சிறப்புப்பக்கங்கள்

மொழியை கொண்டாடிய கலைஞர்!

சுபகுணராஜன்

ஐம்பதுகளின் தமிழ்த்திரையில் திராவிடம் கோலோச்சியது, கிடைத்த சந்தர்ப்பங்களில் தங்கள் கருத்துக்களை பரவலாக்கினர் திராவிட எழுத்தாளர்கள். அதற்கு அவர்கள் தேர்வு செய்தவை புனைவான வரலாற்று களங்கள்.  அதேவேளையில் திரைத்துறையில் தேசியர்களும் தங்களது செறிவான பங்களிப்பைச் செய்தனர். பாரதிதாசன், அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஏ.வி.பி.ஆசைத்தம்பி, திருவாருர் தங்கராசு போன்றவர்களின் திரைப்படங்களில் திராவிட சிந்தனைகளும், மொழியரசியலும் பேசப்பட்டன என்றால், எதிர் தர்ப்பில் கல்கி,(நாற்பதுகள்)  எஸ்.எஸ்.வாசன், பி.ஆர்.பந்துலு, ஏ.பி.நாகராஜன்  போன்றோரின் திரைப்படங்களில் தேசியவாதமும், ஆன்மீகமும் அதனோடுகூட மொழிப்பற்றும் பேசப்படவே செய்தன.

1952ஆம் ஆண்டு வெளியான ‘ பராசக்தி’ திரைப்படம் தமிழ் திரைவெளியில் ஒருபெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதை திரைவெளியில் எதிர்கொள்ள வேண்டிய சவாலும் தேசியவாதிகளுக்கு உருவானது. அந்தச் சவாலை எதிர்கொண்டது ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் அவர்களே. வெகுநாள் தயாரிப்பில் இருந்த ‘ஔவையார்’  திரைப்படத்தை முடித்து 1953ல் வெளியிட்டார் வாசன். கொத்தமங்கலம் சுப்பு இயக்கத்தில் கே.பி.சுந்தராம்பாள் நடித்த அந்தத் திரைப்படம் அரை வரலாறு அரைத் தொன்மம் ஆகும். அந்தநாளின் பிரமாண்ட திரைப்படமான அது ‘ பராசக்தி’ முன் மொழிந்த பகுத்தறிவை நிராகரித்து, நம்பிக்கை, பக்தி, கடவுள் அருள் ஆகியவற்றை முன் மொழிந்தது.

  தொடர்ந்து தேசியர்களால் புனைவு வரலாறுகளில் தங்களது பெருமிதத்தைப் பேச இயலவில்லை. எனவே சுதந்திரப் போராட்ட வரலாற்றிலிருந்து நாயகர்களைத் தேடினார்கள். முதலில் தேர்வானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். இதற்குப் பிறகு தேசியர்களுக்கு கதைக்களமாக மிச்சமாய் இருந்தவர் வ.உ.சி. மீண்டும் அதேகூட்டணியில் உருவானது ‘கப்பலோட்டிய தமிழன்’.இத்துடன் முடிந்துபோன வரலாற்று நாயகர்களின் பட்டியலை விடுத்து தேசியர்களுக்கான திசைவழியைக் காட்டியவர் ஏ.பி.நாகராஜன் அவர்கள்.

 அன்றைய திரைவெளிப் பிரபலங்கள் பலரைப் போல பாய்ஸ் கம்பெனி நாடகக்குழுவிலிருந்து வந்தவர்தான் ஏ.பி.நாகராஜன். 1950களின் துவக்கத்தில் அவர் ‘நால்வர் ’ திரைப்படம் மூலம் அறிமுக நாயகனாக வெள்ளித்திரைக்கு வந்தார். அதைத் தொடர்ந்த மாங்கல்யம்,பெண்ணரசி போன்ற படங்களிலும் கதாநாயகனாக நடித்தவர்,  1955ல் வெளியான ‘டவுன்பஸ்’ படத்தின் மூலம் வசனகர்த்தாவானார். அதைத் தொடர்ந்து அவருக்கு வசனம் எழுதும் வாய்ப்பு குவியத்துவங்கியது, நடிப்பை விடுத்து இயக்குநர் கே.சோமு அவர்களின் படங்களின் பிரதான வசனகர்த்தா ஆனார். ‘1957ஆம் ஆண்டில் தமிழின் முதல் வட்டார வழக்குப்படமான ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்துக்கு வசனம் எழுதியதோடு,அந்தப்படத்தை வி.கே.ராமசாமி அவர்களோடு இணைந்து தயாரிக்கவும் செய்தார்.இந்தக் காலவெளியில் தேசியவாதிகளின் கவனம் இவர்மீது விழுந்தது. இவரும் மா.பொ.சி அவர்களின் தமிழரசு கழகத்தின் தீவிர ஆதரவாளர் ஆனார். தேசியர்களும் இவரை ‘ கலைஞர் ஏ.பி.நாகராஜன்’ என்றே அழைத்தனர். அதாவது திராவிடக் கலைஞருக்கு போட்டியான ‘தேசியக் கலைஞர்’. 1960களில் திராவிட எழுத்தாளர்களின் கவனம் தீவிர அரசியலானது. தேர்தல் அரசியல், சட்டமன்ற நடவடிக்கைகள், அவர்களை திரைப்படங்கள் குறித்த கவனத்தை கொஞ்சம் மாற்றியமைத்தது.முற்றிலுமாக விலகிவிடவில்லை எனினும் இருப்பு குறைந்தது. இந்தக்கட்டத்தில் பெரும் வீச்சாக இருந்த தி.மு.கவை எதிர்கொள்ளும் சவாலை ஏற்றார் ஏ.பி.என். வரலாற்று நாயகர்கள் இன்மையை போக்க    ‘தெய்வங்களை’ நாயக,நாயகியராகக் கண்டடைந்தார்.

1965ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்பு மொழிப்போர் பெரும்நெருப்பாக இங்கு பற்றி எரிந்தது. பலதரப்பட்டவர்களும் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டம் என்ற போதும் தி.மு.க அதற்கான தலைமையை தனதாக்கியது. இந்த வேளையில் ஏ.பி.நாகராஜன் உருவாக்கிய கடவுளர் திரைப்படங்கள் மிக முக்கியமான பண்பு கொண்டவை. ஆம், இந்தத் திரைப் படங்களில் கடவுளர் ‘ செந்தமிழ்’ பேசினர். அவர்களது பேச்சு மட்டுமல்ல, அந்தத் திரைப்படங்களின் கதைக்களங்கள் சிலவும் தமிழ்மொழி  குறித்ததாக ஆனது சிறப்பு. 1958ஆம் ஆண்டிலேயே  சம்பூர்ண ராமாயணம் போன்ற படத்துக்கு சிறப்பாக திரைக்கதை,வசனம் எழுதி, ராஜாஜி போன்றவர்களின் பாராட்டுகளைப் பெற்றவர் ஏ.பி.என். அந்தப்படத்தில் ராவணனை ‘ பத்து’ தலைகளுடன் காட்சியளிப்பதைத் தவிர்த்தவர், அதோடுகூட ,அவரைப் பெரும் இசைவாணராகவும் காட்டி இருந்தார். இந்த உத்தி பெரும் வரவேற்பைப் பெற்றது.இதன் தொடர்ச்சியாகவே 65ஆம் ஆண்டின்

“ திருவிளையாடல்” திரைப்படத்தில் சிவனையே பெரும் தமிழ்ப்புலவராகச் சித்தரித்து, அவர் தொடர்பில் ஒரு பெரும் காவிய நாடகத்தை அரங்கேற்றினார். இந்தத் திரைப் படத்தைத் தொடர்ந்து அவர் 1965 முதல் 1968 வரை உருவாக்கிய திரைப்படங்கள் பெறும் வெற்றிப்படங்களாயின. அவை சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட் செல்வர், தில்லானா மோகானாம்பாள் ஆகியவை. இவற்றில் திருவிளையாடல், திருவருட் செல்வர், கந்தன் கருணை ஆகியவை நேரடியாக கடவுளரையும் அவரது தொண்டர்களையும் கதை மாந்தராகக் கொண்டவை.

 சரஸ்வதி சபதம் ஒரு கடவுளரையும் மனிதரையும்  இணைத்த புனைவான களம், தில்லானா மோகானாம்பாள் ஒரு வரலாற்றுப் புனைவு. இவற்றில் பெரும்பாலும் தில்லானா மோகானாம்பாள் ஏ.பி.என் அவர்களின் “ மாஸ்டர் பீஸாக” கருதப்படுவது. ஆனால் இந்தத் திரைப்படங்கள் அனைத்தும் ஏ.பி.என் அவர்களின் மொழித்திறனுக்கும், அதைக் கையாளும் லாவகத்துக்குச் சான்றாக நிற்பவை. திராவிட இயக்கத்தவரின் மொழி விளையாட்டிற்கு சற்றும் குறையாத வலிமையை இவற்றில் காண முடியும். இந்தத் திரைப்படங்களும் இவற்றோடுகூட “ நவராத்திரி” திரைப்படமும் ஒரு இயக்குனரின் திறன் குறித்த முழுநீள ஆய்வுக்கான களம்.  ஓரே நடிகர் பல்வேறு பாத்திரங்களில் தோன்றுவதற்கான கதைக்களத்தை உருவாக்குவதில் தோல்வியடைவதை  (கமல் ஹாசனின் தசாவதாரம்) காணும் போது ‘ நவராத்திரி’ திரைக்கதை ஒரு மைல்கல் எனவே சொல்லத் தோன்றுகிறது.

  ஏ.பி.என் அவர்கள் தேசியவாதத்தின்  ‘ கலைஞராக ’ முன்மொழியப் பட்டதற்கு நீதி செய்வன இத்திரைப்படங்கள். ஒவ்வொரு திரைப்படமும் மொழி என்ற அளவில் தனித் தனிக் கட்டுரைக்கானவை.  அத்திரைப் படங்களின் திரைக்கதையமைப்பிலேயே இதற்கான களம் வகுக்கப்பட்டிருக்கும். கந்தன் கருணையில் அவ்வை, திருவருட் செல்வரில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர். சரஸ்வதி சபதத்தில் பேச இயலாதவராய் இருந்து சரஸ்வதி அருளால் பேச்சும், புலமைத்திறனும் பெற்று ஆட்சியாளரான ராணியையே ‘தமிழ்ப்புலமை’ அகங்காரத்துடன் எதிர் கொள்ளும் புலவன். இப்படிப் பாத்திரங்களின் உருவாக்கமே இந்த நோக்கத்தைக் கொண்டவையாய் அமைக்கப் பட்டிருந்தன. ஆனால் என்னளவில் இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்ற பாத்திர உருவாக்கம் ‘ திருவிளையாடல்’ படத்தின் நக்கீரன் என உறுதியாகச் சொல்லுவேன். நக்கீரன் பாத்திரம் தமிழ் புலவன் அதிலும் மதுரை தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் புலவன் என்ற புலமைச் செருக்கு நிறைந்த பாத்திரம். அந்தப் பாத்திரம் உச்சம் பெரும் தருணம் தமிழ் மொழியின் பெருமைமிகு உச்சம் என்றே கருதலாம். இந்த காட்சியைக் காணுங்கள்:

     சிவன்: என் பாட்டில் குற்றம் கண்டவன் எவன்? என பாண்டியன் அவையில் சினக்கும் சிவனுக்கு    நக்கீரர்தான் பாடலில் குற்றம் சொன்னவர் என்பது தெரிய வருகிறது. சிவனின் பேச்சு ஆணவமாகவே தொடர்கிறது. பதிலும் அதே தொனியில். பாடலைப்பற்றிய விவாதம் விரிகிறது. பாடலில் பொருட் குற்றம் இருப்பதாகச் சொல்லுகிறார் நக்கீரர். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமில்லை என்பது அவர் தரப்பு.‘உத்தம சாதி பெண்களுக்கு’ எனச்சீறும்  சிவனிடம், ‘நான் தினமும் வணங்குகிறேனே ஈசனுக்கு வலப்புறம் அமர்ந்திருக்கும் உமையவளுக்கும் அதே நிலைதான்’ என உறுதி காட்டுகிறார். சினந்து  சிவன் தான் யார் என்பதை வெளிப்படுத்துகிறார்.தொடர்ந்து சிவன் “ என் பாட்டில் பிழையா?” என ஆவேசம் காட்டுகிறார். ஒரு கணம் திகைக்கும் நக்கீரர்: “நீரே முக்கண் முதல்வர் ஆயினும், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே” என எதிர்வாதம் செய்கிறார்.

   சிவன் நெற்றிக்கண் திறந்து நக்கீரரை எரித்து விடுகிறார். பாண்டியன் முறையிட, அவரை பொற்றாமரைக் குளத்திலிருந்து உயிர்த்து வரச் செய்கிறார். உயிர்பெற்றுத் திரும்பும் சிவனை வணங்கிச்  சொல்கிறார்,  ‘ ஐயனே என் தமிழ்ச் செய்யுளில் பொருட்குற்றம் இருக்கக்கூடாதே என்பதற்காக நீங்கள் என்று அறிந்தும் வாதிட்டு விட்டேன். என்னை மன்னியுங்கள். குற்றமிருந்தால்’

      தமிழ்ப்பற்றின் உன்னத தருணமில்லையா இது.

 சிவனால் சுட்டெரிக்கப் பட்டு உயிர் மீண்ட பின்னும் தன் வாதத்தின் ‘ சாரத்தை’ கைவிடாத புலமை. ஆம். அவரளவில் அவர் வாதம் இன்னும் சரியே, மன்னிப்பும்  குற்றமிருந்தால்’ மட்டுமே. அதையும் தீர்மானிப்பது சிவனைப் பொறுத்தது. இவர் தரப்பில் குற்றமில்லை.  நக்கீரருக்கும், சிவனுக்கும் நடக்கும் வாதம், அதிலும் அவர் சிவன் தான் என்பது வெளிப்பட்ட பிறகு நடக்கும் பகுதி, உறுதியாக ஒரு இறைநம்பிக்கையாளன் மொழி என வரும்போது பகுத்தறிவாளன் சாயலில் வாதிட்டு அமைய முடியும் என்பதை நிறுவுகிறது. எப்படி மொழிப்போர் காலத்தில் வெளிவந்த ஏ.பி.என் படங்கள் மொழியைக் கொண்டாடியதன் வழியாக ‘ தேசியத்திற்கு’( இந்தி ஆதரவு) எதிர்நிலையில்  ஒரு புள்ளியில் திராவிட மொழிதல்களின் பகுதியானது என்பதற்கு இது சான்றாகலாம்.

பிப்ரவரி, 2017.