்

யாருக்கு ஓட்டுப்போட்டு என்ன ஆகப் போகிறது ?

தி.சிகாமணி

நமது ஜனநாயகம் புதிர்கள் நிறைந்தது. மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்பதை எனது 33 ஆண்டுகால செய்தியாளர் அனுபவத்தின் மூலம் திட்டவட்டமான முடிவுக்கு வர முடியவில்லை.

1982ல் (தினமணி) என் லட்சியமாக இருந்த பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்த பின்பு கிடைத்த தேர்தல் காலத்து அனுபவங்கள் அரசியல் பார்வையை விரிவுபடுத்தின.

1984ல் இந்திராகாந்தி படுகொலைக்குப் பின் மக்களவைக்குத் தேர்தல் நடந்தபோது சட்ட சபைக்கும் தேர்தல் நடத்த அதிமுக முடிவு செய்தது. தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து தொகுதி நிலவரம் பற்றி எழுதச் சென்றபோது எம்.ஜி.ஆருக்கு ஆதரவான அனுதாபம் வெளிப்படையாக தெரிந்தது. நியூயார்க் ப்ரூக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்ற நேரம் அது. அங்கிருந்தே ஆண்டிப்பட்டி தொகுதிக்கு மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் உடல்நலம் பெற்று திரும்பி வரமாட்டார் என்று திமுக தரப்பில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒரு வேளை உடல்நலம் பெற்று பொறுப்பெடுக்கும் தகுதியுடன் திரும்பி வந்தால் ஆட்சியை என் நண்பர் எம்.ஜி.ஆரிடம் ஒப்படைப்பேன் என்று கருணாநிதி தெரிவித்தார். இது அவரது பலவீனத்தை வெளிப்படுத்தியது.

உங்கள் காலில் செருப்பாகத் தேய்ந்து உழைக்கத்தானே ஆதரவு கேட்கிறேன் என்று சொல்லி கருணாநிதி அனுதாபம் தேடினார். எம்.ஜி.ஆர் உடல் ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுக்குப்பின் தான் அதை தெரிவிப்பார்கள் என்ற பரப்புரையை முறியடிக்க எம்.ஜி.ஆர் சிகிச்சை பெறும் காட்சிகள் அடங்கிய தொகுப்பை வெற்றித்திருமகன் என்ற தலைப்பில் தமிழகமெங்கும் திரையிடப்பட்டன. சாவுக்கு (இந்திராகாந்தி) ஒரு ஓட்டு என்றும், தாயில்லா பிள்ளைக்கு (ராஜீவ்காந்தி) ஒரு ஓட்டு; வாயில்லா பிள்ளைக்கு (எம்.ஜி.ஆர்) ஒரு ஓட்டு என்று அ.இ.அதிமுக. பிரச்சாரம் செய்தது.

இத்தகைய பிரச்சாரம், அனுதாப அலை இல்லாவிட்டால் எம்.ஜி.ஆர் அத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதே என் கணிப்பு.ஏனென்றால் அதற்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சியில் மிக அதிக இடங்களைத் திமுக கைப்பற்றியது. அதோடு தேர்தல் பிரச்சாரத்தின்போது கருணாநிதிக்கு கூடிய கூட்டம் அவர் பக்கம்தான் வெற்றி என்ற பிரமையை ஏற்படுத்தியது.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரு பிரிவுகளாக அ.இ.அதிமுக 1989 தேர்தலைச் சந்தித்தது. ஆண்டிப்பட்டியில் ஜானகி போட்டியிட்டார். போடியில் ஜெயலலிதா போட்டியிட்டார். எம்.ஜி.ஆர் தொகுதியாக இருந்த ஆண்டிபட்டியில் ஜானகி எதிர்ப்பலை என்று கணித்து செய்தி எழுதினேன். மூன்றாம் இடத்திற்கு ஜானகி சென்றார்.

ஆண்டிப்பட்டிக்கும் போடிக்கும் மாறி மாறி பயணம் செய்து பொதுக்கூட்டச் செய்திகளை தருவது பெரிய பணியாக இருந்தது. வெகுநேரம் காத்திருந்து தொலைபேசி நிலையத்திலிருந்து ‘டிரங்கால்’ பேச வேண்டும் அல்லது எழுதி யார் மூலமோ, பஸ் மூலமோ செய்தியை கொடுத்தனுப்ப வேண்டும். போடியில் அவ்வப்போது தாக்குதல், மோதல் வேறு.

தனித்தே தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜிவ்காந்தி 14 முறை தமிழகம் வந்து பிரச்சா ரம் செய்தார். பாதுகாப்பு வளையத்தை தாண்டி மக்களைச் சந்திக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. அவருக்கு பின்னால் வாகனத்தில் வரும்  வழியில் திடீரென்று வாகனத்தை நிறுத்தி ராஜிவ்காந்தி மக்களைச் சந்திப்பார். பல அடிதூரம் ஓடிச்சென்று என்ன விபரம் என்று நிருபர்கள் அறிவதற்குள் சந்திப்பு முடிந்துவிடும். அவர் வாகனம் புறப்பட்டு விடும். எங்கள் வாகனத்துக்கு மூச்சிரைக்க ஓடி வர நேரிடும்.

1991லும் அ.இ.அதிமுக மகத்தான வெற்றிபெற ராஜிவ்காந்தி படுகொலை காரணமாக அமைந்தது. அதன்பின் நடந்த தேர்தல்களில் மாறி மாறி திமுக,அதிமுக வெற்றி பெறும் போக்கு தொடற்கிறது. 1996-ல் ஜெயலலிதா எதிர்ப்பலை கண்கூடாகத் தெரிந்தது. பர்கூரில் ஜெயலலிதா தோற்றுவிடுவார் என்று கூட யூகிக்க முடிந்தது. அது ஆச்சர்யமாகவும் இருந்தது. தொகுதி மக்களுக்கு ஏராளமான நன்மைகளை ஜெயலலிதா செய்திருந்தும் தோற்றார்.

ஆதரவு அலை, எதிர்ப்பலை வீசும்போது தேர்தல் முடிவு எப்படி வரும் என்பதை முன்கூட்டியே மறைமுகமாகவாவது எழுதி விடுவோம். சில தேர்தல்களில் மக்கள் வெளிப்படையாக தங்கள் மனதில் உள்ளதைச் சொல்லமாட்டார்கள். பொதுவாக கிராமப்புறங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் நிலவரம் ஆய்வு செய்வோம். முன்பின் தெரியாத நபர்களிடம் மக்கள் தங்கள் விருப்ப மனநிலையை காட்டமாட்டார்கள். யாருக்கு ஓட்டுப் போட்டு என்ன ஆகப் போகிறது என்ற பதில் சில பத்தாண்டுகளாகவே கேட்டு வந்திருக்கிறேன்.

2001, 2006, 2011 தேர்தல்களில் விரிவான கூட்டணியே தேர்தல் முடிவைத் தீர்மானித்தன. 2001 திமுக ஆட்சி முடிவில் பெரிய புகார்கள் எதுவும் இல்லாத நிலையில் அக்கட்சி தோற்றது. அதேபோல் 2006-ல் திமுக வெற்றியை ஈட்டியதற்கு விரிவான கூட்டணி அடிப்படையாக அமைந்தது. 2011-ல் அ.இ.அதிமுக வெற்றிக்கும் விரிவான கூட்டணியே காரணம். யார் வேண்டும் என்பதைவிட யார் ஆட்சிக்கு வேண்டாம் என்பதே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கிறது. தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் பணப்புழக்கம், பணப்பட்டுவாடா ஆபத்தான எல்லையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. வாக்குக்குப் பணம் கொடுத்து பழக்கிவிட்டு மக்கள் தான் பணம் கேட்கிறார்கள் என்று அரசியல் கட்சிகள் நியாயம் பேசுகிறார்கள். தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு நோட்டு என்பது தமிழகம், ஆந்திராவில் அதிகமாக உள்ளது. நான் சிறுவனாக இருந்த காலத்தில் வாக்குச்சாவடிக்கு செல்லும் முன்பு அவித்த மொச்சை, காரச்சேவு, மிக்சர் பொட்டலம் தந்து கட்சிகள் வாக்காளர்களை கவர்வதைப்பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்தில் பாவலர் வரதராசன் பாடிய தேர்தல் காலத்துப்பாட்டு மிகவும் பிரசித்தம்.

ஒத்த ரூபாயும் தாரேன்

உப்புமா காபியும் தாரேன்

காளை மாட்டுக்கு ஓட்டுப்போடு என்று ஒருவர் பாடுவார். ஒத்த ரூபாயும் வேண்டாம் உன் உப்புமா காபியும் வேண்டாம், நீங்க ஊரை ஏய்க்கும் கூட்டம் என்று மற்றொருவர் பாடுவார். இருப்பினும் பணப்பட்டுவாடா பெரும்போக்காக இருக்கவில்லை. அதிமுக, திமுக வெளிப்படையாக ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்ற அறிவிப்பை வெளியிடாததே குற்றத்துக்கு அவை உடந்தை என்பதைக் காட்டுகிறது. இவை கொள்கைக்கு விடை கொடுத்துவிட்டு இலவச வாக்குறுதிகளை அறிவிப்பதில் போட்டிபோடுகின்றன. மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் என்ற நம்பிக்கை இன்னமும் எனக்கு நீடிக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களால் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே குறைந்து வருகிறது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

பிப்ரவரி, 2016.