சிறப்புப்பக்கங்கள்

முதல்வர் பேருந்தில் பயணம் செய்வாரா?

மூசே விஜி

யோசனைகள்:

தடுமாறிக்கொண்டிருக்கும் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைச் சிறப்பாக இயக்க சில ஆலோசனைகள்:

  1. முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், அரசுச் செயலாளர்கள், தலைமைச்செயலாளர் உள்ளிட்ட உயர் பணியினர் மாதம் ஒரு முறையேனும் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வது கட்டாயமாக வேண்டும்.

  2. எத்தனால் உற்பத்தியை அதிகரித்து டீசல் மற்றும் பெட்ரோலில் கலந்து பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு அதிகபட்சம் 145 கோடிரூபாய் மிச்சப்படுத்தலாம். (நாளொன்றுக்கு பயன்படும் 17,13,462லிட்டர் டீசலில் 1,71,346 லிட்டர் எத்தனால் கலப்பதன் மூலம்)

  3. பயன்பாட்டில் உள்ள 22000 பேருந்துகளில் மூன்று பக்கங்களில் வண்ண விளம்பரங்கள் அனுமதிப்பதன் மூலம் ஆண்டொன்றுக்கு பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டலாம்.

  4. ஒரு நாளில் 2கோடியே 10 லட்சம் பயணிகள் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.இவர்களுக்குப் பயணச்சீட்டுகளைப் பெரிதாக அச்சடித்து, அதிலும் விளம்பரங்கள் வெளியிட்டால் அதன் மூலம் ஆண்டொன்றுக்கு பல கோடி ரூபாய் ஈட்டலாம்.

  5. ஒரு பேருந்துக்குத் தற்போது 6.8 பணியாளர்கள் என்கிற விகிதம் உள்ளது. இந்த மனித வளத்தைத் திறம்பட பயன்படுத்துவதன் மூலம் நிர்வாகச்செலவுகளைக் குறைத்துச் சேவைத்திறனை அதிகப்படுத்தலாம்.

  6. தேசிய நெடுஞ்சாலைகளில் தரமான உணவகங்களைத் தனியார் அரசு கூட்டு முயற்சியில் தொடங்கி பயணிகளுக்கும் ஓட்டுநர் நடத்துநர்களுக்கும் தரமான உணவும், சுகாதாரமான கழிப்பிட வசதியும் வழங்கவேண்டும்.

  7. நடத்துநர், ஓட்டுநர் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் தொடர்ந்து பயிற்சி அளித்துப் பயணிகளுக்குப் பேருந்தில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவதன் மூலம் ஓட்டுனரும் என்றும் விழிப்புடன் இருக்குமாறு சிறப்பாகக் கவனித்தால் விபத்தில்லா மகிழ்ச்சியான பயணமாக மாற்றலாம்.

  8. பேருந்துகளுக்கு என்று சாலைகளில் தனித்தடம் ஒதுக்கித் தரலாம்.

  9. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் பயணச்சீட்டு வழங்கும் முறையை உருவாக்கினால் நகரப்பேருந்துகளில் நடத்துநர் இல்லாமல் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்பவர்களைத் தடுக்கலாம்; பேருந்துகளைச் சரியாக பேருந்து நிறுத்தத்தில் ஓரமாக நிற்க வைக்கவும் இது உதவும்.

ஜனவரி, 2013.