சிறப்புப்பக்கங்கள்

முடியாது என்பதை செய்வதே சாதனை

கிங் விஸ்வா

லக்ஷ்மண் ஸ்ருதி இசைக்குழு சென்னையில் தோன்றி மிகப்பிரபலமாக வளர்ந்து நிற்கும் குழு. இதன் பின்னணியில் அதை நடத்தும் இரட்டையர்களான ராமனும் லட்சுமணனும் கொடுத்திருக்கும் உழைப்பு இருக்கிறது. இது தொடர்பாக இவர்களிடம் அந்திமழை

சார்பாகப் பேசினோம். அவர்கள் சொன்னது நமது வார்த்தைகளில் இங்கே:

1965ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி பிறந்த இரட்டையர்கள் தான் ராமனும் லக்‌ஷ்மனும். இவர்களின் தந்தை ஒரு பள்ளி வாத்தியார். காஞ்சிபுரம் வாலாஜாபாத் அருகே இருக்கும் அவளூர் கிராமம் தான் இவர்களின் சொந்த ஊர். ஆனால் இரட்டையர்கள் பிறந்தது வளர்ந்தது எல்லாமே வண்ணாரப்பேட்டையில்தான்.

இவர்களது குடும்பமும் தெருவும் கிட்டதட்ட ஒரே மாதிரியான கொள்கைகளை கொண்டு இருந்தார்கள். அதாவது ஜனரஞ்சக சினிமாவோ பாடல்களோ தடை செய்யப்பட்ட பகுதி இது. எம் ஜி ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்க்கவே ஒருமாதம் கெஞ்சி, கூத்தாடிய பிறகே அனுமதி கிடைத்தது. அதைப்போலவே இவர்கள் வசித்த தெருவும் மிகவும் கட்டுப்பாடான ஒன்று.

மற்ற தெருக்களில் நடக்கும் கோவில் விசேஷங்களில், விழாக்களில் சினிமா பாடல்களை பாடி கொண்டாட, இவர்களது முட்டுத்தெரு அம்மன் தெரு கோவில் விசேஷங்களிலோ பக்திப்பாடல்கள் மட்டுமே கொண்டதாக இருந்தது. மார்கழி மாதத்தில் 30 நாட்களும் ஆடிமாதத்தில் 10 நாட்களும் இங்கு மொத்தமும் இசைக்கப்பட்ட பக்திபாடல்கள் இவர்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்டது.

வீரமணி  பாடல்கள், எல் ஆர் ஈஸ்வரி கச்சேரி என்று கூடிக்கொண்டே போனது இவர்களது இசை ஆர்வம் மட்டுமல்ல, கச்சேரிக்கு சென்றுவிட்டு திரும்பும்போதெல்லாம் அப்பாவிடம் இருந்து கிடைத்த அடியும்கூட.

வீட்டருகே இருந்த க்வீன் மேரிஸ் நர்சரி பள்ளியில் கிட்டார் கற்றுக்கொள்ள சென்றபோது இவர்கள் தந்தை மாஸ்டரிடம் சண்டைபோட்டு தடுத்துவிட்டார். பின்னர் மயிலையில் நடனம் கற்று, மாநிலக்கல்லூரியில் நடந்த அனைத்துபோட்டிகளிலும் இவர்கள் பங்குபெறாத போட்டிகளோ, வெல்லாத பரிசுகளோ இல்லை என்ற நிலையைக் கொண்டுவந்துவிட்டனர்.

லக்‌ஷ்மண் ஸ்ருதியின் ஆரம்பம்: 1987-ல் ராமன் மேற்படிப்புக்காக வேறு கல்லூரிக்கு சென்றுவிட, கல்லூரியில் இயங்கிக்கொண்டிருந்த இசைக்குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர் இல்லாத சூழலில் லக்‌ஷ்மணன் முதன்முறையாக மேடையேறினார். தற்செயலான இந்த சம்பவம் இவர்கள் வாழ்வில் ஒரு பெருத்த மாற்றத்தை கொண்டுவந்தது.

ஸ்ருதியின் இன்னிசை மழை என்ற இந்த குழு ஒரு முழுநேர இசைக் குழுவாக உருவெடுக்க, வாய்ப்புகள் அதிகமாக அதிகமாக அனைவரும் தனித்தனியே குழுக்களை அமைத்தனர். ஆனால் ஸ்ருதி என்பது அனைத்து குழுக்களின் பெயர்களிலும் பொதுவாக இருக்க, இப்படித்தான் லக்‌ஷ்மண் ஸ்ருதி ஆரம்பமானது.

திருப்புமுனை: தொடர்ந்து புதுமையாக இசைவிழாக்களை வடிவமைத்ததால் குறுகிய காலத்திலேயே நிறைய நிகழ்ச்சிகளை நடத்திமுடித்துவிட்ட பின்னர்,  திடீரென்று ஒருநாள் தாங்கள் 200ஆவது நிகழ்ச்சியை நெருங்குவதை உணர்ந்தார்கள். அதனை சிறப்பாக நடத்த திட்டமிட்டபோது, இவர்கள் வீட்டில் தங்கியிருந்த நாகராஜ் என்பவர் (கமல்ஹாசனின் அகில இந்திய ரசிகர்மன்ற தலைவர்) அபூர்வ சகோதரர்கள் படத்தின் வெற்றியில் திளைத்துகொண்டிருந்த கமலை இவர்களது 200ஆவது நிகழ்சிக்கு அழைத்துவருவதாக உறுதியளிக்க, முதன்முறையாக சகோதரர்களிடம் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது.

முதல்முறையாக ஒரு மாபெரும் விஐபி வருவதால் இவர்களும் தடாலடியாக எதையாவது செய்யவேண்டும் என்று நினைத்தனர். உடனடியாக மியூசிக் அகாடமியை புக் செய்து, ஸ்க்ரீன் பிரிண்ட்டில் மூன்று தாள்களில் விமான டிக்கெட் வடிவில் நுழைவுச்சீட்டை அச்சிட்டு, 8 பிட் போஸ்டர்களை சென்னையெங்கும் ஒட்டி, தினத்தந்தியில் விளம்பரம் செய்து அமர்க்களம் செய்துவிட்டனர். அதையும்தாண்டி நமது குழுவைப்பற்றி கமல் பேசவேண்டும் என்று யோசிக்க, அப்போது முளைத்ததுதான் இந்த சீருடை திட்டம். கடைசிநேரம் என்பதால் அனைவருக்கும் சீருடையை தைப்பதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. மறுநாள் (1989, ஜூலை 12) கச்சேரி இருக்க, அன்றுமாலை அனைவரின் வீட்டுக்கும் சென்று வெள்ளைதுணியை கொடுத்துவிட்டு, நாளைக்கு சீருடையுடன் வருபவர்கள் மட்டுமே மேடையேற முடியும் என்று சொல்லிவிட, அனைவருமே அடித்துபிடித்து டைலரை பிடித்து சீருடையுடன் வந்துசேர்ந்தனர்.

விழா முடிந்தவுடன் கமல், “கல்லூரி மாணவர்களின் விழா என்பதால் இப்படி ஜீன்ஸ், டீ ஷர்ட்டில் வந்தேன். ஆனால் இவர்களோ சீருடையில், மிகவும் ப்ரொபெஷனலாக இந்த கச்சேரியை நடத்தி அசத்தி விட்டனர். தெரிந்திருந்தால் நானும் கோட் சூட் அணிந்தே வந்திருப்பேன்” என்று பேசியதுதான் இவர்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம். அன்றுமுதல் வெள்ளை சீருடை என்பது இவர்களது அடையாளமாக மாறிவிட்டது.

இதயக்கனிக்கு இசை அஞ்சலி: 1989ஆம் ஆண்டு டிசம்பரில் மக்கள் தலைவர் எம் ஜி ஆருக்கு என்று ஒரு சிறப்பு இசைக்கச்சேரி ஏற்பாடு செய்தனர். ஏற்கெனவே ரவிராஜ் சக்ரவர்த்தி கண்ணதாசன் ஹிட்ஸ், டிஎம்.எஸ் ஹிட்ஸ் என்று செய்து இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட ஆளுமைக்கு என்று ஒரு தனிக் கச்சேரியை நடத்துவதை வழக்கமாக்கியது இவர்களே. 1990ல் ஒருநாள் முழுக்க இளையராஜா ஹிட்ஸ் என்றும் ஒரு நிகழ்ச்சியை செய்தனர். 1991-ல் முழுக்க முழுக்க காதல் தோல்வி பாடல்களை மட்டுமே கொண்ட ஒரு கச்சேரியை நடத்தினர். தலைமையேற்று சிறப்பித்தவர் டி.ராஜேந்தர். இதன்பின்னர் காமெடி ஸ்பெஷல், குழந்தைகள் ஸ்பெஷல், பட்டிக்காடா பட்டணமா?, பக்திப்பாடல்கள் ஸ்பெஷல் என்று பல  நிகழ்ச்சிகளை நடத்தினர்.

1996 -ல் பெண்கள் ஸ்பெஷல்: நடிகை ரேவதி தலைமையில் பெண்மாலைப்பொழுது என்று 1996 ஆகஸ்ட் 6ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்கள், இசைக்குழு, மைக் ஆபரேட்டர், கேமராமேன், போலீசார், டிக்கெட் கிழிப்பவர் முதல் கேண்டீன் வரை அனைத்துமே பெண்களால் மட்டுமே ஒழுங்கு செய்யப்பட்டது.  ஆண்களுக்கென அரங்கத்தின் வெளியே தனியாக 1500 இருக்கைகள் அமைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சியின் ரேடியோ விளம்பரம் “ஆண்களுக்கு அனுமதி இல்லை, இல்லை, இல்லவே இல்லை” என்றது.

கின்னஸ் உலக சாதனை 1996: ஒரு இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா அவர்களை சந்தித்து தலைமையேற்க்க அழைக்கும்போது, நேரமின்மையை சுட்டிக்காட்டி வர இயலாது என்று தெரிவித்த இசைஞானி, பெயர் சொல்லும்படி ஏதாவது ஒரு சாதனையை செய்து தங்களை நிரூபிக்கும்படி கேட்டுக்கொண்டார். பின்னர் 1996ஆம் ஆண்டு 36 மணிநேர இசைக்கச்சேரி நிகழ்த்தி கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தனர். இதன் ஹைலைட் இளையராஜாவின் தலைமை.

மிகவும் பிடித்த நிகழ்ச்சி: ஆஸ்திரேலியாவின் சிட்னி டவுன்ஹாலில்  ஜேசுதாஸ் மற்றும் எஸ்பிபியைக்கொண்டு மூன்று மணிநேரம் திட்டமிடப்பட்டு துவங்கிய இந்நிகழ்ச்சியின் இடைவேளையே மூன்று மணிநேரம் கழித்துதான் விடப்பட்டது. 2000ஆவது ஆண்டு  ஆறரை மணிநேரம் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு மிகப்பெரிய வரவேற்பைபெற்ற இதுதான் இவர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாகக் கூறுகிறார்கள்.

முக்கியமான பரிசு: ஏ.ஆர் ரஹ்மான் தமிழ் இசையில் கால் பதித்து சிகரங்களை தொட ஆரம்பித்தபோது அவருக்கென முதல் முதலாக ஏ.ஆர்.ரஹ்மான் ஹிட்ஸ் நிகழ்ச்சி நடத்தியது லக்‌ஷ்மண் ஸ்ருதிதான். அந்நிகழ்ச்சியின் முடிவில் எங்கள் இருவருக்கும் அவர் கைக்கடிகாரங்கள் பரிசாக அளித்தார். அதைப்போலவே கின்னஸ் உலகசாதனை நிகழ்ச்சியின்போது மேடையேறி எங்களுக்கு அவர் மோதிரங்களை அணிவித்தது மிகுந்த கௌரவத்தை அளித்தது என்கிறார்கள்.

திட்டமிடல்: ஒரு நிகழ்வை நடத்த முடிவு செய்தவுடன் அதனைபற்றி முழுமையாக பேசி, எப்படி நடத்தவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். ரிகர்சலை லக்‌ஷ்மண் கவனித்துக்கொள்வார். ராமன் மார்க்கெட்டிங்கை ஏற்று நடத்துவார். அதைப்போல

சிறப்பு அழைப்பாளர்களை நெறிப்படுத்துவது, நிகழ்ச்சிகளின்போது முக்கியவிருந்தாளிகளை கவனிப்பது என்று அனைத்து விஷயங்களையுமே முன்கூட்டியே யோசித்து செயல்படுவோம் என்கிறார்கள்.

இசைக்குழு: 1987ஆம் ஆண்டு 10 பேருடன் துவங்கப்பட்ட லக்‌ஷ்மண் ஸ்ருதி, இன்று 50 நபர்களுடன் செயல்படும் இசைக்குழுவாக விரிவடைந்துள்ளது, டெக்னாலஜி வளர்ச்சி அடைந்துள்ள தற்போதைய சூழலிலும் இசைக் கருவிகளைக்கொண்டே ஆர்க்கெஸ்ட்ரா நடத்தும் இவர்கள், இதுவரையில் 8000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். லக்‌ஷ்மணின் மனைவி மாலதி திருடா திருடி படத்தின் “மன்மத ராசா” பாடலை பாடியவர் என்பதுதான் நிறைய பேருக்கு தெரியும். ஆனால் அவர் பல்வேறு குரல்களில் பாடுபவர் என்பதோ, அவர் 7000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார் என்பதோ நிறைய பேருக்கு தெரியாது.

வெற்றிக்கான காரணம்: முடியாது என்பதை செய்வதே சாதனை என்பதே இவர்களின் தாரக மந்திரம்.

டிசம்பர், 2014.