ஞாநியின் பரிக்ஷா நாடகக்குழு சார்பாக முதலில் அரங்கேற்றப் பட்ட நாடகம், போர்வை போர்த்திய உடல்கள். ஆண்டு 1978. இந்திரா பார்த்தசாரதியின் நாடகம் அது.
அதில் இருந்து இப்போதுவரை பரிக்ஷாவில் நடித்துக்கொண்டிருப்பவர் கே.வி.ராஜாமணி. ஒரு கட்டத்தில் இவரால் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க இயலாத சூழலிலும், இவருக்காகவே ஜெயந்தனின் ‘மனுஷா மனுஷா' நாடகத்தின் இறுதியில் ஒரு பாத்திரத்தை உருவாக்கினார் ஞாநி. இது மன்னர் ஒருவரை வியாபாரி ஏமாற்றும் நாடகம். கடைசியில் ஆடையில்லாமல் நிற்பார், மன்னர். அதில் வியாபாரியாக நானும் நடித்திருக்கிறேன். கடைசியில் ஆடைஇல்லாத ராஜா ஊர்வலமாகக் கிளம்புவார். அவரை வழியில் சந்தித்து வெற்றித் திலகமிடும் புரோகிதராகத்தான் ராஜாமணி நடித்தார். இந்த இறுதிக் காட்சி பார்வையாளர்களிடயே பெரும் வரவேற்பைப் பெற்றது.
‘மூன்றாம் நாடகம்' என்னும் கோட்பாட்டை வங்க நாடக வெளியில் பிரபலப்படுத்திய பாதல்சர்க்காரின் நாடகங்களை தமிழில் அதிகம் போட்டது பரிக்ஷா குழு தான். பாதல் சர்க்கார் நடத்திய பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்டவர் ஞாநி. சர்க்காரின் பிரபல வங்க மொழி நாடகங்களான ‘ மிச்சில்' ‘போமா' ஆகியவற்றை, ‘தேடுங்கள்', ‘முனியன்' ஆகிய பெயர்களில் தமிழ் நாடக உலகில் அதிகபட்சமாக நிகழ்த்தி இருக்கிறார். ‘தேடுங்கள்' நாடகம் குறியீடுகளின் அடிப்படையில் காலந்தோறும் மாறிக்கொண்டிருக்கும் சூழ்நிலைகளை உருவகப்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்த நாடகம். இதன் இறுதியில் ‘நாங்கள் வெல்லுவோம்... நாங்கள் வெல்லுவோம் ஓர் நாள்' என்ற நம்பிக்கையூட்டும் பாடலைப் பாடிக்கொண்டே நாங்கள் ஊர்வலமாகச் செல்லும் ஒவ்வொரு முறையும் பார்வையாளர்களும் சேர்ந்து பாடிக்கொண்டே எங்களுடன் வரும் அளவிற்கு அவர்கள் ஈர்க்கப்படுவார்கள்.
ஞாநியின் புகழ்பெற்ற நாடகங்களில் இன்னொன்று அவரே எழுதிய 'பலூன்'. நான் இளைஞனாக இருந்தபோது அதில் ரகு என்ற தொழிற்சங்க வாதியாக நடித்தேன். அந்த நாடகத்துடன் நானும் வளர்ந்து கடைசியாக அதில் மிக வயதான பாத்திரமான நீதிபதியாக நடித்து வருகிறேன்.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் ஒருமுறை பஸ்கட்டணம் ஏற்றப்பட்டதைக் கண்டித்து ஞாநி ‘குரல்கள்' என்ற தம் அமைப்பு சார்பாக கண்டனப் போராட்டம் அறிவித்தார். அதற்கு அனுமதி பெறுதல், நூதனமாகப் போராடியது, எதிர்கொண்ட கிண்டல்கள் ஆகியவற்றின் அனுபவமே இந்த நாடகத்திற்கு வித்து. அதன் வசனங்களும் மிகவும் கூர்மையான சமூகக் கண்ணோட்ட விமர்சனங்களாக இருக்கும். இறுதியில் சமூகத்தில் நடக்கும் மோசடிகளைக் கண்டும் காணாமல் நெட்டை மரங்களாக இருப்பதாலேயே நாமும் அவற்றை ஆதரிக்கிறோம். முதலில் ஒழிப்போம் நம் புத்திசாலித்தனத்தை என முடிப்பார்.
உலகப் புகழ் பெற்ற ஜெர்மன் நாடக ஆசிரியரான பிரக்ட்டின் ‘காக்கேஷியன் சாக் சர்க்கிள்' நாடகத்தை ‘வட்டம்' என்று மொழியாக்கம் செய்து பல்வேறு இடங்களில் பரீக்ஷா நிகழ்த்தி உள்ளது. சு.ரா வின் ‘எந்திரத்துடைப்பான்', ‘பல்லக்குத் தூக்கிகள்', ந. முத்துசாமியின் ‘நாற்காலிக்காரன்' ஆகியவை மற்றும் பிரபல ஆங்கில நாடகாசிரியர் ஜே.பி. பிரீஸ்ட்லி, பிண்டர், மராத்தி நாடகாசிரியர் விஜய் டெண்டுல்கர், வங்க நாடக ஆசிரியர் மஹாஸ்வேதா தேவி ஆகியோரின் நாடகங்களான ‘ஒரு விசா ரணை', ‘போதை',‘கமலா', ‘என் மகன்' போன்ற நாடகங்களும் குறிப்பிடத்தக்கன.
என்னதான் நவீன நாடகங்களின் முன்னோடியாக இருந்தாலும், சபாநாடகங்களையும் பரிக்ஷா நடிகர்களைப் பார்க்கச் சொல்லுவார், ஞாநி. அதில் நடிக்கும் நடிகர்களின் மனன சக்தியைக் கவனிக்கச் சொல்வார். சபா நாடக நடிகர்களும்,பிரபலங்களும் பரிக்ஷா நாடகங்களை வந்து பார்ப்பதும் உண்டு. எஸ்.வி.சேகர், பரிக்ஷா நாடகங்கள் பார்க்க வந்தால் டிக்கெட் வாங்கிவந்துதான் பார்ப்பார். அதே சமயம் அவருடைய நாடகங்களுக்கு பாஸ் வழங்கி இருக்கிறார். பரிக்ஷா சொந்த செலவில் நடக்கும் குழு என்று காரணம் சொல்வார்.
ஒருமுறை நாரதகான சபாவின் மினிஹால் நவீன நாடங்களுக்காக இலவசமாக ஒரு வருட காலம் வழங்கப்பட்டது. பரிக்ஷாவுடன், யவனிகா, ஆடுகளம், ஐக்யா, பூமிகா ஆகிய குழுக்களும் இணைந்து ஆண்டு முழுவதும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் அதில் நவீன நாடகங்கள் நிகழ்த்தினோம் என்பது மிகப் பெரிய சாதனை.
நாரதகான சபாவில் வின்டேஜ் ட்ராமா பெஸ்டிவல் நடந்தபோது நாடகக் குழுக்கள் பழைய நாடகங்களை அரங்கேற்றின. ராதா ரவி, எம்.ஆர்.ராதா அவர்களின் ரத்தக்கண்ணீரை அரங்கேற்றினார். இந்த விழாவில் ஞாநி எதை அரங்கேற்றத் தீர்மானித்தார் தெரியுமா? அறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து
சாம்ராஜ்யம் (அ) சந்திரமோகன். கலைஞர், எம்ஜிஆர் போன்றவர்களெல்லாம் நடித்த சரித்திர நாடகம்!
எம்.ஆர்.ராதா அவர்களின் நாடகங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே, நாடக அரங்கேற்றத்துக்கு முன்பாக நாடகப் பிரதியை காவல்துறையிடம் அளித்து முன் அனுமதி வாங்கும் சட்டமிருந்தது. ஒருமுறை விஜய் டெண்டுல்கரின் கமலா நாடகத்தை ராணி சீதை ஹாலில் போட்டபோது. பார்வையாளர்கள் எல்லாம் கூடிவிட்ட நிலையில், அதற்கு அனுமதி வாங்குவதற்காக ஏழுமணி வரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஞாநி நிற்கவேண்டி இருந்தது. எனவேதான் இந்த சட்டத்தை எதிர்த்து அவர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதியரசர் சந்துரு, இச்சட்டத்தை ரத்து செய்துவிட்டார். இதைத் தொடர்ந்து நாடகத்துறை ஆளுமைகள் சார்பில் ஞாநிக்கு பாராட்டு விழாவே நடத்தப்பட்டது!
ஞாநிக்கு பல முகங்கள் இருந்தாலும் அடிப்படையில் அவர் நாடகக்காரர்தான். அதுவும் ஜனநாயக முறைப்படி தான் செயல்படுவார். உதாரணத்திற்கு, ஒரு முறை பலூன் நாடகம் போட்டபோது அவர் இடைவேளை விடுவோம் என்ற ஆலோசனையை முன் வைத்தபோது, இது விவாதமாகி, குழுவில் பெரும்பாலோர் ‘வேண்டாம்' என்று கூறவே, ஞாநி அதை ஏற்றுக்கொண்டார். மேலும், அவரது அரவணைக்கும் தன்மை, நேர்மறைச் சிந்தனை, நேர்மை, துணிவு போன்றவை பற்றி ஏராளமாகச் சொல்ல முடியும்.
ஞாநியின் மறைவுக்குப் பின்னர் ‘பலூன்' நாடகத்தை லயோலா கல்லூரியில் நடத்தி முடிந்தபிறகு கிடைத்த பார்வையாளர்களின் 'ஸ்டேண்டிங் ஓவேஷன்' நான் கேட்டிராதது, பார்த்திராதது! வாழ்நாளில் மறக்க முடியாதது.
அற்புதன் விஜய், கல்பனா, ராஜாமணி, மீனாட்சிசுந்தரம், கமல், சின்னா சுரேஷ், குரு, அனிதா, கார்த்தி,மனோ, மோகனப்ப்ரியா, அஜித் பிரகாஷ், ஞானசம்பந்தம், வெங்கட், வரதன், ஹேம், போன்ற பல உறுப்பினர்களின் அர்ப்பணிப்பான பங்கேற்புடன், ஞாநியின் குடும்பத்தாரான மனுஷ்நந்தன், மா (என்கிற)பத்மாவதி ஆகியோரின் நல்லாதரவும் பலமாக இருப்பதால் பரிக்ஷாவின் பயணம் தொடர்கிறது!
(ஏ.பாஸ்கர், பரிக்ஷா குழுவின் மூத்த உறுப்பினர்.)
அக்டோபர், 2021