மதுரை: இசை கொடுப்போம்!
எல்லோரிடமும் நிறைந்திருக்கும் இசையை வெளிக் கொணர்வதே தன் இசைக் குழுவின் நோக்கம் எனகிறார் மதுரையில் ’யாம் ’ எனும் இசைக் குழுவை கடந்த ஐந்து வருடங்களாக நடத்தி வரும் ஷாஜகான் .
தன் ஒன்பதாவது வயதில் இசையை முறைப்படி கற்க ஆரம்பித்தவர். யாமை துவங்குவதற்கு முன்பாக தமிழகத்தின் முண்ணணி இசைக்குழுக்களுக்காக எண்ணற்ற மேடைகளில் பாடியிருக்கிறார். இசை ஆசியராகவும் பள்ளிக் கூடங்களில் பணியாற்றி இருக்கிறார். தற்போது தனியார் பண்பலை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே இக்குழுவை நடத்திவருகிறார்.
இசை யாவருக்குமானது. ஆனால் அது எல்லோருக்கும் கிடைக்கிறதா என்றால் இல்லை. மனநல காப்பகங்கள், முதியோர், ஆதரவற்றோர் விடுதிகளில் தான் இவர்களுடைய பெரும்பாலான கச்சேரிகள் நிகழ்ந்திருக்கின்றன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,ரோட்டரி கிளப்களுக்காகவும் பாடுகிறார்கள். இசைக்கச்சேரிக்காக பணம் பெற்றுக் கொள்வதில்லை என்பது இவர்களுடைய பிரதான கொள்கை. “உணவையும் உடையையும் பணத்தையும் எல்லோராலும் கொடுக்க முடியும். ஆனால் இசையை அப்படி எல்லோராலும் கொடுக்க முடியாது. அந்த அரும் பணியைத்தான் நாங்கள் செய்கிறோம்” என்கிறார் ஷாஜஹான். சவுந்தர்யா, பவித்ரா, ஷாருக்கான், சந்தோஷினி, யமுனா, ஜாகிர்கான், ஜெகதா ஆகிய ஆறு பேர்தான் இந்தக் குழுவின் முக்கியப் பாடகர்கள். இவர்கள் கல்லூரிகளில் படித்துக் கொண்டே ஒய்வு நேரங்களில் பாடிக் கொண்டிருக்கிறனர். இவர்களில் சவுந்தர்யா, பவித்ரா இருவரும் திரைப் படங்களிலும் பாடத் துவங்கியிருக்கின்றனர்.
–கடங்கநேரியான்
சென்னை: சேர்ந்திசை
புகழ்பெற்ற இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனால் 43 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்டு இன்றும் சிறப்பாக இயங்கிவருகிறது சென்னை இளைஞர் சேர்ந்திசைக் குழு (Madras Youth Choir). இந்த குழுவினர் பாடும் பாடல்கள் பெரும்பாலும் எம்.பி.சீனிவாசனால் இசையமைக்கப்பட்டவை.
சங்கீத நாடக அகாதமியின் நல்கை பெற்று இயங்கும் இந்த குழுவினர் தேசிய ஒருமைப்பாடு, சுற்றுச்சூழல், குழந்தைகள் நலம், சமூக விழுமியங்கள், இளைஞர்களிடம் விழிப்புணர்ச்சி ஆகியவற்றை முன்வைக்கும் பாடல்களைப் பாடுகிறார்கள். சுமார் பத்து மொழிகளில் பல்வேறு தேசியக் கவிஞர்களின் பாடல்களை இவர்கள் பாடுகிறார்கள். ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்காக இவர்கள் நடத்தும் சேர்ந்திசைப் போட்டியும் பிரபலமானது. “எங்கள் இசைக்குழு ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்காக எம்.பி.சீனிவாசன் இசையமைத்த தமிழ்ப்பாடல்கள் அடங்கிய குறுவட்டுக்களும் வெளியிட்டுள்ளது”என்ற தகவலைப் பகிர்ந்துகொள்கிறார் குழுவின் செயலாளர் கலாவதி கிருஷ்ணமூர்த்தி.
சேர்ந்திசையைப் பிரபலப்படுத்த தொடர்ச்சியாக பயிற்சிவகுப்புகளும் எடுக்கப்படுகின்றன. கடந்த ஓராண்டாக ஜூனியர் சேர்ந்திசை சேர்ந்திசைக் குழுவும் உருவாக்கப்பட்டு பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்திவருகிறார்கள்.
“ஆத்திச்சூடி, பாருக்குள்ளே, பாரததேசம், அச்சமில்லை போன்ற பல பாரதியார் பாடல்களைப் பாடுகிறோம். பாரதி பற்றி பாரதிதாசன் பாடிய இரண்டு பாடல்களும் உண்டு. கர்நாடக இசையில் மேற்கத்திய நுட்பத்துடன் பாடுகிறோம். எங்கள் குழுவின் இசையை முதன்முதலில் கேட்கும் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுப் போவதைக் காண்கிறோம்” என்கிறார் கலாவதி. –முத்து
சிங்கப்பூர் இசைக்குழு:
சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய இசைக் குழு (SIOC -Singapore Indian Orchestra & Choir) தொடங்கி 29 ஆண்டுகள் ஆகின்றன. இதை உருவாக்கியவர் லலிதா வைத்தியநாதன். “முறையான இந்திய இசைக்குழு ஒன்றை உருவாக்க முடியுமா என்று என்னை மக்கள் கழகம்(PA Talents) கேட்ட பொழுது, ஒரு வித்தியாசமான இசைக்குழுவை உருவாக்குகிறேன் என்று கூறி, அந்தச் சவாலை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டேன்” என்று நினைவு கூறுகிறார் இவர். இந்த இசைக்குழு இதுவரை 450 நிகழ்ச்சிகளை 12 நாடுகளில் படைத்துள்ளது. வயலின் இசையை ஆர்வத்துடன் கற்றுத் தேறிய திருமதி.லலிதா இந்தியாவிற்கு வந்து கர்நாடக இசையையும் கற்றிருக்கிறார். இவர் ஒரு வேதியியல் ஆசிரியையும் கூட.
2011 -ல் ‘ எஸ்பிலனாட் அரங்கில்’ ‘தாஜ் மஹால் - இந்தியக் காதல்’ என்ற இசைநிகழ்ச்சியில், 1920-களில் வெளிவந்த ‘குடடிணூச்த்’ மௌனப்படத்திற்கு, இசையால் உயிரூட்ட இக்குழு முனைந்தபோது, 1500 பேர்கள் கொண்ட அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. ‘நேரடி நிகழ்ச்சியில், திரைப்படத்தை ஓடவிட்டு, மேடையில் அதற்கு ஏற்ற இசையை வாத்தியங்களால் முழக்குவது ஒரு சிரமமான காரியம் என்று முதலில் தயங்கினேன். திருமதி.லலிதாவின் ஆர்வத்தையும், சிங்கப்பூர் இசைக் கலைஞர்களின் தைரியத்தையும் மதிப்பிட்டு, அந்தப் பெரும் சவாலை ஏற்றுக்கொண்டேன்’ என்று இந்த நிகழ்ச்சிக்கு இசையமைத்த தமிழக இசையமைப்பாளர் பரத்வாஜ் சொன்னார். 85 கலைஞர்கள் சேர்ந்து இசையமைத்த பிரம்மாண்ட நிகழ்ச்சி அது.
“ஆரம்பகாலத்தில் இசையமைப்பாளர்கள் எல். சுப்பிரமணியம், எல். வைத்தியநாதன் ஆகியவர்களுடன் தொடர்ந்த இசைப்பணி எங்களுக்கு உறுதுணையாக இருந்தது” என்கிறார் லலிதா.
சீன இசைக்கருவிகள், தமிழ்ப்பாடல்கள் என ப்யூஷன் உத்திகளும் இந்த குழுவின் சிறப்பம்சம். இன்று இக்குழு சுமார் 50 உறுப்பினர்களைக் கொண்டதாக விளங்குகிறது. -----
-சிங்கப்பூரிலிருந்து கிருத்திகா
மதுரை: பாடலுடன் ஆடலும் வேண்டும்!
மதுரையில் கடந்த 11 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது அபிநய ஸ்வரங்கள் இசைக்குழு. பாலராகவன், துரைபாண்டியன், சுலைமான்சேட் ஆகியோர் இதன் நிர்வாகிகள். “ நாங்கள் இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமான இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம்’ என்று அதன் மேலாளர் ஜெஃப்ரி கூறுகிறார். மதுரையைப் பொறுத்தவரை சுமார் பனிரெண்டு பெரிய இசைக்குழுக்கள் இருக்கின்றன. இவற்றைத் தவிர சிறிய சிறிய குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
“இப்போது இசை நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது. இசையுடன் இணைந்து மேடை நடனமும் நடத்தப்படுவதைத் தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் மதுரை போன்ற நகர்களில் மேடை நடனத்துக்கு போலீசார் அனுமதி தருவதில்லை. மூன்று மணிநேரம் நிகழ்ச்சி நடத்த குறைந்தபட்சம் பதினெட்டு இசைக் கலைஞர்கள் தேவை. உள்ளூர் என்றால் முப்பதாயிரம் ரூபாய்வரைத் தருவார்கள். இதில் பாடகிக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை கொடுக்கவேண்டும். குறைந்தபட்சம் இரண்டு பாடகிகள் இடம் பெறுவார்கள். அதுபோல பாடகர்களுக்கு ஆயிரத்து இருநூறு வரை கொடுக்கவேண்டும். மூன்று பாடகர்களாவது இடம் பெறுவார்கள். இதைத் தவிர இசைக்கருவி கலைஞர்கள்.
சென்னையிலிருந்து வந்து இசை நிகழ்ச்சி நடத்தும் பெரிய இசைக்குழுக்கள் இரண்டு லட்சம் வரை வாங்குகிறார்கள். ஆனால் எங்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரும் பணத்துக்கு ஏற்ப நிகழ்ச்சி நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது..” என்கிறார் ஜெஃப்ரி.
-சஞ்சனா மீனாட்சி
சேலம்: பழைய பாடல்களின் கவர்ச்சி!
ராஜ் எக்கோ- இந்த பெயர் கேட்டதும் சேலத்து மக்களுக்கு சட்டென்று நினைவுக்கு வருவது, ஒவ்வொரு ஆண்டும் ‘நடிகர் திலகம்’ பிறந்தநாள் அன்று பிரம்மாண்டமாக நிகழ்த்தும் இசை நிகழ்ச்சிதான்.
இந்த வருடம் வெள்ளிவிழா கொண்டாடும் இந்த குழு 5000 மேடைகளில் இசைநிகழ்ச்சியை நடத்தியுள்ளது.
இக்குழுவை நடத்துபவர் சி ஜி. சண்முகராஜ். டிஎம்எஸ்., மலேசியா வாசுதேவன், ஸ்ரீநிவாஸ், எல் ஆர் ஈஸ்வரி, என பல பிரபல பாடகர்கள் இவருடைய மேடையில் பாடியது மட்டுமல்ல, விஸ்வநாதன், இளையராஜா, தேவா, குன்னக்குடி வைத்தியநாதன் என இன்னும் பல பிரபலங்கள் கையால் கௌரவம் பெற்றுள்ளார்.
சேலம் சௌடேஸ்வரி காலேஜில் விரிவுரையாளர் ஆக பணியாற்றி ஓய்வுபெற்ற இவருக்கு வயது 60. ராஜ், விஜய் டிவியில் பலவகையான இசைநிகழ்ச்சிகளை நடத்திய இக்குழுவை சேலம் சுற்றுவட்டார பகுதியில் திருவிழா காலங்களில் பக்திமணம் பரப்பவும், என்றும் இனிக்கும் இனியகீதங்களை ஒலிக்கவும் அழைக்க தவறுவதேயில்லை.
இசைஞானி இளையராஜாவின் குரு தன்ராஜ் அவர்களின் கடைசி சீடரான இவரிடம் ‘இப்போ நடத்தற இன்னிசை கச்சேரிக்கு பார்வையாளர் எதிர்வினை எப்படியிருக்கு?’ என கேட்டோம். “இப்ப வர்ற புதுப்பாடல்களை, வாரம் ரெண்டுநாள் தொடர்ந்து பயிற்சி எடுத்து மேடையில பாடினாலும் மக்கள் முகத்தில ஒரு எதிர்வினையும் இருக்காது. ஆனால் பழைய இனிமையான, தத்துவப் பாடல்கள் பாடறப்போ பரபரப்பா இருக்கற பலதரப்பட்ட மக்களும் மெய்மறந்து கேக்கறாங்க, அப்போ கடந்த இளமையும், இழந்த அமைதியும் அவங்க முகத்துல திரும்பும். இசையோட அந்த மகிமையை ஒவ்வொரு மேடையிலயும் தவறாம பாக்கறேன்” என்கிறார்.
- மாயாவி சிவா
கோவை: மல்லிசேரி
தென்னிந்தியாவில் துவங்கப்பட்ட பழைமையான இசைக்குழுக்களில் முதன்மையானது கோவையில் உள்ள மல்லிசேரி இசைக்குழு. 1974 ஆம் ஆண்டு கோவையில் 20 உறுப்பினர்களுடன் துவங்கப்பட்டது. மல்லிசேரி பீடி நிறுவனத்தின் ஸ்தாபகரான திரு. என். நாராயணன் இசை மேல் கொண்ட ஈடுபாட்டினால் அதே பெயரில் இசைக்குழுவையும் நிறுவினார். தற்போது அவரை அடியொற்றி அவரின் புதல்வர் திரு. ஸ்ரீநிவாசன் இசைக்குழுவை நடத்தி வருகிறார்.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான இசை நிகழ்ச்சிகள் செய்து புகழ் பெற்றது இந்த இசைக் குழு. பி.சுசீலா, மலேசியா வாசுதேவன் போன்ற பாடகர்களும் சிவமணி போன்ற இசைக்கலைஞர்களும் ஆரம்ப நாட்களிலிருந்தே இந்த இசைக்குழுவில் பங்கேற்று வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் மல்லிசேரி இசைக்குழு சிறந்த பெயர் பெற்ற குழுவாக இப்போதும் இருந்து வருகிறது.
தற்போது சிறார்களை இசைத்துறையில் ஊக்குவிப்பதற்காக மல்லிசேரி இசைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. கோவையில் காந்தி பார்க் அருகில் சலிவன் வீதியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
மல்லிசேரி இசைக்குழு மேலாளர் ராஜாபாரதியிடம் பேசினோம். “2000ம் ஆண்டுக்குப் பிறகு இந்த 14 வருடங்களாக இசைக்குழுக்களின் நிலைமை நரக வேதனைதான். அதற்கு முன் ஒவ்வொரு இசைக்குழுவுக்கு அவர்களுக்கேயான பாடகர்களும் இசைக் கலைஞர்களும் இருந்தார்கள். ஆனால், இப்போது ஒவ்வொரு இசைக் கலைஞரும் எந்த குழுவில் வேண்டுமானாலும் போய்ப் பங்குகொள்கிறார்கள். அதனால், தரம் இரண்டாம் பட்சமாகிவிட்டது” என்று வருத்தத்துடன் சொல்கிறார். இந்த குழுவின் பாடகர் ஏ.எம்.சுரேஷுக்கு இன்னொரு வருத்தம்: “இப்போது இசையின் தனித்துவம் எல்லாம் போய்விட்டது. எஸ்.பி.பியின் குரலில் பாடிக்கொண்டிருந்த நான் இப்போது ‘அய்யோ, அய்யய்யோ’ என்று கூட்டத்தோடு கூட்டமாக காட்டுக் கத்தல் கத்தவேண்டியிருக்கிறது. இப்போது ‘பெர்ஃபார்மர்’தான் எல்லோருக்கும் வேண்டும். அதாவது ஆடிக்கொண்டே பாடுபவர்கள்தான் மேடையேற முடியும்.”
- ஸ்ரீபதி
டிசம்பர், 2014.