கரு பழனியப்பன் 
சிறப்புப்பக்கங்கள்

மொழியின் தொடர்ச்சி

கரு பழனியப்பன்

பள்ளிக்காலத்தில் ஜெயகாந்தனால் ஈர்க்கப்பட்டிருந்தாலும் சற்று வளர்ந்தபின் என்னை உலுக்கிய ஆளுமையும் எழுத்தும் என்றால் அது பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தான். அவரது சிதம்பர நினைவுகள் நூலைப் படித்தால் தெரியும். எழுத்துவேறு தான்வேறு அல்ல என்று வாழ்ந்த வாழ்க்கை. என்னை உலுக்கி எடுத்த நூல் என்று அதைச் சொல்லலாம். ஆனால் இவற்றையெல்லாம் மீறி திருக்குறள்தான் இன்றுவரை ஒவ்வொரு தினமும் என்னை ஆச்சரியப்படுத்துவதாக, என்னை உலுக்குவதாக இருந்துகொண்டே இருக்கிறது.

உதாரணத்துக்கு சொல்வதென்றால் - இலர் பலராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலாதவர் - என்றொரு குறள் இருக்கிறது. ஒரு விஷயத்தையே எண்ணிச் செயல்பட்டால் வெற்றிபெறலாம். ஆனால் அப்படிச் செயல்படுகிறவர்கள் குறைவாக உள்ளனர் என்கிறார் வள்ளுவர். இது நம்மைச் செயல்படத் தூண்டுகிறது. இதைவிட இதில் இருக்கும் சொல்லாட்சி இருக்கிறதே அதை எண்ணி பிரமித்துப் போகிறேன். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னால் எழுதப்பட்ட இக்குறளில் இருக்கும் சொற்களைப் பாருங்கள். இலர்,பலர்,காரணம், நோற்பார் இந்த சொற்கள் எல்லாம் இன்றும் புழக்கத்தில் உள்ளவை. இந்த மொழிதொடர்ச்சி தமிழனுக்கே உள்ள அபூர்வம். என்னை வழிநடத்தும், திசைகாட்டிப் பயணிக்க வைக்கும் நூலாக தொடர்ந்து இருந்துகொண்டிருப்பது திருக்குறளே.

ஜூலை, 2018.