சிறப்புப்பக்கங்கள்

முன்னேற்றமே அடையாளம்

திராவிட ஆட்சி

திருச்சி சிவா

ஐம்பது ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் இங்கே ஆட்சி செய்வதற்கான காரணங்கள் மிகமுக்கியமானவை. மாநிலத்தின் தேவைகளைப் புரிந்து தமிழர்களின் நிலைமைகளை அறிந்து அதற்கான தீர்வுகளைச் சொல்லி அதற்கான கொள்கைகளை வகுத்து, அதை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை மக்களிடம்  வகுத்து அதன்மூலம் வளர்ந்ததுதான் திமுக. நீதிக்கட்சி காலத்தின் தேவைக்கேற்ப தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட்ட அமைப்பு. அதன் அரசியல்கூறு பின்னாளில் திமுகவாக முகிழ்த்து மக்களின் பேராதரவைப் பெற்றது. நம்மைப் புரிந்துகொண்டு நம்முடைய தேவைகளைத் தீர்ப்பதற்கு இவர்கள் இருக்கிறார்கள். எதிர்காலத் திட்டம் தீட்டி நடைமுறைப்படுத்துகிற தலைவர், அதற்கான வலுவான தொண்டர்கள் உடைய அமைப்பாக இது இருக்கிறது என்று இந்த இயக்கத்தை மக்கள் கண்டார்கள். ஆதரவு தந்தார்கள்.

ஆட்சிக்கு வந்தவுடன் எதையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தோமோ அதையெல்லாம் நடைமுறைப்படுத்தப்படுத்த தொடங்கினோம். திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டபோது அண்ணா சொன்ன வார்த்தைகள்: திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டுவிட்டோம்; ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்தபின்னால் அந்த காரணங்களை மெல்ல மெல்ல செப்பனிடத் தொடங்கினோம்.

மத்திய அரசின்கீழ் மண்டியிட்டு அல்லது கையேந்தி மாநிலங்கள் நின்ற நிலைமாறி மாநிலங்களைச் சார்ந்தும், அவற்றை அனுசரித்தும் மத்திய அரசு இயங்கவேண்டும் என்ற நிலையை உருவாக்கினோம். அரசியல் தத்துவத்தின் கூட்டாட்சி தத்துவத்துக்கு ஏற்ப இந்திய நாட்டின் அரசியலை மாற்றி அமைக்கும் பெரிய பொறுப்பும் பெருமையும் திமுகழகத்துக்கு வந்துசேர்ந்தது. மாநில சுயாட்சிக்கொள்கைகளை நாம் முதல்முதலில் முழங்கியிருக்கிறோம். பஞ்சாப் மாநிலத்தில் நடந்த மாநாட்டில் தலைவர் கலைஞர் சென்று கலந்துகொண்டிருக்கிறார். அண்ணாவும் பல நேரங்களில் முழங்கியிருக்கிருக்கிறார்.

கப்பல் கட்டும் தளம் இங்கே; அதைக் கட்டுப்படுத்தும் அமைச்சர் அங்கேயா என்று கேட்டிருக்கிறார். கூட்டணி தத்துவத்தின் அடிப்படையில் கூட்டாட்சியை வலுப்படுத்த முயற்சி செய்து இருக்கிறோம். உரிமைக்குக் குரல்கொடுப்போம்; உறவுக்குக் கை கொடுப்போம் இது தலைவர் கலைஞரின் வாசகம். கூட்டணியில் இல்லாவிட்டாலும் நம் தேவைகளுக்காக போராடி பெற்றிருக்கிறோம். இன்று தமிழ்நாடு வளர்ச்சி அடைந்த நிலையில் இருக்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணம் திமுகழகத்தின் கொள்கைகள் அணுகுமுறைகள் செயல்பாடுகள்.

தேசியக்கட்சிகள் டெல்லியில் உள்ளவர்களின் தலையசைப்பை எதிர்நோக்கி இருப்பார்கள். ஆனால் மாநில கட்சிகள் நம் பகுதியில் உள்ள தேவைகளுக்கு ஏற்ப அவர்களே முடிவெடுத்து செயல்படக்கூடியவர்களாக இருப்பார்கள். அதற்கான உரிமைகளுக்காக துணிவோடு போராடுவார்கள். யாருக்கும் அடங்கிப்போக மாட்டார்கள். இந்த தெளிவையெல்லாம் மக்களுக்கு நாங்கள் கொண்டுவந்திருக்கிறோம். நாங்கள் ஆட்சியில் இருந்தபோதும், கூட்டணியில் மத்தியில் இருந்தபோது தமிழ்நாட்டுக்கு தொழில்வளர்ச்சி, உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஏராளமாகச் செய்திருக்கிறோம். நான்கு வழிச்சாலைகள் திமுகவால் கொண்டுவரப்பட்டவை.  மின்சாரம், கல்வி, மத்தியப் பல்கலைக்கழகங்கள் கொண்டுவந்தது, தமிழுக்கு செம்மொழி தகுதி, சேதுசமுத்திரத்திட்டத்துக்காக பாடுபட்டது, என்று உதாரணங்களை அடுக்கலாம். தமிழ்நாட்டில்தான் நாட்டிலேயே முதல்முதலாக எல்லா கிராமங்களுக்கும் மின்சார வசதி கொடுக்கப்பட்டது. வடநாட்டில் இன்னும் பல கிராமங்களில் மின்சாரம் இல்லை. தமிழகத்தில் இணைப்புச் சாலைகள் இல்லாத கிராமங்கள் இல்லை. இதெல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் நடந்தவை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேசியக் கட்சிகள் தலையெடுக்க வாய்ப்பே இல்லை. அண்ணா அவர்கள் விருகம்பாக்கம் மாநாட்டில் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு திமுகவின் பணி நாட்டுக்குத் தேவை என்று கூறினார். அவர் சொன்ன ஐம்பது ஆண்டுகள் இப்போது முடிவடைகிறது. ஆனால் தமிழன் என்ற இனம் வாழ்கிறவரை தமிழ் என்ற மொழி இருக்கும்வரை, திமுகவும் இருக்கும். மிகுந்த உயிர்ப்போடு இருக்கும். இந்த இயக்கம் உருவாக்கிய விளைவுகள் தமிழ்நாட்டில் வேரூன்றிப்போயிருக்கின்றன. அதனால்தான் இங்கே மதவாத சக்திகள் வளரமுடியவில்லை. சாதிசார்ந்த அமைப்புகள் இருந்தாலும் பெரிய அளவில்வேரூன்ற முடியவில்லை. காரணம், பெரியாரின் கொள்கைகள், அண்ணா கொடுத்தவடிவம், கலைஞர் காத்த அரண்.

(திருச்சி சிவா, திமுக மாநிலங்களவை உறுப்பினர். நம் செய்தியாளரிடம் பேசியதில் இருந்து எழுதப்பட்டது)

டிசம்பர், 2016.