மறைமலையடிகளார் 
சிறப்புப்பக்கங்கள்

யான் மதியேன், மதியேன்

முனைவர் . ப. சரவணன்

ஆண்டு:1927.  நாள்: ஜூலை 23, 24 ஆகிய இரு நாட்கள். தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் மறைமலையடிகளுக்கும் பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியாருக்குமிடையே ஒரு சொற்போர் நடந்தது. அந்தப்பேச்சில் அடிகளார், தமிழ்சார்பாளராகவும் - செட்டியார் வடமொழி சார்பாளராகவும் நின்று வாதிட்டனர். அடிகளார் இறுதியில் கோபத்தின் உச்சியில் நின்று, “தமிழை தமிழாகவே வழங்கவேண்டும். தமிழில் அயற்சொற்கள் கலக்க விரும்புவோரை எவ்வளவு கற்றவராயினும் அவரை யான் மதியேன், மதியேன்”  என்று பேசி உணர்ச்சிவசப்பட்டு மேசையின் மீது ஓங்கி ஓங்கி குத்தினாராம். தனித்தமிழ் உணர்வு நாடெங்கும் பரவிட இதுபோன்ற உணர்ச்சிகரமான நிகழ்வுகளே வித்திட்டன.

‘மொழிக்கலப்பு’ என்பது தவிர்க்க முடியாதது என்பது சமூக விஞ்ஞானம் நமக்குச் சொல்லித்தரும் பாடங்களில் ஒன்று. ஆனால், “கலப்படமற்ற தூய மொழி என் தாய்மொழி” என்று சொல்வதில்தான் ஒவ்வொரு மனித இனத்திற்கும் மகிழ்ச்சியோடு கூடிய தனித்த அடையாளம் உருவாகிறது. அதற்காக ‘மொழித்தூய்மை பாதுகாப்பு இயக்கம்’ என்னும் பெயர் குறிப்பிட்டோ/ படாமலோ இயக்கங்கள் பல உலகம் முழுவதும் தோன்றியிருந்தன.

ஒரு மொழியை பேசும் மக்கள் தம் இனத்தாரை விட்டு நீங்காது இருக்கும்வரை, அவர்தம் நாட்டில் வேற்று மொழியாளர் வந்து புகாது இருக்கும்வரை பிறமொழிச் சொற்கள் வந்து கலப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் நெடுங்காலமாகப் பிற நாட்டாருடன் தமிழர் வாணிகத் தொடர்பு கொண்டிருந்ததனால் அவர்களது மொழியோடு பழக்கங்களும் பண்பாடுகளும் தமிழரிடையே கலந்தன. தமிழில் கலப்பு நேர்ந்த காலம் கடைசங்க காலம் எனவும் தமிழில் முதலில் கலந்த மொழி சமஸ்கிருதம் எனவும் க.தமிழமல்லன் குறிப்பிடுகிறார். மேலும் தமிழகத்தை ஆண்டுவந்த வேற்றுமொழி அரசர்களாலும் அவர்களது மொழிச்சொற்கள் தமிழில் புகுந்தன. பல்லவர் சோழர் ஆட்சியில் வடமொழி, முகம்மதியர் காலத்தில் உருது, பாரசீகம், அரபு, நாயக்கர் காலத்தில் தெலுங்கு, டச்சு, போர்ச்சுகீசியம், பிரஞ்சு, ஆங்கிலம் முதலிய ஐரோப்பிய மொழிகள் முதலியன எல்லாம் தமிழில் கலந்து அதன் தூய்மையைக் கெடுத்தன.

இவை ஒரு புறமிருக்க புறச்சமயங்களான பௌத்தம், சமணம், இஸ்லாம், கிறித்துவம் முதலியனவும் பிறமொழிக் கலப்பிற்குக் காரணமாயின. அதோடு தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனப்படும் 19 ஆம் நூற்றாண்டின் நடுக்கூறில் அயல்மொழிச் சொற்களின் கலப்பால் தமிழ்மொழி மட்டுமன்று, இனமும் சீர்குலைந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக வடமொழி நூல்கள் பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பின்புதான் மொழிக்கலப்பு என்பது உச்ச நிலையை அடைந்தது. வடமொழியிலிருந்தே பல இந்திய மொழிகள் இலக்கியச் செல்வத்தை எடுத்துக்கொண்டன என்பார் சாமி.சிதம்பரனார். எனவேதான் வடசொல் தமிழில் கலந்த அளவிற்குத் திசைச்சொற்கள் தமிழில் கலக்கவில்லை என்கிறார் அவர். இந்த விடயத்தை ஆட்சியாளர்களோடும் தொடர்புப்படுத்தி பார்க்கவேண்டும். அக்காலத்தில் தமிழக மன்னர்கள் சமஸ்கிருத்தை தங்களது ஆட்சி நலனுக்கு ஏற்ற வகையில் உயர்த்திப் பிடிக்க தொடங்கியதால் தமிழ்ப் பிராமணர் கூட வேதிய பிராமணராகிப்போன கொடுமை நிகழ்ந்தது. பிராமணியம் சமஸ்கிருதத்தை மக்கள் மீது திணிக்கும் முயற்சியும் நடந்தேறியது.

“ஆரியர் வடமொழியை தேவமொழி என்று சொல்லித் திராவிட மொழிகளில் எல்லாம் எண்ணிறந்த வேண்டாத வடசொற்களைப் புகுத்தி தமிழொழிந்தவற்றிற்கு வடமொழி எழுத்துக்களையும் இலக்கணத்தையும் வகுத்துச் சரித்திரத்தை மாற்றித் திராவிட நாகரிகத்தை ஆரிய நாகரிகமாக காட்டி வடமொழியையே திராவிடத் தாயென்று கருதும்படி செய்துவிட்டனர்” என்பார் பாவாணர். தமிழில் அமைந்திருந்த உயர் கருத்துக்கள் எல்லாம் வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அக்கருத்துக்கள் எல்லாம் வடமொழியிலிருந்தே தமிழர் பெற்றனர் என்று வரலாறு திரித்துக் கூறப்பட்டது.

இந்நிலையில்தான் எல்லீசு (1977 - 1819) போன்றோரது மொழியியல் ஆராய்ச்சி தமிழுக்குக் கிடைத்த நல்லூழாகக் கருதப்பட்டது. தமிழ் - தெலுங்கு முதலிய தென்னிந்திய மொழிகளின் ஒருமைப்பாடு பற்றியும் அவற்றிற்கும் -வட இந்தியாவிலே செல்வாக்குப் பெற்ற இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்குமிடையே காணப்பட்ட வேறுபாடுகள் பற்றியும் அவர் கூறிய கருத்துக்கள் கால்டுவெல் (1814 - 1891)லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்னும் நூலில் ஆராயப்பட்டன. ( இந்த அரிய நூல் வெளிவருவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்னரே, “திராவிட மொழிக் குடும்பம்” என்னும் புலமைக் கருத்தாக்கத்தை உணர்ந்து உலகிற்கு உணர்த்திய எல்லீஸ் 1816லேயே தெலுங்கை தமிழின் சகோதரி மொழி என்று நிறுவினர்).

தமிழுக்கும் வடமொழிக்கும் எவ்வித உறவும் இல்லை. வடமொழி இன்றி தமிழ் தனித்து இயங்கக்கூடியது என்பதை நிறுவிய கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலை ஆங்கிலம் கற்ற தமிழறிஞர்கள் பெரிதும் விரும்பினர்.

இத்தகு காலகட்டத்தில்தான் மறைமலையடிகளின் பணி தொடங்குகிறது. எங்கும் பிறமொழிச் செல்வாக்கு என்றிருந்த அக்காலச் சூழலில் ஒரு நாள் அடிகளும் அவரது மூத்த மகள் நீலாம்பிகை அம்மையாரும் தம் மாளிகைத் தோட்டத்தில் உலாவும்போது வள்ளலாரின்,

“ பெற்ற தாய்தனை மகமறந் தாலும் பிள்ளையைப்பெறும் தாய்மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர்மறந்தாலும்

உயிரை மேவிய உடல் மறந்தாலும்”

(திருவருட்பா, இரண்டாம் திருமுறை, நமச்சிவாய சங்கீர்த்தன லகரி, பா.7) என்னும் பாடலைப் பாடிய பின்பு, தன் மகளை பார்த்து அடிகளார்,‘ நீலா! இப்பாட்டிலுள்ள ‘தேகம்’ என்ற வட சொல்லுக்குப் பதிலாக ‘யாக்கை’ என்ற தமிழ்ச்சொல் இருந்தால் செய்யுளின் ஓசையின்பம் பின்னும் அழகாக இருக்குமன்றோ? பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குன்றுகிறது. நாளடைவில் தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள் நிலைபெற்று, தமிழ்ச்சொற்கள் மறைந்துவிடுகின்றன’ என்றாராம்.  மகளும் “அப்படியானால் இனிமேல் நாம் அயல்மொழிச்சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும். அதற்கான முயற்சிகளைக் கைவிடாது செய்தல் வேண்டும்” என்று ஆர்வமுடன் கூறினாராம்.

மகளின் அன்பும் அறிவும் கலந்த வேண்டுகோளை ஏற்ற தந்தையார், சுவாமி வேதாசலம் என்ற தம் வடமொழிப் பெயரை தனித்தமிழில் ‘மறைமலையடிகள்’ என்று மாற்றிக்கொண்டார். அதோடு நாம் நடத்திவந்த ‘ஞானசாகரம்’ என்னும் பத்திரிகையை அறிவுக்கடல் என்றும், இன்றும் பல்லாவரத்தில் உள்ள ‘சமரச சன்மார்க்க நிலையம்’ என்னும் பெயர்கொண்ட தமது மாளிகையை ‘பொதுநிலைக் கழகம்’ என்றும் மாற்றினார் என்று அடிகளாரின் வரலாற்றை எழுதிய அவரது மகன் மறை.திருநாவுக்கரசு கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சி 1916 ல் நடந்தது என்பர். இந்த ஆண்டுதான் ‘தனித்தமிழ் இயக்கம்’ உருவான ஆண்டாகவும் கருதப்படுகிறது.

எந்த ஒரு மொழியாயினும் பிற சொல் கலப்பின்றி வழங்கும்போது தான் அது நிலைபெற்று வாழும் தகுதிபெறும். தனித்தமிழ் என்பதும் அதுதான். தனித்தமிழ் இயக்கம் என்பது ஒரு மொழிக்கு எதிராகவோ ஒரு இனத்தின் மீதுள்ள வெறுப்பாலோ ஏற்பட்டது என்று கருதுவது தவறு என்னும் சோமலெ  அவர்களின் கருத்து இங்கு நினைத்துப் பார்க்கத்தக்கது. அடிகளாருக்கு ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றின் மீது நல்ல மதிப்பிருந்தது. அவர் தனது நூல்களுக்கு ஆங்கிலத்தில் எழுதிய  முன்னுரை, நாட்குறிப்பு முதலியன இதைப் புலப்படுத்தும். எனினும் அவற்றின் கலப்பு தமிழுக்குக் கேடுவிளைவிக்கும் என்பதாலேயே இந்த இயக்கத்தை அவர் தோற்றுவித்தார். மொழியைச் சிதைப்பதன் மூலம் ஓர் இனத்தை அடிமைப்படுத்திட முடியும் என்பதாலேயே தனித்தமிழ் இயக்கத்தை அடிகளார் தோற்றுவித்தார் என்பதே நிதர்சனம்.

மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவிப்பதற்கு முன்பே, தமிழின் தூய்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணமும் தனித்தமிழ் உணர்வும் தமிழகத்தில் இருந்தது என்பதையும் மறப்பதற்கில்லை. சங்க இலக்கிய இலக்கண நூல்களில் தொடங்கி அதன் கண்ணி அறுபடாமல் தொடர்வது கண்கூடு. மொழிபெயர்ப்பே ஆனாலும் கூட, தமிழ் முறைக்கு ஏற்ப அமைய வேண்டும் என்பதை “வடசொல்கிளவி வடவெழுத்து ஒரீஇ” என்பன போன்ற நூற்பாக்கள் உணர்த்துகின்றன. அந்த வகையில் தமிழுக்கும் - வடமொழிக்குமான வேறுபாட்டை அம்மொழிகளை நன்கு கற்றுத்துறைபோகிய மாதவச் சிவஞான முனிவர் ( கி.பி.18ஆம் நூற்றாண்டு) முதன் முதலில் உணர்த்தினார். “ வடமொழி உயர்வென்றும் தமிழ் தாழ்வென்றும் கருதப்பட்ட காலத்திலும் இடத்திலும் இருந்துகொண்டு தம் ஆழ்ந்த தென்மொழி வடமொழிப் புலமையாலும் அரிய இலக்கண வாராய்ச்சியாலும் செய்யுள் வன்மையாலும், தருக்க ஆற்றலாலும் தமிழ் வடமொழிக்கு எள்ளளவும் இளைத்ததன்றென நிறுவியவர்” என்று முனிவரை பாராட்டுவார் பாவாணர்.

சிவஞான முனிவருக்கு அடுத்ததாக 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய பாம்பன் சுவாமிகள் (1850 - 1929) தனித்தமிழ் குறித்துப் பேசியுள்ளார். அவர் எழுதிய “சேந்தன் செந்தமிழ்(1906) என்னும் நூல் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளது. “ இவ்வளவில் வந்த மொழிகளில் எம்மொழியேனும் புகாமல், தென்மொழி நூலொன்று மின்றெனவும் இன்னும் வேண்டியவாறாகவும் வடமொழி கற்றானே சிலர் கூறுதல் கூடுங்கொல்? இதுகாறும் காட்டப்பட்ட சொற்களெல்லாம் வடமொழியேயாயினும் தென்மொழியேயாயினும் சிலச்சில பலப்பல அவ்வாறாயினும் அவர் கூற்றுப்படி இவற்றுட் பலசில புகாமல்தென்மொழி நூலொன்று மின்றெனல் உறுதியாம். ஆதலின் இச்சொற்களுள்ளும் இவையற்றிற்கு வேறான வடசொற்களுள்ளும் ஒன்றேனும் புகாமலே “சேந்தன் செந்தமிழ்” என்னுமிந்நூல் என்னால் படைக்கப்படுவதாயிற்று” என்கிறார் அவர்.

வடமொழி கலவாத் தனித்தமிழ் நூல் ஒன்றேனும் இல்லை என்னும் ‘இலக்கணகொத்து’ சுவாமிநாத தேசிகரது கூற்றை முறியடிக்கும் விதமாக வடசொல்கலவாத் தமிழ்நூல் ஒன்றைப் படைக்க முடியும் என்பதை நிருபித்திருக்கிறார் சுவாமிகள். இந்த நூலின் மூலம் தமது புலமையை நிலைநாட்டுவது அவரது நோக்கமன்று; மாறாக வடசொல் துணையின்றித் தமிழ்மொழி தனித்து இயங்கும் ஆற்றலுடையது என்பதை நிரூபிப்பதேயாகும். இதனை, “ இவ்வாறு பல சொற்கள் நீங்குழியும் தமிழ்ச்செய்யுள் தன்மொழியானே நடைபெறுமென்னும் ஆற்றலு மிதனால் வெளிப்பட்டது” என்னும் நூல் முகவுரை இதனை புலப்படுத்தும். அதோடு இந்நூலின் இறுதியில் அமைந்துள்ள ‘புலன் வனப்பு’ என்னும் பகுதி வடசொல் - தமிழ் அகரமுதலியாக அமைந்து 1937ல் நீலாம்பிகை அம்மையார் அமைத்த அகரமுதலிக்கு முன்னோடியாக விளங்குவதும் குறிப்பிடத்தக்கது.

பாம்பன் சுவாமிகளைத் தொடர்ந்து, பரிதிமாற் கலைஞர் (1870 - 1903), மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை(1855-1897), ஞானபானு என்னும் இதழின் வாயிலாகத் தனித்தமிழைப் போற்றிய சுப்ரமணிய சிவா,  ஆகியோரின் தனித்தமிழ் வளர்ச்சி பங்களிப்பும் வரலாற்றில் தனித்துக் குறிப்பிடத்தக்கவை.

மறைமலையடிகளார்

மறைமலையடிகளாரின் தனித்தமிழ் செயல்பாட்டிற்கு முன்பாகவே சில ஆளுமைகள் இருந்ததைப்போல சில தனித்த அமைப்புகளும் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளன. அவற்றுள் முதலாவதும் முக்கியமானதும் ‘திருவிடர் கழகம்’ என்னும் அமைப்பாகும். மறைமலையடிகள் தனித்தமிழ் பற்றாளர் ஆவதற்கு எட்டாண்டுகளுக்கு முன்பாகவே, அதாவது 19-11-1908 இல் விருதை சிவஞான யோகிகள் என்பவரால் இவ்வமைப்பு தோற்று விக்கப்பட்டது. தனித்தமிழ் என்னும் குறிப்பு இந்த அமைப்பினரால் குறிப்பிடப்படவில்லையே தவிர, தமிழின் தொன்மை, உயர்வு முதலியன பற்றி ஆராய்வது இவ்வமைப்பின் நோக்கங்களாக இருந்தன.

தனித்தமிழ் இயக்கத்தை அடிகளார் தோற்றுவித்து அதனைச் செயற்படுத்தியபோது அதற்கு எதிர்வினைகள் சிலவும் வந்து குவிந்தன. “பிறமொழிச் சொற்களை

நீக்க வேண்டும் என்று குறுகிய நாட்டுப்பற்றுடையவர்களே வற்புறுத்துகின்றனர். நல்ல வேளையாக மொழியின் வளர்ச்சி இத்தூய்மையாளர்கள் கையில் இல்லை” என்று மெட்ராஸ் மெயில் (20-05-1927) கருத்து தெரிவித்திருக்கிறது. அதே சமயத்தில், “நமது தாய்மொழி தனித்து இயங்கக்கூடியது என்ற உணர்ச்சி தவறான அபிமானத்தால் தோன்றி நம்மில் பலரையும் கூத்தாட வைக்கிறது” என்று பேரா.எஸ்.வையாபுரிப் பிள்ளை கருத்து கூறியதும் அக்காலத்தில் பெரிய சலசலப்பை உண்டாக்கியது.

தனிமனிதனாக நின்று அடிகள் தொடங்கிய இவ்வியக்கம் சமூகத்தில் பல அசைவுகளை நிகழ்த்திக் காட்டியது. அதற்கு ஒரு நிகழ்வை இக்கட்டுரையில் சுட்டலாம். 1942இல் தமிழர்கள் தங்கள் பெயருக்கு முன்பு ‘ஸ்ரீ’ எனப் போடுவதற்குப் பதிலாக ‘திரு’ என்னும் தனித்தமிழ் சொல்லை போடவேண்டும் என்று பெரும் போராட்டம் வெடித்தது.

மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ என்னும் நீளமான மரியாதைப் பட்டப்பெயருக்கு பதிலாக சுருக்கமாக ஸ்ரீ என்று மட்டும் இருந்தால் போதுமானது என சென்னை பொதுப்பணித்துறை ஆணை பிறப்பித்தது. அவ்விடத்தில் ‘திரு’ என்பதைப் பயன்படுத்த வேண்டும் எனத் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் வேண்டுகோள் விடுத்தது. 07-03-1942 இல் பொதுப்பணித்துறை ஓர் அறிக்கை வெளியிட்டது. ஒரு வாரத்திற்குள் பொதுமக்கள் தங்கள் கருத்தை எழுதி அனுப்புமாறும் அது கேட்டுக்கொண்டது.

 ‘திரு’வை எதிர்த்து உ.வே.சா.உள்ளிட்ட தமிழறிஞர்கள் ‘ஸ்ரீ’யை எதிர்த்து நாவலர் ச.சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட தமிழறிஞர்களும் தங்கள் கருத்துகளை எழுதினர்.‘ஸ்ரீ’ என்னும் வடவெழுத்துக்கு மாறாகத் ‘திரு’ என்ற தமிழ்ச்சொல் வேண்டுமென்பதை மடாதிபதிகள் ஏற்காதபோது “மயிலத் தாண்டி கையெழுத்தை  ஒரு / வடவெழுத்தாலே போடுகின்றான் / செயலில் தருமைப் பண்டாரம்  தமிழ்த் / திருவை வேண்டாம் என்கின்றான்”  என்று கோபாவேசத்துடன் பாடினார் பாவேந்தர் பாரதிதாசன்.

இதற்குப் பிறகுதான் அனைத்து தமிழறிஞர்களும் ஒன்றுகூடி உழைத்ததன் பயனாக ‘திரு’ என்ற பயன்பாடு நடைமுறைப்படுத்தும்படி அரசு ஆணை பிறப்பித்தது. தனித்தமிழ் இயக்கத்தின் ஊற்றம் கருதி அதன் தொடர்ச்சியாக வேறுசில தனித்தமிழ் அமைப்புகளும் உருப்பெற்ற வரலாற்றையும் இக்கட்டுரையில் பொதிவது அவசியம்.

1937இல் திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கம் சார்பில் ‘தமிழ் பாதுகாப்புக் கழகம்’ என்னும் அமைப்பு இந்தி எதிர்ப்பை முன்வைத்து தோன்றியது. இக்கழகத்தின் செயற்பாடுகள் தனித்தமிழ் மலர்ச்சியை ஏற்படுத்தின. (இத்தொண்டின் சிறப்பு கருதி 12-01-1943இல் வ.சுப்பையா பிள்ளை ‘தமிழறிஞர் கழகம்’ என ஓர் அமைப்பினை உருவாக்கினார்).

1943இல் இ.மு.சுப்ரமணியப் பிள்ளையும் சி.புன்னைவனநாத முதலியாரும் சேர்ந்து ‘சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம்’ என்பதை உருவாக்கினார். தூய மொழிக்கோட்பாடு அடிப்படையில் கலைச் சொற்களை உருவாக்கியது இச்சங்கம். 1957-இல் திருச்சியில் தூயவளனார் கல்லூரி விடுதி மாணவர்கள் ‘தமிழ்ப் பேராயம்’ என்பதை உருவாக்கினர். அன்றைய அரசியல் சூழலும் ஹிந்தி எதிர்ப்பும் மாணவர்களிடையே மொழி விடுதலையைத் தூண்டித் தனித்தமிழ் ஆர்வத்திற்கு வித்திடுவதற்கு இப்பேராயம் வழிவகுத்தது. ‘தமிழ் ஒளி’ என்னும் கையெழுத்துப் பிரதியும் இவர்களால் நடத்தப்பட்டது. முந்தைய சபாநாயகர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன், பேராசிரியர் இரா.இளவரசு முதலியார் இங்கிருந்து உருவானவர்கள்.

1959இல் பாளையங்கோட்டையில் ‘தனித்தமிழ் இலக்கியக் கழகம்’ என்னும் அமைப்பு அரங்கராசன் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. புலவர் தேர்வு எழுதுவோர்க்கு மாலைநேர வகுப்பு நடத்துதல் இதன் தலையாய பணி.

1960இல் புலவர் சேந்தமாங்குடியார் என்பவரால் ‘தனித்தமிழ் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது. 1962இல் முனைவர் சி.இலக்குவனார் ‘தமிழ் காப்புக் கழகம்’ என்பதைத் தொடங்கி பட்டி தொட்டிகளில் எல்லாம் தனித்தமிழ் பரப்பினார். தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழகம் வாழும் என்பதை உயிர்நாடியாகக் கொண்ட இக்கழகத்தின் முக்கியக் கொள்கைகள் உயர் தமிழில் பேசுக; தமிழில் எழுதுக; தமிழில் பெயரிடுக; தமிழில் பயில்க என்பன.

பரிதிமாற்கலைஞர் தம் துணைவியார் முத்து சுபலட்சுமியுடன்

1968இல் தேவநேய பாவாணர் அவர்களால் ‘உலகத் தமிழ்க் கழகம்’ என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. 1981-ல் உலகத்தமிழின முன்னேற்றக் கழகத்தை பெருஞ்சித்திரனார் தொடங்கியதும் முக்கிய நிகழ்வே.

இதேபோல் தனித்தமிழ் பத்திரிகைகள் குறித்தும் பேச வேண்டும். ஊழியன், குமரன், செந்தமிழ், தமிழ்ப்பொழில், பொன்னி, செந்தமிழ்ச்செல்வி, புலமை போன்றவை அக்காலத்தில் இலக்கியக் கட்டுரைகளையும் சொல்லாராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டு தனித்தமிழ் வளர்த்தன. இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தி மடலான தமிழ் ஓசை அத்தகு பணியை  செய்து வருகிறது.  பழ.நெடுமாறன் அவர்களின் முயற்சியில் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு கொண்டாடி மலர் வெளியிட்டிருப்பதையும் பதிவு செய்யவேண்டும்.

மொழித்தூய்மை என்பதை முன்வைத்து மறைமலையடிகளால் தொடங்கப்பட்ட தனித்தமிழ் இயக்கம் தமிழ்மொழியை மட்டுமன்று இனத்தையும் காத்து நின்றது. அதன் வெளிப்பாடு, பண்பாடு, அரசியல் என பிறவற்றிலும் வெளிப்பட்டு நிற்கிறது.

“மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் மேலோட்டமாகப் பார்க்கும்போது உரைநடை பற்றிய ஓர் இயக்கமாகத் தோன்றினும் ஆழ்ந்து நோக்கும்போது தமிழர்களது அரசியல், வரலாறு, சமூக அமைப்பு, சாதி அடிப்படை முதலியவற்றுடன் தொடர்ந்து நிற்கின்றது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது” என்று பேரா.கா.சிவத்தம்பி மதிப்பிடுவதும் இந்த அர்த்தத்தில்தான்.

செப்டெம்பர், 2016.